சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓர் தொடக்கப்பள்ளியில் மாணவர்களை சாதி அடிப்படையில் பிரித்து வருகை பதிவேட்டை தயாரித்து, அந்த அடிப்படையில் மாணவர்களுக்கான வகுப்புகளுக்கான நாட்கள் பிரிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கொரோனா தொற்று நோய் காரணமாக பள்ளி மாணவர்களின் வகுப்பு நாட்களை மூன்று தொகுதிகளாக (Batch) பிரித்து வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகுப்புக்களை சாதி அடிப்படையில் பிரித்து நடத்தியுள்ளதாக இந்த பள்ளியின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்த புகார் எழுந்த நிலையில் அத்தகைய நடவடிக்கையைக் கைவிடுமாறு அப்பள்ளிக்கு சென்னை மாநகராட்சியின் (GCC) உதவிக் கமிஷனர் ஸ்நேகா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மாணவர்களின் வருகைப் பதிவேடு மற்றும் தொகுதிகளாகப் பிரிக்கையில் மாணவர்களை அவர்களது பெயரின் அகர வரிசையின் அடிப்படையில் தான் பிரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது, சென்னை மாநகராட்சி.
படிக்க :
கழிப்பறை கட்ட துப்பில்லை ! ஸ்மார்ட் சிட்டியாம்… திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் மனு !
சென்னை மாநகராட்சி : தனியார் மயத்தை எதிர்த்து துப்புரவு தொழிலாளிகள் போராட்டம்
ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுக்கும் பள்ளியின் தலைமையாசிரியர் “இது புதியதல்ல, நாங்கள் இதற்கு முன்பிருந்தே இந்த வருகைப் பதிவேட்டைதான் பின்பற்றி வருகிறோம். நாங்கள் மாணவர்களை சாதி அடிப்படையில் பிரிக்கவில்லை. ஒரே சாதியைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்களை ஒரே தொகுதியில் (Batch) வந்தது தற்செயலானதுதான்” என்று கூறியிருக்கிறார்.
மேலும், மாணவர்களின் வருகைப் பதிவேட்டில் மாணவர்களின் பெயர் வரிசையை பின்வரும் சாதிப்பிரிவுகளின் வரிசையில் பதிவிட்டுள்ளது, பள்ளி நிர்வாகம். தாழ்த்தப்பட்ட சாதியினர் (SC), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) பிற்படுத்தப்பட்டோர் -இந்து (BC – HIndu), பிற்படுத்தப்பட்டோர் – கிறித்தவர் (BC-Christian), பிற்படுத்தப்பட்டோர் – முசுலீம் (BC-Muslim), ஆதிக்கசாதி பிரிவினர் (OC) என சாதியப் பிரிவுகளின் அடிப்படையில் பிரித்துள்ளது. 
அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இதுகுறித்து பதிலளிக்கையில், “இது நிர்வாக நோக்கத்திற்காக மட்டுமே ஒழிய, மாணவர்களுக்கு என்ன சாதி என்ற விவரம் தெரிவிக்கப்பட மாட்டாது.” என்று சர்வசாதரணமாகக் கூறியுள்ளார்.
இது பற்றி சமூக செயல்பாட்டாளர் வி.கோபாலகிருஷ்ணன் “சென்னை நகரத்தில் இது நடக்குமானால், தொலைதூரப் பகுதிகளின் நிலைமை பற்றி நாம் கற்பனை செய்து பார்க்க முடியும். ஆசிரியர்கள் சாதிவெறிக்கு எதிராக கற்பிக்க வேண்டும், சாதியை நினைவுபடுத்தக் கூடாது. வேறுவிதமான நடைமுறையாக இருந்தாலும், பாகுபாடு பாகுபாடுதான், அதை பொறுத்துக் கொள்ள முடியாது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கோரிக்கை விடுத்தார்.
சென்னை மாநகராட்சி துணை கமிசனர் சினேகா இதுகுறித்துக் கூறுகையில், வாய்வழி விசாரணையில் இது தற்செயலாக நடந்ததாக தெரியவருவதாகவும், விரிவான விசாரணை நடத்தவிருப்பதாகவும் கூறியிருக்கிறார். 
அப்பட்டமாக சாதிய பாகுபாட்டை நடைமுறைப்படுத்திக் கொண்டு, அதனை இயல்பானது என்று திமிராகக் கூறியிருக்கும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியரின் இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் தற்செயலானவை என்று கூறினால், சிறு குழந்தை கூட நம்பாது. அப்படி அப்பட்டமான ஒரு சாதியத் திமிர்த்தனத்தை வெளிப்படுத்தும் நடவடிக்கையை தற்செயலானது எனக் கடந்து செல்வது எவ்விதத்திலும் நேர்மையான செயல் அல்ல.
நியாயப்படி, இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் அனைவரையும் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்திருக்க வேண்டும். ஆனால் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு பணிமாற்றம் மட்டும் வழங்கியிருப்பது, சென்னை மாநகராட்சியின் ‘தாயுள்ளத்தை’க் காட்டுகிறது. சாதியரீதியான வன்மத்திற்கு உரிய கடுமையான நடவடிக்கை எடுக்காமல் விடுவது, இத்தகைய வக்கிரத்தை ஆதிக்கத்தில் இருப்பவர்கள் தொடர்வதற்கு அனைத்து வாய்ப்புகளையும் ஏற்படுத்தும்.
சாதியரீதியான இத்தகைய வக்கிரங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமா ”சமூக நீதி” அரசு ?

சந்துரு
செய்தி ஆதாரம் : The Hindu

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க