திருவண்ணாமலை மாவட்டம் வீரளூரில், கடந்த ஜனவரி 15-ஆம் தேதி உயிரிழந்த அருந்ததியர் சாதியைச் சேர்ந்த அமுதா என்பவரது உடலைப் பொதுப்பாதை வழியாக எடுத்துச் செல்ல முயன்றதற்காக, வன்னிய கவுண்டர் உள்ளிட்ட ஆதிக்கசாதி வெறியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு அருந்ததியர்களின் குடியிருப்புகளைச் சூறையாடி, அவர்களைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளத்தில் தீயாகப் பரவியது.
ஆண்டாண்டு காலமாக அப்பகுதியைச் சேர்ந்த அருந்ததியர் சாதிய மக்கள், முட்புதர் மண்டிய, மலம் கழிக்கும் பாதை வழியாகத்தான் பிணத்தை மயானத்துக்கு எடுத்துச் செல்கின்றனர். இதை எதிர்த்து பொதுவழியில் உடலை எடுத்துச் செல்ல அனுமதி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். இது தொடர்பாக ஆர்.டி.ஓ. உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் இரு தரப்பினரிடையே நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையின்போது, பூ மாலை, மேள தாளம் இல்லாமல் பிணத்தை பொதுவழியில் கொண்டுபோகலாம் என்ற அநீதியான நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இந்த முடிவைக்கூட ஏற்காமல் ஆதிக்க சாதி வெறியர்கள் கூட்டத்திலிருந்து வெளியேறினர்.
படிக்க :
உடை : மத அடையாளமும் சாதிய அடையாளமும் || மு இக்பால் அகமது
சாதிவெறி : தாழ்த்தப்பட்ட பெண் சமைத்த உணவை புறக்கணிக்கும் பள்ளி மாணவர்கள்
இதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 15-ஆம் தேதி உயிரிழந்த அருந்ததியர் சாதியைச் சேர்ந்த அமுதாவின் உடலைப் பொதுவழியின் மூலம் மயானத்துக்குக் கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என்று ஆதிக்க சாதி வெறியர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக ஜனவரி 16-ஆம் தேதி ஊர் பஞ்சாயத்து கூடவிருந்த நிலையில், 15-ஆம் தேதி இரவே ஆதிக்க சாதி வெறியர்கள் ஒன்றுகூடி அருந்ததியர் சாதிய மக்கள்மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டனர். குறிப்பாக, அருந்ததியர் சாதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துராமன் என்பவரைக் கொலை செய்யவும் தீர்மானித்தனர். இக்கொலை வழக்கை நடத்தவும், இதற்காக கிணறு, மோட்டார் பம்பு செட் வைத்திருப்பவர்கள் தலா 10,000 ரூபாயும், ஆதிக்க சாதியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலரான மணி ஒரு இலட்சம் ரூபாயும் கொடுப்பதாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனவரி 16 அன்று ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே, மாலை 4 மணியளவில் தொடங்கிய இக்கொலைவெறித் தாக்குதலானது சுமார் 2 மணிநேரம் நடத்தப்பட்டது. ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட ஆதிக்க சாதி வெறியர்கள் அருந்ததியர் சாதியினர் குடியிருக்கும் தெருவில் புகுந்து கட்டை, இரும்புக் கம்பிகள், கடப்பாரை, கருங்கற்கள் போன்றவற்றைக் கொண்டு அருந்ததியரைக் கொடூரமாகவும் சரமாரியாகவும் தாக்கியுள்ளனர். என்ன நடக்கிறதென்றே தெரியாமல் மிரண்டுபோன அம்மக்கள் உயிருக்கு பயந்து ஓடி ஒளிந்து கொண்ட போதிலும், அவர்களைத் தப்பியோட விடாமல் அவர்களின் வீடுகளில் புகுந்து தாக்கியுள்ளனர். அருந்ததியர் பெண்களையும் சிறுமிகளையும் பாலியல் ரீதியாகச் சீண்டியும் ஆகக் கேடான வசவு சொற்களால் தாக்கியுமுள்ளனர்.
அவர்களின் வீடுகள், உடைமைகள், இரு சக்கர வாகனங்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள் என அனைத்தையும் சாதிவெறியர்கள் காட்டுமிராண்டித்தனமாக அடித்து நொறுக்கியுள்ளனர். ஓட்டு வீடுகளின்மீது பெரிய கற்களைத் தூக்கி வீசியுள்ளனர். “எங்களிடம் அடிமைகளாகக் குனிந்து கஞ்சி வாங்கிக் குடித்த சக்கிலியன் பிணத்தைப் பொதுவழியில் எடுத்துப் போகும் துணிச்சல் உங்களுக்கு எப்படி வந்தது” “சக்கிலியனுக்கு எதுக்கு புது உடை, செருப்பு, பைக்” “ஒரு மரக்கா சக்கிலியச்சி தாலியை அறுத்து எடுத்துட்டு வாங்கடா…” “ஜே.சி.பி. வச்சு சக்கிலியன் வீடு, தெருக்களை நெறவுங்கடா” என்றெல்லாம் சாதிவெறியோடு கூச்சலிட்டுக் கொண்டே நடந்துள்ளது, இத்தாக்குதல்.
அருந்ததியினர் வீடுகளுக்கு குடிநீர் வழங்கிடும் நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறி சாதி வெறியர்கள் சிறுநீர் கழித்ததாகவும், அதில் நஞ்சு கலந்ததாகவும் அம்மக்கள் கூறுகின்றனர். அவர்களின் வீடுகளில் புகுந்து பல இலட்ச ரூபாய் பணம், நகைகளைத் திருடிச் சென்றதாகவும், குறிப்பாக முத்துராமனின் குடும்பத்தைக் குறிவைத்துத் தாக்கி 3 சவரன் நகையையும் ரூ.4 இலட்சம் பணத்தையும் திருடிச் சென்றதாகவும், அவர் அமைதிப் பேச்சுவார்த்தைக்குச் சென்றிருந்ததால் உயிர் தப்பினார் என்றும் கூறுகிறார்கள் அப்பகுதி மக்கள்.
இக்கொலைவெறியாட்டம் நடைபெற இருப்பதை உளவுத்துறை மூலம் தெரிந்திருக்க ஏராளமான வாய்ப்புகள் இருந்துள்ள போதிலும், அதைத் தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காததோடு, தாக்குதலின் ஆரம்பம் முதல் இறுதிவரை கண்டும் காணாமல் இருந்து ஆதிக்க சாதி வெறியர்களுக்குத் துணையாக நின்றுள்ளது போலீசு. தாக்குதலின்போது வேடிக்கை பார்த்து படம் பிடிப்பதை மட்டுமே செய்த போலீசு, சாதி வெறியர்களின் தாக்குதலை அங்கீகரிக்கும் விதத்தில் “அடித்தது போதும் பா.. போங்க..” என்று கூறியுள்ளது.
தாக்குதலை முன்னிருந்து நடத்திய சாதிவெறியர்கள் அன்று இரவு தமது கிராமத்தின் அருகிலுள்ள மலையின் அடிவாரத்தின் காடுகளில் பதுங்கி இருந்து கொண்டு, கேக் வெட்டி கொண்டாடி “இது ஆரம்பம்தான், படையாட்சி (வன்னியர்) ஆட்டம் இனி தொடரும்” என்று வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ் பகிர்ந்து கொண்டாடியதாகவும் அம்மக்கள் கூறியுள்ளனர். இதைப் பற்றி போலீசில் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, பாதிக்கப்பட்ட அருந்ததியர்கள் ஜனவரி 17 அன்று சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றபோது அங்கிருந்த ஊழியர்கள் சிகிச்சை அளிக்காமல் விரட்டியடித்துள்ளனர்.
ஜனவரி 15-ஆம் தேதி இறந்த அமுதாவின் உடலை உறவினர்கள் பெறுவதற்குக்கூட போலீசு இழுத்தடித்து காலம் தாழ்த்தியுள்ளது. ஜனவரி 17-ஆம் தேதி பிற்பகல் அவசர அவசரமாக சடலத்தை வீட்டுக்குக் கொண்டு வந்ததும் இறுதிச் சடங்கைக்கூட அனுமதிக்காமல் 10 நிமிடங்களில் உடலை எடுத்துச் செல்லுமாறு உறவினர்களைக் கட்டாயப்படுத்தியுள்ளது போலீசு.
தாக்குதலுக்கு மறுநாள் (ஜனவரி 17) அன்று பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக போலீசு நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் இருந்த பெயர்கள் மற்றும் பாதிப்புகள் தொடர்பான விவரங்களைத் திருத்தி (அதாவது பாதிக்கப்பட்டவரகள் 230 பேர் என்பதை 36 பேர் என்று சுருக்கியும், பாதிப்பின் விவரங்களை நீக்கியும்) வாங்கியுள்ளது போலீசு. தாக்குதலை முன்னின்று நடத்தியவர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு, அவர்களை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டுமென கோட்டாட்சியரிடம் மனுவை அளித்த போதிலும், இன்றுவரை யாரும் கைது செய்யப்படவே இல்லை. மாறாக, ஆதிக்க சாதியினர் பாதிக்கப்பட்டவர்கள் மீது இரண்டு பொய் வழக்குகளைக் கொடுத்துள்ளனர். அப்பொய் வழக்குகள்மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும் என்றால், அரசின் நிவாரணத்தை உடனே பெற்றுக் கொண்டு அமைதியாக வேண்டும் என்று மிரட்டியுள்ளனர் அதிகாரிகளும் போலீசும். மேலும், முன்பு எடுக்கப்பட்ட முடிவின்படி, பிணத்தை பொதுவழியில் எடுத்துச் செல்வதற்கு மாறாக, ஆதிக்க சாதிவெறியர்களுக்கு ஆதரவாக நின்று கொண்டு முட்புதர் மண்டிய பாதையை சரி செய்து தருகிறோம் என்று அருந்ததியினரிடம் கூறியுள்ளனர்
இத்தாக்குதலை முன்னின்று நடத்தியவர்களுள் ஒருவர் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலரான மணி என்பவராவார். மேலும், தாக்குதலுக்கு மறுநாளன்று அப்பகுதியின் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பி.எஸ்.டி.சரவணன்., தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை இருவரும் திருவண்ணாமலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஆதிக்க சாதியினரைச் சந்தித்துப் பேசியுள்ளனர். ஆனால் இவர்கள் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்துப் பேசக்கூட இல்லை. இவ்வாறாக அதிகாரிகள், போலீசு, ஆளும் கட்சி – என மொத்த அரசுக் கட்டமைப்பும் இத்தாக்குதலுக்குத் துணை நின்றுள்ளது. இன்றுவரை துணைநின்றும் வருகிறது. சமூக நீதியின் பெயரால் ஆட்சியைப் பிடித்த தி.மு.க. அரசு, சாதிவெறியர்களுக்குத் துணையாய் நிற்கும் இந்த அயோக்கியத்தனத்தை மே 17 உள்ளிட்ட சில இயக்கங்களைத் தவிர யாரும் கேள்விக்குள்ளாக்கக்கூட இல்லை. ஊடகங்களும் இதை “இரு பிரிவினரிடையே மோதல்” என்று அயோக்கியத்தனமாக செய்தியை வெளியிட்டு அரசுக்கும் சாதி வெறியர்களுக்கும் சேவை செய்துள்ளன.
இத்தாக்குதலை அடுத்து அருந்ததியினர் மீதான சாதிய ஒடுக்குமுறை அன்றாட நிகழ்வாக மாறிவருகிறது. அருந்ததியின மக்களின் வீடுகளுக்குப் பால் விநியோகம் செய்பவரை ஆதிக்க சாதியினர் தடுத்துள்ளதோடு, அம்மக்கள் வளர்க்கும் மாடுகளின் பாலை கிராம நிர்வாகம் பெற்றுக்கொள்ளவும் தடை விதித்துள்ளனர். மேலும், அம்மக்கள் தங்களது ஆடு, மாடுகளை மேய்க்கச் செல்லும் பாதைகளையும் வயல்களுக்குச் செல்லும் பாதைகளையும் சாதிவெறியர்கள் முள்வேலியிட்டு அடைத்துள்ளனர். பொதுவெளியில் அவர்களை சக்கிலியர் என்று இழிவாகப் பேசுவதும், இன்னும் கேடான வார்த்தைகளைச் சொல்லி அழைப்பதும் அன்றாட நிகழ்வாகி வருகிறது.
வீட்டுக்கு வீடு நிதி திரட்டி, கொலை செய்யவும் அதற்கான வழக்கை நடத்தவும் திட்டமிட்டு, குடிக்கும் நீர் தொட்டியில் சிறுநீரும் நஞ்சும் கலந்து, ஒன்றுதிரண்டு ஒரு தாக்குதலை நடத்துகிறார்கள் என்றால், இதைச் சாதாரணமாகப் பார்க்க முடியாது. சாதிவெறியாட்டம் தமிழகத்தில் முன்னிலும் கொடூரமானதாய் எண்ணிக்கையிலும் தன்மையிலும் வளர்ந்து வருவதையே இச்சம்பவம் நமக்குத் துலக்கமாகக் காட்டுக்கிறது. அண்மைக்காலமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சாதி வெறித் தாக்குதல்கள் நடந்தும் வருகின்றன.
படிக்க :
தமிழ்நாட்டில் தொடரும் சாதி ஆணவப் படுகொலைகள் : என்ன செய்யப் போகிறது அரசு ?
ரவிக்கையின் ‘பாரம்பரியமும்’ சாதிய வர்க்க பாகுபாட்டு வரலாறும் | சிந்துஜா
தானே ஒரு தனிவகைச் சாதியாக, ஒடுக்குமுறை நிறுவனமாக இருக்கும் அதிகாரவர்க்கம், போலீசு, நீதித்துறை அடங்கிய அரசு எந்திரத்தைத் தகர்க்கும் திசையில் போராடாமல் இக்கட்டமைப்பிற்குள் சட்டங்களை இயற்றுவதையும் புதிய அமைப்புகளை, ஆணையங்களை உருவாக்குவதையும் முன்வைத்தே பல்வேறு ஓட்டுக் கட்சிகளும் இயக்கங்களும் போராடி வருகின்றன. உதாரணமாக பல்வேறு சாட்சியங்கள் இருந்தும், கண்ணுற்ற சாட்சியான கெளசல்யா உயிரோடிருந்தும் உடுமலை சங்கர் படுகொலை வழக்கில் கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமியை சென்னை உயர் நீதிமன்றம் விடுதலை செய்தபோது, இன்னும் கடுமையான சட்டங்கள் வேண்டுமென்றுதான் பேசினார் வி.சி.க. தலைவர் திருமாவளவன். ஆனால், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், ஆணையங்கள், ஆதித்திராவிடர் நலத்துறை என அரசின் உறுப்புகள், சட்டங்கள் எவையும் சாதிவெறியைத் தடுப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் தோல்வியடைந்துள்ளதையே இச்சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நமக்கு நிரூபித்துக் காட்டுகின்றன.
எல்லா சாதிவெறித் தாக்குதல்களையும் போலவே வீரளூர் விவகாரத்திலும் அரசும் போலீசும் ஆளும் கட்சியும் சாதி வெறியர்களுக்கு ஆதரவாக நிற்கிறது என்பதே நாம் பெறும் அனுபவமாகும். இன்றைய அரசுக் கட்டமைப்பில் ஒடுக்கப்படும் மக்களுக்கு நீதி கிடைக்காது என்பதே வெண்மணி முதல் உடுமலை சங்கர் படுகொலை வழக்கு வரை எல்லாவற்றிலும் நாம் கண்டுணரும் அனுபவமும் ஆகும்.
(குறிப்பு : வீரளூர் சாதிவெறித் தாக்குதல் தொடர்பாக மே 17 இயக்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட உண்மையறியும் குழுவின் அறிக்கையை அடிப்படையாக வைத்து இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.)

வினோத்

1 மறுமொழி

  1. இன்னும் எத்தனை ,எத்தனை சட்டம் இந்த மக்களுக்கு ஆதரவாக வந்தாலும், நம்மை போல சக மனிதன்னு இவர்கள் உணரும் வரை இந்த பட்டியல் நீளவே செய்யும். சட்டத்தின் மூலம் நாய பூனைன்னும், பூனைய நாய்ணும் சொல்லலாம். ஆனால் மக்கள் ஒற்றுகொள்ள வேண்டுமே இதை. சட்டங்கள் எவ்வளவு முற்போக்கானதானாலும், அறவே பகுத்தறிய மறுக்கும் மக்களிடம் அது செல்லா நாணயம் தான்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க