த்தரகாண்ட் மாநிலத்தின் ஓர் அரசு பள்ளியில் தாழ்த்தப்பட்ட சமையல் பணியாளர் சமைத்த உணவை ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் சாப்பிட மறுத்துள்ளனர். கிராமப்புரங்களிலும், பள்ளிகளிளும் சாதியத் தீண்டாமை அதிகரித்து வருவதற்கான துலக்கமான சான்று இது.
உத்தரகாண்ட் மாநிலம், சம்பாவத் மாவட்டத்தில் உள்ள சுகிதாங் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் சத்துணவு தயாரிக்கும் பணியில் கடந்த நவம்பர் 25-ம் தேதி முதல் பணியாற்றி வருகிறார் சுனிதா என்ற தாழ்த்தப்பட்ட பெண். மாதச் சம்பளம் ரூ.3,000 தான் என்றாலும், இரண்டு நோய்வாய்ப்பட்ட குழந்தைகளையும், வேலையில்லாத கணவரையும் பராமரிப்பதற்கு அவருக்கு அந்தப் பணி மிகவும் முக்கியமானது.
பணிக்குச் சேர்ந்தது முதல் எவ்விதப் பிரச்சினையும் இன்றி தாம் சமைத்து வந்த நிலையில் திடீரென டிசம்பர் 14-ம் தேதியன்று உணவருந்தமாட்டோம் என பள்ளி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
“டிசம்பர் 13-ம் தேதி நான் சமைத்த உணவை எந்த பிரச்சினையும் இல்லாமல் அனைத்து மாணவர்களும் சாப்பிட்டனர். ஆனால், மறுநாள் (டிசம்பர் 14) நான் தயாரித்த உணவை அவர்கள் சாப்பிட மறுத்ததால் அதிர்ச்சியடைந்தேன். மாணவர்களை அவர்களது பெற்றோர்கள் சத்துணவு சாப்பிட வேண்டாம் என்று கூறியுள்ளனர்” என்றார் சுனிதா.
படிக்க :
சென்னை மாநகராட்சிப் பள்ளியில் சாதியரீதியிலான வருகைப் பதிவேடு !
உ.பி : பள்ளிச் சிறுவர்களிடம் காட்டப்படும் சாதித் தீண்டாமை !
பள்ளியில் சமைத்த உணவை சாப்பிடுவதை தவிர்ப்பதற்காகவே மாணவர்கள் தினமும் வீட்டிலிருந்து உணவு எடுத்து வருகிறார்கள். 230 மாணவர்கள் பயிலும் பள்ளியில் தொடக்க வகுப்புகளில் படிக்கும் 66 மாணவர்கள் மட்டுமே தற்போது மதிய உணவு சாப்பிடுகிறார்கள். இந்நிலையில், டிசம்பர் 14-ம் தேதி ஆதிக்க சாதி மாணவர்களின் பெற்றோர்கள் சுனிதா சமைப்பதை தடுக்கப் பள்ளிக்கு சென்றுள்ளனர்.
புஷ்பா பட் என்ற விதவைப் பெண் சமையல் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டதாகவும், ஆனால் கடைசி நிமிடத்தில் சுனிதா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியிருக்கின்றனர் உள்ளூர் ஆதிக்கச்சாதி பெற்றோர்கள். சுனிதாவின் நியமனம் குறித்து விசாரணை நடத்தவும், புஷ்பா பட்டிற்கு ஏன் பணி வழங்கப்படவில்லை என்பதை அறியவும் தாம் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டதாக ஆதிக்கச் சாதி பெற்றோர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பள்ளி முதல்வர் பிரேம் ஆர்யா, “சுனிதாவின் நியமனம் விதிகளின்படி நடந்ததுதான். ஆனால், பல பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் மற்றும் அவர் சமைத்த உணவை தங்கள் குழந்தைகளை சாப்பிட கூடாது என்று கூறியுள்ளனர்.” என கூறினார்.
ஆனால் அதிகார வர்க்கம் ஆதிக்கச்சாதியின் பக்கம் தான் இயல்பாகவே நிற்கும் என்பதை அம்மாவட்ட ஆட்சியர் நிரூபித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் வினித் தோமர், “பள்ளியில் தாழ்த்தப்பட்ட பெண் நியமிக்கப்பட்டது முறைகேடாக நடந்தது என்று பெற்றோர்கள் கூறுவதால் இதுகுறித்து ஆய்வு செய்ய மாவட்ட கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளோம்” என்று கூறினார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் 13 மாவட்டங்களில் 11,000 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதில் 20,000-க்கும் மேற்பட்ட பெண்கள் தொடக்கப் பள்ளிகளுக்கு உணவு சமைக்கும் சத்துணவு பெண்களாக வேலை செய்து வருகிறார்கள். பள்ளிகளின் பரித்துரைகளின் அடிப்படையில் மாவட்ட அளவில் சத்துணவு பெண்கள் தேர்வு மற்றும் நியமனம் செய்யப்படுகிறது என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.
உத்தரகாண்டில் அரசுப் பள்ளிகளில் மத்திய உணவுத் திட்டத்திற்கான பணிகளில் பெண்கள் நியமிக்கப்படுகிறார்கள். பள்ளியின் சமையலறையில் மாணவர்களுக்கு உணவு தயாரிப்பது மட்டுமே அவர்களது பணி. சாதியப் பாகுபாடு தலைவிரித்தாடும் உத்தரகாண்ட் மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினர் சமைத்த உணவுகளை மாணவர்கள் தங்கள் பெற்றோர்களின் எதிர்ப்பின் பெயரில் சாப்பிட மறுப்பது நிரந்தரப் பிரச்சினையாக இருந்து வருகிறது.
சுனிதா தன் குடும்பத்துடன்
இரண்டு குழந்தைகளுக்குத் தாயான சுனிதா, உள்ளூர் ஆதிக்க சாதி கிராம மக்களால் தான் அவமானப்படுத்தப்பட்டதால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறுகிறார். “உயர் சாதி கிராம மக்கள் சக்தி வாய்ந்தவர்கள். என்னை பள்ளியில் வேலை செய்ய அனுமதிக்க மாட்டார்கள். என்னுடைய நியமனம் செல்லாது என்று கூறி அந்த உயர் சாதிப் பெண்ணுக்கு வேலை கொடுத்தாலும் நான் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்றார் சுனிதா.
மாணவர்களுக்கு சமத்துவம் கற்றுக் கொடுக்கதான் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், பெற்றோர்களிடமிருந்தே ஆதிக்க சாதி சிந்தனைகள் பள்ளிக் குழந்தைகளிடம் திணிக்கப்படுவது ஒரு அவலம். இதை கண்டிக்கத் தவறியதோடு, ஆதிக்கச்சாதி வெறியர்களுக்கு துணை போகிறது அதிகார வர்க்கம். இந்த பார்ப்பனிய சிந்தனையை ஒழிக்காமல் பள்ளியில் அரங்கேறும் சாதி தீண்டாமை குற்றங்களை ஒழிக்க முடியாது.

சந்துரு
செய்தி ஆதாரம் : த வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க