த்தியப்பிரதேச மாநிலத்திலுள்ள செஹோர் மாவட்டத்தில் தலித் குடும்பத்தைச் சார்ந்தவர்கள், தங்கள் வீட்டின்முன் கழிவுகள் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததற்காக ஆதிக்க சாதி வெறியர்களால் இரும்பு கம்பிகளாலும் உருட்டுக்கட்டைகளாலும் தாக்கப்பட்டனர்.

ஹரிநாத் சிங் என்ற தலித் ஒருவரின் வீட்டிற்கு முன்னே, அப்பகுதியைச் சேர்ந்த ஆதிக்கச் சாதி வெறியினர், மாட்டுச்சாணத்தைக் கொட்டி வந்தனர். இதனை தடுத்து நிறுத்தம் தனது வீட்டிற்கு முன்னர், மாட்டுச் சாணம் குவிக்கப்படும் இடத்தில் செங்கற்களை ஹரிநாத் சிங் குடும்பத்தினர் அடுக்கி வைத்திருக்கின்றனர்.

கடந்த ஜூன் 12-ம் தேதி ஆதிக்கசாதியை சார்ந்த நாராயண்சிங் செந்தவ், ராஜேந்திர சிங் மற்றும் விஜேந்திர சிங் ஆகிய நபர்கள் ஹரிநாத் சிங்கின் வீட்டிற்கு வந்துள்ளனர். ஆதிக்க சாதியினர் வழக்கமாக மாட்டு சாணத்தை கொட்டுமிடத்தில், செங்கற்களை வைத்தது குறித்து கேள்விகேட்டு தகறாரில் ஈடுபட்டுள்ளனர்.

படிக்க :
♦ உ.பி-யில் தொடரும் அவலம் : 19 வயது தலித் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை !

♦ ‘உயர்’ சாதிக்காரரின் பைக்கை தொட்ட தலித் மீது கொலைவெறித் தாக்குதல் !

வாக்குவாதம் அதிகரித்து ஆதிக்க சாதியினரில் ஒருவர், தலித் சமூகத்தை சார்ந்தவரை “பாகாட்டோ” என்ற இழிவான சொல்லைச் சொல்லி திட்டியிருக்கிறார். (இது மத்திய பிரதேசத்தின் மால்வா பிராந்தியத்தில் விளக்குமாறு தயாரிக்கும் தலித் சமூகத்தின் துணை சாதியினரை இழிவுப்படுத்தும் வார்த்தை)

இப்படி சாதிரீதியாக அவமானப்படுத்துவதை நிறுத்துங்கள் என்று பொறுமையாக ஹரிநாத் சிங்கின் மகனான சோபல்சிங் கூறும்போது, ஆதிக்க சாதிவெறியனான நாராயண்சிங் அருகில் இருந்த சில இரும்பு கம்பிகளை எடுத்து ஹரிநாத்தை தாக்கினார். அதே நேரத்தில் சோபல்சிங்கை ராஜேந்திர சிங் தாக்கினார். சோபல்சிங்கின் குடும்ப உறுப்பினர்களான பைருசிங் செந்தவ், லோகேந்திர செந்தவ் மற்றும் மனோகர் செந்தவ் ஆகியோர் தாக்குதலை தடுக்க முற்பட்டபோது, மூன்று ஆதிக்க சாதிவெறியர்களும் சேர்ந்து அவர்களையும் உருட்டுக்கட்டைகளைக் கொண்டு தாக்கினர்.

ஹரிநாத் சிங் மற்றும் அவரது மகன் சோபால்சிங் சோலங்கி ஆகியோர் தலையில் பலத்த காயங்களுடன் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனது தந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது என்றும், அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்றும் சோபால்சிங் கூறியுள்ளார்.

“இந்த வீடு எங்களுக்கு சமீபத்தில் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டது. நாங்கள் மருத்துவமனைக்குச் சென்றபோது அவர்கள் எங்கள் வீட்டில் இருந்த பாத்திரங்களை வெளியே தூக்கியெறிந்தார்கள், எங்கள் வீட்டுக்கு வரும் மின்சாரத்தை துண்டித்துவிட்டார்கள்” என்று சோபன்சிங்கின் சகோதரர் விஜய்சிங் கூறினார்.

மேலும், தமது குடும்பத்தை கொலை செய்துவிடுவதாக ஆதிக்கச்சாதி வெறியர்கள் மிரட்டியதாகவும், தங்களது வீட்டை அவர்கள் தீவைத்துக் கொளுத்தியதாகவும் சோபல்சிங் கூறியுள்ளார்.

“இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு எஸ்சி/எஸ்.டி போலீசு நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய நாங்கள் சென்றபோது, நகர இன்ஸ்பெக்டர் எங்களை இழிவுபடுத்தும் விதமாக நடந்துகொண்டு, விரட்டியடித்தார். பின்னர் நாங்கள் அருகிலுள்ள ஜவார் போலீசு நிலையத்திற்குச் சென்றோம். தலித் சமூகத்தைச் சார்ந்த சிலர் அழுத்தம் கொடுத்த பின்னரே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது” என்று கூறுகிறார் சோபால்சிங்.

ஜவார் போலீசு நிலையம் குற்றம்சாட்டப்பட்ட 6 பேர் மீதும் 294, 323, 506, பட்டியலின சாதி மற்றும் ஆதி திராவிட பழங்குடியினர் கொடுமைகளைத் தடுக்கும் சட்டப்பிரிவு 3 (1), 3(2) ஆகிய பிரிவின் கீழ் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்துள்ளது.

சோபால்சிங் நியூஸ் கிளிக் இணையதளத்திடம் தொலைபேசியில் பேசுகையில், ஆதிக்க சாதி ஆட்கள் தங்கள் வீட்டிற்கு தீவைத்ததாகவும், வீட்டு பெண்களை கடுமையாக தாக்கியதாகவும் தெரிவித்தார். ஆனால் ஆதிக்க சாதியினரின் செல்வாக்கு காரணமாக எஃப்.ஐ.ஆரில் இது பற்றி ஏதும் போலீசு குறிப்பிடவில்லை என குற்றம் சாட்டினார்.

“முதல் தகவல் அறிக்கையில் அவர்களது வீடு எரிக்கப்பட்டதாக போலீசு குறிப்பிடவில்லை. எங்கள் தலையீட்டுக்கு பிறகே பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது” என்று குற்றம்சாட்டுகிறார் பீம் ஆர்மியைச் சேர்ந்த உறுப்பினர் சுனில் அஸ்தே.

இந்தியா முழுவதும் தலித் மக்கள், பழங்குடி மக்கள், முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்தல் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பொதுவாகவே இந்திய அதிகார வர்க்கம் தலித் விரோதமாக நடந்து கொள்ளும் நிலையில், மோடியின் ஆட்சியில் குற்றமிழைத்த ஆதிக்கசாதி கிரிமினல்கள் எளிமையாக தப்பிப்பதற்கு மட்டுமின்றி கவுரவிக்கப் படுவதற்குமான சூழல் நிலவுகையில், பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.


சந்துரு
செய்திஆதாரம் : The Wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க