பத்திரிகைச் செய்தி

தேதி: 02.10.2020

மிழகம் மற்றும் புதுவையில் தொழிலாளர்களின் அரசியல் விடுதலைக்காக செயல்படும் எமது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் (பு.ஜ.தொ.மு.) தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளராக இருந்த தோழர். சுப. தங்கராசு, அவர் பணிபுரிந்த பெல் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வீட்டுமனை வாங்கித் தருவதற்காக அமைக்கப்பட்ட சொசைட்டியின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டு வந்தார்.

அந்த சொசைட்டிக்குத் தேவையான வீட்டுமனைகளுக்காக நிலம் வாங்குவதில், சொசைட்டி பணத்தை கையாடல் செய்துவிட்டதாக சொசைட்டி உறுப்பினர்களான பெல் தொழிலாளர்கள் மூலம் கடந்த 2019 அக்டோபரில் புகார் வந்ததை அடுத்து, புகாரின் உண்மை நிலை கண்டறிய 2019 நவம்பரில் மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு மூலம் விசாரணை நடத்தப்பட்டு, அந்தப் புகார் உண்மை என்பது உறுதி செய்யப்பட்டது. அந்த விசாரணை முடிவின் அடிப்படையில் அவருக்கு குற்றப்பத்திரிக்கை கொடுத்து, அதற்கான அவரது விளக்கங்கள் 2020 ஜனவரி மாதம் பெறப்பட்டது. அவர் மீதான நடவடிக்கை பற்றி விவாதிக்கப்பட இருந்த நிலையில், நிலமோசடி தொடர்பான கட்டுரை 29.07.2020 தேதியிட்ட நக்கீரன் இதழில் வெளிவந்தது.

அதே நாளில் பு.ஜ.தொ.மு. மாநில நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் சுப. தங்கராசு அவர்களை பு.ஜ.தொ.மு. சங்கத்தின் சிறப்பு உறுப்பினர் தகுதியில் இருந்தும், பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் இடைநீக்கம் செய்வது என முடிவெடுக்கப்பட்டது. அந்த முடிவை அன்றைய தினமே மாநில செயற்குழு உறுப்பினர்கள் மட்டம் வரை தெரிவிக்கப்பட்டுபதோடு, கடந்த 07.08.2020 அன்று பத்திரிக்கை செய்தியாக வெளியிட்டிருந்தோம்.

எமது சங்கத்தின் அமைப்பு விதிகளின்படி, இப்பிரச்சினையில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மாநில செயற்குழுவிற்கே உள்ளது என்பதால், தோழர் சுப. தங்கராசு மீதான புகார் தொடர்பாக மாநில செயற்குழுக் கூட்டம் கடந்த 27.09.2020 நடத்தப்பட்டது. மாநில செயற்குழு முடிவின் படி, தோழர். சுப. தங்கராசு அவர்கள் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சிறப்பு உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும், பு.ஜ.தொ.மு. சங்கத்திலிருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகிறார். இனி, பு.ஜ.தொ.மு. அமைப்பிற்கும், சுப. தங்கராசு அவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

படிக்க :
♦ கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்து விடப்பட்ட வங்கிகள் | தோழர் விஜயகுமார் உரை
♦ கார்ப்பரேட் கொள்ளைக்கான சட்டதிருத்தங்களை கிழித்தெறிவோம் ! பு.ஜ.தொ.மு அரங்கக்கூட்டம்

எமது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தொழிற்சங்கம், மற்ற கட்சி சார்பான சங்கங்கள், தனிநபர் சங்கங்கள், பிற அமைப்பு சார்ந்த சங்கங்களுக்கு மத்தியில், புரட்சிகர அரசியலைப் பிரச்சாரம் செய்து வந்ததுடன், புதிய ஜனநாயகப் புரட்சிக்கு மக்களைத் திரட்டும் அரசியல் சங்கமாகவும், தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலமாகவும் தனித்த அடையாளத்துடன் செயல்பட்டு வரும் சங்கம் என்பதை, அதில் பயணிக்கும் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி, அச்சங்கம் செயல்படும் பகுதி மக்களுக்கும், புரட்சிகர அரசியலையும், மாற்று அரசியல் கருத்துக்களையும் உற்று நோக்கும் பலருக்கும் தெரியும்.

குறிப்பாக, மார்க்சிய – லெனினிய – மாவோ சிந்தனைகளை ஏற்றுக் கொண்டு மக்களுக்காக அர்ப்பணிப்பு, தியாகத்துடனும் தொழிலாளர் வர்க்க விடுதலையை முன்னெடுக்கும் புரட்சிகர தொழிற்சங்க அமைப்பின் தலைமைப் பொறுப்பில், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்ட வேண்டிய தோழர், கூலி விவசாயிகளுக்குச் சேர வேண்டிய அனாதீன நிலத்தை பட்டாவாக மாற்ற முயற்சித்தது, இதற்காக லஞ்ச – ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டது கடும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

தொழிற்சங்கம் என்பது தொழிலாளர்களுக்கு புரட்சிகர அரசியலைக் கற்றுத் தருவதற்கான பயிற்சிப் பட்டறை என்ற கூற்றை எமது செயல்திட்டமாகக் கொண்டு செயல்பட்டு வரும் புரட்சிகர சங்கத்தில், முதலாளிகள், நிர்வாக அதிகாரிகள், அரசியல்வாதிகள் போன்றவர்களின் குற்றங்களை மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் விரோதமானது என்று, எதிரி வர்க்க முறையில் பரிசீலிப்பது போல, சொந்த அமைப்பிலும், எந்தப் பொறுப்பில் இருந்தாலும் அவர்களின் தவறுகளுக்கு எதிரான போராட்டத்தில் எவ்வித சமரசமும் இன்றி செயல்படுவோம் என்று உறுதி ஏற்கிறோம். எல்லாக் காலத்திலும், மக்கள் பக்கம் நின்று தவறுகளை எதிர்த்து முன்னேறுவோம் என்பதை உறுதியுடன் கூறிக் கொள்கிறோம்.

இப்படிக்கு,

(த. பழனிச்சாமி) தலைமைக்குழு,
பு.ஜ.தொ .மு., தமிழ்நாடு – புதுச்சேரி.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
தமிழ்நாடு – புதுச்சேரி.
தொடர்புக்கு: 944444 2374.

3 மறுமொழிகள்

    • இப்படி சந்தேகம் வருவது சரிதான்! ஆனால் சந்தேகம் வருகிறது என்பதாலேயே அது உண்மையாக இருக்க வேண்டும் என்பதில் அவசியமில்லையே?

      இந்த பிரச்சனைக்கு யாரு யாருக்கெல்லாம் பங்கிருக்கிறது என்பதை முழுதாக வெளிக்கொண்டு வருவது மிக மிக அவசியம்! ஆனால் சிலர் முந்திக்கொண்டு “எதையோ” மூடி மறைக்கும் அவசரத்தில் கூச்சல் போட்டுக்கொண்டு எந்த ஆதாரமும் இல்லாமல் அவதூறு பரப்புகின்றனர்!

      எந்த ஆதாரமும் இல்லாமல் எதை சொன்னாலும் நம்பும் அளவுக்கு சில நபர்கள் இருப்பது தான் ஆச்சர்யமாக உள்ளது. பா.ஜ.க. வின் ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டுக்கு இந்திய மக்கள் பலியாகியது போல தான் இந்த முன்னால் ‘மார்க்சிஸ்டு – லெனினிஸ்டுகள்’ இருக்கிறார்கள். பாவம் நிதாணத்தை தவர விட்டவர்கள்! வெறும் அனுமானங்களை நம்பும் அளவுக்கு சென்றுவிட்டனர்.

  1. விசாரணை அறிக்கையில் சுப.தங்கராசுவின் மீதான புகார் உறுதிப்படுத்தப்பட்ட பிறகும்கூட, அவரை உடனடியாக இடைநீக்கம் செய்யாமல், பிரச்சினையை ஆறப்போட்டுவந்த பு.ஜ.தொ.மு. தலைமைக் குழுவின் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லையா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க