கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்து விடப்பட்ட வங்கிகள் | தோழர் விஜயகுமார் உரை

மல்லையா, நீரவ்மோடி, முகுல்சோக்ஸி மக்கள் பணத்தை முழுங்கிய கதை... ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியை வீடியோகான் முதலாளி மொட்டையடித்த கதை... மோடி அரசின் கீழ் வங்கித் துறையில் என்ன நடக்கிறது?

கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்து விடப்பட்டது வங்கித்துறை” என்ற தலைப்பின் கீழ் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் சார்பில்,  கடந்த அக் 22  அன்று சென்னை ஆவடியில் உள்ள ஓ.சி.எஃப். ஒர்க்கர்ஸ் யூனியன் பொன் விழா அரங்கத்தில் அரங்கக்கூட்டம்  நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய பு.ஜ.தொ.மு., மாநில பொருளாளர் தோழர் பா.விஜயகுமார் உரையின் காணொளி.

ஒருவன் இன்னொரு ஆளிடம் ஒரு பத்தாயிரம் கடன் வாங்குகிறான். கடன் வாங்கிய பணத்தை திருப்பிக் கட்ட முடியவில்லை. கடன் கொடுத்தவன் கோர்ட்டுக்கு போகிறான். கோர்ட்டில் மூன்றாவது ஆசாமி வருகிறான். முதலாவது ஆசாமி வாங்கிய பத்தாயிரம் கடனை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், கடன் கொடுத்த இரண்டாவது நபருக்கு இரண்டாயிரம்தான் தருவேன்; எஞ்சிய எட்டாயிரத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அந்த மூன்றாவது ஆசாமி கோர்ட்டில் சொல்கிறான். இதனை கோர்ட்டும் ஏற்றுக் கொள்கிறது. கடன் கொடுத்தவருக்கு எட்டாயிரம் நட்டம், கடனை ஏலத்துக்கு எடுத்த மூன்றாவது ஆசாமிக்கு எட்டாயிரம் இலாபம், கடன் வாங்கியவன் சுதந்திரமாக வெளியில் போகிறான்.

இந்தக் கதையை வங்கிகளுக்கு பொருத்திப் பாருங்கள். வங்கியில் முதலாளி வாங்கிய கடனை திருப்பிக்கட்ட முடியவில்லை. இந்த கடன் தொகையை இன்னொரு முதலாளி பாதி தொகைக்கும் கீழாக ஏலம் எடுக்கிறான். இதனால் கடன் கொடுத்த வங்கிக்கு பாதிப்பணம் கூட திரும்ப கிடைக்கவில்லை. இதற்கு வாராக்கடன் என்று பெயர் வைத்து பட்டியல் போட்டுள்ள, வங்கிகள், ஒட்டுமொத்த கடனும் வாராதோ என்று பயந்த நிலையில் பாதியோ இதற்கும் குறைவோ, ஏதோ ஒரு தொகை திரும்பி வந்துவிட்டதே என்று வங்கிகள் ஏற்றுக் கொள்ளவேண்டும், இந்த கட்டப்பஞ்சாயத்தை செய்து முடிப்பதற்கு சட்டப்படியாக அமைக்கப்பட்ட தீர்ப்பாயம் ஒன்று இருக்கிறது. தேசிய கம்பெனிச் சட்டங்களுக்கான தீர்ப்பாயம் National Company Law Tribunal (NCLT) என்று அதற்குப் பெயர்.

படிக்க:
#MeToo : படுக்கை அறைக்கு வந்தால் பாட வாய்ப்பு ! கர்நாடக சங்கீதத்தின் பார்ப்பன ராகம் !
பரோலில் விடப்பட்டிருக்கும் கிரீஸ் ! இந்தியா பாடம் கற்றுக் கொள்ளுமா ?

முதலாளிகள் ஏமாற்றிய கடனை சரிக்கட்டுவதற்கு அரசு கையாளுகின்ற குறுக்கு வழிகளில் மற்றொன்று நேரடியாக மக்கள் தலைமீதே இடியை இறக்குவதாகும், வங்கியின் குறைந்தபட்ச இருப்புத் தொகையை (மினிமம் பேலன்ஸ்) உயர்த்துவதும், அப்படி குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாவிட்டால் அபராதம் போட்டு பணம் திரட்டுவதும் நடக்கிறது. இவ்வாறு ஸ்டேட் வங்கி அபராதம் போட்டு ஒரே ஆண்டில் திரட்டிய தொகை ரூ.12,000/- கோடிகள், ஏனைய பொதுத்துறை வங்கிகளை சேர்த்தால் இன்னும் பல ஆயிரம் கோடிகள் சேர்ந்திருக்கும், முதலாளிகள் கொழுக்க. குறைந்தபட்ச பேலன்ஸ் கூட வைக்க முடியாத பஞ்சைப்பராரி மக்கள் துன்பத்தை அனுபவிக்க வேண்டும்.

சமீபத்தில் நட்டத்தில் இயங்கிய தேனா வங்கியை பாங்க் ஆப் பரோடா மற்றும் விஜயா வங்கி ஆகியவற்றுடன் இணைக்கும் முடிவை மத்திய அரசு அறிவித்தது. இதேபோல் ஏனைய வங்கிகளை ஒன்றுடன் மற்றொன்றை இணைத்து மொத்தம் 7 வங்கிகளாக மாற்ற திட்டமிட்டுள்ளது,இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பொதுத்துறை வங்கிகளைப் பாதுகாத்தே தீரவேண்டும். பொதுத்துறை வங்கிகளைக் காப்பது என்பதன் சாராம்சம், மக்கள் பணத்தை பாதுகாப்பது மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரத்தையே பாதுகாப்பதாகும். நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க வேண்டுமெனில், பொருளாதாரத்தை கார்ப்பரேட் கைகளிலிருந்து பறித்தெடுத்து மக்கள் சார்பு, தற்சார்பு பொருளாதாரமாக கட்டியமைக்கும் திட்டத்தோடு களமிறங்க வேண்டும்.

முழுமையான காணொளி!

பாருங்கள்! பகிருங்கள்!!

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க