அருண் கார்த்திக்

வாராக்கடன் விவகாரத்தில் கடந்த செவ்வாய் (11 செப்டம்பர், 2018) அன்று இரண்டு முக்கியமான தீர்ப்புகளை வழங்கியது உச்ச நீதிமன்றம்.

மார்ச்சில் ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை ஒன்று வந்தது. 2,000 கோடிக்கு அதிகமாக உள்ள கடன்களில், தவணை தேதி முடிந்து ஒரு நாள் கடன் தொகை கட்டாமல் இருந்தால் கூட அந்தக் கடன்களை அழுத்தத்தில் உள்ள கடன்கள் (stressed loans) என்று வகைப்படுத்தும்படி வங்கிகளுக்கு அந்த சுற்றறிக்கையின் மூலம் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

இவ்வாறு வகைப்படுத்தி 180 நாட்களுக்குள், அந்த கடன்களுக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கை கூறியது. அப்படி தீர்வு காண முடியவில்லை என்றால் அந்த கம்பெனியை வாராக்கடன் என்று அறிவித்து அதை ஏலத்தில் விடுவதற்கான பணிகளை துவங்க வேண்டும்.

இந்த சுற்றறிக்கையை எதிர்த்து தனியார் மின் உற்பத்தியாளர் கூட்டமைப்பு அலகாபாத் உயர்நீதி மன்றம் சென்றது,  சுற்றறிக்கைக்கு எதிராக தடை தர மறுத்துவிட்டது உயர்நீதி மன்றம்.

அதே போல், வாராக்கடன்களாக வகைப்படுத்தப்பட்ட நிறுவனங்களை ஏலம்  விடும் விவகாரத்திலும் ஒரு உத்தரவு வந்துள்ளது. எஸ்ஸார் ஸ்டீல் என்ற (வாராக்கடனாக வகைப்படுத்தப்பட்ட) நிறுவனத்தை ஏலத்தில் வாங்க ஆர்ஸலர்-மிட்டல் நிறுவனம் ஏலத்தில் பங்கு பெற்றது. ஆர்ஸலர் – மிட்டல் நிறுவனத்தின் துணை நிறுவனங்களான  KSS Patron – கே.எஸ்.எஸ். பேட்ரான் மற்றும் Uttam Galva Steel – உத்தம் கால்வா ஸ்டீல் ஆகிய இரு நிறுவனங்கள் கடனைத் திரும்ப செலுத்தாததால் வாராக்கடன்களாக வகைப்படுத்தப்பட்டு இருந்தன. தொடர்புடைய நிறுவனங்கள் வாராக்கடனாக இருப்பதால் ஆர்ஸலர் – மிட்டல் நிறுவனம் ஏலத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து வழக்கு தொடுத்தது ஆர்ஸலர் – மிட்டல்; அந்த இரண்டு நிறுவனங்களின் கடனை கட்டினால் ஏலத்தில் பங்கு பெறலாம் என்று தீர்ப்பு வந்தது. ஏலத்தில் பங்கு பெற்று வென்றால் கடனை கட்டுவதாக கூறியது ஆர்ஸலர் – மிட்டல். கடனைக் கட்ட செப்டம்பர் 11 (செவ்வாய்) கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

தனியார் மின் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர். அதைத் தொடர்ந்து, செவ்வாய் அன்று ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம். மேலும் இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 14-க்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்.

வழக்கு தொடுத்தது என்னமோ தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் தான். ஆனால் தீர்ப்பில், வழக்கம் போல இன்னொரு சரத்தையும் சேர்த்தது உச்ச நீதிமன்றம். பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை இனி தானே விசாரிக்கப் போவதாக அறிவித்தது. அதாவது, வாராக்கடன் சம்மந்தமான, வாராக்கடன் என்று வகைப்படுத்தப்பட்டு ஏல நிலையில் உள்ள அனைத்து வழக்குகளையும் இனி உயர்நீதி மன்றங்கள் விசாரிக்க முடியாது. அவை அனைத்தையும் உச்ச நீதிமன்றமே விசாரிக்கும்.

பல்வேறு நிலையில் உள்ள வாராக்கடன் ஏலங்கள், இனிமேல் ஏலம் விடப்பட வேண்டிய வாராக்கடன்கள் எல்லாவற்றின் நிலைமையும் என்ன ஆகும் என்று தெரியாத ஒரு குழப்ப நிலை உருவாகி உள்ளது.  இதனால், ஏலம் என்று சொல்லி ஏதோ கொஞ்சமாவது பணத்தை வசூலித்து கொண்டு இருந்த முறையும் முழுவதும் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு உயர்நீதி மன்றங்களில் உள்ள வழக்குகளைத் தானே விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் சொல்வது நமக்கு புதிய செய்தி அல்ல. முதல் முறை NEET – நீட் அமல்படுத்தப்பட்டு தேர்வு நடந்து பல குழப்பங்கள் நடந்ததால், பலர் உயர்நீதி மன்றங்களில் வழக்குகள் தொடுத்திருந்தனர். சில உயர்நீதிமன்றங்கள் மாணவர்களுக்கு சாதகமான தீர்ப்புகளையும் வழங்கி இருந்தன. அப்போது, வழக்கம் போல சி.பி.எஸ்.இ – CBSE உயர்நீதி மன்றங்களில் வழக்கை சந்திக்காமல் உச்சநீதிமன்றம் சென்றது. அப்போதும் இதே போல் தான் அனைத்து உயர்நீதி மன்றங்களிலும் உள்ள வழக்குகளை இனி தானே விசாரிக்கப்போவதாக அறிவித்தது உச்சநீதிமன்றம். வேறு வார்த்தைகளில், நீட் சம்மந்தமான வழக்குகளை இனி உயர்நீதிமன்றங்கள் விசாரிக்கக் கூடாது என்று உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

நீட் வேண்டுமா வேண்டாமா என்ற வழக்கு இன்னும் நிலுவையில் தான் உள்ளது. நீட் விவகாரத்தை தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு இது தெரிந்த செய்தி தான். நீட் மூலம் தான் இனி மருத்துவ மாணவர் சேர்க்கை நடக்க வேண்டும் என்று அனைத்திந்திய மருத்துவக் கழகம் (ஆல் இந்திய மெடிக்கல் கவுன்சில்) சொன்னது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அல்தமஸ் கபீர் உச்சநீதிமன்ற அமர்வு, மெடிக்கல் கவுன்சில் உத்தரவை ரத்து செய்து, நீட் கட்டாயம் என்பதை நீக்கியது. பிறகு அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் வேறு ஒரு அமர்வால் மறுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த அமர்வு அல்டமஸ் கபீர் தீர்ப்பை ரத்து செய்து, நீட்-ஐ கட்டாயம் என்று ஒரு ‘இடைக்கால’ தீர்ப்பு வழங்கியது.

அதாவது, நீட் வழக்கு விசாரணை முடியும் வரை மெடிக்கல் கவுன்சில் உத்தரவு அமலில் இருக்கும், அதாவது நீட் தேர்வு கட்டாயம். இந்த இடைக்கால தீர்ப்பின் மூலமாக தான் இந்த இரண்டு வருடங்களாக நீட் நம் மீதி திணிக்கப்படுகிறது. நீட் வேண்டுமா வேண்டாமா என்ற மூல வழக்கு மட்டும் இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் விசாரிக்கப்படாமல் உள்ளது.

இந்த வரலாறை பார்க்கும் பொழுது, இந்த ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை செல்லுமா செல்லாதா என்ற வழக்கு எப்பொது விசாரிக்கப்படும் என்பதை நாம் கணக்கிடலாம்.

இதில் நாம் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். நீட் பிரச்னையில் வழக்கின் தீர்ப்பு வரும்வரை மெடிக்கல் கவுன்சிலின் நடைமுறை செல்லும், ஆனால் ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை பிரச்னையில், வழக்கின் தீர்ப்பு வரும்வரை ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை செல்லாது.

சட்டத்தின் முன் அனைவரும் ’சமம்’ என்பதை மட்டும் கூறிக்கொள்கிறேன்!

எஸ்ஸார் ஸ்டீல் நிறுவன ஏலத்தின் முதல் சுற்றில் ஆர்ஸலர் – மிட்டல் துணை நிறுவனங்கள் வாராக்கடன்களாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்துக்கு (NCLT) சென்றது ஆர்ஸலர் – மிட்டல். துணை நிறுவனங்கள் கட்ட வேண்டிய கடனான ரூ. 7 ஆயிரம் கோடியை கட்டிவிட்டு ஏலத்தில் பங்குபெறலாம் என்று சொன்னது NCLT. ஏலத்தில் பங்கு பெற்று வென்றால் கடனை கட்டுவதாகக் கூறி ஏலத்தில் பங்கு பெற அனுமதிக்கும்படி தேசிய நிறுவனங்கள் மேல்முறையீட்டு சட்டத் தீர்ப்பாயத்தில் (NCLAT) மேல் முறையீடு செய்தது ஆர்ஸலர் – மிட்டல் நிறுவனம். கடனை கட்டிவிட்டு ஏலத்தில் பங்குபெறலாம் என்று தீர்ப்பளித்தது NCLAT. கடனைத் திரும்ப செலுத்த கடைசி தேதி தான் 11 செப்டம்பர் (செவ்வாய்).

NCLAT-யின் உத்தரவை எதிர்த்து, மேலே கூறிய கோரிக்கையோடு உச்சநீதிமன்றம் சென்றது ஆர்ஸலர் – மிட்டல். செவ்வாயன்று இது ஒரு சாதாரண வழக்காகக் கூட உச்ச நீதிமன்றம் செல்லவில்லை. செவ்வாயன்று, இது ஒரு urgent hearing-ஆக (அவசர விசாரணைக்கு)  தான் உச்சநீதிமன்றம் முன் வந்தது. உச்சநீதிமன்றம், இந்த வழக்கை செப்டம்பர் 12 அன்று விசாரிப்பதாக கூறி, விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

18 MLA-க்கள் தகுதிநீக்க வழக்கு போல இதுவும் ஒரு தகுதிநீக்க வழக்கு தான். சட்டம் மிகவும் தெளிவாக இருக்கிறது. வாராக்கடன் நிறுவனங்களுடன் தொடர்புள்ள நிறுவனமாக இருந்தால் ஏலத்தில் பங்கு பெற தகுதி இல்லை. அப்படி பங்கு பெற வேண்டும் என்றால் கடனை திருப்ப செலுத்திவிட்டு வரலாம். இது எளிய மக்களுக்கு கூட புரியக்கூடிய ஒரு வழிமுறை, நியாயம் என்று தோன்றக் கூடிய ஒன்று. இருந்தாலும் இதை விசாரித்து தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொல்லும்.

எஸ்ஸார் ஸ்டீல் பற்றியும் ஆர்ஸலர் – மிட்டல் பற்றியும் நமக்கு இப்போது ஓரளவுக்கு தெரியும். ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை வழக்கில் உச்சநீதிமன்றம் சென்ற நிறுவனங்கள், அதாவது சுற்றறிக்கை தடை செய்யப்படாவிட்டால் வாராக்கடனாகக் கூடிய நிறுவனங்கள்,  எவை என்றும் நமக்கு தெரியவேண்டுமல்லவா. அந்த உத்தமர்கள் – GMR, எஸ்ஸார் பவர், ரத்தன் இந்தியா மற்றும் ஐடியல் எனர்ஜி.

குறிப்பு:

எஸ்ஸார் பவர்: எஸ்ஸார் ஸ்டீல் ஒரு ஸ்டீல் நிறுவனம். எஸ்ஸார் பவர், எஸ்ஸார் குழுமத்தை சேர்ந்த மின் உற்பத்தி நிறுவனம். எஸ்ஸார் குழுமத்தின் முதலாளி போல் இருப்பவர் ரவி ரூயா, இவர் 2G வழக்கில் விசாரிக்கப்பட்டவர்.

இவ்வாறு பல சம்பவங்கள் நடந்துகொண்டிருக்க நமக்கு முக்கியமான செய்தியாக சொல்லப்படுவது எது? ராகுல் என்ன செய்கிறார், ஸ்டாலின் அழகிரி சண்டை என்ன ஆகும், அ.தி.மு.க. அடுத்து என்ன சாதனை செய்யும், எந்த அமைச்சர் என்ன உளறினார், இதுவே தான்.

வங்கிகளின் பணம் பட்டப்பகலில் கடன் என்ற பெயரில் பெரும் முதலாளிகளால் கொள்ளையடிக்கப் படுகிறது. இந்த வங்கிகள் அனைத்தும் அரசு வங்கிகள், வங்கியில் உள்ள பணமும் மக்களின் பணம், வங்கி திவால் ஆனால் வங்கிகளுக்கு அரசு கொடுக்கப்போகும் பணமும் மக்கள் பணம். இருந்தாலும் இதை எல்லாம் பற்றி எந்த அரசியல்வாதியும் பேசுவதில்லை.

மற்ற கருத்து வேறுபாடுகளை தாண்டி, இவை அனைத்தும் சரி என்று அனைத்து அரசியல்வாதிகளும் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் போல தெரிகிறது! இதை எல்லாம் கேள்வி கேட்டால் அமைப்பையே கேள்விக்கு உட்படுத்துவது போல் ஆகிவிடும்  !

மூலம்:

– அருண் கார்த்திக்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க