ஸ்ஸார் ஸ்டீல் (Essar Steel) என்ற நிறுவனம் நாம் கேள்விப்பட்ட நிறுவனம் தான். எஸ்ஸார் பெட்ரோல் பங்குகளை நாம் பார்த்துள்ளோம். இவை இரண்டும் எஸ்ஸார் குழுமத்தின் நிறுவனங்கள் தான். ஒரே குழுமத்தின் நிறுவனங்களாக இருந்தாலும், சட்டப்படி இவை தனித்தனி நிறுவனங்கள்.

எஸ்ஸார் ஸ்டீல், மற்ற பல ஸ்டீல் நிறுவனங்களைப் போல, வங்கிகளிடம் கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தவில்லை. செலுத்தாததால், அது திவாலான நிறுவனம் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.

எஸ்ஸார் ஸ்டீல் கடன் தரவில்லை என்றால் வங்கிகள் எஸ்ஸார் பெட்ரோல் பங்கிடம் போய் கேட்க முடியாது, ஏனென்றால், சட்டப்படி அவை தனித்தனி நிறுவனங்கள். ஒரே முதலாளி, ஒரே நிர்வாகம் எல்லாம் இருந்தாலும் அவை தனித்தனியாக பதியப்பட்ட நிறுவனங்கள். இந்த ‘தனித்தனி’ விவகாரம் இந்த கட்டுரைக்கு அவ்வளவு சம்மந்தம் இல்லாத விடயம் என்பதால் இப்போது இதை விட்டுவிடுவோம், வேறொரு கட்டுரையில் இதை பற்றி பார்ப்போம், மீண்டும் வாராக்கடனுக்கு செல்வோம்.

எஸ்ஸார் ஸ்டீல் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாததால், திவாலான கம்பெனி என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. திவாலான கம்பெனிகளை ஏலம் விட்டு கடனை திரும்பப்பெற 2016-இல் புதிதாக ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது, அது தான் Insolvency and Bankruptcy Code, சுருக்கமாக IBC. இந்த IBC-படி திவாலான கம்பெனிகள் ஏலம் விடப்பட்டு ஏலத்தில் வரும் பணம் கடன் தந்த வங்கிகளுக்கு பிரித்து தரப்படும். (இந்த IBC இந்திய சொத்துக்களை வெளிநாட்டு முதலாளிகளுக்கு அடிமாட்டு விலையில் விற்பதற்காக கொண்டுவரப்பட்டது என்று விமர்சனங்கள் உள்ளன).

ஏலத்தின் முதல் சுற்றில், ரஷ்யாவை சேர்ந்த நியூமெட்டல் (Numetal), வேதாந்தா (Vedanta – ஸ்டெர்லையிட் கம்பனியின் ஓனர்), மற்றும், ஆர்ஸலர்-மிட்டல் (ArcelorMittal) ஆகிய மூன்று நிறுவனங்கள் போட்டியிட்டன.

ஆர்ஸலர்-மிட்டல் மற்றும் நியூமெட்டல் நிறுவனங்கள் முதல் சுற்று ஏலத்தில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டன.

ஆர்ஸலர்-மிட்டல் நிறுவனம் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் பின்வருமாறு. ஆர்ஸலர்-மிட்டல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி CEO திரு.மிட்டல், KSS Patron – கே.எஸ்.எஸ். பேட்ரான் மற்றும் Uttam Galva Steel – உத்தம் கால்வா ஸ்டீல் ஆகிய இரு நிறுவனங்களின் promotor- துவக்கிய முதலாளியாக இருந்தார். KSS Patron மற்றும் Uttam Galva Steel என்ற இரண்டு நிறுவனங்களுமே கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் வாராக்கடன் என்று அறிவிக்கப்பட்ட நிறுவனங்கள். IBC-படி ஏற்கனவே வாராக்கடன் இருக்கும் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பு வகிப்பவர் எந்த வாராக்கடன் ஏலத்திலும் பங்கு பெற முடியாது. இது மிட்டலுக்கும் தெரியும், அதனால் தான் ஏலத்தில் பங்குபெறுவதற்கு முன்பே அவருக்கு KSS Patron மற்றும் Uttam Galva Steel நிறுவனங்களில் இருந்த பங்குகளை விற்றுவிட்டு ஏலத்தில் பங்கு கொண்டார்.

IBC இதில் கொஞ்சம் தெளிவாகவே இருக்கிறது. வாராக்கடன் என்று அறிவிக்கப்பட்ட கம்பெனியில் இருந்து ஒருவர் வெளியேறினாலும், அந்த கம்பெனி வாராக்கடன் என்று அறிவிக்கப்பட்டபோது அவர் அந்த கம்பெனியில் முக்கிய பொறுப்பில் இருந்திருந்தால், அவரால் IBC நடத்தும் ஏலத்தில் கலந்து கொள்ளும் தகுதியை இழக்கிறார்.

எஸ்ஸார் இரும்பு தொழிற்சாலை.

அதனால் தான் KSS Patron மற்றும் Uttam Galva Steel நிறுவனங்களில் இருந்து வெளியேறி இருந்தாலும் கூட ஆர்ஸலர்-மிட்டல் நிறுவனம் தகுதி நீக்கம் செய்யப்பட்டது.

நியூமெட்டல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் பின்வருமாறு. நியூமெட்டல் என்பது ஒரு கூட்டமைப்பு, VTB என்ற ரஷ்யா வங்கி கூட்டிய கூட்டமைப்பு. இந்த கூட்டமைப்பில் ரேவந் ருயா என்பவரும் இருந்தார். ரேவந் ருயா யாரென்றால், ஏலத்தில் இருக்கிறதே எஸ்ஸார் ஸ்டீல் அந்த நிறுவனத்தின் promotor ரவி ருயாவின் மகன். அப்பா கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்த மாட்டார். அந்த சொத்து ஏலத்தில் வரும்போது குறைந்த விலையில் மகனே அதை வாங்குவார்! அப்படி ஒரு விளையாட்டு இவர்களுக்கு!

IBC-படி இப்படி இருப்பவர்களும் தகுதி இழக்கின்றனர். அதனால் நியூமெட்டலும் தகுதிநீக்கம் செய்யப்பட்டது.

ஆர்ஸலர்-மிட்டல் மற்றும் நியூமெட்டல் நிறுவனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டவுடன் நீதிமன்றம் சென்றன. நியூமெட்டல் ரேவந் ருயாவை தனது கூட்டமைப்பில் இருந்து நீக்கிவிடுவதாக நீதி மன்றத்திடம் சொன்னது. நீங்கியதால் ஏலத்துக்கு தகுதி பெற்று இரண்டாம் ஏலத்தில் பங்கு பெற்றது.

ஆர்ஸலர்-மிட்டலுக்கு நீதி மன்றம் ஒரு உத்தரவு போட்டது. KSS Patron மற்றும் Uttam Galva Steel நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன்களை செலுத்திவிட்டால் ஆர்ஸலர்-மிட்டலும் ஏலத்தில் பங்கு பெறலாம் என்று நீதி மன்றம் சொன்னது.

இரண்டாம் கட்ட ஏலத்தில் ஆர்ஸலர்-மிட்டலும் ஏலத்தொகை கூறியது, அதாவது ஏலத்தில் பங்கு பெற்றது. நாம் என்ன நினைப்போம், ஆர்ஸலர்-மிட்டல் நிறுவனம் KSS Patron மற்றும் Uttam Galva Steel நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடனை செலுத்திவிட்டு ஏலத்தில் பங்கு பெறுகிறது என்று தானே, அது தான் இல்லை. அது சாதாரண மனிதர்கள் செய்வது. இது ஆர்ஸலர்-மிட்டல், பல நாடுகளில் நலிவடைந்த நிறுவனங்களை அடி மாட்டு விலைக்கு வாங்கி பலரை ஏமாற்றி அதில் லாபம் சேர்த்து வளர்ந்த நிறுவனம். அவர்களிடம் இருந்து லேசில் பணம் வாங்கிவிட முடியாது!

ஆர்ஸலர்-மிட்டல் என்ன சொன்னது தெரியுமா? – ‘நாங்கள் KSS Patron மற்றும் Uttam Galva Steel நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகையை ஒரு Escrow கணக்கில் செலுத்தி விடுகிறோம், நாங்கள் ஏலத்தில் வெற்றி பெற்றால், அந்த escrow கணக்கில் இருக்கும் பணம் இந்த நிறுவனங்களின் கடனை செலுத்த சென்றுவிடும்’. Escrow கணக்கு என்பது வங்கிகள் ஒரு நோக்கத்துக்கு என்று திறப்பது, அந்த நோக்கத்தை தவிர வேறு எந்த நோக்கத்துக்கும் அந்த பணத்தை உபயோகப்படுத்த முடியாது. ஆர்ஸலர்-மிட்டல் திறந்த escrow கணக்கின் நோக்கம் என்னவாக இருக்குமென்றால், ஆர்ஸலர்-மிட்டல் நிறுவனம் ஏலத்தில் வென்றால் escrow கணக்கில் இருக்கும் பணம் KSS Patron மற்றும் Uttam Galva Steel நிறுவனங்களின் கடனை செலுத்த பயன்படும், வெற்றி பெறாவிட்டால் அந்த கணக்கில் இருக்கும் பணம் திரும்ப ஆர்ஸலர்-மிட்டலுக்கே போய்விடும். வெற்றி பெற்றுவிட்டு அந்த கணக்கில் இருக்கும் பணத்தை செலுத்த மாட்டேன் என்று ஆர்ஸலர்-மிட்டலும் சொல்ல முடியாது, வெற்றி பெறாவிட்டால் கடன் தந்த வங்கிகள் அந்த பணம் எங்களுக்கு சொந்தம் என்றும் சொல்ல முடியாது.

IBC மற்றும் நீதி மன்றம் சொல்வதற்கும், ஆர்ஸலர்-மிட்டல் சொல்வதற்கும் உள்ள முரண் உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இருந்தாலும் எளிய மொழியில் சொல்கிறேன்.

நீதி மன்றம்: ‘நீ முதலாளியாக இருந்த இரண்டு நிறுவனங்களின் கடனை செலுத்திவிட்டு இந்த ஏலத்தில் பங்கு எடுக்கலாம்’

ஆர்ஸலர்-மிட்டல்: ‘ஏலத்தில் பங்கு எடுத்து வெற்றி பெற்றால் அந்த இரண்டு நிறுவனங்களின் கடனை செலுத்தி விடுகிறேன்’.

ஆர்ஸலர்-மிட்டல் எவ்வளவு தந்திரமாக வேலை செய்கிறது என்று புரிந்திருக்கும்.

இதில் இன்னொன்றும் இருக்கிறது, ஆர்ஸலர்-மிட்டல் முதலாளியாக இருந்த நிறுவனங்கள் கடனை செலுத்தாமல் வாராக்கடன் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இப்போது கொஞ்சம் நெருக்கியதும் ஆர்ஸலர்-மிட்டல் கடனை செலுத்துகிறேன் என்று சொல்கிறது. இதன் அர்த்தம் என்ன? முன்பு கடனை செலுத்த முடிந்தும் செலுத்தாமல் இருந்திருக்கிறது ஆர்ஸலர்-மிட்டல்.

ஆர்ஸலர்-மிட்டல் ஏமாற்றுகிறது என்று ஒரு சிறு குழந்தைக்கு கூட புரியும், ஆனால் நமது சட்டங்கள் நீதிமன்றங்கள் ஆர்ஸலர்-மிட்டலை எதுவும் செய்ய முடியாது செய்ய மாட்டார்கள்.

இதுவே ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்திலோ அல்லது விவசாய குடும்பத்திலோ நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? வங்கிகள் எவ்வாறு வசூல் செய்திருப்பார்கள்?! சம்மந்தப்பட்டார் வீட்டுக்கு போய் கேவலமாக திட்டி அந்த வீட்டாரை தற்கொலை செய்ய வைத்திருப்பார்கள். இதிலும் சட்டப்படி அவ்வாறு எல்லாம் போய் திட்டக்கூடாது. ஆனால், இதில் எல்லாம் சட்டத்தை யாரும் பார்ப்பதும் இல்லை, சட்டமும் இவற்றை எல்லாம் கண்டுகொள்வதும் இல்லை.

சரி இந்த நிறுவனங்களின் கடன் எவ்வளவு? ஏலம் கூறும் தொகை எவ்வளவு? ஒவ்வொன்றாக பார்ப்போம்.

எஸ்ஸார் ஸ்டீல் (ஏலம் விடப்படும் நிறுவனம்) வாங்கி கட்டாத கடன் – ரூ. 49 ஆயிரம் கோடி.

ஆர்ஸலர்-மிட்டல் promotor-ஆக இருக்கும் KSS Patron மற்றும் Uttam Galva Steel மொத்தமாக செலுத்தாமல் இருக்கும் கடன் – ரூ. 7 ஆயிரம் கோடி.
வேதாந்தா ஏலம் கோரும் தொகை – ரூ. 34 ஆயிரம் கோடி.
நியூமெட்டல் ஏலம் கோரும் தொகை – ரூ. 37 ஆயிரம் கோடி.
ஆர்ஸலர்-மிட்டல் ஏலம் கோரும் தொகை – ரூ. 42 ஆயிரம் கோடி.

இதில் வெற்றி பெரும் நிறுவனமும் ஏலத்தொகையை உடனே கொடுத்துவிட மாட்டார்கள், தவணை முறையில் சில ஆண்டுகளில் தருவார்கள். அதனால் இந்த ஏலம் விட்ட பணமும் ஏப்பம் விடப்படலாம்.

இருந்தாலும், அதிகபட்ச ஏலத்தொகையான ரூ. 42 ஆயிரம் கோடி வங்கிகளுக்கு கிடைக்கிறதென்று வைத்துக்கொள்ளலாம். அப்படி கிடைத்தாலும் வங்கிகள் இழக்கும் தொகை ரூ. 9 ஆயிரம் கோடி.

IBC முறையில் ஏலம் நடைபெறும் நிறுவனங்களில் இது சின்ன ஏலம், அதனால் வெறும் 9 ஆயிரம் கோடி, மற்ற ஏலங்களில் பல 10 ஆயிரம் கோடிகளில் தான் வங்கிகள் பணத்தை இழக்கின்றன.

இப்படி வங்கிகள் இழப்பதற்கு இவர்கள் வைத்துள்ள பெயர் haircut, அதாவது முடி வெட்டிக்கொள்வது. வங்கிகள் முடி வெட்டிக்கொள்கின்றன என்று பொருள் கொள்ளலாம்.

கேரளா வெள்ளத்துக்கு கேட்கும் நிவாரணம் எவ்வளவு?

தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை தொகை – ஓய்வு பெற்றவர்களுக்கு ரூ. 600 கோடி, வேலையில் இருப்பவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி.

செவிலியர்கள் போராடியதும் அவர்களை நீதிமன்றம் தரக்குறைவாக நடத்தியதும் நமக்கு ஞாபகம் இருக்கும். அந்த போராட்டத்தின் சில தகவல்கள். 2015இல் தமிழக அரசு 11 ஆயிரம் செவிலியர்களை பணியில் அமர்த்தியது. இவர்கள் ஊதிய உயர்வு கேட்டு தான் போராடினார்கள். இவர்களின் இப்போதைய மாத சம்பளம் சுமார் ரூ. 8 ஆயிரம். மொத்தம் வருடத்திற்கு ரூ. 108 கோடி இருந்தால் அனைவருக்கும் சம்பளம் தரலாம். சம்பளத்தை இரண்டுமடங்காக்க ரூ. 200 கோடி சொச்சம் இருந்தால் போதும். எஸ்ஸார் ஸ்டீல்க்கு வங்கிகள் ‘முடிவெட்டி’கொள்ளும் தொகை ரூ. 9 ஆயிரம் கோடி.

அர்பன் நக்சல்கள் தான் நமது நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம்!
ஜெயா சாவில் பெரும் மர்மம் உள்ளது!
மோடி நாட்டுக்காக 18 மணி நேரம் உழைக்கிறார்!
போலோ பாரத் மாத்தா கி ஜெய்!

முகநூலில்: Arun Karthik

மூலம்: ArcelorMittal raises bid for Essar Steel

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க