வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக போராடிய மக்கள் மீது தமிழக காவல்துறை நிகழ்த்திய படுகொலைகளை மூடி மறைக்க தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இணைய சேவையை முடக்கியிருந்தது தமிழக அரசு. தமிழகத்தில் இதுதான் முதன்முறை என்றாலும் மோடியின் ஆட்சியில் இந்தியா முழுவதுமே இணைய சேவை முடக்கம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

மென்பொருள் சுதந்திர சட்ட மையம் (Software Freedom Law Centre) வெளியிட்டுள்ள “இணைய இருளில் வாழ்க்கை” என்ற அறிக்கையில் 2012-2018 காலகட்டங்களில் இணைய சேவை முடக்கம் பற்றிய தரவுகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

இந்த அறிக்கை 2012-ஆம் ஆண்டு குடியரசு நாளையொட்டி காசுமீர் மாநிலத்தில் செய்யப்பட்ட இணைய சேவை முடக்கத்திலிருந்து தனது தரவுகளை தொடங்குகிறது. ஏனெனில் அதன் பிறகுதான் இணைய சேவை முடக்கத்தைப் பற்றிய செய்திகள் பரவலாக வெளி வரத்தொடங்கின.

இணைய சேவைகள் 2012-ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் வரை 19 மாநிலங்களில் கிட்டத்தட்ட 172 முறை நிறுத்தப்பட்டிருக்கின்றன. தென்னிந்தியாவில் 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தெலுங்கானாவில் முதன் முறையாகவும் தற்போது தமிழகத்தில் இரண்டாவது முறையாகவும் இணைய சேவை நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு ஆண்டிலும் முந்தைய ஆண்டை விட இரு மடங்கு இணைய சேவை நிறுத்தப்பட்டிகிறது.

ஜம்மு காசுமீரில் மட்டுமே இருந்த இந்த இணைய சேவை நிறுத்தம் இன்று இந்தியா முழுவதிலும் மோடி அரசு அமல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மோடி அதிகாரத்திற்கு வந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் வரை 160 க்கும் மேற்பட்ட அளவில் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டு இருக்கின்றன. “டிஜிட்டல் இந்தியா” பம்மாத்து காட்டிய மோடிக்கு எதிராக நாடு முழுவதும் நடக்கும் போராட்டங்களைத் தான் இந்த “டிஜிட்டல் இருள்” எதிரொலிக்கிறது.

பொதுமக்கள் தங்களை அணிதிரட்டி அரசு இயந்திரத்தை முடக்க இணையத்தை பயன்படுத்துகிறார்கள் என்றால் அதை தடுப்பதற்கு இணையத்தை முடக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்கள் சில அறிவுஜீவிகள்.

ஆனால் எதார்த்தத்தில் நெருக்கடி மற்றும் உடல்நலம் குறித்த சேவைகள், வங்கி பரிவர்த்தனைகள், வர்த்தகம், பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகள், பாரிய இயற்கை இடர்பாடுகள் பற்றிய அறிவிப்புகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல்கள் உள்ளிட்ட பெரும்பாலானவை இணைய சேவைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் இணைய சேவை நிறுத்தங்கள் பொதுமக்களது சமூக பொருளாதார வாழ்க்கையை இருளில் மூழ்கடித்து விடுகின்றன.

2012-2017-ஆம் ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்ட இணைய சேவை முடக்கம் கிட்டத்தட்ட 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியிருப்பதாக சர்வதேச பொருளாதார உறவுகள் பற்றிய ஆராய்ச்சிக்கான இந்திய மன்றம் (Indian Council for Research on International Economic Relations) கூறியிருக்கிறது. 2016-ஆம் ஆண்டில் மட்டுமே 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி உட்பட 3 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்ட இணைய சேவை முடக்கம், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் முதல், மோடியின் டிஜிட்டல் இந்தியா பாசிசத்திற்கு பலியான அப்பாவி ‘இந்துக்கள்’ வரை அனைவரின் வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.

வெள்ளையர்கள் கால ஊரடங்குச் சட்டத்தின் பேரில் தான் இன்றுவரை இணைய சேவை முடக்கப்பட்டு வந்திருக்கிறது. பொது அமைதிக்கு இணைய சேவையை முடக்குவது கட்டாயம் என்று கூறும் மாநில அரசுகள், அதற்கு எந்தவிதமான  சட்டபூர்வமான விளக்கமும் இதுவரை அளித்ததில்லை. இணைய சேவையை அரசு முடக்குவது என்பது மனித உரிமைக்கு எதிரானதாகும் என்று 2016-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையம் கண்டித்துள்ளது.

வன்முறை பரவாமல் தடுப்பது என்ற பெயரில், இணைய சேவைக்குத் தடையிட்டு மக்களின் கருத்துகளை முடக்கி விடலாம் எனக் கனவு காணுகிறது மோடி அரசு. இணையத்தைத் தடுத்து, ஊடகங்களை கைக்குள் போட்டுக் கொண்டு வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடலாம் எனக் கருதுகிறது மோடி அரசு. முடக்கப்படும் கருத்துக்களும், கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறையும் ஒருநாள் வீதியில் வந்துதான் விடியும் என்பதை மோடி கும்பல் நினைவில் கொள்ளட்டும்.

  • வினவுச் செய்திப் பிரிவு

மேலும் படிக்க,
Digital darkness – internet shut downs

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க