லக முதலாளித்துவ நெருக்கடிக்கு விலை கொடுத்த நாடுகளில் முக்கியமானது கிரேக்கம். கிரேக்க பொருளாதாரம் உலகமயமாக்கலில் பிணைக்கப்பட்டு,  கிரேக்க உழைக்கும் மக்களை பணயம் வைத்து அந்நாட்டு முதலாளிகளும் ஐரோப்பிய வங்கிகளும் நடத்திய சூதாட்டம், 2008-இல் தொடங்கிய உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடியின் போது கிரேக்க நாட்டை திவால் நிலைக்குத் தள்ளியது. வயதானவர்களின் ஓய்வூதியங்கள் காணாமல் போயின, வங்கிகள் திவாலாகின, வேலை இழப்புகள் அதிகரித்தன, வணிகம் படுத்து விட்டது.

நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கான கடன் நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக ஐரோப்பிய/அமெரிக்க நிதி நிறுவனங்கள் முதியவர்களின் ஓய்வூதியங்களை மறுசீரமைத்து வெட்டுவது, அரசு வழங்கும் பொதுச் சேவைகளை குறைப்பது போன்ற கடுமையான நிபந்தனைகளை விதித்தன. அவற்றை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ‘ஜனநாயக’ அரசை அவமானப்படுத்தி தமது கட்டளைக்கு பணிய வைத்தன. இதன் விளைவாக அந்நாட்டு மக்களில் பலர் தமது வாழ்வாதாரங்களை இழந்து கடும் நெருக்கடியில் சிக்கினர்.

கிரேக்கம் பற்றிய குறிப்பு : இந்நாடு கிழக்கு நடுத்தரைக் கடல் பகுதிகளில் பற்பல சிறு சிறு தீவுகளைக் கொண்டது. இதன் தலைநகர் ஏதென்ஸ். மக்கள் தொகை சுமார் 1.1 கோடி, தனிநபர் ஆண்டு வருமானம் $29,030.

கிரேக்க நாடு தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு இந்தக் கட்டுரையின் இறுதியில் தரப்பட்டுள்ள சுட்டிகளை பார்க்கவும்.

இப்போது கிரேக்கத்தின் நிலை என்ன? மைக்கேல் ராபர்ட்சின் ஆகஸ்ட் 9, 2018 கட்டுரையின் மொழிபெயர்ப்பு கீழே

பரோலில் விடப்பட்டிருக்கும் கிரேக்க பொருளாதாரம் மூவரணியின் மீட்பு திட்டம் என்று அழைக்கப்படும் சிறையிலிருந்து கிரேக்கம் (கிரீஸ்) சட்டபூர்வமாக விடுவிக்கப்பட்டிருக்கிறது. கிரேக்க அரசு அதன் வரி வருவாயை எப்படி செலவிட வேண்டும் என்பது பற்றியும், அது எவ்வளவு கடன் வாங்கலாம் என்பது பற்றியும் யூரோ குழு, ஐரோப்பிய மத்திய வங்கி, சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) ஆகியவை அடங்கிய மூவரணியின் கட்டுப்பாடுகளும், வெளிப்படையான உத்தரவுகளும் முடிவுக்கு வந்திருக்கின்றன.

ஆனால், கிரேக்க நாட்டின் முழுமையான விடுதலையாக இதை பார்க்க முடியாது என்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

முதலாவதாக, கிரேக்க அரசு யூரோ குழுவுடன் ஒரு புதிய ஒப்பந்தத்தை போட்டிருக்கிறது. அதன்படி ஓய்வூதிய திட்டத்திலும், அரசு வழங்கும் பொது சேவைகளிலும் ‘சீர்திருத்தங்கள்’ செய்வது உள்ளடங்கிய கறாரான செலவு குறைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும். அதற்கு பதிலாக, கிரேக்கத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 180 சதவீதமாக உள்ள அரசு கடனை திரும்பக் கட்டுவதற்கான காலம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்ட கடன்-நீட்டிப்பு திட்டத்தின் படி, கிரேக்கம் இரண்டாவது மீட்பு திட்டத்தின்கீழ் பெற்ற 9,700 கோடி யூரோ ($11,200 கோடி) மதிப்பிலான கடன்களை திருப்பிக் கட்டுவதற்கு இன்னும் 10 ஆண்டு அவகாசம் கொடுக்கப்படுகிறது. அதாவது, அந்தக் கடன்கள் மீதான வட்டியையும், அசலையும் கட்டுவது 10 ஆண்டுகளுக்கு தள்ளிப் போடப்படுகிறது. கட்டாமல் நிலுவையில் இருக்கும் பழைய கடன் பாக்கிகளை தீர்ப்பதற்கும், எதிர்வரும் கடன் கட்டும் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கும், 2400 கோடி யூரோ கையிருப்பை ஏற்படுத்தும் வகையில் அந்நாட்டுக்கு 1500 கோடி யூரோ புதிய கடன் கொடுப்பதாக கடன் காரர்கள் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கோர்பு நகரம்.

அதாவது, யூரோ குழுவுக்கு கிரேக்கம் கொடுக்க வேண்டிய கடன் தொகையை அந்நாடு 2032 வரை கட்ட வேண்டியதில்லை. இது நல்ல விஷயமாக தெரியலாம். ஆனால், கடன் சுமை எந்தக் குறைப்பும் இல்லாமல் தொடர்கிறது.

“கடன் தள்ளுபடி செய்யாமல் கடன் கட்டும் தவணையை மட்டும் தள்ளிப் போடுவதன் விளைவாக ஐரோப்பிய அரசுகள் கிரேக்க நாட்டிடமிருந்து வசூலிக்க வேண்டிய கடன் 2018- இறுதியில் எந்த அளவில் இருக்கும்  என்ற இப்போதைய மதிப்பீட்டை விட 50%-க்கும் மேல் உயரும். இதன் விளைவாக 22-ம் நூற்றாண்டு வரையிலும் கிரேக்கம் ஐரோப்பிய கடன் காரர்களுக்கு கடன் கட்டிக் கொண்டிருக்க வேண்டும்”. என்று சொல்கிறது ஒரு ஆய்வு.

இப்போது, வெளியாகியிருக்கும் இன்னொரு அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், மூவரணியின் ஒரு பகுதியாக கிரீசுக்கு கடன்களை வழங்குவதற்கு பொறுப்பாக இருந்த ஐ.எம்.எஃப் அதிகாரிகள், ஐ.எம்.எஃப்-ன் அனைத்து விதிகளையும், நடைமுறைகளையும் மீறியதோடு, ஐ.எம்.எஃப் இயக்குனர் குழுவிடமிருந்தும் பல தகவல்களை மறைத்திருக்கின்றனர். இது ஐ.எம்.எஃப்-ன் சுயேச்சையான மதிப்பீட்டு அலுவலகம் தயாரித்த ஒரு அறிக்கையில் வெளியாகியிருக்கிறது. இந்த அலுவலகம் ஐ.எம்.எஃப் மேலாண்மை இயக்குனர் கிரிஸ்டீன் லகார்ட் மற்றும் அவரது அதிகாரிகளை பைபாஸ் செய்து அதன் செயல்பாட்டு இயக்குனர்களான அரசுகளின் பிரதிநிதிகளுக்கு அறிக்கையை அனுப்பியிருந்தது. கிரீஸ், போர்ச்சுக்கல், அயர்லாந்து நாடுகளுக்கான பொருளாதார மீட்பு திட்டங்களில் அந்நாடுகளுக்கு ஒதுக்கப்பட்ட ஐ.எம்.எஃப் நிதி ஒதுக்கீட்டை விட 2000% அதிகம் கடன் வாங்க அனுமதிக்கப்பட்டது. அதிகாரபூர்வ வரம்பான 435%-ஐ இது அப்பட்டமாக மீறியிருந்தது.

இப்படி விதிமுறைகளை மீறியது “இந்த நாட்டு மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமே” என்ற ஐ.எம்.எஃப் அதிகாரிகளின் நல்லெண்ணத்தால் நடக்கவில்லை. இதன் நோக்கம், திவாலாகிக் கொண்டிருந்த இந்த கடன் வாங்கிய நாடுகளுக்கு கடன் கொடுத்திருந்த ஐரோப்பிய வங்கிகளை திவால் ஆகாமல் பாதுகாப்பது ஆகும். பிரெஞ்சு, ஜெர்மன், பிரிட்டிஷ் வங்கிகள் நெருக்கடியில் சிக்கியிருந்த நாட்டு அரசுகளின் கடன் பத்திரங்களை, அவை மிக உயர்ந்த வட்டி வீதத்தை ‘ஈட்டுவதால்’ வாங்கின. அதன் மூலம் பெருமளவு லாபத்தை குவிப்பதுதான் அவற்றின் நோக்கம். இந்நாடுகள் தங்கள் கடன்களை கட்டத் தவறியிருந்தால் ஐரோப்பிய வங்கி அமைப்பே குலைந்து போகும் அபாயம் இருந்தது. இந்த அபாயத்திலிருந்து முதலாளித்துவத்தை (நிதி மூலதனம்) காப்பாற்றுவது ஐ.எம்.எஃப்-க்கு மிக முக்கியமானது, அதை சாதிக்கும் முயற்சியில் விதிமுறைகளை மீறி, அனைத்து ஐரோப்பிய நாட்டு உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், வாழ்நிலையையும் துயரத்தில் தள்ளி பண முதலைகளின் பணத்தை மீட்டுக் கொடுத்தனர்.

ஐ.எம்.எஃப் மீதான மதிப்பீட்டு அறிக்கை இதை வெளிப்ப்படையாக சொல்கிறது, “வங்கித் துறை வாராக் கடன்கள் சர்வதேச அளவில் பரவி விடாமல் தடுப்பது அவசியமான ஒரு பொறுப்பு என்றால், அதைத் தடுப்பதற்கான செலவை, அதனால் பயனடையும் சர்வதேச சமூகம் பகுதியளவாவது சுமக்க வேண்டும்”. [அதாவது, வங்கிகளின் ஊதாரித்தனத்துக்கும், லாப வேட்டைக்கும் விலையை உழைக்கும் மக்கள் கொடுக்க வேண்டும்.]

அதாவது, யூரோ கடன் நெருக்கடி வெடித்துக் கிளம்பிய போது வங்கிகள் தாம் கடன் கொடுத்த முழு தொகைகளையும் திரும்பிப் பெறுவதையும் இலாபத்தை தக்க வைத்துக் கொள்வதையும் ஐ.எம்.எஃப், ஐரோப்பிய மத்திய வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் மூலம் உறுதி செய்து கொண்டன – எனவே வங்கிகள் தமது பணத்தை இழக்கும் எந்த அபாயமும் இல்லாமல் உறுதி செய்யப்பட்டது. [அதாவது, லாபம் எங்களுக்கு ரிஸ்க் பொதுமக்களுக்கு என்பது நிதி மூலதனத்தின் மந்திரம்]

இதற்கிடையில் அயர்லாந்து, போர்ச்சுக்கீசிய, கிரேக்க குடிமக்கள் இந்த மூவரணியின் கட்டளைகளை நிறைவேற்றுவதற்காக சிக்கன நடவடிக்கைகளை பல ஆண்டுகள் தொடர்ச்சியாக எதிர் கொண்டனர். இதை அப்போதைய கிரேக்க நிதி அமைச்சர் யானிஸ் வருஃபகிஸ் இதை “நிதி சித்திரவதை (financial waterboarding)” என்று அழைத்தார்.

கடனை திரும்பக் கட்டுவதற்கான கிரேக்க நாட்டின் மீதான சுமை 10 ஆண்டுகளுக்கு தள்ளிப் போடப்பட்டிருந்தாலும். இன்னும் ஒரு மலை போன்ற கடன் சுமை தொடர்கிறது. பொதுச் சேவைகளில் வெட்டு, வரி அதிகரிப்பு போன்ற அரசின் கழுத்தை நெரிக்கும் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஏதுவான நிதிநிலை அரசிடம் இல்லை, ஏற்கனவே செய்த வெட்டுகளை குறைத்து சேவைகளை மீண்டும் வழங்குவது  பற்றி பேசவே வேண்டியதில்லை.

கடந்த மே மாதம் நான் சொன்னது போல, “நிதர்சனம் என்னவென்றால், கிரேக்க பொருளாதாரத்தின் நிஜ வளர்ச்சி கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆண்டுக்கு 2%-க்கு அதிகமாக போவது சாத்தியமற்றது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15% ஆக உள்ள கடன் சுமை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரிக்கிறது. அதைக் கட்டுவதற்கு மீண்டும் கடன் வாங்க வேண்டும், சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் கடன் காரர்கள் கைப்பற்றிக் கொண்டு, உயிர் வாழ்வதற்கு அவர்களையே சார்ந்திருக்கும் கடன்பட்டவரின் சங்கிலியிலிருந்து கிரேக்க நாடு விடுபடுவதற்கு வழியே இல்லை.”

கிரேக்க நாட்டு மக்களின் வாழ்வில் 8 ஆண்டுகள் பறிக்கப்பட்டிருக்கின்றன. 2010-க்குப் பிறகு பொருளாதாரம் நான்கில் மூன்று பங்காக சுருங்கியிருக்கிறது; குடிமக்களின் வருமானம் மூன்றில் இரண்டாக குறைந்திருக்கிறது. வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்த 3 லட்சத்துக்கும் அதிகமானவர்களைத் தவிர மீதம் இருப்பவர்கள் மத்தியில் வேலையின்மை 20 சதவீதம் ஆக உள்ளது.

“நெருக்கடிக்கு முன்பு நன்றாக செயல்பட்ட நிறுவனங்களில் சுமார் 20 சதவீதம் தம்மை வெற்றிகரமாக புதுப்பித்துக் கொண்டு செயல்படுகின்றன. இன்னொரு 40 சதவீதம் கடனை அடைக்கும் அளவுக்கு செயல்பட்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றன. அதற்கு மேல் லாபம் ஈட்டுவதில்லை.” என்கிறார் ஏதென்ஸ் சேம்பர் ஆஃப் சிறு நிறுவனங்களின் தலைவரும், முதிர்ந்த தொழில் முனைவருமான பாவ்லோஸ் ரவனிஸ். இவற்றைத் தவிர 40 சதவீதம் நிறுவனங்கள் நடமாடும் பிணங்கள் என்று அழைக்கும் நிலையில் உள்ளன. “அவற்றால் வரி கட்டவும் முடிவதில்லை, வங்கிகளிடம் வாங்கிய கடனையும் அடைக்க முடிவதில்லை” என்று சொல்லும் அவர், “பெரும் அளவு நிதியை முதலீடு செய்ய தயாராக ஒரு முதலீட்டாளர் முன்  வந்தாலும் இந்த நிறுவனங்களில் பாதிக்கும் குறைவானவற்றையே மீட்க முடியும்.”

கிரேக்க பொருளாதார வளர்ச்சி 2%-ஐ விட குறைந்தாலோ, உலக முதலாளித்துவம் புதிய பொருளாதார தேக்கத்தில் விழுந்தாலோ, கடன் அடைக்கும் சுமை மீண்டும் கட்டுப்பாட்டை மீறி அதிகரிக்கும்.

முதலாளித்துவ சூதாட்டத்திற்கு இரையாகி மீள முடியாமல் சிக்கிக் கொண்டிருக்கும் கிரேக்க நாடு அதே சூதாட்டத்துக்குள் கண்ணை திறந்து கொண்டே போய் விழும்படி தூண்டும் நமது நாட்டின் முதலாளிகளையும், அவர்களுக்கு சொம்படிக்கும் மன்மோகன் சிங், மோடி போன்ற அரசியல்வாதிகளையும், அவர்களை ஆதரித்து புகழ்பாடும் முதலாளித்துவ அறிவாளிகளையும் முறியடிக்க வேண்டியதன் அவசியத்தை தொழிலாளி வர்க்கத்துக்கு உணர்த்துகிறது.

கிரேக்க பொருளாதார நெருக்கடி பற்றிய கூடுதல் விபரங்களுக்கு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க