privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காகிரீஸ் நெருக்கடியில் வல்லூறு கோல்ட்மேன் சாக்ஸ்

கிரீஸ் நெருக்கடியில் வல்லூறு கோல்ட்மேன் சாக்ஸ்

-

“கிரீசு நாட்டின் கடன் நெருக்கடி கோல்ட்மேன் சாக்சு நிறுவனம் கொள்ளை உபரி ஈட்ட உதவிற்று!”

ராபர்ட் ரெய்ச் 1993-97 ஆண்டுகளில் அமெரிக்க ஒன்றிய அரசுகளின் மைய தொழிலாளர் நலத் துறை அமைச்சராக இருந்தவர். தற்போது கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் திட்டக்கொள்கைத் துறைச் சிறப்புப் பேராசிரியராக உள்ளார். அண்மையில் பரவலாகப் பேசப்பட்ட கிரேக்கக் கடன் நெருக்கடியில் அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட பன்னாட்டு நிதி நிறுவனமான கோல்ட்மேன் சாக்சு பெருமளவில் உபரி ஈட்டியதை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய ஆங்கில மூலக் கட்டுரை  எனும் வலைப் பூவில் உள்ளது. கட்டுரைக்கு நன்றி: www.truthout.org

– பரிதி, மொழிபெயர்ப்பாளர்

கோல்ட்மேன் சாக்ஸ்
கிரேக்கக் கடன் நெருக்கடியை உருவாக்கியதிலும் அமெரிக்க நிதிச் சேவை நிறுவனங்களின் கொள்ளைக்காரக் கடன் திட்டங்கள் முதன்மையான பங்கு வகித்தன.

லகளாவிய கொள்ளையர்களான பன்னாட்டு நிதிச் சேவை நிறுவனங்கள் உலக நாடுகளின் அரசாங்கங்களைத் தம் கைப்பிடிக்குள் வைத்திருப்பது நமக்குப் புதிய செய்தியன்று. இதை மீண்டும் மெய்ப்பித்திருக்கிறது கிரீசு நாட்டுக் கடன் நெருக்கடி. ஆனால், அந்த நெருக்கடியைக் குறித்து வெளியான செய்திகள், கட்டுரைகள் ஆகியவற்றில் பெரும்பாலானவை நிதிச் சேவை நிறுவனங்களின் பங்கு குறித்து வாய் திறக்கவில்லை.

பல ஆண்டுகளுக்கு முன்னரே , கோல்ட்மேன் சாக்சின் இப்போதைய தலைவர் லாய்ட் பிளாங்க்ஃபைன் உருவாக்கிய ஒப்பந்தம் கிரீசின் நிதி நெருக்கடி மேலும் முற்றுவதற்குக் காரணமாக இருந்தது. கிரீசு நாட்டுக் கடனின் முழுப் பரிமாணத்தை மறைப்பதற்கு கோல்ட்மேன் நிறுவனம் உதவி செய்தது. அதன் விளைவாக அந்நாட்டின் கடன் சுமை ஏறக்குறைய இரண்டு மடங்காக ஊதிப் பெருகிவிட்டது. டிசம்பர் 2007 முதல் சூன் 2009 வரை அமெரிக்காவை உலுக்கிய நிதிச் சிக்கல், இப்போது அமெரிக்க நகராட்சிகள் பலவற்றை அலைக்கழிக்கும் நிதிச் சிக்கல் ஆகியவற்றைப் போலவே கிரேக்கக் கடன் நெருக்கடியை உருவாக்கியதிலும் அமெரிக்க நிதிச் சேவை நிறுவனங்களின் கொள்ளைக்காரக் கடன் திட்டங்கள் முதன்மையான பங்கு வகித்தன. ஆனால் இது பரவலாக அறியப்படவில்லை.

2001-ல் மலைபோலப் பெருகிவிட்ட தன் நிதிச் சிக்கல்களை மறைப்பதற்கான வழிகளை கிரேக்க அரசு தேடிக்கொண்டிருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தை உருவாக்குவதற்கான மாசுட்ரிக் ஒப்பந்தம் 1991 டிசம்பரில் கையெழுத்திடப்பட்டது. அதன்படி உறுப்பு நாடுகள் தம் நிதி நிலைமையில் மேம்பாட்டைக் காட்டவேண்டும். ஆனால், கிரேக்க அரசின் நிதி நிலைமை நேரெதிர்த் திசையில் சென்று கொண்டிருந்தது.

கோல்மேன் சாக்ஸ்
கொந்தளிக்கும் கடலில் பொக்கிஷம் ஈட்டும் கோல்ட்மேன் சாக்ஸ்

அப்போது கோல்ட்மேன் சாக்சு நிறுவனம் கிரேக்க அரசுக்கு உதவ முன்வந்தது: அந்த நிறுவனம் கிரீசுக்கு 280 கோடி யூரோ கடன் ஏற்பாடு செய்தது; அந்தக் கடனைப் பயன்படுத்தி சிக்கலான நாணய-மாற்று ஒன்று செயல்படுத்தப்பட்டது. அதன்படி, கிரீசின் அந்நியச் செலாவணிக் கடன் கிரேக்க [உள்நாட்டு] நாணயக் கடனாக மாற்றப்பட்டது. அது கற்பனையான நாணயப் பரிமாற்ற விகிதத்தின் அடிப்படையில் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை பிறருக்குத் தெரியாமல் கமுக்கமாக வைத்திருப்பதெனவும் இரு தரப்பினரும் முடிவெடுத்தனர்.

அதன் மூலம், கிரேக்க நாட்டு அரசின் கடனில் சுமார் 2 விழுக்காடு கணக்கில் இருந்து மாயமாக மறைந்துவிட்டது. “இரு பாவிகளுக்கு இடையிலான கவர்ச்சியான கதை” என்று பின்னாளில் கிரேக்கக் கடன் மேலாண்மை முகமையின் தலைவராக பொறுப்பேற்ற  கிறிஸ்டோபோரஸ் சர்தேலிஸ் அதை விவரித்தார்.

இந்தச் சேவைக்காக கிரேக்க அரசு கோல்ட்மேன் நிறுவனத்துக்குத் தந்த விலை 60 கோடி யூரோக்கள்! இது 2001-ம் ஆண்டு அந்த நிறுவனத்தின் பங்கு வர்த்தகம் மற்றும் நிதி முதலீட்டுப் பிரிவின்  வருமானத்தில் 12 விழுக்காடாகும்; அந்த ஆண்டு அந்தப் பிரிவு விற்பனையில் சாதனை படைத்தது. அந்தப் பிரிவின் தலைவராக இருந்தவர் பிளாங்க்பெய்ன் (இப்போது கோல்ட்மேன் நிறுவனம் முழுமைக்கும் தலைவராக இருப்பவர்)

கோல்ட்மேன் சாக்ஸ்
கிரீசுக்கு “வழி”காட்டிய கோல்ட்மேன் தலைவர் சென்ற ஆண்டில் மட்டும் ஏறக்குறைய 2.5 கோடி டாலர் (சுமார் ரூ 150 கோடி) வருமானம் ஈட்டினார். அவரால் “வழி” காட்டப்பட்ட கிரேக்கர்கள் உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை வாங்கக்கூடப் பணம் இல்லாது தவிக்கின்றனர்!

2001-க்குப் பின்னர் மேற்படித் திட்டத்தில் சிக்கல்கள் நேர்ந்தன. 2001 செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவில் நிகழ்ந்த இரட்டைக் கோபுரத் தாக்குதல்களுக்குப் பின்னர் [கடன்] முறி வட்டி விகிதங்கள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன. கோல்ட்மேன் ஆலோசனையின்படிச் செயல்படுத்தப்பட்ட கணக்கில் வராத நாணய மாற்று ஒப்பந்தத்தில் பயன்படுத்தப்பட்ட விதிமுறைகளின்படி கிரேக்க அரசுக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டது. 2005 வாக்கில் கிரேக்க அரசின் கடன் மேற்படி ஒப்பந்தத்தில் அவ்வரசு செலுத்திய தொகையைக் காட்டிலும் இரண்டு மடங்காகப் பெருகி, கணக்கில் வராத கடன் 280 கோடி யூரோக்களில் இருந்து 510 கோடி யூரோக்களாகிவிட்டது.

2005-ம் ஆண்டு இந்த கடன் பேரம் மறுசீரமைக்கப்பட்டு 510 கோடி கடன் கணக்கில் சேர்க்கப்பட்டது. இப்போது ஐரோப்பிய நடுவண் வைப்பகத்தின் தலைவராகவும்  கிரீசுடனான நாடகத்தில் முதன்மையான பங்கு வகிப்பவருமான மாரியோ டிராகிதான் அந்த சமயத்தில் கோல்ட்மேன் நிறுவனத்தின் நாட்டிடைப் பிரிவுத் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரீசு மட்டுமே இத்தகைய குற்றவாளி அன்று. ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் பணப் பரிமாற்றங்களில் சந்தைக்கு அப்பாற்பட்ட பரிமாற்ற விகிதங்களைப் பயன்படுத்தித் தம் கடன்களை மேலாண்மை செய்வதற்குத் தக்க கணக்கீட்டு விதிகள் 2008 வரை நடைமுறையில் இருந்தன. கோல்ட்மேன் உள்ளிட்ட பெரும் நிதி நிறுவனங்களின் அழுத்தமே இதற்குக் காரணம்.

கிரீசுக்கு கோல்ட்மேன் உதவியதைப்போலவே மற்றொரு பன்னாட்டு நிதிச் சேவை நிறுவனமான சேபீமோர்கன் 1990-களின் இறுதி ஆண்டுகளில் இத்தாலிக்கும் வழிகாட்டிற்று. அப்போதைக்குச் சாதகமான பரிமாற்ற விகிதத்தில் நாணயப் பரிமாற்றம் செய்வதன் மூலம் இத்தாலி தன் கடனை மறைப்பதற்கு அந்நிறுவனம் உதவிற்று. இதன் மூலம் எதிர்காலக் கடன்களாக அந்நாட்டின் நிதியறிக்கைகளில் காட்டப்படாமல் எதிர்காலத்தில் திருப்பித் தரவேண்டிய தொகைகளுக்கு இத்தாலி பொறுப்பேற்றுக் கொண்டது.

 கோல்ட்மேன் சாக்ஸ்
கிரீசையும், அத்தோடு ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தையும் அடகு வைத்துத் தன் உபரியைப் பெருமளவு பெருக்கிக்கொண்டது கோல்ட்மேன் சாக்ஸ்

ஆனால், கிரீசு நாட்டின் நிதி நிலைமைதான் இருப்பதிலேயே மோசமாக இருந்தது; [அத்தகைய நாடுகளுக்கு] உதவியளிக்கும் நிறுவனங்களில் கோல்ட்மேன் தான் பெரியதாக இருந்தது. பல ஆண்டுகளாக தொடரும் ஊழல்கள் மற்றும் பணக்காரர்களின் வரி ஏய்ப்பு ஆகியவற்றால் கிரீசு பாதிக்கப்பட்டிருந்தது என்பதில் ஐயமில்லை. அதே சமயம், கோல்ட்மேன் இதை வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அப்பாவி நிறுவனமுமன்று: கிரீசையும்,  அத்தோடு ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தையும் அடகு வைத்துத் தன் உபரியைப் பெருமளவு பெருக்கிக்கொண்டது அந்த நிறுவனம். அதையொத்த பிற பெரிய நிதிச் சேவை நிறுவனங்களும் அவ்வாறே செயல்பட்டன. ஆனால், குறைந்த காலத்தில் பெரும் வீக்கம் கண்ட உலக நிதிச் சந்தை அதன் அழுத்தம் தாங்காமல் வெடித்தபோது அத்தகைய அடகு ஒப்பந்தங்கள் உலகப் பொருளாதாரத்தை மண்டியிடச் செய்தன.

பன்னாட்டு நிதி நிறுவனங்களின் கொள்ளைகளால் உலகப் பொருளாதாரம் தாக்குண்டிருந்த அதே காலத்தில் கோல்ட்மேன் நிறுவனம் கிரீசுக்கு வேறோர் தந்திரத்தைப் பரிந்துரைத்தது. கிரேக்கக் கடன் சிக்கல் உலகளவில் பேசுபொருளாவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர், 2009 நவம்பரில் கிரேக்க நாட்டின் பொது மருத்துவத் துறையின் கடனை மிகத் தொலைவான எதிர்காலத்திற்குத் தள்ளிவைப்பதற்கு உதவும் நிதிய வழிமுறை ஒன்றை கோல்ட்மேன் முன்வைத்தது. ஆனால், இந்த முறை கோல்ட்மேன் வீசிய தூண்டிலில் கிரீசு விழவில்லை.

கோல்ட்மேன் சாக்ஸ்
நிதி நிறுவன மேலாளர்கள் சொகுசு விடுமுறைகளை கொண்டாடிக் கொண்டிருக்கும் போது பல கோடி அமெரிக்க மக்கள் தம் வேலை, சேமிப்பு, வீடு வாசல் ஆகியவற்றை இழந்து தவிக்கின்றனர்.

அமெரிக்காவின் பன்னாட்டு நிதி நிறுவனங்களை அமெரிக்க அரசு [மக்களுடைய வரிப்பணத்தைக் கொண்டு ‘உடுக்கை இழந்தவன் கைபோல …’] தக்க தருணத்தில் கடன் தந்து மீட்டதை நாமறிவோம். அந்நிறுவனங்கள் மீண்டும் உபரி ஈட்டத் தொடங்கியபின் அந்தக் கடனைத் திருப்பித் தந்துவிட்டன. இப்போது வைப்பகங்கள் உள்ளிட்ட நிதிச் சேவை நிறுவனங்களின் பங்குகள் உச்சாணியில் உள்ளன. கோல்ட்மேன் பங்கு 2008 நவம்பரில் 53 டாலராக இருந்தது. இப்போது 200 டாலருக்கும் அதிகமாக விற்கிறது.

நிதிச் சேவை நிறுவனங்களின் மேலாளர்கள் பெருமளவு ஊதிய உயர்வையும், பதவி உயர்வுகளையும் ஈட்டினர். கிரீசுக்கு “வழி”காட்டிய கோல்ட்மேன் தலைவர் சென்ற ஆண்டில் மட்டும் ஏறக்குறைய 2.5 கோடி டாலர் (சுமார் ரூ 150 கோடி) வருமானம் ஈட்டினார். அவரால் “வழி” காட்டப்பட்ட கிரேக்கர்கள் உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை வாங்கக்கூடப் பணம் இல்லாது தவிக்கின்றனர்!

கிரீசில் நடந்தது போலவே அமெரிக்காவிலும் நடந்தது. முதலில், நிதி நிறுவனங்களின் கொள்ளைக்கார கடன் கருவிகள் மூலமாக பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்தன. இன்று நிதி நிறுவன மேலாளர்கள் சொகுசு விடுமுறைகளை கொண்டாடிக் கொண்டிருக்கும் போது பல கோடி அமெரிக்க மக்கள் தம் வேலை, சேமிப்பு, வீடு வாசல் ஆகியவற்றை இழந்து தவிக்கின்றனர்.

கிரீசுக்கு விற்கப்பட்டது போன்ற ஒப்பந்தங்களை வாங்கிய பற்பல அமெரிக்க நகராட்சிகள் அடிப்படைச் சேவைகளைத் தர இயலாது விழிபிதுங்கி நிற்கின்றன. கிரீஸ் அரசுக்கு வாக்களித்தது போலவே, தமது நிதிச் சேவைக் கருவிகளை வாங்கினால், சந்தையிலிருந்து குறைந்த வட்டியில் கடன் வாங்கலாம் என்று ஆசை காட்டின நிதி நிறுவனங்கள். அவற்றில் அடங்கியிருந்த இருந்த எதிர்மறை அபாய சாத்தியங்களைப் பற்றி வாய் திறக்கவில்லை. பின்னர், நிதி நெருக்கடியின் காரணமாக வட்டி வீதங்கள் வீழ்ச்சியடைந்து நகராட்சிகள் வாங்கிய நிதிக்கருவிகள் பெரும் சுமையாக மாறிய பிறகு, நகராட்சியகள் தமது கடன்களை மறுசீரமைக்க வேண்டுமானால் அவை பெருமளவு தண்டம் செலுத்த வேண்டுமென்று இந்த நிதிச்சேவை நிறுவனங்கள் நிபந்தனை விதித்தன.

கோல்ட்மேன் சாக்ஸ்
அமெரிக்கக் குடிமக்களால் தேடப்படும் குற்றவாளி : லாய்ட் பிளாங்க்ஃபைன் – கோல்ட்மேன் தலைமை மேலாளர்

இதன்படி, மூன்றாண்டுகளுக்கு முன்னால் டெட்ராய்ட் நகர நீர் வழங்கல் துறை கோல்ட்மேன் உள்ளிட்ட வைப்பகப் பெருநிறுவனங்களுக்குச் சுமார் 55 கோடி டாலர் தண்டம் கட்ட வேண்டி வந்தது. அந்நகர மக்கள் தண்ணீருக்குச் செலுத்தும் வரியில் ஏறக்குறைய 40 விழுக்காடு மேற்படி தண்டத் தொகையை ஈடு செய்வதற்கே செலவாகிவிடுகிறது. தண்ணீர் கட்டணம் செலுத்த முடியாமல் நீர் இணைப்பு துண்டிக்கப்பட்ட மக்களுக்கு தம் நிலைமைக்கான பொறுப்பு கோல்ட்மேன் மற்றும் பிற பெரு வங்கிகள்தான் என்ற உண்மைக் காரணம் தெரியாது.

இதுபோலவே, சிக்காகோ நகரக் கல்வித் துறையும் இந்நிறுவனங்களின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கிறது. அதன் நிதித் திட்டம் ஏற்கனவே பெருமளவு குறைக்கப்பட்டிருக்கிறது. நிதி நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களின்படி ஆண்டுக்கு 3.6 கோடி டாலர் செலவாகிறது. அந்த  ஒப்பந்தங்களை முறித்துக் கொள்ள வேண்டுமானால் சிக்காகோ கல்வித் துறை நிதிச் சேவை நிறுவனங்களுக்குத் தரவேண்டிய தண்டம் 20 கோடி டாலர்கள்!

10 ஆண்டுகளுக்கு முன்பு போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் விளைவாக கலிபோர்னியா மாநிலத்தின் ஓக்லன்ட் நகரம் கோல்ட்மேன் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு 40 லட்சம் டாலர் கப்பம் கட்டிக்கொண்டுள்ளது. அது தொடர்பான ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவர கோல்ட்மேன் கேட்கும் தண்டத் தொகை 1.6 கோடி டாலர். இதை எதிர்க்கும் முகமாக கோல்ட்மேன் நிறுவனத்தைப் புறக்கணிப்பது என்று ஓக்லன்ட் நகரசபை முடிவெடுத்துள்ளது. இது குறித்து கோல்ட்மேன் தலைவர் பிளாங்க்பைனிடம் கேட்ட போது, ஒப்பந்தத்தை ரத்து செய்வது பங்குதாரர் நலனுக்குப் புறம்பானது என்று விளக்கம் அளித்தார்.

இத்தகைய கொள்ளைக்காரத் திட்டங்களை வகுத்து, அவற்றின் பலன்களை ஊதிப் பெருக்கிக் காட்டி, அவற்றுக்கான விலையையும், எதிர்மறை விளைவுகளையும் அடக்கி வாசித்து அரசுத் துறைகளிடம் விற்பதில் கோல்ட்மேன் போன்ற நிதிச் சேவை நிறுவனங்கள் கெட்டிக்காரர்கள். அவற்றின் மூலந்தான் அவை பெரும் உபரி ஈட்டுகின்றன. அவை தரும் திட்டங்கள் தோல்வியுறுகையில், அமெரிக்க நகர சபைகளாக இருந்தாலும் சரி, தனிநபர் வீட்டுக் கடனாளியாக இருந்தாலும் சரி அல்லது கிரீஸ் ஆக இருந்தாலும் சரி அவர்களின் உதவிக்கு வராமல் சட்ட நடைமுறைகளுக்குப் பின்னும், தமது பங்குதாரர் நலன்கள் என்ற போர்வையிலும் அவை ஒளிந்துகொள்கின்றன.

இப்படிப்பட்ட நிறுவனங்களிடம் சிக்கிக்கொள்ளும் அரசுத் துறைகள் மீதும் தவறுகள் இருப்பதை மறுக்கமுடியாது. அவை தம் வரவு செலவுகளைக் கட்டுக்குள் வைப்பதில்லை அல்லது, அந்தத் துறைகளை நிர்வகிப்பவர்கள் இப்படிப்பட்ட திட்டங்களை நம்புமளவு ஏமாளிகளாகவோ முட்டாள்களாகவோ உள்ளனர்.

ஆனால் இந்த நிகழ்வுகள் அனைத்திலும் கோல்ட்மேன் நிறுவனத்திற்குத் தான் என்ன செய்கிறோம் என்பது நன்றாகவே தெரிந்திருந்தது. அரசுத் துறைகளுக்குத் தான் விற்கும் திட்டங்களின் உண்மையான இடர்கள், அவற்றால் நேரும் செலவினங்கள் ஆகியன குறித்து அந்த அரசுத் துறைகளைக் காட்டிலும் கோல்ட்மேனுக்கு மிகத் தெளிவான புரிதல் இருந்தது. கோல்ட்மேனிடம் இல்லாதது அறநெறிக் கோட்பாடு ஒன்றுதான்!

அருஞ்சொற்பொருள், கலைச்சொற்கள், அயல்மொழிப் பெயர்ச்சொற்கள்

  1. அமெரிக்க ஒன்றிய மாநிலங்கள் – the united states of america
  2. இத்தாலி – italy
  3. உபரி (‘லாபம்’ என்பதன் தமிழ் வடிவம்) – profit
  4. ஐரோப்பிய ஒன்றியம் – european union
  5. ஐரோப்பிய நடுவண் வைப்பகம் – the european central bank
  6. ஓக்லன்ட் – oakland
  7. கடன் முறி – bond
  8. கமுக்கமாக (‘ரகசியமாக’ என்பதன் தமிழ் வடிவம்) – in secret
  9. கலிபோர்னியா பல்கலைக்கழகம் – university of california
  10. கிரீசு – greece
  11. கோல்ட்மேன் சாக்சு – goldman sachs
  12. சிக்காகோ – chicago
  13. சேபீமோர்கன் – jpmorgan
  14. டெட்ராய்ட் – detroit
  15. திட்டக்கொள்கைத் துறை – department of public policy
  16. தொழிலாளர் நலத் துறை அமைச்சர் – secretary of labor
  17. மாசுட்ரிக் ஒப்பந்தம் – the maastricht treaty
  18. மாரியோ டிராகி – mario draghi
  19. முகமை – agency
  20. யூரோ – the euro
  21. ராபர்ட் ரெய்ச் – robert reich
  22. விழுக்காடு (‘சதவீதம்’ என்பதன் தமிழ் வடிவம்) – percentage
  23. வைப்பகம் (‘வங்கி’ என்பதன் சரியான தமிழ் வடிவம்) – bank