‘‘எனது பாவ்லோஸ் தனியொருவனாக அவர்களைத் தோற்கடித்துவிட்டான்!’’ − இதுவொரு அசாதாரணமான வெற்றி முழக்கம். இவ்வெற்றி முழக்கத்தைக் கண்ணீர் மல்க ஏதென்ஸ் நகர நீதிமன்றத்தில் முழங்கியவர் முற்போக்கு ராப் பாடகர் பாவ்லோஸ் ஃபைஸாஸின் தாய் மேக்டா. அதேசமயத்தில் அந்நீதிமன்றத்திற்கு வெளியே கூடியிருந்த 50,000−க்கும் அதிகமான தொழிலாளர்களும், ஆசிரியர்களும், பல்வேறு இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவாளர்களும், பொதுமக்களும், ‘‘நாஜிக்களைச் சிறையில் அடை!’’, ‘‘பயந்தால் வெற்றிபெற முடியாது!’’ என முழக்கமிட்டனர்.

கிரீஸ் நாட்டில் செயல்பட்டு வந்த பொன் விடியல் (Golden Dawn) என்ற நவீன நாஜிக் கட்சி ஒரு கிரிமினல் குற்றக் கும்பல் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, அக்கட்சியின் ஒட்டுமொத்த உயர்மட்டத் தலைமையும் ஏதென்ஸ் நகர குற்றவியல் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட அக்டோபர் 7, 2020 அன்று அந்நீதிமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் அரங்கேறிய அற்புதமான காட்சி இது.

இத்தீர்ப்பு நவீன நாஜிக் கட்சியான பொன் விடியலைக் கலகலக்க வைத்துவிட்டாலும், ‘‘பாசிச அபாயம் இன்னும் முடிவுக்கு வந்துவிடவில்லை’’ என்ற பிரச்சாரத்தை அந்நாட்டின் இடதுசாரிக் கட்சிகளும், முற்போக்கு அறிவுத் துறையினரும் தொழிலாளர்களும் பொதுமக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல ஆயுத்தமாகி வருகின்றனர்.

படிக்க :
♦ பிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’
♦ ஐரோப்பிய யூனியன் வலதுசாரி எம்.பி-க்களை வைத்து நாடகமாடும் மோடி அரசு !

அதே வேளையில், அந்நாஜிக் கும்பலை மறைமுகமாக ஆதரித்து வந்த கிரீஸின் ஆளுங்கும்பலோ இத்தீர்ப்பை வெளிப்படையாக எதிர்க்க முடியாமல் ஆதரிப்பது போல பாவனை செய்து வருகிறது. மேலும், இத்தீர்ப்பை கம்யூனிஸ்டுகளுக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதிப் பீதியடைந்துள்ள ஆளும் வர்க்கத்தின் எடுபிடிகள், ‘‘தீவிர வலதுசாரிக் கட்சியின் தலைவர்கள் தண்டிக்கப்பட்டதைப் போலவே, தீவிர இடதுசாரிக் கட்சித் தலைவர்களும் தண்டிக்கப்பட வேண்டும்’’ என்ற விஷமத்தனமான பிரச்சாரத்தை நடத்தத் தொடங்கியுள்ளனர்.

கிரீஸ் நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் முன்னும் இப்பொழுது இந்தக் கேள்விதான் எழுப்பப்படுகிறது. நீங்கள் எந்தப் பக்கம், தேனீக்கள் பக்கமா அல்லது ஓநாய்கள் பக்கமா?

***

கிரீஸில் நவீன நாஜிக் கட்சி, அதனின் பாசிச கிரிமினல் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டதைக் கேள்விப்படும்போது, நமது நாட்டில் இந்து மதவெறி அமைப்புகளின் தலைவர்களும் அவர்களது அடியாட்படையும் கடந்த முப்பது ஆண்டுகளாக நடத்தியிருக்கும் பாசிச கிரிமினல் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்படாமல், சட்டப்படியே விடுதலை செய்யப்பட்டிருப்பதையும்; இந்து மதவெறியர்கள் குற்றக் கும்பலாக மக்கள் மத்தியில் அம்பலமாகாமல், அப்பழுக்கற்ற தேசியத் தலைவர்களாகப் பூனைப் படை பாதுகாப்போடு உலா வருவதையும் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. இதற்கான பின்னணியையும் காரணத்தையும் ஆராயும் முன், பொன் விடியலின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.

நாஜிசத்தின் துதிபாடியும், நாஜிக்கள் நடத்திய யூத இனப் படுகொலையை மறுக்கும் கும்பலைச் சேர்ந்தவருமான நிகோலாவோஸ் மிக்கேலோலியாகோஸ் என்ற பாசிஸ்டால் பொன் விடியல் கட்சி 1980−களில் தொடங்கப்பட்டாலும், அக்கட்சி 2008−க்குப் பின் கிரீஸில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டுதான் செல்வாக்குப் பெறத் தொடங்கியது. அச்சமயத்தில் கிரீஸை அதுவரை ஆண்டு வந்த ஆளும் வர்க்கக் கட்சிகள் பொதுமக்களின் நம்பிக்கையை இழந்திருந்தன என்பதோடு,  நகர்ப்புற உதிரிப் பாட்டாளி வர்க்கம் மற்றும் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் பிற்போக்குப் பிரிவு மத்தியில் பொன் விடியல் செல்வாக்குப் பெறுவதற்கான சூழலையும் ஏற்படுத்தியிருந்தன.

பாசிச எதிர்ப்புப் போராளியும் ராப் பாடகருமான பாவ்லோஸ் ஃபைஸாஸ்.

இப்பொருளாதார நெருக்கடியிலிருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசை திருப்ப அண்டை நாடுகளான துருக்கி, மாசிடோனியா ஆகியவற்றுக்கு எதிராகத் தேசிய வெறியைத் தூண்டிவிட்டு வந்த ஆளும் வர்க்கக் கட்சிகள், வேலைவாய்ப்பு தேடி எகிப்திலிருந்து வெளியேறி கிரீஸில் தஞ்சமடைந்திருந்த எகிப்திய மீனவர்களை, கிரீஸ் மக்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கவந்த எதிரியாகச் சித்தரித்து வந்தன. இந்த தேசிய வெறியையும், செயற்கையாக உருவாக்கப்பட்ட எதிரிகளையும் பயன்படுத்திக் கொண்டுதான் பொன் விடியல் கட்சி செல்வாக்குப் பெறத் தொடங்கியது.

இந்து மதவெறியோடு, பாகிஸ்தானுக்கு எதிரான இந்து தேசிய வெறியைக் கிளறிவிடுவது; வங்கதேச முஸ்லிம் அகதிகளைச் சட்டவிரோத ஊடுருவல் பேர்வழிகளாகவும் தீவிரவாதிகளாகவும் சித்திரிப்பது என்ற ஆர்.எஸ்.எஸ்.−பா.ஜ.க.வின் அரசியலோடு ஒப்பிட்டுப் பார்த்தால், பொன் விடியல் கட்சியின் சித்தாந்தத்தையும் அரசியல் நடவடிக்கைகளையும் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.

ஆர்.எஸ்.எஸ். தனது அரசியல் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள ஒருபுறம் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க., என்றொரு அரசியல் கட்சியையும், மற்றொருபுறம் முஸ்லிம்களையும் முற்போக்கு அறிவுத்துறையினரையும் தாக்க குண்டர் படைகளையும் உருவாக்கி இறக்கிவிட்டிருப்பதைப் போலவே, பொன் விடியலும் இயங்கி வந்தது. அந்நவீன நாஜிக் கட்சி ஒருபுறம் தன்னைத் தேசியவாதக் கட்சியாகக் காட்டிக்கொள்ள தேர்தல்களில் போட்டியிட்ட அதேசமயம், மற்றொருபுறம் எகிப்திய மீனவர்களையும், தொழிற்சங்கத் தலைவர்களையும் தாக்க குண்டர் படையினைக் கட்டியிருந்தது.

பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மே 2012 நாடாளுமன்றத் தேர்தல் அக்கட்சிக்குப் பெரும் திருப்பு முனையாக அமைந்தது. அத்தேர்தலில் பதிவான வாக்குகளில் 7.0 சதவீத வாக்குகளைப் பெற்ற அக்கட்சிக்கு 21 நாடாளுமன்ற இடங்கள் கிடைத்தன. அதன் பின் நடந்த மூன்று தேர்தல்களிலும் (ஜூன் 2012, ஜனவரி 2015, செப்.2015) இரட்டை இலக்க இடங்களை வென்றது அக்கட்சி.

பொன் விடியல் கட்சியின் நிறுவனத் தலைவர் நிகோலாவோஸ் மிக்கேலோலியாகோஸ்

இந்த அரசியல் செல்வாக்கை பொன் விடியல் கட்சி இரண்டு வழிகளில் பயன்படுத்திக் கொண்டது. போலிஸ், இராணுவம், சிவில் அதிகார வர்க்கம் மற்றும் திருச்சபைகளில் தனக்கான ஆதரவை நிறுவிக்கொண்ட அதேசமயம், இந்த ஆதரவைப் பயன்படுத்திக் கொண்டு தெருக்களில் எகிப்திய மீனவர்களையும் தொழிற்சங்கத் தலைவர்களையும் கம்யூனிஸ்டுகளையும் குறிவைத்துத் தாக்குவதைத் தீவிரப்படுத்தியது.

இத்தாக்குதல்களின் மூலம் கிரீஸ் சமூகத்தில் பாசிச பயங்கரவாத பீதியை உருவாக்க முயன்ற அதேசமயம், தேசிய வெறியைத் தூண்டிவிடுவதன் மூலம் செல்வாக்கு இழந்துவிட்ட வலதுசாரி ஓட்டுக்கட்சிகளின் இடத்தைப் பிடித்துவிடுவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது பொன் விடியல்.

கிரீஸின் கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்திற்கு பொன் விடியலின் அரசியல் எழுச்சியும் சமூகத்தில் அதன் ஆதரவு தளம் விரிவடைவதும் தேவையாக இருந்ததால், அரசு இயந்திரம் அதன் வெறுப்பு அரசியல் நடவடிக்கைகளையும் கிரிமினல் குற்றங்களையும் கண்டும் காணாமல் நடந்துகொண்டது.

நாடாளுமன்ற கம்யூனிஸ்டு கட்சிகள் பொன் விடியலின் நடவடிக்கைகளை ஆளும் வர்க்கத்திற்குள் நிலவும் முரண்பாடாகத்தான் கருதினார்களேயொழிய, பாசிச அதிகாரம் நிறுவப்படுவதை நோக்கி நாடு தள்ளப்படுவதாக அக்கட்சிகள் உணரவில்லை. தேர்தல்களுக்கு அப்பாலும் செயல்படும் புரட்சிகர கம்யூனிஸ்டுகளும் முற்போக்கு அறிவுத்துறையினரும்தான் இப்பாசிச அபாயத்தை உணர்ந்திருந்தனர்.

இந்தச் சூழ்நிலையில்தான், 2013−ஆம் ஆண்டில் ராப் பாடகர் பாவ்லோஸ் ஃபைஸாஸின் படுகொலை நடந்தது. பாவ்லோஸ் தனது இசை நிகழ்ச்சிகளில் பொன் விடியலின் குறுகிய தேசிய வெறியையும் வெறுப்புப் பேச்சுக்களையும் அம்பலப்படுத்திப் பாடி வந்தார். இந்து மதவெறிக் கும்பல் தபோல்கர், கல்புர்கி, பன்சாரே, கௌரி லங்கேஷ் ஆகியோரைப் படுகொலை செய்ததன் மூலம் தம்மை எதிர்க்கும் அறிவுத்துறையினர் மத்தியில் பீதியை உருவாக்க முயன்றதைப் போலவே பாவ்லோஸின் படுகொலையும் நடந்தது. அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றால், பாவ்லோஸ் தெருவில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

அரசின் துணை இராணுவப் படைக்குள் ஊடுருவியிருக்கும் பொன் விடியலின் ஆதரவாளர்கள்

எனினும், நவீன நாஜிக் கும்பல் எதிர்பார்த்ததைப் போல பாவ்லோஸின் படுகொலை கிரீஸ் மக்களிடையே பீதியை உருவாக்கவில்லை. மாறாக, பொன் விடியலுக்கு எதிராகத் தொழிலாளர்கள், அறிவுத்துறையினர் மத்தியில் கனன்று கொண்டிருந்த வெறுப்பையும் கோபத்தையும் கிளறிவிட்டது. நவீன நாஜிக் கும்பல் மட்டுமின்றி, அப்பொழுது கிரீஸை ஆண்டுகொண்டிருந்த வலதுசாரி அரசாங்கமும் பாவ்லோஸின் படுகொலையை அரசியலற்ற தனிப்பட்ட படுகொலையாகக் காட்டிவிடவே முயன்றது. எனினும், இப்படுகொலைக்கு எதிராக மக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக அம்முயற்சியெல்லாம் தோற்றுப்போய், பாவ்லோஸின் படுகொலைக்குப் பொன் விடியலின் தலைமை மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.

இவ்வழக்கு மக்களின் போராட்டத்துக்குக் கிடைத்த முதல் வெற்றி என்றால், அந்நாஜிக் கும்பல் பாவ்லோஸைப் படுகொலை செய்வதற்கு முன்பாக பாகிஸ்தானிலிருந்து கிரீஸுக்குக் குடிபெயர்ந்த ஷாஸத் லுக்மானைப் படுகொலை செய்தது மற்றும் கே.கே.ஈ. என்ற இடதுசாரி தொழிற்சங்கத் தலைவர்கள் மீதும், எகிப்திய மீனவர்கள் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட குற்ற வழக்குகளும் பாவ்லோஸ் படுகொலை வழக்கோடு இணைக்கப்பட்டது, மக்களுக்குக் கிடைத்த இரண்டாவது வெற்றியாகும். இம்மூன்று வழக்குகளிலும் பொன் விடியல் கட்சியின் நிறுவனத் தலைவர் நிகோலாவோஸ் மிக்கேலோலியாகோஸ் மற்றும் அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டு 68 பேர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் தொடுக்கப்பட்டன.

ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவந்த இந்த வழக்கில் முதல் இரண்டு ஆண்டுகள் முழுவதும் நாஜிக் கும்பலின் கையே ஓங்கியிருந்தது. குறிப்பாக, அதிகார வர்க்கத்திலும், அரசிலும் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டும், நீதிமன்ற வளாகத்திற்குள்ளும் வெளியேயும் பாசிச குண்டர்களைத் திரட்டி வந்து பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக வாதாடி வந்த வழக்குரைஞர்களையும் சாட்சிகளையும் அச்சமூட்டுவதன் வழியாகவும் வழக்கை நீர்த்துப் போகச் செய்ய முயன்றது.

எனினும், இடதுசாரி தொழிற்சங்கங்கள் மற்றும் முற்போக்கு அறிவுத்துறையினர் இவ்வழக்கையொட்டி கிரீஸெங்கும் நடத்திய ஆர்ப்பாட்டங்களும், கருத்தரங்குகளும் வழக்கை முறையாக நடத்தவில்லையென்றால், அது பொதுமக்களின் கிளர்ச்சிக்கு வழிவகுத்துக் கொடுத்துவிடும் என்ற நிர்பந்தத்தை அரசாங்கத்திற்கு உருவாக்கின. குறிப்பாக, வழக்கு விசாரணையின்போது நாஜிக் கும்பலின் கிரிமினல் குற்றங்களுக்கு எதிராகக் கிடைத்த ஒவ்வொரு சாட்சியத்தையும் பொதுமக்களின் மத்தியில் பிரச்சாரமாகக் கொண்டு சென்றதன் மூலம், அந்நாஜிக் கும்பலை ஆதரித்துவந்த பிரிவினர்கூட அவர்களைக் கைவிடும் நிலையை உருவாக்கின. இதன் காரணமாக 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்நாஜிக் கட்சி ஒரு இடத்தைக்கூட வெல்லமுடியாமல் தோல்வியைத் தழுவியது. மேலும், பல்வேறு நகரங்களில் அது தனது அலுவலகங்களைக் கைவிடக்கூடிய நிலையும் ஏற்பட்டது.

இவ்வழக்கு விசாரணை நடந்துவந்த சமயத்தில் கிரீஸின் அரசியல் களத்தில் இரண்டு மாற்றங்கள் நடந்தன. 2015−ஆம் ஆண்டு ஜனவரியிலும், செப்டெம்பரிலும் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் இடதுசாரிக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. 2019−ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலோ வலதுசாரிக் கட்சியான புதிய ஜனநாயகம் பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமர்ந்தது.

இதன் பின் இக்குற்ற வழக்குகளில் இருந்து நாஜித் தலைவர்களைக் காப்பாற்றும் முயற்சியாக, ‘‘இக்கிரிமினல் குற்ற வழக்குகளுக்கும் பொன் விடியல் கட்சித் தலைமைக்கும் தொடர்பில்லை’’ என அரசு வழக்குரைஞரை வாதாட வைத்தது, வலதுசாரி அரசு. எனினும், அந்நாஜிக் கட்சியின் சித்தாந்தத்திற்கும் இப்படுகொலைகளுக்கும் தாக்குதல்களுக்கும் உள்ள தொடர்பை பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக வாதாடிய வழக்குரைஞர்கள் பல்வேறு சாட்சியங்களின் வழியாக நிரூபித்ததை நீதிமன்றத்தால் மறுக்க இயலவில்லை. மேலும், நாஜிக் குற்றக் கும்பலுக்கு எதிரான இவ்வழக்கை ஐரோப்பாவின் மற்ற நாடுகளைச் சேர்ந்த முற்போக்கு−ஜனநாயக சக்திகளும் ஆதரித்து இயக்கங்களை எடுத்து வந்ததால், சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்திக் கொண்டு நாஜிக் குற்றவாளிகளுக்கு ஆதரவாகத் தீர்ப்பளிக்க முடியாத நிலை கிரீஸில் உருவாகியிருந்தது.

இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நவீன நாஜி கிரிமினல்கள் அனைவரும் கொலை உள்ளிட்ட கிரிமினல் குற்றங்களுக்காக மட்டும் தண்டிக்கப்படவில்லை. பொன் விடியல் கட்சி என்ற பெயரில் ஒரு நாஜி குற்றக் கும்பலை நடத்தி வந்தனர் என்ற அடிப்படையிலும் தண்டிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, இக்கட்சியின் நிறுவனத் தலைவர் மற்றும் ஆறு செயற்குழு உறுப்பினர்களுக்கு, நாஜி சித்தாந்த அடிப்படையில் குற்றக் கும்பலை இயக்கி வந்தனர் என்ற குற்றத்திற்காக 15 ஆண்டு கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முற்போக்கு ராப் பாடகர் பாவ்லோஸைக் கொன்ற நாஜி குற்றவாளிக்கு ஆயுட்கால சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. கிரீஸில் தஞ்சமடைந்திருக்கும் எகிப்திய மீனவர்களைத் தாக்கிய குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த குற்றக் கும்பலில் உறுப்பினராக இருந்தனர் என்ற அடிப்படையில் மற்ற குற்றவாளிகளுக்கு ஐந்து முதல் பத்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

இட்லரின் நாஜிசம் மற்றும் முசோலினியின் பாசிச சித்தாந்தங்களால் இனப்படுகொலையையும் கொடூர அடக்குமுறைகளையும் சந்தித்த ஐரோப்பிய நாடுகளில் பாசிசத்திற்கு எதிரான சட்டங்கள் இருந்தாலும், நவீன நாஜிசத்திற்கு எதிராக கிரீஸ் மக்களின் உணர்வுபூர்வமான போராட்டமும், அதனை ஆதரித்ததோடு தலைமையேற்றும் நடத்திய முற்போக்கு அறிவுத்துறையினர், தொழிற்சங்கங்கள் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் பங்களிப்பும் இல்லையென்றால் பாசிசத்திற்கு எதிரான இந்தச் சிறிய வெற்றிகூட சாத்தியப்பட்டிருக்காது.

***

கிரீஸோடு இந்தியாவை ஒப்பிட்டால் இங்குள்ள நிலைமைகள் அனைத்துமே தலைகீழாக இருக்கின்றன. அத்வானியின் ரத யாத்திரையின் போது நடத்தப்பட்ட முஸ்லிம் எதிர்ப்புக் கலவரங்கள், பாபர் மசூதி இடிக்கப்பட்டதையடுத்து நடந்த மும்பய் இந்து மதவெறிக் கலவரம், 1990−களின் இறுதியில் நடந்த கோவை கலவரம், 2002−இல் குஜராத்தில் நடந்த முஸ்லிம் இனப் படுகொலை, பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் தாக்கப்படுவது, பன்சாரே, கௌரி லங்கேஷ், தபோல்கர் மற்றும் கல்புர்கி படுகொலைகள், மாலேகான், சம்ஜௌதா குண்டு வெடிப்புகள் எனக் கடந்த முப்பது ஆண்டுகளில் சங்கப் பரிவாரக் கும்பலால் நடத்தப்பட்ட ஒவ்வொரு படுகொலையிலும், பயங்கரவாத கிரிமினல் குற்றங்களிலும் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ்.−பா.ஜ.க. தலைவர்களுள் ஒருவர்கூட நீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை.

கிரீஸ் நீதிமன்றம், பொன் விடியல் கட்சியை நாஜி குற்றக் கும்பல் என முத்திரை குத்தி அதன் தலைவர்களைத் தண்டிக்கிறது. இந்திய நீதிமன்றங்களோ இந்து மதவெறி பாசிஸ்டுகளின் கொள்கைகளையும் சித்தாந்தங்களையுமே தீர்ப்புகளாக பாபர் மசூதி நில உரிமை வழக்கிலும், பாபர் மசூதி இடிப்பு வழக்கிலும் வழங்கின.

கிரீஸில் பொன் விடியல் கட்சிக்கு எதிரான வழக்குகள் ஒன்றாக இணைக்கப்பட்டு நடந்ததென்றால், இந்தியாவிலோ குஜராத் முஸ்லிம் இனப் படுகொலை வழக்குகள் இந்து மதவெறி பாசிஸ்டுகளுக்குச் சாதகமாகத் தனித்தனி வழக்குகளாக விசாரிக்கப்பட்டு இழுத்தடிக்கப்படுகின்றன. இந்த இனப்படுகொலையில் மோடியின் பாத்திரம் குறித்து, உச்சநீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு மோடிக்கு யோக்கியன் பட்டத்தைக் கொடுத்தது. உச்சநீதி மன்றமும் அதனை அங்கீகரித்தது.

பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் இந்து மதவெறிக் கும்பலால் அப்பாவி முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்கள் ஒவ்வொன்றிலும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களே குற்றவாளிகளாக வழக்கில் சேர்க்கப்பட்டனர்.

படிக்க :
♦ சட்டப்பூர்வமாகும் பசுப் பாதுகாப்பு காவி குண்டர் படை !
♦ பாஜக மாநிலங்களில் அமல்படுத்தப்படும் பசுப் பாதுகாப்பு சட்டங்கள் !

அதிகார வர்க்கம், போலிஸ், நீதித்துறை உள்ளிட்ட அரசு இயந்திரம் இந்து மதவெறி பாசிசக் கும்பலுக்குச் சாதகமாக மட்டுமின்றிக் கைத்தடியாக நடந்து வருவது பல்வேறு வழக்குளில் வழியே அம்பலமாகியிருப்பது எந்தளவிற்கு உண்மையோ, அதே அளவிற்கு இவ்வழக்குகளில் நீதி மறுக்கப்பட்டு பாசிச குற்றவாளிகள் விடுதலை செய்யப்படும்போது சட்டப்பூர்வ எதிர்க்கட்சிகளும் இந்திய மக்களும் அமைதி காத்து அல்லது வெறும் அறிக்கை போரை நடத்திவிட்டு ஒதுங்கிக் கொண்டுவிடுவதையும் நாம் காணவே செய்கிறோம்.

இந்து மதவெறி பாசிச கும்பலுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகளில் குற்றவாளிகளைத் தண்டிக்கக் கோரிப் பெரும் மக்கள் திரள் போராட்டங்கள் இந்தியாவில் நடந்திருக்கிறதா? பாபர் மசூதி நில உரிமை வழக்கிலும் பாபர் மசூதி இடிப்பு வழக்கிலும் தீர்ப்பு என்ற பெயரில் மாபெரும் அநீதி இழைக்கப்பட்டபோது, அதனை எதிர்த்தும் கண்டித்தும் போராடிய அமைப்புகளை விரல்விட்டு எண்ணிவிடலாம் இல்லையா!

இந்து மதவெறி பாசிஸ்டுகளை அரசியல் களத்தில் வீழ்த்துவது கிடக்கட்டும், தனிமைப்படுத்தித் தண்டிக்க வேண்டுமென்றாலும், இந்திய மக்கள் இந்து மதவெறி பாசிச எதிர்ப்பு அரசியலின் கீழ் அமைப்புரீதியாக அணிதிரட்டப்பட வேண்டும். இதனைச் சாதிக்கும் சித்தாந்தத் திறன் கொண்ட புரட்சிகர−ஜனநாயக சக்திகளோ பலவீனமாக உள்ளன. இடதுசாரிக் கட்சிகளால் வழிநடத்தப்படும் தொழிற்சங்கங்களோ தமது பொருளாதாரக் கோரிக்கைகளுக்கான போராட்டங்களுக்கு அப்பால் செல்ல மறுக்கின்றன.

நாடாளுமன்ற இடதுசாரிக் கட்சிகளும் அறிவுத்துறையினரும் முதலாளித்துவக் கட்சிகளோடு கூட்டுச் சேர்ந்து தேர்தல்களில் பா.ஜ.க.வை வீழ்த்துவதை மட்டுமே தமது அரசியல் நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றனர். இந்திய அரசியல் அரங்கில் காணப்படும் இந்தப் பலவீனங்கள்தான் ஆர்.எஸ்.எஸ். − பா.ஜ.க. கும்பலின் பலமாகும்.

செல்வம்

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2020 மின்னிதழ் தரவிறக்கம் செய்ய : இங்கே அழுத்தவும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க