Sunday, September 25, 2022
முகப்பு சமூகம் சாதி – மதம் சட்டப்பூர்வமாகும் பசுப் பாதுகாப்பு காவி குண்டர் படை !

சட்டப்பூர்வமாகும் பசுப் பாதுகாப்பு காவி குண்டர் படை !

-

சுப்பாதுகாப்பு என்ற பெயரில் இந்துமதவெறி அமைப்புகள் தலித்துகள் மற்றும் முஸ்லீம்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வரும் நிலையில் பசுப்பாதுகாப்பு குண்டர் படைகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கியுள்ளன, மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா பா.ஜ.க அரசுகள்.

beef“பசுவதைத் தடுப்பு சட்டத்தை” நடைமுறைப்படுத்த சமூகத்தின் பங்களிப்பும் அவசியம் என்ற பெயரில் இந்துமத வெறி இயக்கங்களுக்கு சட்ட அங்கீகாரத்தை வழங்கியிருக்கின்றன இம்மாநில அரசுகள். இதன்படி மாடுகள் கொண்டு செல்லப்படுகின்றனவா என்று வாகனங்களை சோதனையிடவும்; போலீஸ் வரும் வரை வண்டியை தடுத்து நிறுத்தவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கென அங்கீகரிக்கப்பட்ட நபர்களுக்கு அரசு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மஹாராஷ்டிர அரசின் பசுப்பாதுகாப்பு குண்டர் படைக்கு இதுவரை 1900 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

“இந்த கௌரவ அதிகாரிகள் போலீஸ் மற்றும் பிற அரசுத் துறையினரோடு சேர்ந்து இயங்குவார்கள். மாட்டிறைச்சி தடையை சிறப்பான முறையில் அமல்படுத்த இது அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிகமான நபர்கள் கண்காணிப்பில் ஈடுபடும்போதுதான் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த முடியும்” என்கிறார் மஹாரஷ்டிர கால்நடை வளர்ப்பு கூடுதல் கமிசனர் ஜி.பி.ரானே.

“பசுப்பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தப்படுத்த போலீஸ் மற்றும் கால்நடை துறையினருக்கு உதவுவதற்கு ஒவ்வொரு தாலுகாவிற்கும் குறைந்தது 100 ஆர்வலர்களாவது தேவைப்படுகிறாரகள். சட்டப்புறம்பான வேலைகள் நடைபெறுகின்றனவா என்று அரசு அதிகாரிகளோ கால்நடை வளர்ப்பு துறையினரோ காலனிகளுக்கு சென்று சோதித்தறிய முடியாது. எனவே இது போன்ற அதிகாரிகள் நமக்கு தேவை என்று எனது ஆலோசனைக் குறிப்பில் குறிப்பிட்டிருந்தேன்” என்கிறார் இச்சட்டபூர்வ குண்டர் படைக்கு ஆலோசனை வழங்கிய அதிகாரி போஸ்லே.

subhash-sarangdhar-tayade
மஹாராஷ்டிர அரசின் பசுப்பாதுகாப்பு குண்டர்படைக்கு இதுவரை 1900 பேர் விண்ணப்பித்துள்ளனர்

அதிகாரம் பெற்ற கையோடு சட்டபூர்வமான குண்டர்படை தனது வேலையை காட்ட துவங்கிவிட்டதை அம்பலப்படுத்தியிருக்கிறார் என்.டி.டி.வி பத்திரிகையாளர் சீனிவாசன் ஜெயின்.

பூனேவில் அரசு அங்கீகாரம் பெற்ற பசு பாதுகாப்பு குண்டர் குழு ஒன்று எருமை மாடுகளை ஏற்றிவந்த லாரி ஓட்டுநரிடம் மூர்க்கமாக நடந்துகொண்டதை பதிவு செய்துள்ளார் இப்பத்திரிகையாளர். லாரி ஓட்டுநரை கீழே தள்ளிய மதவெறியர்கள் ”பசு கொலையாளி” என தொடர்ந்து அவரை நோக்கி கத்தியிருக்கிறாரக்ள். மேலும் தகாத முறையில் பேசியுள்ளனர். பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு இழுத்து சென்றுள்ளனர்.

இது குறித்து காவல்துறையினரிடம் முறையிட்டபோது அக்கும்பலின் தலைவன் சுபாஷ் தயேட் மாடுகள் கொல்லப்படுவதை கண்காணிக்கும் உரிமை பெற்றிருப்பதாக கூறி நடவடிககை எடுக்க மறுத்தள்ளனர் போலீசார். அக்குண்டர்களில் அதன் தலைவன் மட்டுமே அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருக்கிறார். அவர் தன்னுடன் 20 பேரை சேர்த்துக்கொண்டு அப்பகுதியில் இது போன்று சட்டபூர்வமாக அடாவடி செய்துவருகிறார். இதுவரை சட்டபுறம்பானதாக இருந்த அடாவடித்தனங்கள் அனைத்திற்கும் சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கியுள்ளது மராட்டிய பா.ஜ.க அரசு.

இதே போன்று ஹரியானாவிலும் ”கவ் ரக்‌ஷா தள்” என்ற பசுப் பாதுகாப்பு குண்டர்களுக்கு அங்கீகாரம் வழங்கவிருக்கிறது ஹரியானா அரசு. இவ்வமைப்பினர் தான் பசு கடத்தியதாக குற்றம் சாட்டி முஸ்லீம் இளைஞர்கள் வாயில் சாணியை திணித்தவர்கள்.

”நாங்கள் எங்கள் அமைப்பினருக்கு ஏற்கனவே அடையாள அட்டைகள் வழங்கியுள்ளோம். ஆனால் தற்போது அரசு வழங்கவிருக்கும் அடையாள அட்டை அரசின் சார்பாக செயல்படும் அங்கீகாரத்தை எங்களுக்கு வழங்கும். நாங்கள் பசு கடத்தல்காரர்களை விரட்டி செல்லும் போது போலீஸ் மற்றும் கிராமத்தினரால் தொந்தரவுக்குள்ளாகிறோம். அரசு வழங்கவிருக்கும் அடையாள அட்டை அதிலிருந்து எங்களை விடுவிக்கும்.

அரசிடம் போதுமான ஆட்கள் இல்லை. நாங்கள் அவர்களின் முகவர்களாக செயல்படுவோம். அடையாள அட்டைக்காக இதுவரை நூறு நபர்களின் பெயர்களை அரசுக்கு அனுப்பியுள்ளோம்” என்கிறார் ஹரியான கவ் ரக்‌ஷா தள் அமைப்பின் தலைவர் ஆச்சார்யா யோகேந்திர ஆர்யா.

பசுப் பாதுகாப்பு வன்முறை கும்பலுக்கு எதிராக மோடி திருவாய் மலர்ந்துவிட்டார்; நாய் வால் நிமிர்ந்து விட்டது என விடுதலை சிறுத்தைகள் ரவிக்குமார் உள்ளிட்ட ’நடுநிலை’யாளர்கள் பாராட்டி சில நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள்ளாக பா.ஜ.க அரசுகள், குண்டர்படைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கியுள்ளனர்.

இனி நம் வீட்டு சமயலறையை அதிகாரபூர்வமாகவே இந்து மதவெறியர்கள் சோதனையிடுவார்கள். நீங்களும் தடுக்கமுடியாது. தடுத்தால் ”கௌரவ அரசு ஊழியரை” பணி செய்யவிடாமல் தடுத்த குற்றத்திற்கு ஆளாவோம். தாக்குதலுக்கும் ஆளாவோம்.

மனுதர்மம் தான் சட்டம் என்றான பிறகு அதை ஒழிப்பதைத் தவிர வேறு வழியில்லை!

– ரவி

மேலும் படிக்க:
Will Haryana’s cow protection IDs simply be a licence for vigilantism?
Over 1,900 people line up to become ‘eyes’ for Maharashtra’s Animal Husbandry dept to monitor beef ban
How The Maharashtra Government Might Be ‘Licensing’ Gau Rakshak Violence

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க