MCC (Millennium Challenge Corporation) ஒப்பந்தம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் இக்காலத்தில், நாம் மடகஸ்கார் நாட்டிலிருந்து கற்க வேண்டியது என்ன ?

MCC-யிடமிருந்து நிபந்தனையுடனான உதவித்தொகையைப் பெற்ற முதலாவது நாடு மடகஸ்கார் ஆகும். இது 2005-ல் நிகழ்ந்தது.

“சொத்துரிமையை உறுதிப்படுத்துவதன் மூலமும் கடன் பெற வழிசெய்து கொடுப்பதன் மூலமும் விவசாய உற்பத்தி, முகாமைத்துவம், சந்தைப்படுத்தல் போன்ற துறைகளில் பயிற்சி பெற வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுப்பதன் மூலமும் கிராமப்புற மக்களை அவர்களது சுயதேவைக்கான விவாசாயத்திலிருந்து விடுவித்து சந்தைப்பொருளாதாரத்துக்கு மாறுவதற்கு துணை செய்வதற்காக” 110 மில்லியன் டாலர்கள் உதவித்தொகை வழங்கப்பட்டது.

ஆனால் உண்மையில் நடந்தது என்ன?

2008-ம் ஆண்டு 1.3 மில்லியன் ஹெக்டேர் நிலம் கொரிய நிறுவனமான Daewoo-விற்கு இலவசமாக 99 ஆண்டுகால குத்தகைக்கு வழங்கப்பட்டது. சோளம், உற்பத்தி செய்வதற்கும் எண்ணை ஏற்றுமதிக்காக செம்பனை (palm) பயிரிடுவதற்குமே இந்நிலம் வழங்கப்பட்டது. 1.3 மில்லியன் ஹெக்டேர்கள் என்பது மடகஸ்காரில் பயிர் விளைவிக்கக்கூடிய ஒட்டுமொத்த நிலத்தின் அரைப்பங்காகும். பெல்ஜியம் நாட்டின் மொத்தப் பரப்பளவுக்குச் சமமான பரப்பு இது.

2009-ல் இந்த நிலப்பறிப்பினாலும், வாழ்க்கைச்செலவு அதிகரிப்பினாலும் உந்தப்பட்ட பொதுமக்களின் எதிர்ப்பு இரும்புக்கரம் கொண்டு வன்முறையுடன் அடக்கப்பட்டது. ரொய்ட்டர்ஸ் செய்திகளின்படி, இவ்வடக்குமுறை 135 பேரின் உயிரைக் காவுகொண்டது.

படிக்க :
இலங்கை ஜனாதிபதி தேர்தல் : பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை | பு.ஜ.மா.லெ. கட்சி அறிக்கை
♦ சி.ஐ.ஏ. சதி : பொலிவியா அதிபர் எவோ மொராலெஸ் ராஜினாமா !

மடகஸ்காரின் இராணுவம் இவ்வடக்குமுறையை ஏற்காமல் கலகம் செய்ததுடன், எதிர்க்கட்சியுடன் இணைந்துகொண்டு அரசாங்கத்தை வீழ்த்தியது. அரசியல் உறுதியின்மை தொடர்ந்த நிலையிலும், MCC உதவித்தொகை உடனடியாக நிறுத்தப்பட்டது.

இலங்கையைப் போலவே மடகஸ்காரும் இந்து சமுத்திரத்தில் உள்ள ஒரு நாடு. சீன முதலீட்டினை குறிப்பிடத்தக்களவு பெறும் நாடு. அத்துடன் அந்நாடும் “Belt and Road” திட்டத்தின் ஒரு பகுதியாயுள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பொருளாதாரக் கொள்கை என்பது அதன் இராணுவ வியூகத்துடன் கைகோர்த்துச் செல்வதாகத்தான் இருக்கும். இது, MCC-யினை Pivot to Asia எனும் அவர்களுடைய வியூகத்தின் பகுதியாக ஆக்குகிறது. ஆசியாவில் அமெரிக்க பொருளாதார, இராணுவ செல்வாக்கு குறைவாக இருக்கவேண்டுமேயன்றி கூடுதலாக இருக்கக்கூடாது என்பதைத்தான் வரலாறு எமக்குக் காட்டி நிற்கிறது.

MCC அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இன்னொரு நீட்சி. அது அபிவிருத்தியை இராணுவமயமாக்குவதுடன் தனியார்மயமாக்கலை வழக்கமானதாக்கி சட்டபூர்வமானதாக்குகின்றது.

விவசாய பொருளாதாரத்தை மீளப் புதுப்பித்தல், இலவசக் கல்வியையும் சுகாதாரத்தையும் வலிமையானதாக்குதல், வாழ்க்கைச் செலவுக்கு போதுமான சம்பளத்தை பெறக்கூடிய தொழிலை வழங்குதல், காணி நிலம், குடிநீர், சுத்தமான காற்று என்பனவற்றிற்கான உரிமையை உறுதிப்படுத்துதல் என்பனவே இலங்கையில் மிலேனியம் சவால்கள் ஆகும்.

சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி, ஐக்கிய அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஐக்கிய இராச்சியம், இந்தியா ஆகியவற்றின் தலையீடுகளும் வற்புறுத்தல்களும் நமது இலக்குகளை அடைய விடாமல் தடுக்கும் பாரிய தடைக்கற்களாக உள்ளன.

அபிவிருத்தி என்பது நாகரிக மேலாடை அல்ல! அமெரிக்க அளவுகோல் எங்களுக்கு பொருந்தாது!

#MCCயே_வெளியேறு!

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, இலங்கை

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க