பாடகர் ஓ.எஸ். தியாகராஜன்.

மீ டூ இயக்கம் சினிமா, ஊடகம், தொழில், கலை, அறிவியல், கல்வி என பல துறையைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண்களின் குரலை எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. சினிமா துறையைச் சேர்ந்தவர்களின் பாதிப்புகளை சொல்ல ‘சுவாரஸ்யப்படும்’ ஊடகங்கள், மற்ற துறைகளை கண்டு கொள்வதில்லை. முக்கியமாக, ‘பாரம்பரியம்’, ‘புனிதம்’ என போற்றப்படும் கர்நாடக இசை உலகில் நடக்கும் பாலியல் சுரண்டலை, அத்துமீறலை பெரும்பாலான ஊடகங்கள் சொல்ல விரும்பவில்லை. இந்த பாரம்பரிய கலைகள் வெகுஜெனத்த்திற்கும் வெகுதூரத்தில் உள்ளன; சொல்வதில் ‘சுவாரஸ்யமிருக்காது’ என்பது மட்டும் காரணமில்லை. இது நேரடியாக பார்ப்பன அதிகார மையத்துக்கு தொடர்புடையது. இதை சொன்னால் ஒட்டுமொத்த புனித கட்டுக்கதையும் அவிழ்ந்துவிடும் என்கிற பயம் முதன்மையான காரணமாக இருக்கலாம்.

மனுஸ்மிருதியைப் பொறுத்தவரை பார்ப்பன பெண்ணுக்கும்கூட அடிமையாகவே வாழப் பிறந்தவள். இந்த அடிப்படையில்தான் கர்நாடக இசை உலகின் மூத்த ஜாம்பவான்கள் இயங்குகிறார்கள் என்பதை பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலங்கள் சொல்கின்றன. பாரம்பரியத்தின் பெயரால் ‘தேவரடியார்கள்’ என்கிற பழகத்தின் மூலம் சிறுமிகளை சீரழித்த வரலாற்றை இப்போதைய தலைமுறை மறந்திருக்கலாம். ஆனால், பாரம்பரிய கலை ஜாம்பவான்களின் டி.என்.ஏ-வில் இது ஆழப்பதிந்திருக்கலாம் என்றே நம்பத் தோன்றுகிறது.

நாட்டிய உலகில் புகழ்பெற்ற மேக்-அப் ‘கலைஞர்’ சேதுமாதவன் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் ஒரு தந்தை இப்படி சொல்கிறார்…

மேக் -அப் கலைஞர் சேதுமாதவன்.

“நாட்டிய உலகில் நன்கு அறியப்பட்ட மேக் -அப் கலைஞர் சேதுமாதவன் குறித்து மிகுந்த மனச்சோர்வும் அதிர்ச்சியும் அளித்த சம்பவம் குறித்து பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நாங்கள் அமெரிக்காவில் வசிக்கிறோம். எங்களுடைய இரண்டு மகள்கள் (வயது முறையே 17, 13) நாட்டிய அரங்கேற்றத்தை சென்னையில் வைத்திருந்தோம். சேதுமாதவன், முன்னணி நடன கலைஞர்கள் மற்றும் சினிமா கலைஞர்களுக்கு மேக் -அப் போடுகிறவர் என சொன்னார்கள். அவரே எங்கள் மகள்களின் அரங்கேற்றத்துக்கும் உடைகள் மற்றும் மேக்-அப் செய்தால் சிறப்பாக இருக்கும் என நினைத்தோம். ஆரம்பத்தில் எல்லாம் சரியாகவே நடந்தது. பெற்றோர் நாங்கள் இருவரும் நிகழ்ச்சி ஏற்பாட்டில் தீவிரமாக இருக்கும்போது, எங்கள் இளைய மகள் மற்றும் அவளுடன் இருந்த 11 வயதுள்ள உறவுக்காரப் பெண்ணிடம் அவர் நடந்து கொண்ட விதம் மிக மோசமானது. உடைகளை சரி செய்கிறேன் என்று தொடக்கூடாத இடத்தில் தொட்டிருக்கிறார். எப்போதெல்லாம் சந்தர்ப்பம் கிடைத்ததோ அப்போதெல்லாம் அதைச் செய்திருக்கிறார். ஒருகட்டத்தில் இதை கவனித்த என் மனைவியும் உறவுக்கார பெண்ணும் அவரிடமிருந்து காப்பாற்றியுள்ளனர். அரங்கேற்றத்தைவிட, இந்த ஆள் செய்த செயல் எங்களை மிகவும் சோர்வு கொள்ள வைத்தது. பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வலியை கற்பனை செய்ய முடியவில்லை”.

மீ டு இயக்க குற்றச்சாட்டுக்களை கவனித்தோம் என்றால் இரண்டு விஷயங்கள் தெரியும். குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆண்கள் தொடர்ச்சியாக இத்தகைய பாலியல் அத்து மீறல்களில் ஈடுபடுபவர்களாக இருக்கிறார்கள். பாதிக்கப்படுகிறவர்கள் குழந்தைகளாகவும் இளம் பெண்களாகவும் இருக்கிறார்கள். குறிப்பாக, பாரம்பரிய இசை-நடன துறையைச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்ட வித்வான்கள் பெரும்பாலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்கள் அத்துமீறியது குழந்தைகளிடம். வேட்டையாடும் பீடாபைல்களாக (pedophile – குழந்தைகளிடம் பாலியல் வன்முறை செய்பவர்கள்) வித்வான்கள் இருந்துள்ளனர்.

சென்ற 2017-ம் ஆண்டு மியூசிக் அகாடமியின் ‘சங்கீத கலாநிதி’ பட்டம் பெற்றவர் சித்தரவீணா என். ரவிக்கிரண். மழலை மேதை என புகழப்படும் இவரைப் பற்றி மறைந்த இசைக்கலைஞர் பண்டிட் ரவிஷங்கர் இப்படிச் சொல்லியிருக்கிறார், ‘உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால், ரவிக்கிரணைப் பாருங்கள்’.  திறமை மட்டுமே ஒருவரை கடவுளாக்கிவிட முடியுமா? கடவுள்களின் வன்புணர்வுகளை கொண்டாடும் சமூகம் அல்லவா இது? சரி, ரவிக்கிரண் என்ற கடவுள் என்ன செய்தார் எனப் படியுங்கள்..

சித்ரவீணா என். ரவிக்கிரண்.

“அப்போது எனக்கு 18 வயதிருக்கும். ரவிக்கிரண் சிஷ்யர்களிடம் மிக சகஜமாகப் பழகக்கூடியவர் என கேள்விப்பட்டிருக்கிறேன். (அது ஏன் என்பது பின்னால்தான் தெரிந்தது.) என்னை வீட்டிற்கு வந்து காரில் அழைத்துப் போவார். கார் மெதுவாக செல்லும், இடையில் பேசிக் கொண்டே இருப்பார். சில சமயம் காபி ஷாப்பில் இறங்குவோம். சில நாட்களுக்குப் பின் பேச்சு, அவருடைய மகிழ்ச்சியற்ற திருமண வாழ்க்கை குறித்து திரும்பியது. அந்த பேச்சிலிருந்து திசை திருப்புவேன். வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைத்தார். உள்ளுணர்வால் அதையும் மறுத்து விட்டேன். நான் என்ன செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என சொல்லும் அளவுக்கு மெயில், குறுஞ்செய்திகள் மூலமாக சொல்லிக் கொண்டிருப்பார். ஒரு நாள் வலுக்கட்டாயமாக என்னை அவருடைய படுக்கையறைக்கு அழைத்துச் சென்று, ‘உன் பாய் ஃபிரெண்ட் உன்னை முத்தமிட்டால் என்ன செய்வாய்?’ எனக் கேட்டார்.”

ரவிக்கிரணின் பாலியல் அத்துமீறல்களை பாதிக்கப்பட்ட பெண் மிக விரிவாகவே எழுதியிருக்கிறார். அவருடைய இச்சைக்கு இணங்காத போது, துறையை விட்டே ஒழித்து விடுவேன் எனவும் மிரட்டியிருக்கிறார். இசைக் கடவுளின் கதை நாற்றமடிக்கிறது.

மன்னார்குடி ஏ. ஈஸ்வரன்.

“விபூதி பட்டைகளுக்கும் நாமங்களுக்கும் பின்னால் ஒளிந்து கொண்டுள்ள ’மேல்’சாதி ஆண்கள் சபாக்களின் அதிகாரத்தை கையில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் அணிந்திருக்கும் பூணூல் எந்த பெண்ணையும் அழைத்து விடலாம் என்கிற அதிகாரத்தையும் வழங்கிடுவதாக நினைக்கிறார்கள். இந்த அழுக்குகளுடனேதான் அவர்கள் பக்தியைப் பற்றி பேசவும் பாடவும் செய்கிறார்கள்.” என்கிறார் நடனம் கற்றுவரும் பார்ப்பனரல்லாத ஒரு பெண்.

“சபாவில் நாட்டிய நிகழ்ச்சி நிகழ வேண்டுமென்றால் சில நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் படுக்க வேண்டும் என சொன்னார் ஒருவர். அவர் பார்ப்பனர் என்பதாலும் நான் பார்ப்பனர் இல்லை என்பதாலும் இதை சொல்வதாக அவர் சொன்னார். தேவதாசி நடனக் கலைஞர்கள், பார்ப்பன ஆண்களுக்கு தலைமுறை தலைமுறையாக விபச்சாரம் செய்ததாக அவர் சொன்னார். சமூக ரீதியாக தாழ்ந்த சாதியில் பிறந்துவிட்ட என்னை இது உயர்விக்கும் என அவர் சொன்னபோது எனக்கு வயது 17”.

இன்னும் பெயர் சொல்லாத பல பெண்களின் பகிர்வுகள், தேவதாசி முறை ஒழிக்கப்பட்ட ஒரு காலத்தில் இன்னமும் பாரம்பரியத்தின் பெயரால் பெண்களை சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள் பார்ப்பனர்கள் என்பதையே காட்டுகின்றன. இதை இவர்கள் மிக வெளிப்படையாகவும் பெருமையாகவும் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அறிய முடிகிறது. அமெரிக்காவில் இருக்கும் பெண்ணுக்கு ஆன்லைனில் சங்கீதம் கற்றுத்தரும் குரு, ‘உனக்கு சைபர் செக்ஸ் பற்றி தெரியுமா?” என கேட்பதும் அடக்கம்.

திருவாரூர் வைத்தியநாதன்.

“எனக்கு எப்போ வேணாலும் நேரம் கிடைக்கும். நான் பாதி ராத்திரிக்கு கூப்பிட்டாலும் பெண்ணை அனுப்பி வெக்கணும். சங்கீதம்-னா சும்மா இல்லை”, என்று முதல் நாளே பெற்றோரிடம் நிபந்தனை போட்டுக் கொள்ளும் வாத்தியார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.” என்கிறார் கர்நாடக இசை -நடன விமர்சனங்கள் எழுதிவரும் லலிதாராம் தன்னுடைய வலைப்பதிவில்.

பார்ப்பனியத்தால் தாங்கள் சுரண்டப்படுகிறோம் என்பதை பார்ப்பனிய பெண்களே காறி உமிழ்கிறார்கள். இசைக் கலைஞர் ரஞ்சனா சுவாமிநாதன், பாரம்பரியத்தின் பின்னால் பார்ப்பன ஆண்கள் தங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி குற்றம் சாட்டப்பட்ட ஆண்களை பாதுகாப்பதாக கடுமையாக சாடுகிறார்.

படிக்க:
மீ டூ : நாம் யார் பக்கம் நிற்பது ? வில்லவன்
சபரிமலையில் பெண்கள் நுழையலாமா ? ஆச்சரியமூட்டும் சர்வே முடிவுகள்

கர்நாடக இசை பாடகர் டி. எம். கிருஷ்ணா, “நான் கடந்த பல வருடங்களாக கர்நாடக இசை மற்றும் பரதநாட்டிய துறைகளில் நடக்கும் இந்த விஷயங்களை அறிவேன். பத்தாண்டுகளுக்கு முன் தனக்கு நேர்ந்ததை ஒரு இளம் பெண் தனக்கு நேர்ந்ததை சொல்லியிருந்ததை, அதை நாம் புறக்கணித்துவிட்டோம் என்பதில் நானும் வருத்தம் கொள்கிறேன். ஆண் அதிகார மையம், படிநிலைகள், கட்டுப்பெட்டித்தனத்தால் வரும் பயம் ஆகியவற்றின் காரணமாக நாம் அமைதியாக இருந்துவிட்டோம். இப்போது எழுப்பப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் பொது சமூகத்தால் விசாரிக்கப்பட வேண்டும்” என தனது முகநூலில் தெரிவித்திருந்தார்.

ஸ்ரீமுசானம் வி. ராஜாராவ்.

“நமது பழமைமிக்க இந்திய கலைகளை தார்மீக அறத்தின் அடிப்படையில் தூய்மையாக்கப்பட வேண்டும். பாலின பாகுபாட்டை உருவாக்கும் நமது பாரம்பரியத்தை நாம் கேள்வி கேட்க வேண்டும். ஆன்மீகம், மதம், புராணங்களைக் காட்டி அவற்றை நியாயப்படுத்தக்கூடாது. பாரம்பரிய கலைகளின் மீதுள்ள அதீத ஜோடனை, மக்களை ஒடுக்கும் அதிகாரத்தை கலைஞர்களுக்கு தந்துவிடுகிறது. கலைஞர்களுக்கு ஒளிவட்டங்கள் தேவையில்லை, அவர்களும் சாதாரண மனிதர்கள்தாம். புனிதமாக்கியதெல்லாம் போதும்” என்கிறார் டி. எம். கிருஷ்ணா.

மீ டூ இயக்கத்தின் மூலம் பல கர்நாடக இசை, நடன ஜாம்பவான்களின் பெயர்கள் வெளிவந்தபோதும், ஏழு கலைஞர்களை மட்டும் ஒதுக்கி வைத்திருக்கிறது மியூசிக் அகாடமி. சித்ரவீணா என். ரவிக்கிரண், பாடகர் ஓ.எஸ். தியாகராஜன், வயலின் கலைஞர் நாகை ஸ்ரீராம், மிருதங்க கலைஞர்கள் மன்னார்குடி ஏ. ஈஸ்வரன், ஸ்ரீமுசானம் வி. ராஜாராவ், ஆர். ரமேஷ், திருவாரூர் வைத்தியநாதன் ஆகியோரை மியூசிக் அகாடமியில் நிகழ்ச்சிகளை நடத்த தடை விதித்திருக்கிறது அவ்வமைப்பு.

வைரமுத்து பற்றி தனக்கு ஒன்றுமே தெரியாது என ஏ. ஆர். ரகுமான் சொல்வதைப் போல, இசை-நடன கலைஞர்கள் பற்றி தனக்கு ஒன்றுமே தெரியவில்லை என இப்போது நடவடிக்கை எடுத்திருக்கிறது மியூசிக் அகாடமி. குறைந்தபட்சம் வெளிப்படையாக பெயர்கள், புகார்கள் வந்தபிறகு இப்படி சொல்கிறார்களே என்று திருப்தி பட்டுக் கொள்ளலாம். ஆனாலும் சீழ்பிடித்த பார்ப்பனிய புண் இருக்கும் இடத்தில் பாதிப்புகளும் ஆழமாகத்தான் இருக்கும். பார்ப்பனியம் சூத்திரர்கள், பஞ்சம்களை மட்டுமல்ல பார்ப்பனப் பெண்களையும் சேர்த்தே ஒடுக்குகிறது. பாட்டு வகுப்பிற்குச் செல்லும் அந்தப் பெண்கள் பார்ப்பனியத்தை எதிர்த்து நடக்கும் போராட்டங்களில் ஒன்றிணையும் போது அந்தப் புண்ணை அகற்றும் வழிகிடைக்கும்.

செய்தி ஆதாரங்கள்:

♦ #metoo in the Carnatic World
Unsavory encounter with make-up artiste during arangetram
♦ #MeToo: I have been abused and wrongfully accused, says Chitravina Ravikiran
♦ Understanding gender disparity in Bollywood’s great ‘comeback’
#MeToo: In world of Carnatic music and Bharatanatyam, women say harassment is an open secret

3 மறுமொழிகள்

  1. பார்ப்பனர்கள் இப்போதாவது சக பார்ப்பன குற்றவாளிகளை தண்டிக்கின்றார்கள்
    .
    ஆனால் திராவிட கும்பல்கள் இப்போதும் கூட வைரமுத்து வுக்கு முட்டு கொடுத்து கொண்டிருக்கின்றார்கள்
    .
    எவ்வளவு கேவலம்

  2. தந்தை பெரியாரும்,Dr.அம்பேத்கார் அவர்களும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல் பார்ப்பன பெண்களுக்கும் பார்ப்பனீய கொடூரத்திலிருந்து விடுதலை வேண்டும் என்றுதான் தொடர்ந்து போராடினார்கள்.
    துல்லியமாக உணரும் காலம் இது…

  3. படுக்கை அறைக்கு வந்தால் பாட வாய்ப்பு – இந்த தலைப்பு ரவி கிரணுக்கும் பொருந்தும், வைர முத்துவிற்கும் பொருந்தும் . ரவிக்கிரன் விஷயத்திலாவது ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வைர முத்து விஷயத்தில் அவ்வாறு எதுவும் நடக்க வில்லை.

    இந்த விஷயத்தில் தமிழ் நாட்டில் நடவடிக்கை எடுத்த முதல் நிறுவனம் Music Academy . இது பாராட்டுவதுற்குரியது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க