பத்திரிகை செய்தி

தேதி: 06.10.2020

மது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (பு.ஜ.தொ.மு.) சங்கம், பிற தொழிற்சங்க அமைப்புக்களின் செயல்பாட்டில் இருந்து, மாறுபட்டு, புரட்சிகர அரசியலை, தொழிலாளி வர்க்கத்திற்கு கற்றுக் கொடுப்பது, அதன் மூலம், சமூக அரசியல் மாற்றத்திற்கு தொழிலாளி வர்க்கத்தை அணி திரட்டும் அரசியல் கடமையை நிறைவேற்றும் வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. தொழிற்சங்க ரீதியாக முதலாளி வர்க்கத்திடம் எவ்வித சமரசமின்றி, போராடி வருவதோடு, அரசியல் ரீதியில் தொழிலாளி வர்க்க எதிரிகளை அம்பலப்படுத்தி, பல்வேறு அரசியல் முன்னெடுப்புக்களையும் நடத்தி வருகிறது. தொழிலாளி வர்க்கம் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான எவ்வித நடவடிக்கைகளையும், அம்மக்கள் நலன் சார்ந்து நின்று போராடுவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

இப்படிப்பட்ட சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த தோழர். சுப. தங்கராசு, பெல் சொசைட்டி மூலம் பெல் தொழிலாளர்களுக்கு வீடு கட்டித் தருவதற்காக, அனாதீன நிலத்தை வாங்குவதில், ஊழல், முறைகேடுகளில் ஈடுபட்டார் என்பது அவர் மீதான விசாரணையில் நிரூபிக்கப்பட்டு, அதற்காக அவரை பு.ஜ.தொ.மு. சங்கத்தின் அனைத்து பொறுப்புக்களிலிருந்தும் நிரந்தர நீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், புரட்சிகர இலட்சியத்தை நோக்கி இயங்கும் எந்த அமைப்பும் தமது அமைப்பில் நிலவும், சரி தவறுகள் பற்றிய பரிசீலணையை, கறாராகக் கையாண்டு சுப.தங்கராசு அவர்களை சொசைட்டி நடவடிக்கைகளில் ஈடுபடும் போது அதை சோதித்திருக்க வேண்டும். அதை துவக்கத்திலேயே தடுத்திருக்க வேண்டும்.

மாநிலக் குழு அவ்வாறான பரிசீலணை நடவடிக்கைகளை முறையாக கையாளாததன் விளைவால் இந்த பெரும் தவறு நிகழ்ந்திருக்கிறது என்பதை மாநில நிர்வாகக் குழு ஏற்கிறது. அது தான் இன்று எமது தொழிற்சங்க அமைப்பின் மீதான களங்கத்திற்கும், அவநம்பிக்கைக்கும் காரணமாக அமைந்திருக்கிறது. சுப. தங்கராசு செய்தது சாதாரண தவறாகப் பார்க்க முடியாது. அது மன்னிக்க முடியாத குற்றமாகும். அப்படிப்பட்ட மன்னிக்க முடியாத குற்றத்திற்கு மாநில நிர்வாகக் குழுவே முக்கிய பொறுப்பு என எமது மாநில செயற்குழு கடும் விமர்சனமாகச் சுட்டிக் காட்டியதை மாநில நிர்வாகக் குழுவும் மனதார ஏற்கிறது.

இத்தவறை செய்த மாநில நிர்வாகக் குழு ஒட்டு மொத்தமாக தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். அதற்குத் தண்டனையாக, மாநில நிர்வாகக் குழு தோழர்களின் பதவிகள் பறிக்கப்பட்டு, தகுதி இறக்கம் செய்யப்பட வேண்டும் என்ற மாநில செயற்குழுவின் முடிவையும் ஏற்கிறது. அதன் படி, ஒட்டு மொத்த மாநில நிர்வாகக் குழு தோழர்களும் பதவி விலக்கப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் தேர்வு, வருகின்ற 31.12.2020 – க்குள் மாவட்ட  / மாநில மாநாடுகளை நடத்தி தேர்வு செய்யப்படுவர். புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் வரை, தற்காலிக தலைமைக் குழுவாக செயல்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு

த.பழனிசாமி
தலைமைக்குழு சார்பாக
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
தமிழ்நாடு – புதுவை


தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
தமிழ்நாடு – புதுச்சேரி.
தொடர்புக்கு: 944444 2374

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க