கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிதி ஆதாரங்கள், சட்டப்பூர்வ நிலை மற்றும் பொதுப் பொறுப்புடைமை குறித்து விளக்கம் கேட்டு, அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத்திற்கு அதிகாரப்பூர்வமாகக் கடிதம் எழுதியுள்ளார்.
2026 ஜூன் மாத மத்தியில் அனுப்பப்பட்ட இந்தக் கடிதத்தில் அமைச்சர் பிரியங்க் கார்கே எழுப்பியுள்ள கேள்விகளில், கர்நாடகாவில் மட்டும் 4,127 தினசரி சாகாக்கள், 1,389 வாராந்திர கூட்டங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பொது அணிவகுப்புகளை நடத்தும் இவ்வளவு பெரிய அமைப்பு சட்டரீதியான கண்காணிப்புக்கு அப்பாற்பட்டு இருக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அக்கடிதத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் பொதுவெளியில் வெளியிடுமாறு மேலும் சில விவரங்கள் கோரப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ பதிவு விவரங்கள் மற்றும் அதன் நிறுவனக் கட்டமைப்பு, அமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் பொறுப்பாளர்கள் யார் என்ற விவரம், அமைப்பிற்கு வரும் நன்கொடைகள், பங்களிப்புகள் மற்றும் பிற வருவாய் ஆதாரங்களின் முழு விவரங்கள், அமைப்பின் ஒட்டுமொத்த செலவினங்கள் மற்றும் அதன் சொத்து மதிப்பு, பொருந்தக்கூடிய வரிகள் சட்டப்பூர்வமாகச் செலுத்தப்படுகின்றனவா என்பதற்கான சான்றுகள், எந்தவொரு பொது நிகழ்ச்சிகள் அல்லது அணிவகுப்புகள் நடத்துவதற்கும் பெறப்படும் முறையான அனுமதிகள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், சாதாரண குடிமகன், தெரு வியாபாரிகள், தொண்டு நிறுவனங்கள் (NGOs), மற்றும் பிற அமைப்புகள் அனைத்தும் அரசு விதிகளுக்கு உட்பட்டு தங்களைப் பதிவு செய்து, வரிக் கணக்குகளைக் காட்டும்போது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மட்டும் இதிலிருந்து விலக்கு பெற முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக அமைச்சரின் இந்தக் கோரிக்கையை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் நிராகரித்துள்ளார். இது உண்மையான பொறுப்புக்கூறலுக்கான முயற்சி அல்ல என்றும், “அரசியல் உள்நோக்கம் கொண்டது” என்றும் அவர் சாடியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அரசிடமிருந்து எந்தவொரு நிதியையும் பெறுவதில்லை. அரசு நிதி பெற விரும்பும் அமைப்புகள் மட்டுமே தங்களைப் பதிவு செய்ய வேண்டும். இந்தியாவில் பதிவு செய்யப்படாத பல அமைப்புகள் உள்ளன. உதாரணத்திற்கு “ஹிந்து மதமே” எங்கும் பதிவு செய்யப்படவில்லை. கடந்த 100 ஆண்டுகால வரலாற்றில் எந்தவொரு அதிகார அமைப்பும் ஆர்.எஸ்.எஸ்-ஐ பதிவு செய்யுமாறு கேட்டதில்லை. இந்த அமைப்பு இருமுறை தடை செய்யப்பட்டு, பின்னர் தடைகள் நீக்கப்பட்டதன் மூலமே இதன் சட்டபூர்வ தன்மையை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது நிரூபணமாகிறது. மேலும், சாகாக்கள் பொது மைதானங்களிலும், அதன் செயல்பாடுகள் அனைவராலும் பார்க்கக்கூடிய வகையிலும் வெளிப்படையாகவே நடக்கின்றன என்று ஆர்.எஸ்.எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி சூர்யா மற்றும் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா போன்ற பா.ஜ.க-வினர் கார்கேவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ்-க்கு ஒரு ரூபாய் கூட தராத கார்கேவுக்கு இதைப் பற்றிக் கேட்க தார்மீக உரிமை இல்லை என்றும், விளம்பரத்திற்காகவே அமைச்சர் இவ்வாறு செய்கிறார் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
அமெரிக்காவிலிருந்து ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்புகளுக்கு வரும் நிதி, ஆண்டுக்குத் தோராயமாக ₹150 கோடி முதல் ₹250 கோடி வரை (சுமார் 15 முதல் 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) இருக்கும் எனப் பல்வேறு தணிக்கை அறிக்கைகள் மற்றும் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இந்தியாவில் பதிவு செய்யப்படாததால், நேரடியாக இந்த நிதியைப் பெற முடியாது. எனவே, அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரிடமிருந்து (Diaspora) திரட்டப்படும் இந்த நிதி, அங்குள்ள பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்கள் (501(c)(3) Exempt Organizations) மூலமாக இந்தியாவில் உள்ள ஆர்.எஸ்.எஸ்-இன் துணை சேவை அமைப்புகளுக்குச் சட்டப்பூர்வமாக அனுப்பப்படுகிறது.
ஏகலை வித்யாலயா அறக்கட்டளை (Ekal Vidyalaya Foundation, USA): இந்தியாவில் உள்ள கிராமப்புற மற்றும் பழங்குடியினப் பகுதிகளில் ஒற்றையாசிரியர் பள்ளிகளை நடத்தும் இந்த அமைப்பு, அமெரிக்காவில் மிகவும் வலுவானது. அமெரிக்கத் தணிக்கை ஆவணங்களின்படி, இந்த ஒரு அமைப்பு மட்டுமே ஆண்டுக்குச் சராசரியாக $10 மில்லியன் டாலர் (சுமார் ₹80 – ₹85 கோடி) வரை நிதி திரட்டுகிறது.
சேவா இன்டர்நேஷனல் (Sewa International, USA): பேரிடர் நிவாரணம் மற்றும் சமூகப் பணிகளுக்காக அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட இந்த அமைப்பு, கொரோனா மற்றும் வெள்ள நிவாரணக் காலங்களில் பெரிய தொகையைத் திரட்டியது. இதன் ஆண்டு வருவாய் $8 மில்லியன் முதல் $15 மில்லியன் டாலர் (சுமார் ₹70 – ₹120 கோடி) வரை பெறப்படுகிறது. இந்த நிதி இந்தியாவில் உள்ள “சேவா பாரதி” போன்ற அமைப்புகளுக்கு அனுப்பப்படுகிறது.
IDRF (India Development and Relief Fund): அமெரிக்காவின் மேரிலாந்தைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த அறக்கட்டளை, பல தசாப்தங்களாக இந்தியாவில் உள்ள வனவாசி கல்யாண் ஆசிரமம் மற்றும் வித்யா பாரதி போன்ற சங் பரிவார் கல்வி நிறுவனங்களுக்குப் பல மில்லியன் டாலர்களை நிதியாக அனுப்பியுள்ளது.
VHPA (Vishwa Hindu Parishad of America): விசுவ இந்து பரிஷத்தின் அமெரிக்கக் கிளையான இது, அங்குள்ள இந்து கலாச்சார மையங்கள் மற்றும் மத நிகழ்வுகள் மூலம் நிதி திரட்டி அதன் சார்பு திட்டங்களுக்குப் பயன்படுத்துகிறது.
இவ்வாறு பெறப்படும் நிதி ஆர்.எஸ்.எஸ்-இன் அரசியல் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை, மாறாக சமூகப் பணிகளுக்கே பயன்படுத்தப்படுவதாக அந்த அமைப்பு கூறினாலும், அமெரிக்காவின் “The Center for Security, Race and Rights (Rutgers)” போன்ற சில அமைப்புகள் அண்மையில் வெளியிட்ட அறிக்கைகளில், அமெரிக்கத் தொண்டு நிறுவனங்களின் பணம் இந்தியாவில் மத அடிப்படையிலான சில செயல்பாடுகளுக்கும், அரசியல் பரப்புரைகளுக்கும் மறைமுகமாகப் பயன்படுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளன. சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (USCIRF) போன்ற அமைப்புகளும் இந்த நிதிப் புழக்கம் மற்றும் இந்தியாவின் தற்போதைய மதச் சூழல் குறித்துக் கேள்விகளை எழுப்பியுள்ளன.
அமெரிக்கா மட்டுமல்லாமல், பிரிட்டன் (UK), கனடா, ஆஸ்திரேலியா, கென்யா உள்ளிட்ட உலகின் 40-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து கணிசமான அளவில் ஆர்.எஸ்.எஸ்-இன் கிளை அமைப்புகள் நிதியைத் திரட்டுகின்றன.
இந்த நிதியின் மூலம் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைப்பு, தன்னுடைய பாசிச நடவடிக்கைகளை இந்தியாவில் மேற்கொண்டு வருகிறது.
இஸ்லாமியர்களின் வக்ஃப் சொத்துகளைப் பறிப்பதன்மூலம் அவர்களை ஒடுக்குவதும், வெளிநாடுகளிலிருந்து நிதி பெறும் கிறிஸ்துவ மிஷனரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து அவர்களின் சொத்துகளைப் பறிப்பதற்குச் சட்டங்களை இயற்றுவதுமாக தன்னுடைய பாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஒன்றிய பா.ஜ.க அரசு, ஆர்.எஸ்.எஸ்-இன் இந்த சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளைக் கேள்விக்கு உட்படுத்துவதில்லை.
வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் (FCRA) போன்ற சட்டங்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ்-க்கு மட்டும் பொருந்தாது.
அதேபோல், கொரோனா காலத்தில் பி.எம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட நிதி சுமார் 13,000 கோடிக்கும் அதிகம். இந்த தொகை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விவரங்கள் அறிய முடியாது, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப முடியாது, மத்திய தணிக்கை அதிகாரி (CAG) இதனைத் தணிக்கை செய்வதில்லை, பி.எம் கேர்ஸ் இணையதளத்தில் கூட பொதுப் பார்வைக்கு வெளியிடாமல் ரகசியம் காக்கப்படுகிறது.
இப்படியாக இந்துத்துவ பாசிச கும்பல் இந்திய மற்றும் வெளிநாட்டு உழைக்கும் மக்களின் உழைப்பைச் சுரண்டி, பொதுநலன், ஆன்மீகம் என்கிற பெயரில் அதை தன்னுடைய பாசிச நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துகிறது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தனது 100வது ஆண்டைத் தொடங்குவதையொட்டி அதற்கு வாழ்த்து தெரிவித்ததோடு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத் தடை செய்யும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் வெளிப்படைத்தன்மையையே எதிர்பார்ப்பதாகவும் பிரியங்க் கார்கே கூறியுள்ளார்.
எந்த சட்டத்தையும் மதிக்காமல் தனக்கென ஒரு சட்டத்தை வகுத்துக் கொண்டு செயல்படும் இந்த இந்துத்துவ பாசிச கும்பலை, இந்த சட்ட வரம்புகளுக்குள் நின்று கேள்வி கேட்கவோ, தண்டிக்கவோ முடியாது.
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலை முறியடிக்காமல் உழைக்கும் மக்களுக்கான விடுதலையையோ, நாட்டை பாசிச மயமாக்கும் அதன் நடவடிக்கைகளையோ நம்மால் தடுத்து நிறுத்த முடியாது.
உழைக்கும் மக்கள் மற்றும் ஜனநாயக சக்திகளின் போராட்டங்களின் வழியாக, இந்த பாசிச கும்பலை வீழ்த்தி, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்.
![]()
ரஞ்சித்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











