காசா: தீவிரமடையும் எரிவாயு தட்டுப்பாடு!

ஏற்கெனவே இனப்படுகொலை செய்யப்பட்டு வரும் காசா மக்கள், இனவெறி இஸ்ரேலின் கட்டுப்பாடுகளால் எரிவாயு, உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தத்தளிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

0

னவெறி இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தங்களையும் மீறி காசா மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. அங்குள்ள பொது மின்சார வலையமைப்பையும் அழித்துள்ளது. இதனால் மக்கள் தனியார் ஜெனரேட்டர்கள் மூலம் அதிக பணம் செலவழித்து மின்சாரத்தைப் பெற்று வந்தனர்.

தற்போது எரிவாயு இறக்குமதி குறைந்திருப்பதாலும் போருக்கு முன்பிருந்த நிலைமையுடன் ஒப்பிடும்போது வரலாறு காணாத அளவில் விலை அதிகரித்திருப்பதாலும் மக்களின் மின்சார செலவு அதிகரித்துள்ளது. ஒரு கிலோவாட் மணிக்கு (kWh) இருந்த விலை 2.5 ஷெகல்கள் (சுமார் $0.80) -லிருந்து 20 முதல் 30 ஷெகல்கள் ($7 முதல் $10) ஆக உயர்ந்துள்ளது. இது சுமார் 10 மடங்கு அதிகமாகும். இதனால் மக்களால் மின்சாரத்தைப் பெற முடியாத சூழல் உருவாகி உள்ளது.

ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் தற்போது மின்சாரத்திற்குப் பதிலாக மாற்று வழிகளைத் தேடும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அப்துல் ஜலால் அவர்களில் ஒருவராக உள்ளார். அவர் அருகில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு அப்பம் தயாரித்துக் கொடுப்பதற்கு விறகு அடுப்பைப் பயன்படுத்துகிறார்.

அவர் கூறுகையில் “இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் எரிவாயு நெருக்கடியின் காரணமாக, காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் சமைப்பதற்கும் பேக்கிங் செய்வதற்கும் மாற்று வழிகளைத் தேட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

“சமீபத்திய மாதங்களில் அந்தப் பகுதிக்குள் குறைந்த அளவிலேயே எரிவாயு அனுமதிக்கப்பட்ட போதிலும், விநியோகம் மீண்டும் துண்டிக்கப்படலாம் என்ற அச்சத்தில் மக்கள் தொடர்ந்து எரிவாயு பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

அதாவது போருக்கு முன்பாக காசா மக்கள் 25 நாட்களுக்கு ஒரு முறை 12 கிலோ எரிவாயுவைப் பெற்று வந்தனர். தற்போது இஸ்ரேலின் கட்டுப்பாடுகளால் காசாவுக்கு வரும் குறைந்த அளவு எரிவாயு மட்டுமே குடும்பங்களுக்குப் பகிரப்படுகிறது. ஒவ்வொரு குடும்பமும் 45 நாட்களுக்கு ஒரு முறையும், மோசமான நிலையில் 100 நாட்களுக்கு ஒரு முறையும் 8 கிலோ (17 பவுண்ட்) அளவு எரிவாயு மட்டுமே பெறுகின்றன. ஆனால் அப்துல்லா தினமும் சுமார் $10 மட்டுமே சம்பாதிப்பதால் அவரால் கூடுதல் எரிவாயு அல்லது மின்சாரத்திற்குச் செலவிட முடியவில்லை என்பதால் விறகு அடுப்பில் சமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞர் ஒருவர் வாகன ஓட்டிகளுக்கு டீசல் பாட்டில்களை விற்றுக் கொண்டிருக்கிறார். போரின் காரணமாக எரிபொருள் விலைகள் இன்னும் நிலையாக இல்லை. இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக டீசல் ஒரு லிட்டருக்கு 90 ஷெகல்கள் ($29) வரை உயர்ந்தது. தற்போது கூட, போருக்கு முன்பிருந்த 7 ஷெகல்கள் ($3.30) விலையை விட மூன்று மடங்கு அதிகமாகவே உள்ளது. இதனால் போக்குவரத்து செலவும் அதிகரித்துள்ளது.


படிக்க: காசா அமைதி வாரியத்தில் பார்வையாளராக இந்தியா: பாலஸ்தீன மக்களுக்குத் துரோகமிழைத்த மோடி அரசு!


75,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இனவெறி இஸ்ரேலால் கொல்லப்பட்டுள்ளனர். 20 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வீடுகளில் மின்சாரம் மற்றும் எரிவாயு கிடைப்பது மிகவும் குறைந்துள்ளது. மேலும் பல குடும்பங்களால் மாற்று எரிசக்தி ஆதாரங்களை வாங்க இயலவில்லை என்பது வேதனைக்குரியதாக உள்ளது.

முக்கியமாக காசா அரசாங்கத்தின் சமீபத்திய தரவுகளின்படி, போர்நிறுத்தம் தொடங்கியதிலிருந்து எதிர்பார்க்கப்பட்ட 8,050 எரிபொருள் லாரிகளில் 1,190 மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. ஒப்பந்தப்படி தினமும் 50 லாரிகள் அனுமதிக்கப்பட வேண்டும், ஆனால் வெறும் 14.7 சதவிகிதம் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

காசா பெட்ரோலியம் அதிகாரத்தின் இயக்குநர் இயாத் அல்-ஷோர்பாஜி கூறியதாவது, “மாதத்திற்கு 350–400 சமையல் எரிவாயு லாரிகள், 15 மில்லியன் லிட்டர் டீசல் மற்றும் 2.5 மில்லியன் லிட்டர் பெட்ரோல் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது மாதத்திற்கு 100 எரிவாயு லாரிகள் மட்டுமே வருவதாக அவர் தெரிவித்தார். வரும் எரிபொருள் பெரும்பாலும் சர்வதேச அமைப்புகளின் மூலம் மருத்துவம் மற்றும் பொதுச் சேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. வர்த்தக பயன்பாட்டிற்கு மாதத்திற்கு 3 மில்லியன் லிட்டர் மட்டுமே கிடைக்கிறது.” என்று கூறினார்.

மேலும், இந்தப் பற்றாக்குறை பொருளாதார மற்றும் சேவைத் துறைகளைச் சீர்குலைத்து வருவதாகவும், இதன் காரணமாக சில நிலையங்கள், எரிவாயு நிலையங்களுக்கோ வீடுகளுக்கோ முன்னர் ஒதுக்கப்பட்ட எரிவாயுவை விலைக்கு வாங்கி இயங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் அல்-ஷோர்பாஜி கூறியுள்ளார்.

எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் மேம்படும் என நம்பிக்கை இருப்பதாகவும், ஆனால் அது காசாவுக்கு நுழையும் எல்லைகளைக் கட்டுப்படுத்தும் இஸ்ரேலின் நடவடிக்கைகளின் மீது தான் சார்ந்துள்ளது என்றும் தெரிவித்தவர் இதை “கட்டுப்பாடு மற்றும் நெருக்கடி கொள்கைகள்” என்று விமர்சித்துள்ளார்.

ஏற்கெனவே இனப்படுகொலை செய்யப்பட்டு வரும் காசா மக்கள், இனவெறி இஸ்ரேலின் கட்டுப்பாடுகளால் எரிவாயு, உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தத்தளிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், இஸ்ரேலும் ஏகாதிபத்திய அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால் ஈரான் ஹார்முஸ் நீரிணையை முடக்கி வைத்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் எரிவாயுவிற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அது இந்தியாவிலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் முதுகெலும்பற்ற மோடி அரசு காசா மீதான இனப்படுகொலைப் போரையும் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலின் தாக்குதலையும் கண்டிக்கவில்லை.

எனவே காசா மீதான இனவெறி இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராகவும், ஏகாதிபத்திய வெறிபிடித்த அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிராகவும் உலக மக்கள் குரல் எழுப்ப வேண்டும்.

செய்தி மூலம்: அல் ஜசீரா


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க