மே தினம் 2026 | பதிவு 3
சென்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் செயல்பட்டு வரும் அரசுப் பொதுத்துறை நிறுவனமான மின்சாரத்துறையின் அனல் மின் நிலையங்களில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களேயாவர். நாடெங்கிலும் மின்சாரத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனல் மின் நிலையங்களில் பெரும்பாலான பணிகளும் பலவகையான ஒப்பந்த தொழிலாளர்களைக் கொண்டே நிறைவேற்றப்படுகின்றன என்பது கவனத்திற்குரியதாகும்.
முதலில் பிப்ரவரி 21 அன்று டெல்லி அருகில் பானிப்பட்டில் உள்ள அரசின் இன்னொரு முக்கியப் பொதுத்துறை நிறுவனமான எண்ணெய் சுத்திகரிப்பு (IOCL – Indian Oil Corporation Ltd.) ஆலையில் நடந்த பெரிய விபத்தைக் கண்டித்து இந்த போராட்டம் வெடித்தது. பின்னர் 8 மணி நேர வேலை, சுயமரியாதையுடன் வாழ்வதற்குரிய கூடுதலான அடிப்படை ஊதியம், வேலை இடத்தில் உரிய பாதுகாப்பான வேலை நிலைமைகள் போன்ற முக்கிய ஆதாரமான கோரிக்கைகளுக்கான போராட்டமாகத் தொடர்ந்தது.
இதே காலத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பத்ராத்து மற்றும் பிஹார் மாநிலம் நபிநகர் ஆகிய இடங்களில் உள்ள தேசிய அனல் மின் கழகத்தின் (NTPC- National Thermal Power Corporation) அனல் மின் நிலையங்கள் மற்றும் ராய்ப்பூரில் உள்ள அதானியின் ராய்க்கோடா அனல் மின் நிலையம் ஆகியவற்றின் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இங்கும் 8 மணி நேர வேலை, அளவான மிகைப் பணி மற்றும் அதற்குரிய இரட்டை ஊதியம், மற்றும் உடனடியான ஊதிய உயர்வு ஆகிய கோரிக்கைகளுக்காக இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.
பானிபட்டில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஆயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்கள் பிப்ரவரி 23 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அது மார்ச் மாதத்திலும் தொடர்ந்து ஒரு கட்டத்தில் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு மற்றவற்றுக்கான உறுதிமொழிகளுடன் முடிவுக்கு வந்தது. பின்னர் ஏப்ரல் 1 அன்று 12 மணி நேர வேலைக்கு எதிரான போராட்டமாக மீண்டும் வெடித்தது.
எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் அனல் மின் நிலைய பராமரிப்பு போன்ற கனரகத் தொழில் நிறுவனங்கள் பலவும் அரசு அல்லது பொதுத்துறையே ஆனாலும் உயர்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய முக்கிய பணிகளுக்கு மட்டுமே நிரந்தர பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களை அமர்த்திக் கொள்கின்றன. உடல் உழைப்பு சார்ந்த பிற பணிகளை எல்லாம் துண்டு துண்டாக திறன்சாரா (unskilled) வேலைகளாகப் பிரித்து அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைத்து விடுகின்றன. இந்த முறை பல பத்தாண்டுகளாக தனியார்த் துறை அரசுத் துறை பொதுத்துறை என்று வேறுபாடில்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களிலும் பின்பற்றப்பட்டு வருகின்றது.
படிக்க: டெல்லி நொய்டாவைச் சுற்றி வீசிய தொழிலாளர் போராட்ட அலை
என்றாலும், பாசிச பா.ஜ.க கும்பல் டெல்லியில் அரசதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, இந்த ஒப்பந்தங்கள் எல்லாம் புதிய பணம் படைத்த கிரிமினல் மற்றும், இந்து மத வெறி குண்டர்களாக அடையாளம் காணப்படும் தாதாக்களிடம் கையளிக்கப்பட்டன. கிராமப்புறங்களிலிருந்து பிழைப்பு தேடி வந்த சாதாரண தொழிலாளர்கள் மீது இந்த குற்ற கும்பலின் சுரண்டல் ஒடுக்குமுறை மிகவும் கொடுமையானது. யாரும் எதையும் எதிர்த்துப் பேச முடியாது; எந்த வேலையையும் மறுக்க முடியாது; சொன்ன வேலையை சொன்ன நேரத்தில் செய்து முடித்தாக வேண்டும், இல்லையேல் வேலையை விட்டு நீக்குவது மட்டுமல்லாமல் பிற தொழிலாளர் முன்பு முட்டி போட வைப்பது முதல் கட்டி வைத்து அடிப்பது வரை எல்லா கொடுமைகளையும் சந்திக்க வேண்டும்.
இவ்வொப்பந்த தொழிலாளர்கள் நீண்ட காலமாகச் செய்வதறியாது குமுறிக் கொண்டிருந்தனர். இந்தப் போராட்ட அலையினால், ஒன்றிணைந்த போராட்டத்தினால் வர்க்க உணர்வும் வலிமையும் பெற்ற தொழிலாளர்கள் தாங்கள் மிருகத்தனமாக நடத்தப்படுவதற்கு எதிராகக் குரலை உயர்த்தினர். அந்த கிரிமினல் ஒப்பந்ததாரர்களோடு கூடிக் குலாவி தங்களது ஊதியத்தில் கூட்டுக் கொள்ளை அடிக்கும் குரூரமான அதிகாரிகளை எதிர்த்துக் கண்டன முழக்கங்களை எழுப்பினர். அவ்வதிகாரிகள் மீது உரிய சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தங்களின் பிற கோரிக்கைகளோடு இணைத்தனர்.
வாய்க்கும் வயிற்றுக்குமே போதாத மிகக்குறைந்த கூலி, கூடுதல் வேலை நேரம், எந்த உரிமைகளும் இல்லாத அழுத்தம் மிகுந்த கடுமையான வேலை நிலைமைகள் என துயரம் மிகுந்த வாழ்க்கை நிலையினால் ஏற்பட்ட பெருங்கோபத்தின் விளைவாய் ஒன்றிணைந்து உருவானது இந்த மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டம்.
இது ஒருபோதும் இத்துடன் ஓய்ந்து விடாது. மேலும் மேலும் புதிய இடங்களுக்குப் பரவும். தொழிலாளர்கள் ஒற்றுமையும் போராட்டமும் நிச்சயம் ஓங்கி வளரும். அது கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் அவர்களைத் தாங்கி நிற்கும் இந்து மதவெறி பாசிச பா.ஜ.க அரசாங்கத்திற்கும் ஒப்பந்ததாரர்களாக உலாவரும் அதன் அடிமட்ட இந்து மதவெறி குண்டர் படைக்கும் அச்சத்தை ஊட்டும்; நிச்சயம் பணிய வைக்கும். தொழிலாளர்களே வர்க்க ஒற்றுமையைக் கட்டியெழுப்புங்கள்! உறுதியுடன் போராடுங்கள்! வெற்றி நிச்சயம்! நாளை நமதே! மேநாளில் உறுதியேற்போம்!
![]()
சுந்தரம்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











