கோவை: பத்து வயது சிறுமி பாலியல் வன்கொலைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரம்!

தனிமனித தாக்குதல் மூலம் பாதிக்கப்பட்ட நபரையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, விஜய் அரசு மற்றும் பாலியல் குற்றவாளிகள் மீதான மக்களின் எதிர்ப்பை பாதிக்கப்பட்ட நபருக்கு எதிராகவே திருப்புகின்ற சதியில் ஊடகங்கள் சில ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

0

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பள்ளப்பாளையத்தில் பத்து வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.

மே 21 ஆம் தேதி அன்று வீட்டின் அருகே சிறுமி விளையாடிக் கொண்டிருந்துள்ளார். பின்னர், சிறுமியைக் காணவில்லை என்பதை அறிந்த பெற்றோர் அவசர எண் 100-க்குத் தொடர்பு கொண்டு போலீசில் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தனிப்படைகள் அமைத்துத் தேடியுள்ளனர். மறுநாள் 22 ஆம் தேதி அன்று மாலை கண்ணம்பாளையம் ஏரிக்கரைக்கு அருகில் உள்ள புதரில் காயங்களுடன் சிதைக்கப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் சிசிடிவி (CCTV ) காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் சிறுமியை கார்த்திக் என்ற காமக்கொடூரன் இருசக்கர வாகனத்தில் கூட்டிச் செல்கின்ற காட்சியினை வைத்து கார்த்திக் என்பவனையும் அவனுக்கு உடந்தையாக இருந்த அவனுடைய நண்பன் மோகன்ராஜையும் அன்று மாலை கைது செய்துள்ளனர்.

ஆனால் மகள் கொல்லப்பட்டதை மறைத்து போலீசார் குழந்தை உயிருடன் இருப்பதாகவே தங்களிடம் தெரிவித்ததாகவும் எஃப்.ஐ.ஆரில் கையெழுத்து வாங்கிய பின்னரே குழந்தை உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்ததாகவும் சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் உடலைக் கண்ட சிறுமியின் சித்தி, சிறுமியின் கழுத்து மற்றும் கை, கால்கள் உடைக்கப்பட்டிருந்ததாகவும் முகம் சிதைக்கப்பட்டு உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும் நிகழ்த்தப்பட்ட கொடூரம் குறித்துக் கூறினார். சிறுமியின் பெற்றோரும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளனர்.

சிறுமி கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர், உறவினர்கள், ஊர்பொதுமக்கள் சூலூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தி இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று போலீசார் தெரிவித்த பிறகே கலைந்து சென்றுள்ளனர்.


படிக்க: கோவை சிறுமி பாலியல் வன்கொலை: போர்னோகிராபி, போதைப் பொருட்களைத் தடைசெய்! | தோழர் தீரன்


கார்த்திக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சாக்லேட் வாங்கித் தருவதாகச் சிறுமியைக் கூட்டிச்சென்று தென்னந்தோப்பில் பாலியல் வன்கொடுமை செய்து சிறுமியின் தலைமுடியைக் கொண்டு கழுத்தை நெறித்துக் கொலை செய்து புதரில் வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளான்.

இதன் அடிப்படையில் போலீசார் கார்த்திக், அவனது நண்பன் மோகன்ராஜ் மீது போக்சோ, கடத்தல், கொலை செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாலியல் குற்றவாளி கார்த்திக்குக்கு ஜூன் 5 ஆம் தேதி வரையும் மோகன்ராஜுக்கு மே 27 ஆம் தேதி வரையும் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இக்கொடூரச் சம்பவம் குறித்து ஆரம்பத்தில் வாய் திறக்காத முதல்வர் விஜய் மக்களின் கடும் எதிர்ப்பிற்கு பிறகே சிறுமியின் அம்மாவிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசி, கடுமையான நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக மருத்துவமனையில் உடற்கூறாய்வு முடிந்த பிறகு கணவன், மனைவி இடையே உள்ள பிரச்சனையைப் பயன்படுத்திக் கொண்டு சிறுமியின் உடலை தாயிடம் காட்டாமல் தந்தையிடம் கையெழுத்தை வாங்கிக் கொண்டு மருத்துவமனையின் பின்வாசல் புறமாக அனுப்பி வைத்துள்ளனர். போலீசாரின் பாதுகாப்புடன் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டு சென்று அவசர அவசரமாக எரித்துள்ளனர்.

சிறுமியின் கொலையில் சந்தேகம் ஏற்பட்டு உடலை மறு உடற்கூறாய்வுக்காக எடுக்கக் கூடாது என்பதற்காகவும் இப்பிரச்சினையை மூடிமறைக்க வேண்டும் என்பதற்காகவுமே உடலை எரித்துள்ளனர். இக்கொடூரச் சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை, பெற்றோருக்குத் தெரிவிக்காமல் போலீஸ் அதிகாரிகள் சேர்ந்து எரித்த கொடூரச் சம்பவத்தை நினைவுபடுத்துகிறது. இத்தகைய கொடூரம் தமிழ்நாட்டிற்கு புதியது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

சிறுமியின் உறவினர் கூறுகையில், “எங்கள் குடும்ப வழக்கத்தின்படி உடலைப் புதைப்பது தான் வழக்கம். ஆனால் உடலை எரித்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். சிறுமியின் தாய் “எனக்கு நிதி வேண்டாம், நீதிதான் வேண்டும்” என்று தெரிவித்ததோடு “குற்றவாளிக்கு கடுமையான தண்டனை கிடைத்த பிறகுதான் உடலை வாங்குவேன்” என்று உறுதியாகக் கூறியுள்ளார். இதனால்தான் அவருக்குத் தெரியாமல் அவரது கணவரிடம் சிறுமியின் உடலைக் கொடுத்துள்ளனர் என்று அரசின் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், “சிறுமியின் தாய்க்குக் குடிப்பழக்கம் இருக்கிறது”, “அம்மா சரியில்லை; அதனால் தான் குழந்தைக்கு இப்படி நடந்துவிட்டது” என்று இணைய வழி குண்டர் படையினர் சிலர் அவரின் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதன்மூலம் அரசைக் காப்பாற்ற அவர்கள் முயல்கின்றனர்.

ஆனால் இங்கு சிறுமி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டது குறித்தும், அதற்குக் காரணமாக உள்ள சமூக காரணிகள், அரசின் கையாலாகாத்தனம் ஆகியவற்றைப் பேசுபொருளாக்க வேண்டிய ஊடகங்கள், தங்களின் டி.ஆர்.பி ரேட்டிங்கிற்காக சிறுமியின் தாயிடம் “உங்களுக்குக் குடிப்பழக்கம் உண்டா?” என்று தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பொறுப்பற்ற கேள்விகளை எழுப்பியுள்ளன. இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

அதாவது தனிமனித தாக்குதல் மூலம் பாதிக்கப்பட்ட நபரையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, விஜய் அரசு மற்றும் பாலியல் குற்றவாளிகள் மீதான மக்களின் எதிர்ப்பை பாதிக்கப்பட்ட நபருக்கு எதிராகவே திருப்புகின்ற சதியில் ஊடகங்கள் சில ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் சமீப நாட்களாக அதிகரித்து வருகின்றன. குழந்தைகளுக்கு எதிரான பெரும்பாலான பாலியல் வன்கொடுமைகள் அவர்களுக்குத் தெரிந்தவர்கள், அண்டை வீட்டார் அல்லது உறவினர்களாலேயே நிகழ்த்தப்படுகிறது என்ற கசப்பான உண்மையை இந்தச் சம்பவமும் நிரூபித்துள்ளது.

எனவே பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்குக் காரணமாக உள்ள மது உள்ளிட்ட போதைப் பொருட்கள் தடை செய்யப்பட வேண்டும். பெண் கல்வி பெண் சுதந்திரத்தை மறுக்கும், பெண்களைப் போகப் பொருளாக்கும் ஆபாச இணையதளங்கள், திரைப்படங்கள், நாடகங்கள், புராண இதிகாசங்கள் உள்ளிட்டவை தடை செய்யப்பட வேண்டும்.

இதன் மூலமே குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் கட்டுப்படுத்த முடியும். அதற்கான போராட்டங்களை ஜனநாயக சக்திகள் கட்டியமைக்க வேண்டும்.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க