மே தினம் 2026 | பதிவு 4
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம், கர்நாடகம், ஒடிசா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் முழுவதும் சென்ற ஏப்ரல் மாதத்தில் அவ்வப்போதும் வெப்ப அலை வீச்சு மிகவும் கடுமையாக இருந்தது. ஏற்கெனவே காலநிலையைக் கணக்கிடும் ஐ.எம்.டி. எனப்படும் (Indian Meteorological Department) அரசு நிறுவனம் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை நாடு முழுவதும் வெப்ப அலை மிகக் கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிக் தொழிலாளர்கள் எனப்படுவோர் வெயிலோ மழையோ நாள் முழுவதும் இரு சக்கர வாகனம் ஓட்டியாக வேண்டும். கொடுமையான போக்குவரத்து நெரிசலில் சமைத்த உணவை சூடு ஆறும் முன் விநியோகம் செய்து வருகின்றனர். பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். கூரையில்லாத திறந்தவெளியில் முழு நேரத்தையும் செலவிடுகின்றனர். சொல்லப்போனால் சாலையிலேயே வாழ்கின்றனர்.
காலநிலை மாற்றம் மோசமடைந்திருக்கின்ற இக்காலத்தில் பொதுவாக வெயில் அதிகம் என்பதை விடவும் வெப்ப அலை வீச்சு எனப்படும் அனல் காற்று தகிக்கிறது. மதிய நேரத்தில்தான் ஆர்டர்கள் குவியும் என்பதால் தொழிலாளர்கள் பதற்றத்துடனும் பரபரப்பாகவும் வேகமாக வண்டியை ஓட்டி வேலையை முடிக்க வேண்டியுள்ளது. சம்பாதிப்பதற்காக என்று மட்டுமில்லாமல் ரேட்டிங் எனப்படும் தணிக்கை முறையால் சம்பளம் வெட்டப்படுவதைத் தவிர்க்கவும் இவ்வாறு ஓட வேண்டி இருக்கிறது. எப்போதும் அவர்கள் எதிர்நோக்கி இருப்பது அடுத்த அழைப்புக்கான அலைபேசிக் குரலைத்தான்.
அவர்களுக்கென்று தொழிற்கூடமோ அலுவலகமோ கிடையாது என்ற நிலையில் கூட எங்கும் எதற்கும் நிழல் என்று ஒதுங்கி நிற்க முடியாது. உக்கிரமான வெயிலால் வாகனத்தின் ரெக்சின் சீட்டுகள் சூடேறி அதுவே உடல் வெப்பமாக மாறிப்போகும். இந்த வெப்ப அலை வீச்சினால் தொழிலாளர்கள் கடும் உடல் நல பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். ஆனாலும் கிக் நிறுவனங்கள் இந்த வெப்ப அலைகளை, ஆரஞ்சு, சிவப்பு என்னும் ஐ.எம்.டி-யின் எச்சரிக்கைகளைப் பொருட்படுத்துவதே இல்லை. எல்லாவற்றையும் சாதாரணமாக வேலைச் சூழலின் அங்கமாகவே பார்க்கின்றன.
உணவு மற்றும் பொருள் விநியோகத் தொழிலாளர்கள், வாகன ஓட்டுநர்கள், வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் ஆகியோருக்கு வெப்ப அலை வீச்சிலிருந்து பாதுகாப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ஒன்றிய அரசின் தொழிலாளர் நலத்துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளது ஐ.எஃப்.ஏ.டி. (IFAT – Indian Federation of App Based Transport Workers) எனப்படும் கிக் தொழிலாளர் அமைப்பு.
இந்தியாவில் கிக் பொருளாதாரத்தின் கீழ் 77 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இது வரும் 2030ஆம் ஆண்டுக்குள், அதாவது மூன்று ஆண்டுகளில், 2 கோடியே 35 லட்சம் என்று உயர்ந்து விடும் என்கிறது நிதி ஆயோக் அமைப்பின் மதிப்பீடு. உலக வங்கியின் ஒரு மதிப்பீட்டின்படி இந்தியாவில் 75 சதவிகிதம் உழைப்பாளிகள் சற்றேறக்குறைய 38 கோடி பேர் கூரை இல்லாத திறந்த வெளியில் வெப்ப அலையில், ஆரஞ்சு-சிவப்பு எச்சரிக்கைக்கு மத்தியில் வேலை செய்கின்றனர். இவ்வளவு எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் என்ற போதும் இந்திய அரசோ மாநில அரசுகளோ இத்தொழிலாளர் நலனைப் பற்றி எந்த அக்கறையும் காட்டுவதில்லை.
இப்போது ஐ.எஃப்.ஏ.டி. அமைப்பு கோருவது என்ன? ஐ.எம்.டி. சொல்லும் ஆரஞ்சு மற்றும் சிவப்பு எச்சரிக்கை நாட்களில் வெப்ப அலையால் சூடேறிப்போன உடலைக் குளிர்வித்துக் கொள்ளும் வகையில் நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே நல்ல குடிநீர் மற்றும் கழிப்பிட வசதியுடன் கூடிய குளிரூட்டப்பட்ட ஓய்விடங்கள் அமைக்கப்பட வேண்டும்; இது போன்ற சில சிக்கலான தருணங்களில் அலைபேசியை சுவிட்ச் ஆப் செய்வதை அனுமதிக்க வேண்டும்; அதற்கு தண்டத்தொகை விதிப்பதைக் கைவிட வேண்டும் போன்றவையே. இது ஒன்றும் உலகத்தில் இல்லாத புதிய கோரிக்கை அல்ல.
ஏற்கெனவே கத்தார் மற்றும் அமீரகம் ஆகிய நாடுகளில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் காலை 10 மணி முதல் மாலை 3.30 மணி வரையிலும் திறந்த வெளி கட்டுமான பணிகள் தடை செய்யப்பட்டுள்ளன. மீறுபவர்கள் கடுமையான தண்டனைக்கு உட்படுவார்கள் என்று தொழிலாளர் நலத்துறையின் கண்காணிப்புடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
ஐரோப்பாவில் ஸ்பெயின் அரசாங்கம் காலநிலை கண்காணிப்பு அமைப்புகள் ஆரஞ்சு மற்றும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கும் நாட்களில் திறந்தவெளி வேலைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் 26° செல்சியஸ்க்கு மேல் வெப்பநிலை உள்ள நாட்களில் திறந்த வெளி பணியாளர்களுக்கு நிழல் மற்றும் குடிநீர் ஏற்பாட்டுடன் ஓய்வு இடைவேளைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ், தென்கொரியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இதுபோன்ற வெளிப்புற வேலைகள் செய்பவர்களுக்கு வெப்பநிலை சார்ந்து கட்டாய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
ஆனால் இந்தியாவில் இதுபோன்ற எந்த சட்ட விதிகளும் இல்லை. அனைத்தும் இங்கு வெறும் ஆலோசனைகளாகவே சட்டக் காகிதங்களில் இடம்பெற்றுள்ளன. தேசிய பேரிடர் மேலாண்மை (NDM – National Disaster Management) ஜூன் 25 அன்று வெளியிட்ட அறிவிப்பில், தொழில் நிறுவனங்கள் வெப்ப அலை காலத்தில் மதியம் 12 மணி முதல் 4 மணி வரை வெளிப்புற / திறந்த வெளியில் தொழிலாளர்களை உழைப்பில் ஈடுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குடிதண்ணீர் ஏற்பாட்டுடன் கூரையின் கீழ் ஓய்விடங்கள் கட்டித் தர வேண்டும் போன்ற வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தியாவில் தவிர்க்க வேண்டும் போன்ற வழிகாட்டல்களை எந்த நிறுவனம் சட்டை செய்யும்? நான் அடிப்பது போல் அடிக்கிறேன் நீ அழுவது போல் அழு என்கிற எழுதப்படாத ஒப்பந்தம்தான் இது. வெப்ப அலையில் கருகி வாழ்வை இழப்பவர்கள் இளம் தொழிலாளர்களே.
2020ஆம் ஆண்டில் ஒன்றிய அரசினால் கொண்டுவரப்பட்ட சமூகப் பாதுகாப்பு சட்டம் (Code on Social Security) கிக் தொழிலாளர்களை தனிச்சிறப்பான பிரிவினராக அங்கீகரிக்கிறது. அதற்காக அந்த நிறுவனங்கள் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்புத் தொகை ஒன்றை உருவாக்கி இ.எஸ்.ஐ. மற்றும் இ.பி.ஃஎப். போன்றவற்றைச் செயல்படுத்தக் கோருகிறது. ஆனால் அதில் வெப்ப அலை குறித்து எந்த கருத்தும் சொல்லப்படவில்லை.
ராஜஸ்தான் மாநிலம் கிக் தொழிலாளர்களுக்கு என்று 2023ஆம் ஆண்டில் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது. அதே போன்று கர்நாடக மாநிலம் 2024ஆம் ஆண்டில் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது. அவற்றிலும் இந்த வெப்ப அலை குறித்து எந்த பிரிவும் இல்லை.
சென்னை நகரில் தமிழ்நாடு அரசு அண்ணா நகர் மற்றும் கேகே நகர் பகுதிகளில் கிக் தொழிலாளர்களுக்காக 25 பேர் அளவில் உட்கார்ந்து ஓய்வெடுக்கக்கூடிய குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் கொண்ட குளிரூட்டப்பட்ட ஓய்வறைகளைக் கட்டியுள்ளது. ஆனால் இதுவெல்லாம் இப்பிரச்சனையில் கவனம் செலுத்தினோம் என்று மக்களிடம் கருத்துருவாக்கம் செய்வதைத் தவிர வேறெதுவும் இல்லை. ஏனென்றால் தமிழ்நாட்டில் கிக் தொழிலாளர்கள் எண்ணிக்கை 8 லட்சத்துக்கும் மேலாகும்.
மேலும், இதைச் செய்ய வேண்டியது மாநில அரசோ மாநகராட்சி நிர்வாகமோ மட்டுமல்ல; மாறாக தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சிக் கொழிக்கும் அந்த கிக் நிறுவனங்களே. தொழில் நிறுவனங்களை நிர்ப்பந்தப்படுத்தும் வகையில் அரசு விதிகளை வகுத்து, கண்காணித்து, நடைமுறைப்படுத்தும் கோரிக்கைக்கு ஒன்றிய அரசு உள்ளிட்டு எந்த அரசும் செவி சாய்ப்பதில்லை. எல்லா அரசுகளும் கார்ப்பரேட் கொள்ளை நிறுவனங்களுக்கு அரணாகவே நிற்கின்றன.
எனில், கிக் தொழிலாளர்கள் தங்களை அமைப்பாய் திரட்டிக் கொள்வதுடன் பிற பிரிவு தொழிலாளர்கள் மற்ற பிற உழைக்கும் மக்களுடன் ஒன்றிணைந்து போராடுவதைத் தவிர கோரிக்கைகளை வெல்வதற்கான வழி வேறு எதுவுமில்லை.
நன்றி: கவுண்ட்டர் கரண்ட்ஸ்
![]()
சுந்தரம்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











