கிக் தொழிலாளர்களின் போராட்டம்: அல்காரிதச் சுரண்டலுக்கு எதிரான முதல் வெற்றி!

உழைப்பு, முதலீடு, விபத்து அபாயம் என அனைத்தும் அடித்தளத்திலிருக்கும் தொழிலாளியுடையது; ஆனால் லாபம் மட்டும் எவ்விதப் பொறுப்பும் ஏற்காத உச்சத்திலிருக்கும் கார்ப்பரேட்டுகளுக்கானது. இதுதான் “அல்காரித முதலாளித்துவத்தின்” அப்பட்டமான சுரண்டல் வடிவம்!

டந்த 2026 பிப்ரவரி 21 அன்று அதிகாலை 3:20 மணிக்கு, டெல்லி சுபாஷ் நகர் பகுதியில் 25 வயதான ஹேம் சங்கர் என்ற இளைஞர் தனது மின்சார இருசக்கர வாகனத்தில் டெலிவரிக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த கார் அவர் மீது பயங்கரமாக மோதியதில், தூக்கி வீசப்பட்ட சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குடும்பத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதாரச் சுமையையும் சுமந்துவந்த அந்த இளைஞனின் உயிர் அநியாயமாகப் பறிக்கப்பட்டது. இதேபோல ஹைதராபாத்திலும் ஒரு கொடூரம் நிகழ்ந்தது. கடந்த ஜனவரி 5-ஆம் தேதி, இளங்கலை மாணவரான அபிஷேக் (25 வயது) டெலிவரி செய்வதற்காகச் சென்றார். மெஹ்திப்பட்டினம் பகுதியில் வண்டி சறுக்கி விழுந்ததில், தனியார் பேருந்து சக்கரத்தில் சிக்கிச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த இரண்டு கொடூரமான விபத்துகளிலும் தங்கள் உயிரைப் பறிகொடுத்தவர்கள் செப்டோ (Zepto) நிறுவனத்தின் டெலிவரி ஊழியர்கள் ஆவர். ஆனால், “உயிரிழந்தவர்களுக்கும் தங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை” என செப்டோ நிறுவனம் அப்பட்டமாகப் பொய்யுரைத்தது. விபத்து நடந்த நேரத்தில் அவர்கள் தங்களுக்காகப் பணியாற்றவில்லை என்று கூறித் தனது முதலாளித்துவத் திமிரைக் காட்டியுள்ளது.

பிப்ரவரி 3 அன்று டெல்லியில் பெண் கிக் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டம்.

முதலாளித்துவ உற்பத்தி முறையின் உச்சக்கட்ட வளர்ச்சியான ஏகாதிபத்திய காலகட்டம் உருவாக்கிய கிக் தொழிலாளர் வர்க்கமானது, இன்று மிகக் கொடூரமான முறையில் சுரண்டப்பட்டுவரும் நவீன பாட்டாளி வர்க்கமாக உருவெடுத்துள்ளது. இவர்கள் எதிர்கொள்ளும் சுரண்டல் வடிவமானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து, நாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத வகையில் பல்வேறு பரிமாணங்களை அடைந்து வருகிறது. இவ்வாறான சூழலில்தான், உயிர் வாழ்வதற்கான தங்களின் அடிப்படை உரிமையை மீட்கப் போர்க்களத்தில் குதித்துள்ளனர் கிக் தொழிலாளர்கள்.

கிக் பொருளாதாரம் –
நவீன சுரண்டலின் அடுக்குமுறை

முதலில், இந்தக் கிக் பொருளாதாரக் கட்டமைப்புக் குறித்துப் பார்ப்போம்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒரு “செயலியை” (App) மட்டுமே உருவாக்கிவிட்டு, தங்களை வெறும் “இடைத்தரகர்கள்” என்று சட்டப்பூர்வமாகப் பாதுகாத்துக் கொள்வதுடன், எந்தவொரு முதலீடுமின்றி ஒட்டுமொத்த லாபத்தையும் அறுவடை செய்கின்றன. இவர்களை “திரட்டிகள்” (Aggregators) அல்லது “செயலி உரிமை நிறுவனங்கள்” என்றும் குறிப்பிடலாம்.

அடுத்த அடுக்கில், மனித மேலாளருக்குப் பதிலாக “அல்காரிதம்” (Algorithm) எனப்படும் டிஜிட்டல் தொழில்நுட்பமே தொழிலாளர்களைக் கடுமையாகக் கட்டுப்படுத்துகிறது. எந்தப் பேரம் பேசுதலுக்கும் இடமின்றி, நேரக் கட்டுப்பாடு, அபராதம், ரேட்டிங் குறைப்பு என மனித உணர்வுகளற்ற ஓர் இயந்திரமாக இது தொழிலாளர்களை ஆட்டிப்படைக்கிறது.

இதற்கடுத்த நிலையில், நுகர்வோர் அளிக்கும் “ஸ்டார் ரேட்டிங்” (Rating) மூலமாகத் தொழிலாளியின் வாழ்வாதாரம் மறைமுகமாகக் கண்காணிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, நிறுவனங்கள் தாங்கள் வழங்க வேண்டிய நியாயமான ஊதியப் பொறுப்பிலிருந்து நழுவி, “டிப்ஸ்” என்ற பெயரில் வாடிக்கையாளர்கள் மீதே அந்தப் பொருளாதாரச் சுமையை நைச்சியமாகச் சுமத்துகின்றன. இந்த அடுக்கின் கீழ்நிலையில் இருத்தப்பட்டு, “பங்குதாரர்கள்” (Partners) என்ற போர்வையில் மிக மோசமாகச் சுரண்டப்படுபவர்கள், உழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்களே ஆவர்.

சொந்த வாகனம், சொந்தப் பெட்ரோல் செலவு என அனைத்தையும் சுமந்துகொண்டு, எவ்வித வேலைப் பாதுகாப்போ, மருத்துவக் காப்பீடோ, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உரிமையோ இல்லாமல் அற்பக் கூலிக்காகத் தங்கள் உயிரைப் பணயம் வைத்து உழைக்கிறார்கள். உழைப்பு, முதலீடு, விபத்து அபாயம் என அனைத்தும் அடித்தளத்திலிருக்கும் தொழிலாளியுடையது; ஆனால் லாபம் மட்டும் எவ்விதப் பொறுப்பும் ஏற்காத உச்சத்திலிருக்கும் கார்ப்பரேட்டுகளுக்கானது. இதுதான் “அல்காரித முதலாளித்துவத்தின்” அப்பட்டமான சுரண்டல் வடிவம்!

பங்குதாரர்கள் என்ற போர்வையில்
அரங்கேறும் டிஜிட்டல் அடிமைத்தனம்

கிக் தொழிலாளர்களைப் பொறுத்தவரை அவர்கள் தொழிலாளர்கள் அல்ல, மாறாக அவர்கள் பங்குதாரர்கள் (டெலிவரி பார்ட்னர்கள்) என்பதே கார்ப்பரேட்டுகளால் தொடர்ந்து முன்வைக்கப்படும் வாதம். தங்களின் உழைப்பிற்குப் பதிலாகப் வருமானம் ஈட்ட தளங்களுடன் இணைந்து பணியாற்றும் தொழில்முனைவோர்கள் (Entrepreneurs) என்றும் இவர்கள் சுயாதீனமாகச் (Independent) செயல்படுகிறார்கள் என்றும் நிறுவனங்கள் கூறுகின்றன.

ஆனால், சட்டப்பூர்வமாகத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச உரிமைகளைக் கூடப் பறிக்க வேண்டும் என்பதிலிருந்து கார்ப்பரேட்டுகளால் திட்டமிட்டு தந்திரமான இவ்வாதம் முன்வைக்கப்படுகிறது.

தொடக்கத்தில், “எவ்வளவு வேலை செய்ய வேண்டும், எவ்வளவு நேரம் செய்ய வேண்டும் என்பதைத் தொழிலாளர்களே முடிவு செய்து கொள்ளலாம்” என்று ஊதிப்பெருக்கினார்கள். ஆனால் தற்போது, ஒரு நாள் முழுவதும் வேலை பார்த்துவிட்டு ஒரேயொரு ஆர்டரை மட்டும் இரத்து செய்தால் கூட அபராதம் விதிக்கப்படும். ஊக்கத்தொகை கிடைக்காது; நான்கு ஆர்டருக்கு மேல் இரத்து செய்தால் அந்தத் தொழிலாளியின் செயலி கணக்கே முடக்கப்படும் என்று பல கெடுபிடிகளைச் செயலிகளைக் கட்டுப்படுத்தும் நிறுவனங்கள் விதித்து வருகின்றன. தேவை அதிகமுள்ள நேரங்களில் உள்நுழையாவிட்டாலோ (Log-in) அல்லது டெலிவரி வேலைகளை நிராகரித்தாலோ தொழிலாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்தச் செயலியில் “தானியங்கி வேலை ஒதுக்கீடு” என்ற முறை புகுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மனிதத் தலையீடு இல்லாமல் மென்பொருள் தானாகவே அடுத்தடுத்த ஆர்டர்களுக்கான வேலைகளைப் பிரித்து ஒதுக்கித் தரும். இதனால் தொழிலாளர்களால் தேவைப்பட்ட நேரத்தில் சிறு இடைவேளை கூட எடுக்க முடியாது. இப்படிப் பலரும் தண்ணீர் குடிக்காமலும் உணவு உண்ணாமலும் தொடர்ந்து இயந்திரம் போல வேலை செய்வதால் குடற்புண், மூலநோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்.

ஒரு ஆர்டருக்கு அடிப்படை விலையாக ரூ.35 முதல் ரூ.55 வழங்கப்படுகிறது என்றால், அதில் 25 சதவிகிதம் வரை – எந்த உழைப்பிலும் ஈடுபடாத இடைத்தரகரான திரட்டிகள் (செயலியின் உரிமை நிறுவனங்கள்) பறித்துக்கொள்ளும் சதியும் இதில் அடங்கியுள்ளது. இதனால் அன்றாடக் குடும்பச் செலவிற்கான குறைந்தபட்சப் பணத்தை ஈட்டுவதற்கு ஒரு நாளிற்கு 50 முதல் 60 ஆர்டர்கள் வரை பூர்த்திச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், ஏற்கெனவே உழைப்புக்கான ஊதியம் மறுக்கப்படும் இவர்கள், கடைகளில் பொருட்களை வகைப்படுத்துதல் மற்றும் பேக்கிங் செய்தல் போன்ற கூடுதல் வேலைகளிலும் ஈடுபடுகின்றனர். ஆனால், இந்த வேலைகளுக்கு இவர்களுக்கு எந்த ஊதியமும் அளிக்கப்படுவதில்லை. அதிலும், சமூகப் பாதுகாப்பு, கண்ணியம், சட்டப் பாதுகாப்பு போன்ற அனைத்தும் மறுக்கப்பட்டுப் பெரும் பாலியல் மற்றும் உளவியல் சவால்களை எதிர்கொள்வது பெண் கிக் தொழிலாளர்களே ஆவர்.

இவையெல்லாம் கிக் தொழிலாளர்கள் எந்தளவிற்குக் கொடூரமான உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்பதற்கான சில சான்றுகள் மட்டுமே.

“நெகிழ்வுத் தன்மை” என்கிற மாயையும்
10 நிமிட மரணப் பந்தயமும்

“நெகிழ்வுத் தன்மையுடைய வேலை” (Flexible work) என்று கவர்ச்சிகரமாகக் கூவி அழைத்து, கோடிக்கணக்கான தொழிலாளர்களை இத்துறைக்குள் கொண்டுவந்த முதலாளிகள், தற்போது தங்களின் நரித்தந்திரத்தைக் கட்டவிழ்த்துவிட்டுத் தொழிலாளர்களின் உரிமைகளைக் கசக்கிப் பிழிந்து வருகின்றனர். ஆண்டுதோறும் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட புதிய உழைப்பு சக்திகள் படையெடுத்து வரும் இந்திய உழைப்புச் சந்தையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் கார்ப்பரேட் நிறுவனங்கள், அற்பக் கூலிக்கு ஆள் பொறுக்கி வருகின்றன.

சமூகப் பாதுகாப்புத் துளியும் இல்லாத வகையிலேயே இந்த வேலைகள் வடிவமைக்கப்படுகின்றன. குடும்பப் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கு 18 முதல் 50 வயதினரே கிக் தொழிலில் பெருமளவு ஈடுபட்டு வருகின்றனர். 10 முதல் 12 மணி நேரம் வரை வேலை பார்த்தாலும், பெட்ரோல், உணவு மற்றும் இதர செலவுகளைக் கழித்தால் வெறும் 700 ரூபாய்தான் அவர்கள் கையில் மிஞ்சுகிறது‌. நூறாண்டுகளுக்கு முன் தொழிலாளி வர்க்கம் இரத்தம் சிந்திப் பெற்ற எட்டு மணி நேர வேலை உரிமையை இழந்து, இரண்டு மடங்காக இயந்திரம் போல் உழைத்தால் மட்டுமே இந்தப் பணத்தைக் கூட அவர்களால் சம்பாதிக்க முடியும்.

உட்கார்ந்த இடத்திலிருந்தே உடனுக்குடன் நமது தேவைகள் பூர்த்திச் செய்யப்பட வேண்டும் எனும் மேட்டுக்குடி நுகர்வுவெறியை அடித்தளமாக வைத்து, செப்டோ, அமேசான் (Amazon), ஸ்விக்கி (Swiggy), சொமாட்டோ (Zomato) உள்ளிட்ட பல செயலி சார்ந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் லாபம் பார்க்கின்றன. 2025-26-ஆம் ஆண்டிற்கான சமீபத்திய பொருளாதார ஆய்வறிக்கையின்படி, நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் கிக் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1 கோடியே 20 இலட்சத்தை எட்டியுள்ளது. பாஸ்டன் கன்சல்டிங் குரூப் மற்றும் நிதி ஆயோக் தரவுகளின்படி, 2030-ஆம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கை 2.35 கோடியாக உயரும் எனவும், இதன் சந்தைப் பரிவர்த்தனை மதிப்பு சுமார் 250 பில்லியன் டாலர்களை (சுமார் 20 இலட்சம் கோடி ரூபாய்) எட்டும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு பில்லியன் டாலர் சந்தையைக் கைப்பற்றவும், பிரம்மாண்டமான லாபத்தை ஈட்டவும் கார்ப்பரேட்டுகள் கையிலெடுத்துள்ள மிகக் கொடிய ஆயுதமே “வேகம்”. இதன் உச்சக்கட்டமாகவே, ஸ்விக்கியினுடைய இன்ஸ்டாமார்ட் (Instamart), சொமாட்டோவின் பிளிங்க்இட் (Blinkit) உள்ளிட்டவை “10 நிமிடத்திற்குள் டெலிவரி” என்பதைத் தங்களின் தனித்துவ அடையாளமாக மாற்றிவிட்டன. காலதாமதமாக டெலிவரி செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்பதோடு, ஒரு கட்டத்தில் தொழிலாளியின் செயலி கணக்கே முடக்கப்படும் என்பதால், எப்படியும் நேரத்திற்குள் சென்று பொருட்களை டெலிவரி செய்துவிட வேண்டும் என்று தொழிலாளர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துச் செல்கின்றனர். இதனால் அவர்கள் பல விபத்துகளையும் உயிரிழப்புகளையும் சந்திக்க நேரிடுகிறது.

தொழிற்புரட்சிக்குப் பிந்தைய காலத்தில், ஆலைகளுக்குள் “கன்வேயர் பெல்ட்டின்” (Conveyor Belt) வேகத்தை அதிகரிப்பதன் மூலம், அதோடு பிணைக்கப்பட்டிருந்த தொழிலாளர்களின் உழைப்பை முதலாளி வர்க்கம் கொடூரமான முறையில் உறிஞ்சியது. இன்று, தொழிலாளர்களை உதிரிகளாகச் சிதறடித்துள்ள இந்த அல்காரிதக் காலத்தில், ஆலைகளுக்குள் இருந்த கன்வேயர் பெல்ட்டிற்குப் பதிலாக வீதிகளில் “டெலிவரி மற்றும் பிக்கப் வேகத்தை” கூட்டிக்கொண்டே செல்வதன் மூலம் அதே சுரண்டல் நவீன வடிவத்தில் அரங்கேறுகிறது. தங்களின் இலாப வெறிக்கான சந்தைப் போட்டியில், முதலாளித்துவம் எப்போதும் தொழிலாளிகளின் உயிரையே பலியிட்டு வருகிறது என்பதற்கு இந்தக் கிக் பொருளாதாரமே மிகச்சிறந்த சான்று.

புதிய தொழிலாளர் சட்டம் எனும் பித்தலாட்டம்

வேலைப் பாதுகாப்பின்மை, நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் இல்லாதது, உழைப்புக்கேற்ற ஊதியமின்மை, வேலைப் பலன்கள் இல்லாதது போன்றவற்றை ஒரு செயலியுடன்‌ இணைத்ததன் மூலம்,‌ இந்த முறைசாரா வேலைமுறையின் கூறுகளை ஒரு நிறுவனம் என்கிற கட்டமைப்பிற்குள் கொண்டுவந்து, ஒழுங்கற்ற இந்தப் போக்கை நிறுவனமயப்படுத்தியதைத் தவிர இந்தக் கிக் பொருளாதாரம் வேறு எதையும் சாதித்துவிடவில்லை.

நிலையற்ற தன்மை என்பது நவீன வேலைவாய்ப்பின் மையக்கூறாக உருவெடுத்துவரும் வேளையில், பணிப் பாதுகாப்பின்மை என்பது இயல்பாக்கப்பட்டுவிட்டது. ஆண்டுதோறும் எண்ணிக்கையில் விரிவடைந்து வரும் இந்த நவீன பாட்டாளிகளின் பணிப் பாதுகாப்பும் சமூகப் பாதுகாப்பும் சுருங்கிக்கொண்டே செல்லும் என்பதில் ஐயமில்லை.

கிக் தொழிலாளர்களுக்குக் காப்பீடுகளை வழங்குவதாகப் பல நிறுவனங்கள் கூறினாலும், அவற்றைப் பெறுவதில் பல நடைமுறை சிக்கல்கள் நீடிக்கின்றன என்றும் நிதி சார்ந்த வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறான நிறுவனங்கள் கிக் தொழிலாளர்களை, “தொழிலாளர்” என்று அங்கீகரிக்காமல் “ஓட்டுநர்கள், பயனர்கள் மற்றும் பங்குதாரர்கள்” என்று வகைப்படுத்துவதால், இவர்கள் தொழிலாளர் நலச் சட்டத்தின் கீழ் பலன்களைப் பெறும் தகுதியிலிருந்து சட்டப்பூர்வமாக வெளியேற்றப்படுகிறார்கள்.

புதிய நான்கு தொழிலாளர் சட்டத்தின் ஓர் அங்கமான “சமூகப் பாதுகாப்புக் குறியீடு 2020”-இல், கிக் தொழிலாளர்களுக்குச் சட்டப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்தச் சட்டத்தில் கிக் தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்பு, ஊதியம் உள்ளிட்டவை பற்றிய குறிப்பான தகவல்கள் எதுவும் இல்லாமல் மேலோட்டமாகவே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், “இ-ஷ்ரம்” (e-Shram) என்ற அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கான இணையதளத்தில் பதிவு செய்பவர்கள் மட்டுமே இந்தச் சட்டப் பலன்களைப் பெற முடியும் என்ற விதியானது, அரசு நடத்தும் டிஜிட்டல்மயமாக்கல் என்னும் கண்துடைப்பு நாடகமே அன்றி வேறில்லை. எவ்வாறாயினும், கார்ப்பரேட்டுகளுக்குச் சேவகம் செய்வதையே தனது தலையாயக் கடமையாகக் கொண்ட‌ மோடி தலைமையிலான பாசிச அரசு இந்த அம்சங்களை நடைமுறைப்படுத்துமா என்பதும் கேள்விக்குறிதான்.

தனிநபர்களிலிருந்து கூட்டு சக்தியாக
கிக் சங்கப் போராட்டங்கள்

தங்களைத் தனிமைப்படுத்தப்பட்ட உதிரிகளாகக் கருதிய நிறுவனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, கிக் தொழிலாளர்கள் தங்களை ஒரு வலிமையான “கூட்டு சக்தியாக” ஒன்றிணைத்து நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

1) கிக் தொழிலாளர்களை “பங்குதாரர்கள்” என ஏமாற்றுவதைக் கைவிட்டு, அவர்களைச் சட்டப்பூர்வமான “தொழிலாளர்களாக” அங்கீகரித்து, அவர்களுக்கெனத் தனியான ஒன்றிய சட்டத்தை இயற்ற வேண்டும். 2) அடிப்படை ஊதியத்தை உயர்த்துவதோடு, ஆர்டரை இரத்து செய்வதற்கான இரட்டை அபராதங்கள், நியாயமற்ற கமிஷன் பிடித்தங்கள் மற்றும் முன் அறிவிப்பின்றி ஐ.டி-யை முடக்குவது போன்ற எதேச்சதிகார நடவடிக்கைகளைத் தடை செய்ய வேண்டும். 3) மனிதத் தலையீடற்ற தானியங்கி வேலை ஒதுக்கீடு, அபாயகரமான நேர வரம்புகள் (10 நிமிட டெலிவரி) மற்றும் தொழிலாளர்களை மனதளவில் சிதைக்கும் ரேட்டிங் முறைகளை உடனடியாகக் கைவிட வேண்டும். 4) மருத்துவ மற்றும் மாதவிடாய் அவசர நிலைக்கான சிறப்பு வசதிகள் (SOS / Red Button), பாலியல் வன்கொடுமைத் தடுப்புக்கான உள்குழுக்கள் மற்றும் வெளிப்படையான குறைதீர்க்கும் மையங்களை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஜனவரி 1-ஆம் தேதி “செயலி சார்ந்த போக்குவரத்துத் தொழிலாளர்களின் இந்தியக் கூட்டமைப்பு” (IFAT) ஒருங்கிணைத்த போராட்டத்தில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட கிக் தொழிலாளர்கள் பங்கேற்றனர். இதுகுறித்துக் கருத்து தெரிவித்த சொமாட்டோவின் இணை நிறுவனர் தீபேந்தர் கோயல், “போராட்டத்திற்கான அழைப்புகளையும் தாண்டி சொமாட்டோ மற்றும் பிளிங்க்இட்-இன் விற்பனைகள் சாதனை அளவைத் தொட்டுள்ளன. ‘சமூக விரோதிகளைக்’ கட்டுப்படுத்துவதற்கு உள்ளூர் போலீசுதுறை எங்களுக்குத் துணைபுரிகிறது” என்று திமிர்த்தனமாகப் பேசியுள்ளார். இதன் மூலம், அரசுக்கும் கார்ப்பரேட்டுகளுக்குமான கள்ளக்கூட்டு அம்பலமாகிறது.

மேலும், “அடிப்படையில் நியாயமற்றதாக விளங்கும் எந்த ஒரு வேலை முறையும் இவ்வளவு பேரை ஈர்க்கவும் நீடிக்க வைக்கவும் முடியாது” என்று கூறியுள்ளார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக “தெலுங்கானா கிக் மற்றும் டிஜிட்டல் தளத் தொழிலாளர் சங்கம்” (TGPWU), “புத்தாண்டு தினத்தன்று 75 லட்சம் ஆர்டர்கள் டெலிவரி செய்யப்பட்டன என்றால், அதற்கு ஒருநாள் கூலியைக் கூட இழக்க முடியாத தொழிலாளர்களின் பொருளாதார நெருக்கடிதான் காரணமே தவிர, இந்தக் கட்டமைப்புத் தொழிலாளர்களை நியாயமாக நடத்துவது அல்ல” என்று கூறியுள்ளது.

ஏற்கெனவே கிக் தொழிலாளர்கள் முன்னெடுத்த போராட்டத்தால் நட்டமடைந்த முதலாளிகள், அவர்களைப் போராட்டத்தில் ஈடுபடாமல் தடுக்கும் வகையில் பல சதி வேலைகளை மேற்கொண்டுள்ளனர். அதன் ஓர் அங்கமாகத்தான், ஆர்டரை இரத்துச் செய்வதற்கும் செயலி கணக்கிலிருந்து வெளியேறிவிட்டு (லாக் அவுட்) மீண்டும் நுழைவதற்கும் இந்நிறுவனங்கள் பல்வேறு தடைகளை விதித்துள்ளன.

எனினும், ஜனவரி 26-ஆம் தேதி நாடு முழுவதுமுள்ள கிக் தொழிலாளர்கள் பலரும் தங்கள் செயலிகளை முடக்கி வைத்து இணையவழிப் போராட்டத்தை (Digital Strike) நடத்தினர். இதனையடுத்து பிப்ரவரி 3-ஆம் தேதி, நாடுதழுவிய அளவில் “கிக் மற்றும் டிஜிட்டல் தளச் சேவை தொழிலாளர்கள் சங்கம்” (GIPSWU) போராட்டத்தை முன்னெடுத்தது.

அதற்கடுத்ததாக, பிப்ரவரி 7 அன்று டி.ஜி.பி.டபிள்யு.யு., ஐ.எஃப்.ஏ.டி. மற்றும் ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட முக்கிய கிக் தொழிலாளர் சங்கங்கள் ஒன்றிணைந்து நாடுதழுவிய போராட்டத்தை நடத்தின. இலட்சக்கணக்கான கார், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் டெலிவரி தொழிலாளர்கள் தங்களின் தன்னுரிமையை நிலைநிறுத்தும் வகையில், தொடர்ந்து ஆறு மணி நேரம் செயலிகளிலிருந்து ஒட்டுமொத்தமாக வெளியேறி (Log-off) புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

உழைப்பவர்களின் இந்த அசுரத்தனமான ஒருங்கிணைப்பால், பெருநகரங்கள் முழுவதும் போக்குவரத்து மற்றும் உணவு டெலிவரி சேவைகள் முற்றிலும் ஸ்தம்பித்து, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கிக் பொருளாதாரமே சில மணி நேரங்களில் ஆட்டம் கண்டது. “இதன் மூலம் கிக் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அனைத்தும் நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்பதை அரசு, செயலி சார்ந்த நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தெரிவிக்க முற்படுகிறோம்” என்று சங்கங்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

போராட்டத்தின் விளைவு

இந்தத் தொடர் போராட்டங்களின் முதற்கட்ட வெற்றியாக, 10 நிமிட டெலிவரி விளம்பரங்களைக் கைவிடுமாறு நிறுவனங்களுக்கு ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் சில தளங்களும் தங்கள் விளம்பர வாசகங்களை மாற்றிக்கொண்டன. இருப்பினும், தொழிலாளர்களைக் கட்டுப்படுத்தும் அல்காரிதத்தின் ஆதிக்கத்தையோ, அதிவேகக் கட்டமைப்பையோ அரசு முழுமையாகத் தடை செய்யவில்லை. மேலும், தொழிலாளர்களின் மையமான கோரிக்கையான சட்டப்பூர்வ அங்கீகாரம் குறித்துக் கள்ளமௌனம் சாதித்து வருகிறது மோடி தலைமையிலான கார்ப்பரேட் நல அரசு.

அந்தவகையில், அறிவிக்கப்பட்டுள்ள சில மாற்றங்கள், தொழிலாளர்களின் ஒற்றுமைக்குக் கிடைத்த தொடக்கநிலை வெற்றி மட்டுமே; உண்மையான சட்டப்பூர்வ தொழிலாளர் உரிமைகளை வென்றெடுக்க, இந்த ஒருங்கிணைந்த போராட்டம் இன்னும் வீரியமாகத் தொடர வேண்டியுள்ளது.

நம் முன்னுள்ள கடமை

கிக் தொழிலாளர்களின் பிரச்சினை என்பது நிதி சார்ந்தது மட்டுமல்ல; உடல் நலம், மனநலம் சார்ந்த கொடிய பாதிப்புகளையும் அவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். பணியில் ஏற்படும் சவால்கள் அனைத்தையும் கிக் தொழிலாளர்களின் தலையில் இறக்கிவிட்டு, லாபத்தை மட்டும் பிழிந்தெடுக்கும் ஏகாதிபத்திய உழைப்புச் சுரண்டலானது, மிக ‘நவீன’ வடிவத்தில் மேற்கொள்ளப்படுகிறது. முதலாளித்துவத்தின் பிரதிநிதிகளான பிரதான அரசியல் கட்சிகள் எவையும் இதனை எதிர்த்துக் கேள்வி கேட்கப் போவதில்லை.

அந்தவகையில், அமைப்பு சாரா நவீன பாட்டாளிகளான கிக் தொழிலாளர்களின் அமைப்பாக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளால் மட்டுமே, அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்க முடியும் என்பதை நடந்துமுடிந்த வேலைநிறுத்தப் போராட்டங்கள் நமக்கு அழுத்தமாக உணர்த்தியுள்ளன. எனவே, மனித உரிமை ஆர்வலர்கள், தொழிலாளர் நல அமைப்புகள், உழைக்கும் வர்க்கத்தினர், ஜனநாயக சக்திகள் மற்றும் புரட்சிகர அமைப்புகள் அனைவரும் கிக் தொழிலாளர்களின் இந்த உரிமைப் போராட்ட அனுபவங்களைக் கையில் கொண்டு, டிஜிட்டல் முதலாளித்துவத்திற்கு எதிரான அவர்களின் அடுத்தகட்டப் பயணத்திற்கும் தொடர்ந்து துணைநிற்போம்!


ஆதினி

(புதிய ஜனநாயகம் – மார்ச் 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க