மோடி ஆட்சியில் முஸ்லிம்களுக்குத்தான் ஆபத்து என்ற கருத்து தவறானது என்பதை எழுச்சி பெற்ற ஹிந்துக்களின் மண்டையில் அடித்துப் புரியவைத்தவர் – வேறு யார் திருவாளர் நரேந்திர தாமோதரதாஸ் மோடிஜிதான்.

சுதேசி ஜாக்ரன் மஞ்ச் என்றொரு அமைப்பை வைத்துக்கொண்டு, சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்ப்பதாகவும், வால் மார்ட்டை எதிர்ப்பதாகவும் வணிகர்களுக்குப் பம்மாத்துக் காட்டிக் கொண்டிருந்தது சங்க பரிவாரம். தற்போது மோடி ஆட்சியின் கீழ் ஆன் லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டை வாங்கியதன் மூலம் இந்திய சில்லறை விற்பனை சந்தையை விழுங்க முனைந்திருக்கிறது வால்மார்ட்.

அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம், இந்தியாவைச் சேர்ந்த இ-வணிக (e-commerce) நிறுவனமான பிளிப்கார்டின் 77 சதவீத பங்குகளை 16 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு கையகப்படுத்தியுள்ளது; ரூபாய் மதிப்பில் ஒரு லட்சத்து நான்காயிரம் கோடி. சமீபத்திய ஆண்டுகளில் இணையவழி நுகர்வுச் சந்தையின் பரப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்திய இ-வணிகச் சந்தையைப் பொறுத்தவரை அமெரிக்காவைச் சேர்ந்த அமேசானுக்கும், பிளிப்கார்ட்டுக்கும் இடையே தான் பிரதானமாக போட்டி நிலவி வந்தது.

தற்போது பிளிப்கார்ட் நிறுவனத்தை அமெரிக்க வால்மார்ட் கையகப்படுத்தியுள்ள நிலையில் இந்தியாவின் இ-வணிகச் சந்தை முழுமையாக இரண்டு அமெரிக்க நிறுவனங்களின் கைகளில் விழுந்துள்ளது. இவ்வாறு இ-வணிகச் சந்தையில் இரண்டு அமெரிக்க நிறுவனங்களின் ஏகபோகத்திற்கு அனுமதிப்பது இந்தியாவை  டிஜிடல் காலனியாக மாற்றும் என பொருளாதார நோக்கர்கள் கருதுகின்றனர். இதில் உண்மை இல்லாமல் இல்லை. 2017-ஆம் ஆண்டுக் கணக்கின்படி இந்தியாவின் சில்லறை வர்த்தகத் துறையின் மொத்த மதிப்பு 672 பில்லியன் டாலர் (43.69 லட்சம் கோடி) என முதலாளிகள் சங்கமான அசோசாம் மதிப்பிட்டுள்ளது. இத்துறை 2020இல் 1.1 ட்ரில்லியன் டாலர்களாக உயரும் எனவும் அசோசாம் கணித்துள்ளது.

எப்.எம்.சி.ஜி (FMCG – Fast Moving Consumer Goods) எனப்படும் நுகர் பொருட்களின் வர்த்தகமே இந்திய சில்லறை வணிகத்துறையில் பெரும் பங்கு வகிக்கிறது. மேல் நடுத்தர மற்றும் மேட்டுக்குடி வர்க்கத்தினரின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றமும், அவர்கள் பொருட்களை நுகர்வதில் ஏற்பட்டுள்ள மாற்றமும் இச்சந்தையின் வளர்ச்சியை பாரிய அளவில் தூண்டியுள்ளது. குறிப்பாக இணையப் பரவலும், திறன்பேசிகளின் (Smartphones) பயன்பாடும் அதிகரித்துள்ள நிலையில் ஆடம்பர நுகர் பொருட்கள் உள்ளிட்டு அனைத்து அத்தியாவசிய நுகர்பொருட்கள் வரை இணையம் மூலமே (இ-வணிகம்) வாங்கும் பழக்கமும் அதிகரித்துள்ளது.

2017-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ராஜ்யசபைக்கு மத்திய அமைச்சர் சி.ஆர்.சவுத்ரி அளித்த எழுத்துப்பூர்வ பதில் ஒன்றில் 2016-17 நிதியாண்டில் இ-வணிகச் சந்தையின் மதிப்பு 33 பில்லியன் டாலர் (2.15 லட்சம் கோடி) எனக் குறிப்பிட்டுள்ளார். இந்திய இ-வணிகச் சந்தை அபரிமிதமாக வளர்ந்து வருவதால் 2026ம் ஆண்டு வாக்கில் 200 பில்லியன் டாலராக (13 லட்சம் கோடி) அதிகரிக்கும் என மோர்கன் ஸ்டேன்லி என்கிற அமெரிக்க வங்கி மதிப்பிட்டுள்ளது. ஏற்கனவே சில்லறை வர்த்தகத்தை மையப்படுத்தப்பட்ட அளவில் ரிலையன்ஸ் உள்ளிட்ட தரகு முதலாளிகள் கும்பல் கட்டுப்படுத்தி வரும் நிலையில், இ-வணிகத்தின் வளர்ச்சியும் அதை அமெரிக்க நிறுவனங்கள் கைப்பற்றுவதுமான இப்போக்கு நாட்டை மொத்தமாக டிஜிடல் காலனியாக்கும் பாதையை நோக்கியே இட்டுச் செல்கின்றது.

இந்தியச் சந்தையில் வால் மார்ட் நுழைந்தால் மிக மலிவான சீனப்பொருட்கள் உள்ளே நுழைந்து விடும் என்றும், விவசாயிகள், பொருள் உற்பத்தியாளர்கள் ஆகியோரின் கொள்முதல் விலையைக் குறைத்து அவர்களை வால்மார்ட் கொடூரமாகச் சுரண்டும் என்றும் தினமணியே தனது தலையங்கத்தில் புலம்புகிறது.

உற்பத்தியாளர்களை ஒட்டச் சுரண்டுவது, சில்லறை வணிகர்களை அழிப்பது என்ற வர்த்தக ஏகபோகம் இதன் ஒரு விளைவு மட்டுமே. நுகர்வோரின் அன்றாட வாழ்க்கை, அவர்களது சிந்தனை, அவர்களது தெரிவுகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது இப்பிரச்சினையின் இன்னொரு பக்கமாகும்.

கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா எனும் நிறுவனம் முகநூல் பயனர்களின் இணையச் செயல்பாடுகள் குறித்த மின்தரவுகளைக் களவாடி அவற்றைப் பகுப்பாய்வு செய்து பயனர்களின் சிந்தனைப் போக்குகளைக் கண்டறிந்து அதன் மூலம் தேர்தல் முடிவுகளைத் தீர்மானித்த விவகாரம் கடந்த மாதங்களில் மேற்குல ஊடகங்களில் பரபரப்பாக அலசப்பட்டது. முகநூல் மட்டுமின்றி வாட்சப், டிவிட்டர், கூகுள் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் திறன்பேசிகளிலும் மக்களின் செயல்பாடுகளை அமெரிக்கா வேவு பார்த்ததையும் இதற்காக மின்தரவுகளை சட்டப்பூர்வமாகவே களவாடியதையும் எட்வர்ட் ஸ்னோடன் அம்பலப்படுத்தினார்.

அமேசான் போன்ற நிறுவனங்கள் தங்களுடைய இணையதளம் மூலம் பொருட்கள் வாங்குகிறவர்களின் வகை மாதிரிகளை (pattern) மின்தரவுகளின் மூலம் கண்டறிகின்றனர். உதாரணமாக, ஆன்லைன் மூலம்  பெண் போலிக் ஆசிட் மாத்திரை வாங்கினால், அந்தப் பெண்ணுக்கு அடுத்த ஆறேழு மாதங்களில் குழந்தை பிறக்கவுள்ளது என்பதை அனுமானித்துக் கொள்கின்றனர். குழந்தை பிறந்தவுடன் அவருக்கு குழந்தைகளுக்கான சோப்பு, டயப்பர் போன்ற பொருட்களின் விளம்பரங்கள் அவரது உலாவியில் (Browser) தெரியும். இது மிக மேலோட்டமான வியாபார உத்தி. சமீப வருடங்களில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சிகள் மேலும் அதிக சாத்தியங்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.

மின்தரவுப் பகுப்பாய்வில் (Data Analytics) ஏற்பட்டுள்ள முன்னேற்றமானது மக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் மின்தரவுகளை 360 டிகிரி கோணத்தில் பகுத்தாய்ந்து அவர்களின் தனிப்பட்ட தீர்மானங்களையும் கூட கண்டறியும் சாத்தியத்தை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக, ஒருவர் வாங்கும் பொருட்களின் மதிப்பு அல்லது ஒருவர் தேடும் குறிப்பான பொருட்கள் அல்லது புத்தகங்கள் அல்லது குறிப்பிட்ட வணிகக் குறியீடு (Brand) உள்ளிட்டவற்றைக் கொண்டு அவர் சொந்த வாழ்க்கையிலோ சமூக வாழ்க்கையிலோ எம்மாதிரியான தீர்மானங்களை எடுக்கும் சாத்தியங்கள் உள்ளன என்பதைக் கண்டறிய முடியும். (மேலும் வாசிக்க : செயற்கை நுண்ணறிவு – நவீன அடிமை யுகம்)

இத்தொழில்நுட்பங்களின் அபாயத்தை அறிந்துள்ள ஐரோப்பிய நாடுகள், இணைய தொழில்நுட்பத்தில் ஈடுபட்டுள்ள நுறுவனங்கள் மின்தரவுகளைக் கையாளவதன் மீது பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் மின்தரவுப் பாதுகாப்புக்கான ஒழுங்குமுறைச் சட்டம் (General Data Protection Regulation)  ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலோ இதுவரை அப்படியான சட்டங்கள் ஏதுமில்லை என்பதோடு அது குறித்த அக்கறையும் மோடி அரசுக்கு இல்லை.

ஹேக்கர்கள் ஆதார் விவரங்களைத் தொடர்ந்து இணையதளங்களில் கசியச் செய்து வரும் நிலையில், பல்வேறு சந்தர்பங்களில் அரசு இணையதளங்களிலேயே ஆதார் விவரங்கள் ‘அதிகாரப்பூர்வமாக’ கசிந்துள்ளன. உச்சநீதிமன்றத்தில் ஆதாரைக் கட்டாயமாக்குவதை எதிர்த்து நடந்து வரும் வழக்கின் போது மத்திய அரசின் சார்பில் வாதாடிய கே.கே வேணுகோபால், ஆதார் விவரங்கள் ஐந்தடி அகலமும், பதிமூன்றடி உயரமும் கொண்ட சுவர்களைக் கொண்ட அறைகளுக்குள் பாதுகாப்பாக உள்ளன என்று பாமரத்தனமான விளக்கம் ஒன்றைக் கொடுத்தார்.

மின்தரவுகள் திருட்டை சாதாரண செயின் அறுப்புக் கேசைப் போல மத்திய அரசின் வழக்கறிஞர் குறிப்பிட்டு அளித்த விளக்கத்தை எந்தக் கேள்விகளும் இன்றி மாட்சிமை தாங்கிய உச்சநீதிமன்ரமும் கேட்டுப் பதிவு செய்து கொண்டது. குடிமக்களின் உயிர்களையே சல்லிசாகக் கருதும் இந்திய அரசுக்கு அவர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பற்றியோ, தனியுரிமை குறித்தோ மயிரளவுக்கும் குறைவாகவே அக்கறை இருக்கும் என்பதில் நமக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் போது ரொக்கப் பணப்பரிவர்த்தகளை ஒழிப்பதும், இணையத்தின் மூலமான பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதுமே தமது அரசின் கொள்கை என்று அறிவித்துக் கொண்டார்கள். அதற்கு ஏதுவாக அரசின் வர்த்தகக் கொள்கைகள் துவங்கி ஜி.எஸ்.டி வரை சில்லறை வர்த்தகத்தை ஒழித்துக் கட்டுவதையும் நுகர்பொருள் சந்தையை மையப்படுத்துவதையுமே நோக்கமாக கொண்டுள்ளன. ஒருபுறம் சில்லறை வணிகச் சந்தையை அமெரிக்க நிறுவனங்களுக்கு தாரை வார்த்துள்ள மோடி அரசு, இன்னொரு புறம் மக்களின் தனிப்பட்ட விவரங்களையும் மின்தரவுகளின் வடிவில் தங்கத் தாம்பாளத்தில் வைத்து அன்னியர்களுக்கே படையல் வைக்கவும் துணிந்துள்ளது.

– வினவு செய்திப் பிரிவு.

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க