ரோப்பாவில்  பணிபுரியும் அமேசான் ஊழியர்கள், அந்நிறுவனத்தை எதிர்த்து அமேசான் பிரைம் தினத்தன்று  வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அமேசானை எதிர்த்துப் போராடும் ஐரோப்பிய தொழிலாளர்கள்

இணைய வர்த்தக ஜாம்பவனான அமேசான் நிறுவனம் உலகம் முழுவதும்  ஆன்லைன் ஷாப்பிங் – இணைய வர்த்தகத் துறையில் கோலோச்சி வருகிறது. வருடத்தில் சில குறிப்பிட்ட நாட்களில் ’முதன்மை தினம் – Prime Day‘  என்ற ஒரு சிறப்புச் சலுகையை அறிவித்து தள்ளுபடி விலையில் பொருட்களை விற்பனை செய்து இலாபத்தைக் குவிக்கிறது. துணிக்கடைகளுக்கு ஒரு ஆடிக்கழிவு, நகைக்கடைகளுக்கு ஒரு அட்சய திரிதியை போல அமேசானுக்கும் ஒரு பிரைம் தினத்தை வைத்திருக்கிறார்கள்.

ஜெர்மனியில் செயல்பட்டுவரும்  அமேசான் நிறுவனத்தின் ஆறு சேமிப்புக் கிடங்குகளில் வேலைபார்த்து வரும் ஊழியர்கள், தங்களுக்குக் கூலி உயர்வு, மருத்துவ வசதிகள் போன்றவற்றை செய்து தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே கோரிக்கைகளுக்காகப் போராடி வரும் ஸ்பெயின், போலந்து நாடுகளில் வேலை பார்க்கும் அமேசான் தொழிலாளர்களை ஆதரித்து செவ்வாய்க்கிழமை(17.07.2018)  அன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமேசான்
அமேசானை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் தொழிலாளர்கள்

ஜெர்மனி நாட்டில் ஏறக்குறைய 16,000 ஊழியர்களைக் கொண்ட அமேசான் நிறுவனம் வெர்டி எனப்படும் தொழிற்சங்கத்தின் கோரிக்கைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் புறக்கணித்ததே இந்தப் போராட்டத்திற்கு வழிவகுத்துள்ளது. வெர்டி தொழிற்சங்க செய்தித்தொடர்பாளர் ஸ்டெபானி நட்சென்பெர்கர் கூறுகையில் ‘ எங்கள் கோரிக்கை மிக எளிமையானது; அமேசான் நிறுவனம் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது; ஆனால் தொழிலாளிகளுக்கான சம்பளம், மருத்துவ வசதி போன்றவற்றை படிப்படியாகக் குறைத்து வருகிறது; இதற்குத் தீர்வு காணவேண்டுமென்பதே எங்களின் கோரிக்கை’ என்கிறார்.

ஸ்பெயின் நாட்டில் வேலை பார்த்து வரும் 2000 அமேசான் நிறுவன ஊழியர்கள் கடந்த திங்கட்கிழமை(16.07.2018) தொடங்கி மூன்று நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமேசான் நிறுவனமோ இதை மறுத்து அப்படி ஒன்றும் மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெறவில்லை என சமாளித்து வருகிறது.

போலந்து நாட்டில் நடைபெற்று வரும் போராட்டத்தில் வேலைக்குச் சென்று கொண்டே, ஆனால் குறைந்தபட்ச வேலைகளை மட்டுமே செய்து தங்களது போராட்டத்தைத் தொடர்கின்றனர். இதற்கெல்லாம் காரணங்கள் இல்லாமல் இல்லை. அமேசான் நிறுவனத் தலைவரான ஜெஃப் பெசோஸ்-இன் வருவாய் மதிப்பு $150 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டிப் போய் கொண்டிருக்கிறது. மேலும் இவர்தான் தற்போது உலகிலேயே பணக்கார நபர் என்கிறது புளூம்பெர்க் பில்லியனர் என்கிற இணையதளத்தின் பட்டியல். Bloomberg Billionaires Index

இது மட்டுமல்லாமல் அமேசான் நிறுவன வர்த்தக மதிப்பு $888 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்து, ஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்ததாக, உலகின் இரண்டாவது பணக்கார நிறுவனமாக உள்ளது.

அமேசான்
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்

குறைந்தபட்ச தொழிலாளர் சட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ள ஐரோப்பாவுக்கே இந்த நிலைமையென்றால், இந்தியா போன்ற நாடுகளில் வேலை செய்யும் அமேசான் ஊழியர்களின் நிலை பற்றி விளக்குவதற்கு எதுவுமில்லை.

இவ்வளவு வருமானம் இருந்தும், அமேசான் நிறுவனத்தால் தொழிலாளர்களின் குறைந்தபட்ச கோரிக்கைகளைக் கூட ஏன் நிறைவேற்ற முடியவில்லையென்றால் அதற்குப் பெயர்தான் இலாபவெறி.

  • வினவு செய்திப் பிரிவு

மேலும் படிக்க:
Amazon workers in Europe go on strike during Prime Day

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க