”மே தினத்தை போராட்ட தினமாக அனுஷ்டிப்பதற்கு பதிலாக கேளிக்கை மற்றும் ஓய்வு தினமாக மாற்றுவதன் மூலம் பல கட்சிகளின் சீர்திருத்த தலைவர்கள் மே தினத்தின் முக்கியத்துவத்தை சீர்குலைக்க முயற்சித்தார்கள். சீர்திருத்த தலைவர்களுக்கு மே தினம் பார்க்கில் விளையாடுவதற்கும், கலை நிகழ்ச்சிக்குமான உலக விடுமுறை நாளாகும். ”
– இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட வாசகம் இதுவென்றால், நம்ப முடிகிறதா? இன்றைய நடப்போடு இவை அப்படியே பொருந்திப்போகிறதென்றால், வார்த்தைகளின் தீர்க்கதரிசனம் என்று மெய்சிலிர்ப்பதா? இல்லை, தொழிலாளி வர்க்கத்தின் தோல்வி இதுவென்று வெட்கித் தலைகுனிவதா?
வேலைக்கேற்ற ஊதியமில்லை; வேலை உத்திரவாதமில்லை; எட்டுமணிநேர வேலை என்பது எங்குமில்லை; கொத்தடிமைகளைப்போல தொழிலாளர்கள் சுரண்டப்படுவதும், தொழிலாளி வர்க்கம் போராடிப்பெற்ற உரிமைகள் ஒவ்வொன்றாய் பறிக்கப்பட்டு வருவதுமான மறுகாலனியாக்கச் சூழலில் மே தினத்தின் வரலாற்றை அறிந்துகொள்வதும், உரிமைக்கானப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகிறது, இந்நூல்.
அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம் என கண்டதுக்கெல்லாம் ஒரு தினம் அனுசரிக்கப்படுவதைப் போன்றதல்ல, தொழிலாளர் தினம். 1886ஆம் ஆண்டு சிகாகோ நகரில் எட்டுமணி நேர வேலைக்காகப் போராடிய தொழிலாளர்கள் இரத்தச் சகதியில் மூழ்கடிக்கப்பட்டும், முன்னணியாளர்கள் தூக்கிலிடப்பட்டும் கொல்லப்பட்டதன் நினைவாகத்தான் மேதினம் கடைபிடிக்கப்படுகிறதென்று பொதுவில் நாம் அறிந்திருப்போம்.
அதற்கு முன்பும் பின்புமான வரலாற்றுப் பின்புலத்தில் நின்று, அதன் வளர்ச்சிப்போக்கை சித்திரம் போல கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது, இச்சிறுநூல்.
‘அதிகாலை முதல் அந்திசாயும் வரை’ என்பதுதான் அப்போதெல்லாம் வேலைநாள். இதனால் ஏற்பட்ட மனக்குமுறல்களை அமெரிக்கத் தொழிலாளர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே வெளிக்காட்டினர். பதினாறு, பதினேழு ஏன் பதினெட்டு மணிநேர வேலை என்பதெல்லாம் அப்போது சாதாரண விஷயங்கள்.
1806-ம் ஆண்டிலேயே அமெரிக்காவின் பிலடெல்பியா நகரத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்… குறைந்த வேலை நேரத்துக்கான போராட்டம் அமெரிக்காவில் மட்டும் நிகழவில்லை. முதலாளித்துவத்தின் கீழ் தொழிலாளர்கள் சுரண்டப்பட்ட எல்லா வளரும் நாடுகளிலும் இப்போராட்டங்கள் நிகழ்ந்தன.
1877-ல் மிகப் பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் பத்தாயிரக்கணக்கில் சாலை, ரெயில்வே, மற்றும் உருக்குத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அரசாங்கத்தையும் நகராட்சியையும் எதிர்த்து தீவிர போர்க்குணத்தோடு போரிட்டனர். இவர்களுக்கெதிராக ராணுவம் ஏவப்பட்டது. தொழிலாளர்கள் தொடர்ந்து போராடினர்.
1884-ல் அமெரிக்காவில் 8 மணி நேர இயக்கத்தின் போது வெடித்த போராட்டங்கள்தான் மே தினம் உருவாவதற்கு நேரடியான காரணமாய் அமைந்தன.
சிக்காகோவில் மே முதல் நாள் வேலை நிறுத்தம் மிகத் தீவிரமாக இருந்தது. அப்போது இடதுசாரி தொழிலாளர்கள் இயக்கத்தின் ஒரு மையமாக சிக்காகோ திகழ்ந்தது.
மே முதல் நாள் சிக்காகோ, நகரத் தொழிலாளர் இயக்க ஸ்தாபனம் அழைப்பு கொடுத்ததின் பேரில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் கருவிகளை கீழே வைத்துவிட்டு தெருவுக்கு இறங்கிய மாபெரும் காட்சியைக் கண்டது. இந்த ஆர்ப்பாட்டம் முன் எப்போதுமில்லாத வகையில் மாபெரும் வர்க்க ஒற்றுமையாக விளங்கியது… 1886 மே முதல் தினம் உச்சக் கட்டத்தையடைந்த 8 மணி நேர இயக்கமானது, அமெரிக்க தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட வரலாற்றில் ஒரு மகோன்னத அத்தியாயத்தை உருவாக்கியது.
அதே நேரத்தில் தொழிலாளர்களின் விரோதிகள் வெறுமனே இருக்கவில்லை. முதலாளிகள் மற்றும் அரசின் இணைந்த சக்தி, ஊர்வலம் சென்ற சிக்காகோ தொழிலாளர்களைக் கைது செய்தது. போர்குணமிக்க தலைவர்களை அழித்தொழிப்பதன் மூலம் சிக்காகோ நகரின் தொழிலாளர் இயக்கத்தையே நசுக்கி விடலாம் என கண்டார்கள். மே 3-ம் நாள் வேலை நிறுத்தம் செய்த மெக்கார்மிக் ரீப்பர் வொர்க்ஸ் தொழிலாளர்களின் கூட்டத்தில் நிகழ்ந்த போலிஸின் காட்டு மிராண்டித்தனமான அடக்கு முறையை எதிர்த்து மே 4-ஆம் நாள் வைக்கோல் சந்தை சதுக்கம் என்றழைக்கப்படும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த கூட்டம் அமைதியாக நடந்தது. போலீசு மீண்டும் கூடியிருந்த தொழிலாளர் மீது தாக்குதலைத் தொடுக்க … கூட்டத்தில் எறியப்பட்ட ஒரு குண்டு ராணுவ அதிகாரி ஒருவனைக் கொன்றது. இதன் விளைவாக எழுந்த ஒரு மோதலில் ஏழு போலீஸ்காரர்களும் நான்கு தொழிலாளர்களும் கொல்லப்பட்டனர். வைக்கோல் சந்தை சதுக்கத்தில் ஏற்பட்ட ரத்த ஆறும், போர்க்குணமிக்க சிக்காகோ தொழிலாளர் தலைவர்களை சிறைக்கும், தூக்கு மேடைக்கும் அனுப்பியதும்தான் சிக்காகோ நகர முதலாளிகளின் பதிலாயிருந்தன. 1886 ஆண்டின் பிற்பாதி முழுவதும் முதலாளிகளின் திட்டமிட்ட கொடூரத் தாக்குதல் தொடர்ந்தது.
1889-ம் ஆண்டு நடைபெற்ற பாரிஸ் மாநாடு கீழ்க் கண்ட தீர்மானத்தை நிறைவேற்றியது. ‘’எல்லா நாடுகளிலும் எல்லா நகரங்களிலுமுள்ள உழைக்கும் மக்கள் 8 மணி நேரத்தை சட்டபூர்வமாக்கக் கோரி அரசாங்கத்திடமும், நிர்வாகத்திடமும் போராட வேண்டும். இதை உலகம் தழுவிய ஆர்ப்பாட்டமாக நடத்தவும், பாரிஸ் மாநாட்டு முடிவுகளை நிறைவேற்றக் கோரியும் இம்மாநாடு தீர்மானிக்கிறது. 1888 டிசம்பரில் செயிண்ட் லூயிஸில் கூடிய அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு இத்தகைய ஆர்ப்பாட்டத்திற்கு 1890 மே முதல் நாளை ஏற்கனவே தேர்ந்தெடுத்து விட்டதால் அதே நாள் சர்வதேச அளவிலான ஆர்ப்பாட்டம் செய்யவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எனவே அந்த குறிப்பிட நாளில் எல்லா நாட்டு தொழிலாளர்களும் அவர்களின் நாட்டு சூழ்நிலைக்கேற்ப இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என்று மாநாடு அறிவிக்கிறது.’’ இதனைத்தொடர்ந்தே ஐரோப்பா, ஜெர்மனி, அமெரிக்கா என பல்வேறு நாடுகளில் தொழிலாளர் போராட்டங்கள் விரிவடைந்தன.
”உழைக்கும் வர்க்கத்தின் பிரதான விருப்பம் சமூக மாற்றத்தின் மூலம் வர்க்கப் பாகுபாடுகளை அழித்தொழிப்பது, மற்றும் உலகம் முழுவதும் எல்லா மக்களுக்கும் அமைதியை ஏற்படுத்துவது ஆகும். மே தின ஆர்ப்பாட்டங்கள் எட்டு மணி நேர வேலைநாளுக்காக மட்டுமல்லாமல் மேற்கூறிய விஷயங்களுக்கும் பயன்பட வேண்டும்’’என்கிறார் எங்கெல்ஸ்.
வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுவதற்கெதிராக, உரிமைகள் மறுக்கப்படுவதற்கெதிரானப் போராட்டங்கள் நிறைந்த இன்றையச் சூழலில் தொழிலாளி வர்க்கத்தின் முன்னுள்ள வரலாற்றுக்கடமையை நினைவூட்டுகிறது, இந்நூல்.
நூல்: மே தின வரலாறு
ஆசிரியர்: அலெக்ஸாண்டர் ட்ராச்டென்பர்க்
தமிழில் எம்.சிவக்குமார்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
7, இளங்கோ சாலை,தேனாம்பேட்டை,
சென்னை – 600 018
பேச : 044- 24332424
பக்கங்கள்: 32
விலை: ரூ.20.00
சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று
முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 2. தொ.பே : 044-2841 2367
– வினவு செய்திப் பிரிவு
வாரம் இரு நூல்களை அறிமுகம் செய்கிறோம். நூல்களை அனுப்ப விரும்புவோர் இரண்டு பிரதிகள் அனுப்பவும். சமூக, பொருளாதார, அரசியல், மொழிபெயர்ப்பு நூல்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். கவிதை, சிறுகதை நூல்களை அனுப்ப வேண்டாம்.
நூல்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Puthiya Kalacharam – Vinavu
122, Nehru Park (Slum Clearance Board),
Poonamallee High Road,
Chennai 600084.
Tamilnadu, India
Mobile – (91) 99411 75876