மே 4, 1886 – ஹே சந்தை (Haymarket) படுகொலை

மே 3-ம் நாள் வேலை நிறுத்தம் செய்த மெக்கார்மிக் ரீப்பர் வொர்க்ஸ் தொழிலாளர்களின் கூட்டத்தில் நிகழ்ந்த போலிஸின் காட்டு மிராண்டித்தனமான அடக்கு முறையை எதிர்த்து மே 4-ஆம் நாள் வைக்கோல் சந்தை சதுக்கம் என்றழைக்கப்படும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மே 4, 1886 – வைக்கோல் மார்க்கெட் (Haymarket) படுகொலை: சிகாகோவில் 8 மணி நேர வேலைநேர கோரிக்கைக்காக நடந்த தொழிலாளர் ஆர்ப்பாட்டத்தில் போலீசுத்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர்; 60 பேர் காயமடைந்தனர்.

***

சிக்காகோவில் மே முதல் நாள் வேலை நிறுத்தம் மிகத் தீவிரமாக இருந்தது. அப்போது இடதுசாரி தொழிலாளர்கள் இயக்கத்தின் ஒரு மையமாக சிக்காகோ திகழ்ந்தது. தொழிலாளர் இயக்கத்தின் அரசியல் ரீதியான பல்வேறு பிரச்சினைகள் குறித்து போதுமான தெளிவு இல்லாவிட்டாலும் அது ஒரு போராட்ட இயக்கமாக விளங்கியது.

தொழிலாளர் வாழ்க்கை மற்றும் வேலை நிலைமைகளை விருத்தி செய்யும் பொருட்டு எந்த நேரத்திலும் தொழிலாளர்களை போராட்டத்தில் இறங்க வைப்பதாயும், அவர்கள் போராட்ட உணர்வைக் கூர்மைப்படுத்துவதாகவும் அவ்வியக்கம் விளங்கியது.

போர்குணமுள்ள தொழிலாளர் குழுக்களால் சிக்காகோவின் வேலை நிறுத்தம் பெருமளவுக்கு பிரகாசித்தது. வேலை நிறுத்ததிற்கு வெகுமுன்பே அதற்கான தயாரிப்புகளைச் செய்ய 8 மணி நேர சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த 8 மணி நேர சங்கம் என்பது கூட்டமைப்பு, ‘நைட்ஸ் ஆப் லேபர்’ சோஷலிஸ்ட் தொழிலாளர் கட்சி (அமெரிக்க தொழிலாளர் வர்க்கத்தின் முதல் அரசியல் சோஷலிஸ்ட் கட்சி) போன்ற ஸ்தாபனங்களில் இணைந்துள்ள தொழிற்சங்கங்களைக் கொண்ட ஒரு ஐக்கிய முன்னணி ஸ்தாபனமாக விளங்கியது.

இந்த 8 மணி நேர சங்கத்துக்கு இடதுசாரி தொழிற்சங்கங்களைக் கொண்ட மத்திய தொழிற்சங்கமும் முழு ஆதரவு அளித்தது. மே முதல் தினத்துக்கு முந்திய நாளான ஞாயிற்றுக் கிழமையன்று மத்திய தொழிற் சங்கம் ஏற்பாடு செய்த தொழிலாளர்களைத் திரட்டும் ஆர்ப்பாட்டத்தில் கிட்டத்தட்ட 25,000 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

மே முதல் நாள் சிக்காகோ, நகரத் தொழிலாளர் இயக்க ஸ்தாபனம் அழைப்பு கொடுத்ததின் பேரில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் கருவிகளை கீழே வைத்துவிட்டு தெருவுக்கு இறங்கிய மாபெரும் காட்சியைக் கண்டது. இந்த ஆர்ப்பாட்டம் முன் எப்போதுமில்லாத வகையில் மாபெரும் வர்க்க ஒற்றுமையாக விளங்கியது. எட்டு மணி நேர வேலை நாள் கோரிக்கையின் முக்கியத்துவமும், வேலை நிறுத்தத்தின் பரந்த மற்றும் தீவிரத்தன்மையும் இந்த இயக்கத்திற்கு குறிப்பிடத்தக்க அரசியல் முக்கியத்துவத்தைத் தந்தது.

அடுத்த சில நாட்களில் ஏற்பட்ட சில மாற்றங்களால் இந்த முக்கியத்துவம் மேலும் தீவிரமானது. 1886 மே முதல் தினம் உச்சக் கட்டத்தையடைந்த 8 மணி நேர இயக்கமானது, அமெரிக்க தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட வரலாற்றில் ஒரு மகோன்னத அத்தியாயத்தை உருவாக்கியது.

அதே நேரத்தில் தொழிலாளர்களின் விரோதிகள் வெறுமனே இருக்கவில்லை. முதலாளிகள் மற்றும் அரசின் இணைந்த சக்தி, ஊர்வலம் சென்ற சிக்காகோ தொழிலாளர்களைக் கைது செய்தது. போர்குணமிக்க தலைவர்களை அழித்தொழிப்பதன் மூலம் சிக்காகோ நகரின் தொழிலாளர் இயக்கத்தையே நசுக்கி விடலாம் என கண்டார்கள்.

மே 3, 4 தேதிகளில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் ‘வைக்கோல் சந்தை (ஹே சந்தை) விவகாரம்’ என்றழைக்கப்படும் நிகழ்ச்சிக்கு வழி வகுத்தன. மே 3-ம் நாள் வேலை நிறுத்தம் செய்த மெக்கார்மிக் ரீப்பர் வொர்க்ஸ் தொழிலாளர்களின் கூட்டத்தில் நிகழ்ந்த போலிஸின் காட்டு மிராண்டித்தனமான அடக்கு முறையை எதிர்த்து மே 4-ஆம் நாள் வைக்கோல் சந்தை சதுக்கம் என்றழைக்கப்படும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அந்த கூட்டம் அமைதியாக நடந்தது. போலீசு மீண்டும் கூடியிருந்த தொழிலாளர் மீது தாக்குதலைத் தொடுக்க ஆரம்பிக்கும் போது கூட்டம் தள்ளிவைக்கப்பட இருந்தது. கூட்டத்தில் எறியப்பட்ட ஒரு குண்டு ராணுவ அதிகாரி ஒருவனைக் கொன்றது. இதன் விளைவாக எழுந்த ஒரு மோதலில் ஏழு போலீஸ்காரர்களும் நான்கு தொழிலாளர்களும் கொல்லப்பட்டனர்.

வைக்கோல் சந்தை சதுக்கத்தில் ஏற்பட்ட ரத்த ஆறும், போர்க்குணமிக்க சிக்காகோ தொழிலாளர் தலைவர்களை சிறைக்கும், தூக்கு மேடைக்கும் அனுப்பியதும்தான் சிக்காகோ நகர முதலாளிகளின் பதிலாயிருந்தன.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க