செப்டம்பர் 23 – ஆம் தேதியில் இருந்து உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற யமஹா, ராயல் என்பீல்டு மற்றும் எம்.எஸ்.ஐ. தொழிலாளர்கள் மீதான ஒடுக்குறைக்கு எதிராகவும், சிறப்பு பொருளாதார மண்டலம் என்கிற பெயரில் தொழிலாளர்களின் உரிமையைப் பறிக்கும் பன்னாட்டு கம்பனிகளுக்கு எதிராகவும் 08.10.2018 அன்று புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக திருவொற்றியூர் மற்றும் பூந்தமல்லி – குமணன்சாவடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பூந்தமல்லி

குமணன் சாவடியில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் தூசான் கம்பனி தொழிலாளர்கள், TI மெட்டல் கம்பனி தொழிலாளர்கள் மற்றும் பு.ஜ.தொ.மு. இணைப்பு சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய பு.ஜதொ.மு. திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் தோழர் முகிலன் தனது உரையில், “யமஹா, ராயல் என்பீல்டு தொழிலாளர்கள் சங்கம் அமைப்பதற்கான கோரிக்கை மனுவை கொடுத்தற்காக இரண்டு தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யபட்டுள்ளார்கள். திருவொற்றியூர் பகுதியில் இருந்த ராயல் என்பீல்டு கம்பனியில் இருந்து ஆட்களை அழைத்து வந்து வேலைக்கு வைத்தார்கள். மூன்று ஆண்டுகளில் நிரந்தரம் செய்வதாக சொன்னார்கள். கிட்டதட்ட அந்த காலம் முடிந்து விட்டது. இன்னும் அவர்களை பணி நிரந்தரம் செய்யாமல் ஏமாற்றி வருகிறது.

தென்கொரிய நிறுவனமான எம்.எஸ்.ஐ.-யில் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரிக்கை கேட்டு போராடி வருகிறார்கள். ஆனால் நிர்வாகம் திமிர்த்தனமாக மறுத்து வருகிறது. தொழிலாளர் நலத்துறை பேச்சு வார்த்தைக்கு அழைத்தால் பேச்சு வார்த்தைக்கே வர மறுக்கிறார்கள். தென்கொரியாவின் தூதரகத்தை முற்றுகையிட்டு போராடிய தொழிலாளர்களை கைது செய்து இருக்கிறார்கள்.

படிக்க:
ஆலை நடத்துறாங்களா ? ஸ்கூல் நடத்துறாங்களா ? யமஹா தொழிலாளர் போராட்டம்
ராயல் என்ஃபீல்டு : கிளர்ந்தெழும் தொழிலாளர் போராட்டம் | செய்தி – படங்கள் !

சிறப்பு பொருளாதார மண்டலம் வந்தால் வேலை வாய்ப்பு பெருகும் என்றார்கள். மாறாக தொழிலாளர்கள் வேலை பறிப்பு நடந்து வருகிறது. சொந்த வேலைக்காக தொழிலாளர்கள் லீவு போட்டால்கூட அப்பாவை கூட்டி வர வேண்டும். அப்படி வந்தால்தான் வேலை மீண்டும் கிடைக்கும் என்ற நிலைதான் உள்ளது. தொழிலாளர்கள்  கொத்தடிமைகளைப் போல நடத்தப்படுகிறார்கள். தொழிலாளர் துறை ”தொழிலாளர்கள் வேலை நீக்கம் தவறு அவர்களை வேலைக்கு சேர்த்துக்கொள்ள” சொன்னால். ”முடியாது. நாங்கள் ஜப்பான் நாட்டு சட்டதிற்கு தான் கட்டுப்படுவோம்” என்று திமிராக சொல்கிறார்கள். இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக எல்லா ஆலைகளிலும் தொழிலாளர்கள் போராட்டம் நடைபெறுகிறது” என்பதை தனது தலைமையுரையில் பேசினார்.

தொடர்ந்து கண்டன உரையாற்றிய பு.ஜ.தொ.மு. மாநில தலைவர் தோழர் முகுந்தன், “ சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்பட்ட பிறகு ஒரகடம் சிப்காட் பகுதியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டு நடத்தும் போராட்டம் இது. ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கிண்டி உள்ளிட்ட பகுதியில் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராடினார்கள். அதுபோல இப்பொழுது யமஹா, என்பீல்டில் நடந்து வருகிறது. இந்த கம்பனியை எங்களுக்கு எழுதி தர வேண்டும் என்பதற்காக தொழிலாளர்கள் போராடவில்லை. நியாயமான சம்பளம் வேண்டும், உரிமை வேண்டும் என்று கேட்டு போராடுகிறார்கள். ஆனால் இந்த நிறுவனம் “உன்னால் முடிந்ததை பார்” என்று சொல்கிறது.

தொழிலாளர்கள் லீவு போட்டால் “நான் லீவு போட்டது தவறு” என்று கழுத்தில் போர்டு மாட்டிக்கொண்டு தொழிலாளர்கள் அனைவரும் பார்க்குமாறு நிற்க வேண்டும். இதற்கு என்ன அர்த்தம் என்றால் உரிமையை மறுப்பது, தொழிலாளியை மிரட்டுவது, அச்சுறுத்துவது, மிரட்டுவது, பணிய வைப்பது. இதுதான் முதலாளித்துவ பயங்கரவாதம். நியாயமான உரிமையை கேட்டால் மிரட்டுகிறான். யமஹா, என்பீல்டு, எம்.எஸ்.ஐ. தொழிலாளர்களின்  இந்த போராட்டதிற்கு சங்கங்களை கடந்து ஆதரவு அளித்து வருகிறார்கள். இந்த போராட்டத்தில் தோல்வியடைந்தால் எதிலும் வெற்றி பெற முடியாது.

1926 தொழிற்சட்டத்தில் 7 பேர் சேர்ந்தால் சங்கம் வைக்கலாம். ஆனால் சங்கம் வைக்கும் உரிமையை மறுக்கிறான். கேட்டால் எங்க நாட்டு பாலிசி என்கிறான். ஆங்கிலேயன் காலத்தில் தான் இது போல் இருந்தது. இன்றும் இருக்கிறது. இதைத்தான் மறுகாலனியாக்கம் என்று 20 ஆண்டுகளாக சொல்லி வருகிறோம்.

படிக்க:
ரேசன் மானியம் இரத்து – மறுகாலனியாக்கத்தின் கோர முகம்
மறுகாலனியாக்கத்திற்காக மாற்றப்படும் அரசுக் கட்டமைப்பு

இந்த நாட்டின் சட்டம் ஜனநாயகம், பேச்சுரிமை எதுவும் இல்லை. இதுதான் மறுகாலனியாகிக் கொண்டிருக்கிறது. ACl, DCL யாருடைய பேச்சையும் மதிக்காமல் நடந்து கொள்கிறான். மாவட்ட கலெக்டரோ “தொழிலாளி உள்ளே செல்லவில்லையா” என்று கேட்கிறார். ஆனால் முதலாளியைப் பார்த்து கேட்பதில்லை. ஆக இது முதலாளிக்கான சட்டமாக இருக்கிறது. அதனை முறியடிக்க அனைத்து தரப்பு மக்களும் அணிதிரள வேண்டும்” என்று கூறினார்.

தொடர்ந்து தொழிலாளர்களின் உரிமையைப் பறிக்கும் பன்னாட்டு கம்பனிகளுக்கு எதிராகவும், அவற்றுக்கு துணைபோகும்  அரசை அமபலப்படுத்தும் விதமாகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

திருவொற்றியூர்

திருவொற்றியூர், பெரியார்நகர், பெரியார்சிலை அருகில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்திற்கு தலைமை வகித்த புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் தோழர் இரா.சதீஷ் அவர்கள் தனது தலைமை உரையில் கூட்டத்தின் நோக்கத்தை அதாவது தற்போது திருபெரும்புதூரில் யமஹா, என்பீல்டு, MSI ஆகிய ஆலைகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேலைநிறுத்த போராட்டத்தை ஆதரித்தும், உரிமையை கேட்டால் வேலையைப் பறிக்கும், கார்ப்பரேட் அதிகாரத்திற்கெதிராக தொழிலாளர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

அதன்பின் உரையாற்றிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் SRF மணலி கிளை, இணைச்செயலாளர் தோழர் வெங்கடேசன் அவர்கள், தற்போது நிலவிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களின் அவலநிலையை விளக்கி பேசினார். தொழிலாளி வர்க்கத்தின் முன்னோர்கள் இரத்தம் சிந்தி, உயிரை கொடுத்து போராடிப் பெற்ற உரிமைகளை கூட தற்போது அனுபவிக்க முடியவில்லை. தொழிலாளிகளுக்கு என்ன என்ன உரிமைகள் இருக்கின்றன என்று கூட தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு முதலாளிகளால் அடக்கப்படுகின்றனர்.

இயல்பாக கிடைக்கக் கூடிய 8 மணி நேர வேலை, விலைவாசி ஏற்றத்திற்கு ஏற்ப ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் ஆகியவற்றிற்குக் கூட பெரிய போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது என்பதையும், இன்று ஓரளவு வசதி வாய்ப்புகளோடு இருப்பவர்கள் அதிக பணம் செலுத்தி தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்து விட்டால் போதும் வாழ்க்கையில் முன்னேறி விடுவான் என்கிற பகல் கனவில் இருப்பதை சுட்டிக்காட்டி, எமது முன்னோர்கள் அனுபவித்த உரிமைகள் தற்போதைய தலைமுறைக்கே மறுக்கப்படுகிறது, அடுத்த தலைமுறை எப்படி வாழப்போகிறது? எனக் கேள்வி எழுப்பி நமது நாடு ஒட்டு மொத்தமாக அடிமையாகிக் கொண்டிருக்கிறது என்பதை வலியுறுத்தி பேசினார்.

அவரைத் தொடர்ந்து உரையாற்றிய CPM கட்சியை சார்ந்த திருவொற்றியூர் முன்னாள் நகராட்சி தலைவர் தோழர் ஜெயராமன் அவர்கள் தனது உரையில், ”கடந்த தலைமுறையை சேர்ந்த தொழிலாளர்கள் எப்படி சங்கமாக சேர்ந்து உரிமைகளுக்காக போராடினார்கள் என்பதையும், தொழிற்சங்க தலைமை எப்படி வலிமை வாய்ந்ததாக இருந்தது என்பதையும் தன்னுடைய சொந்த அனுபவங்களில் இருந்து விளக்கி பேசினார்.

படிக்க:
தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யக்கூடாது என்றார் காந்தி | அண்ணல் அம்பேத்கர்
மாருதி முதல் ஹூண்டாய் வரை…ஒடுக்கப்படும் தொழிலாளர்கள்!

தொழிற்சங்க தலைமையின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு செயலையும் முதலாளியால் நடைமுறைபடுத்த முடியாத நிலை இருந்தது. அப்போது தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்பட்டது. அதன் பிறகு சிறுக சிறுக தொழிலாளர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி ஒற்றுமையாக இருந்த தொழிலாளி வர்க்கத்தை பல்வேறு கோஷ்டிகளாக பிரித்து அதில் தனக்கு ஆதரவான பிரிவினரை ஆதரித்து சலுகைகளை அள்ளி வீசியது.  மற்றவர்களை அடக்கி ஒடுக்கி பழிவாங்கியது. இன்று முதலாளிகளின் அடக்குமுறை மேலும், மேலும் அதிகரித்து தொழிற்சங்கமே கூடாது என்கிற நிலை எட்டியுள்ளது என்பதை விளக்கி, அதற்கு எதிராக வலுவான போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும், அதற்கு இடதுசாரி அமைப்புகள் ஒன்றிணைய வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

இறுதியாக கண்டன உரையாற்றிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மாநில இணைச்செயலாளர் தோழர் ம.சி.சுதேஷ்குமார் அவர்கள் தனது உரையில் ”சினிமா நடிகர்கள் சங்கம் அமைக்கின்றனர்; முதலாளிகளே கூட சங்கம் அமைக்கின்றனர். ஆனால் தொழிலாளர்கள் சங்கம் அமைக்கக்கூடாது. இதுதான் கார்ப்பரேட்டுகளின் அதிகாரம்” என்பதையும், பல்வேறு ஆலைகளில் நடைபெற்ற முதலாளித்துவ பயங்கரவாதத்தையும் அம்பலப்படுத்தினார்.

படிக்க:
இணைய வணிகத்தின் பின்னால் வதைபடும் அடிமைத் தொழிலாளர்கள் !
கல்வி உரிமையை பறிப்பது நீட் – தொழிலாளியின் தொழில் உரிமையைப் பறிப்பது நீம் !

குறிப்பாக சிறப்புப் பொருளாதார மன்றங்கள் வந்தால் வேலைவாய்ப்பு பெருகும் என்றும், நாடு வல்லரசாகும் என்றும் நம்பச் சொன்னார்கள். தற்போது நிலைமை அப்படியே மாறியுள்ளது. விவசாயம் திட்டமிட்டு அழிக்கப்பட்டு, விவசாயத் தொழிலாளர்கள் எல்லாம் கூலித் தொழிலாளர்களாக மாற்றப்பட்டு கார்ப்பரேட் கம்பெனிகளில் கொத்தடிமைகளாக பணிசெய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. எந்த ஒரு சட்டப்படியான உரிமையும் வழங்கப்படுவதில்லை. உரிமை என்று வாயை திறந்தாலே வேலைபறிப்பு! இது அரசும், ஆளும் வர்க்கமும் இணைந்து நடத்துகின்ற அடக்குமுறை. இந்த நிலையை மாற்ற வேண்டுமென்றால் வர்க்கமாக ஒன்றிணைவது மட்டும் போதாது. புரட்சிகர தலைமையின் கீழ் இன்றிணைய வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டம்.

***

ஓசூர் :

மஹா, என்ஃபீல்டு, எம்.எஸ்.ஐ ஆலைத்தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில்… அவ்வாலை நிர்வாகத்தையும், அதற்குத் துணைபோகும் தொழிலாளர் நலத்துறையை அம்பலப்படுத்தியும், தொழிலாளர்கள் பிற ஆலைத்தொழிலாளர்களுடன் ஒன்றிணைந்துப் போராட வேண்டிய அவசியத்தை உணர்த்தி அறைகூவல் விடுக்கும் நோக்கத்தோடு ஓசூரில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் அக்-10 அன்று ஓசூர் ராம்நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் பாகலூர் பகுதி தோழர் ரவிச்சந்திரனின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இவ்மைப்பின் மாவட்டச் செயலாளர் தோழர் பரசுராமன் கண்டன உரையாற்றினார். இறுதியாக, இவ்வமைப்பின் கமாஸ் வெக்ட்ரா ஆலையின் கிளைச் சங்கத் தலைவர் தோழர் செந்தில்  நன்றியுரையாற்றினார். வர்க்க உணர்வோடு திரண்டிருந்த தொழிலாளர்கள் பன்னாட்டுக் கம்பெனிகளின் தொழிலாளர் விரோத போக்கிற்கு எதிராக கண்டன முழக்கங்களை முழங்கினர்.

இதற்கு முன்னதாக, ஓசூர் நகரின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டியும், துண்டறிக்கை அச்சிட்டும் ஆலைவாயில்களிலும், மக்கள் திரளாக கூடும் இடங்களான தர்கா, சிப்காட் போன்ற பகுதிகளிலும் பிரச்சாரத்தை நடத்தினர், பு.ஜ.தொ.மு. தோழர்கள்.

இவர்கள் வெளியிட்டிருந்த துண்டறிக்கையில், ” சென்னை : யமஹா என்ஃபீல்டு ஆலைத் தொழிலாளர்கள் போராட்டத்தை கலைக்க அரசு – முதலாளிகள் கூட்டுச்சதி!

தொழிலாளர்களே!

யமஹா , என்ஃபீல்டு  ஆலையில் நேரடி உற்பத்தியில் பல ஆயிரம் பயிற்சி மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் திணிக்கப்பட்டு, சட்டவிரோதமாக சுரண்டப்படுவது அரசுக்கு தெரியாதா?

பணிநிரந்தரம், ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட சட்டபூர்வ கோரிக்கைகளுக்காக போராடும் தொழிலாளர்களையும் தொழிற்சங்கங்களையும் அழைத்துப் பேச மறுத்து சட்டம் தன் மயிருக்குச் சமம் என்பதை காட்டுகிறார்கள். பன்னாட்டுக்  கம்பெனிகளுக்கு எங்கிருந்து வந்தது இந்த தைரியம்?

இலாபவெறியில் சட்டவிதி முறைகளை மீறி ஆலை நிர்வாகங்கள் பகிரங்கமாக செயல்பட துவங்கிவிட்டது. சட்டமும், சுதந்திரமும் கேள்விக்குறியாகிவிட்டது!

யமஹாவில் போலீசை ஏவி, தொழிலாளர்களை சட்ட விரோதமாக கைது செய்ததன் மூலம், முதலாளித்துவமும் அரசும் தான் வகுத்துப் பேசி வந்த சட்ட உரிமைகள்  என்ற முகமூடியை கிழித்தெறிந்து விட்டார்கள். தாங்கள் கூட்டுக் களவாணிகள்தான் என்பதை காட்டிவிட்டார்கள். இன்னும் என்ன மயக்கம்?

பணி நிரந்தரம் செய்யாமல் காண்ட்ராக்ட் தற்காலிக எஃப்.டி.இ, பயிற்சித் தொழிலாளி, நீம் என்ற பெயர்களில் இளைஞர்கள் சுரண்டப்படுவதைத் தடுப்போம்!

தொழிற்சாலைகள் ஆண்டு முழுவதும் இயங்குமாம்! பல கோடி லாபம் ஈட்டுவார்களாம்! தொழிலாளர்களுக்கு மட்டும் எட்டுமாதம் வேலையாம்! இது என்னநீதி? முதலாளிகளின் லாபவெறிக்காக தொழிலாளர் வர்க்கம் நாடோடியாக அலையவேண்டுமா?

அரசும் போலீசும் கார்ப்பரேட் கம்பெனிகளின் பக்கம் என்றால் ஓட்டுரிமை மக்களாட்சி என்பது கண்துடைப்பு வேலைதான் அல்லவா?

பணிநிரந்தரமில்லை, பெட்ரோல் – டீசல் விலை உயர்வு , ஜி.எஸ்.டி. வரி, விலைவாசி உயர்வு இப்படிப்பட்ட நாட்டில் பாதுகாப்பாக எப்படி வாழமுடியும்?

தட்டினால் திறக்காது! கெஞ்சினால் கேட்காது! மூடிய கதவுகளை உடைக்க ஒரே வழி வர்க்க ஒற்றுமையே! ஆட்டோமொபைல் துறையின் அசைக்க முடியாத சக்தியாக, ஓரமைப்பாக திரள இதுவேதருணம்!

நிரந்தரம் – பயிற்சி காண்ட்ராக்ட் என்ற பிரிவினைகளைக் கடந்து அணிதிரள்வோம்!  பன்னாட்டு முதலாளிகளின் சுரண்டலை, அரசு அடக்கு முறையை முறியடிப்போம் வாரீர்! ” என்ற அறைகூவல் விடுத்திருந்தனர்.

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கிருஷ்ணகிரி – தர்மபுரி – சேலம் மாவட்டங்கள்.
செல் –  9788011784.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க