கைது ! வேலை பறிப்பு ! அச்சுறுத்தும் நிர்வாகம் – அரசு !
அடிபணியாத ராயல் என்பீல்டு தொழிலாளர்கள் போராட்டம் !!

  • தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக்கும் நீம் (NEEM), எஃப்.டி.இ (FTE) திட்டத்தின் கீழ் 150 தொழிலாளர்களை இணைக்கும் நிர்வாகத்தின் திட்டத்தை ரத்துசெய் !
  • சட்டப்படியான ஊதிய உயர்வை அமல்படுத்து !
  • சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள தொழிற்சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்கு !
  • 480 நாட்களுக்கு மேல் வேலை செய்த தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய் !
  • கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படாத சட்டப்படியான போனஸை வழங்கு !

என மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13/09/2018 அன்று ராயல் என்பீல்டு நிர்வாகத்திடம் தொழிலாளர்கள் ஸ்ட்ரைக் நோட்டீஸ் கொடுத்தனர். இதன்படி எந்தப் பேச்சுவார்த்தைக்கும் வராத நிர்வாகத்தைக் கண்டித்து 24/09/2018 அன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். செப்டம்பர் 24, 26, 27 ஆகிய மூன்று தேதிகளிலும் எச்.ஆர் அதிகாரியான ராஜரத்தினம் நிர்வாகத்திடம் பேசுவதாக தொழிலாளர்களிடம் கூறினார். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது எந்தவித பழிவாங்கலும் கூடாது என்ற நிபந்தனையுடன் அதனை ஏற்று 30-ம் தேதி வேலைக்குச் சென்றுள்ளனர்.

படிக்க:
ஆம்பூர் ஷூ தொழிற்சாலை பெண் தொழிலாளர் போராட்டம்
மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்!

அவ்வாறு வேலைக்குச் சென்ற தொழிலாளர்களிடம் செல்போனை உள்ளே அனுமதிக்க முடியாது என மிரட்டியுள்ளது நிர்வாகம். மேலும் முறையாக வேலை நிறுத்த நோட்டிஸ் கொடுத்துத் தொடங்கிய போராட்டத்தை “சட்டவிரோத வேலை நிறுத்தம்” (Illegal Strike) எனக் கூறி தொழிலாளிகளின் 8 நாள் சம்பளத்தைப் பிடித்துள்ளது. 8 பேருக்கு சார்ஜ் சீட் கொடுத்துள்ளது. பெரியசாமி என்ற தொழிலாளியை டிஸ்மிஸ் செய்துள்ளது.

குழுமி நிற்கும் தொழிலாளர்கள்

இதனை எதிர்த்து மீண்டும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தைக் கலைக்க ஏற்கனவே பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதோடு பல்வேறு சதிகளையும் செய்யத் தொடங்கியது நிர்வாகம். உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியபோது பெண்களுக்கான கழிவறைகளை மூடுமாறு உத்தரவிட்டுள்ளார் ஒரு பெண் எச்.ஆர் அதிகாரி.

போராடும் இளம் தொழிலாளிகளின் வீடுகளுக்கு “உங்கள் மகன்/ மகள் நிர்வாகத்தை எதிர்த்துப் போராடுகிறார். அவர் எதிர்காலம் பறிபோய்விடும்” என கடிதங்கள் அனுப்பியுள்ளது. போராடும் தொழிலாளிகளுக்கு போன் செய்து வேலை பறிபோகும், எதிர்காலம் பாழாகும் என்று அச்சுறுத்தியதோடு மட்டுமின்றி ஊதிய உயர்வு தருவதாகவும் பணி நிரந்தரம் செய்வதாகவும் ஆசை வார்த்தைகளைக் காட்டி நயவஞ்சகமாகவும் தொழிலாளர் ஒற்றுமையை சிதைக்க முயன்றுள்ளது.

போலீசும் இதற்கேற்ப 26/09/2018 தேதிக்கு மேல் உள்ளிருப்புப் போராட்டம் கூடாது எனக் கூறியதோடு வெளியே வந்து போராடும்போது சாமியானா போட அனுமதி மறுத்துள்ளது. போக்குவரத்துக்கு சற்றும் இடையூறின்றிப் போராடியவர்களிடம் போலீசு கூறிய காரணம் “தேசிய நெடுஞ்சாலையில் ’சாமியானா’ போட அனுமதி கிடையாது” என்பதுதான்

குடும்பத்தினர் அச்சப்பட்டபோது பின் வாங்காமல் – நிர்வாகத்தின் அச்சுறுத்தலுக்கும் நயவஞ்சகத்துக்கும் பலியாகாமல் – கொட்டும் மழையிலும் சுட்டெரிக்கும் வெயிலிலும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது தொழிலாளர்கள் போராட்டம். சற்றும் அச்சமின்றிப் போராடும் பெண் தொழிலாளர்களது முழக்கங்கள் நிர்வாகத்தை அச்சுறுத்துகிறது. தான் மேற்கொண்ட எந்தவழியிலும் போராட்டத்தினைச் சிதைக்க முடியாமல் நிர்வாகம் தோற்றுள்ளது.

கடந்த 04/10/2018 அன்று ஏற்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தொழிலாளர்கள் மீதான எந்தவிதப் பழிவாங்கலும் கூடாது, போராட்டத்துக்கு முன்பிருந்த பணிச்சூழல் இருக்க வேண்டும் என்னும் நிபந்தனையின் அடிப்படையில் 05/10/2018 அன்று பணிக்குச் சென்றுள்ளனர். மீண்டும் செல்போன்களை அனுமதிக்க மறுத்ததோடு அவர்களிடம் “போராட்டத்தில் ஈடுபட்டதற்காக மன்னிப்புக் கோருகிறேன். இனி போராட்டங்களில் ஈடுபடமாட்டேன். நிர்வாகத்தின் அனைத்து விதிகளுக்கும் கட்டுப்பட்டு நடப்பேன்.” என அடிமைச் சாசனம் எழுதிவைத்து அதில் கையெழுத்தும் கேட்டுள்ளது.

படிக்க:
ஆலை நடத்துறாங்களா ? ஸ்கூல் நடத்துறாங்களா ? யமஹா தொழிலாளர் போராட்டம்
♦ சென்னை : தடைகளைத் தகர்த்த தென்கொரிய தூசான் தொழிலாளர் போராட்டம்

தொழிலாளர்கள் மீண்டும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 200- க்கும் மேற்பட்ட போலீசு ஆலைக்குள் வந்து “எஃப்.ஐ.ஆர் போட்ருவோம் – வாழ்க்கை வீணாகிடும் – ஒழுங்கா வேலைக்குப் போங்க” என மிரட்டியுள்ளது. இதற்கு அடிபணியாமல் தொழிலாளர்கள் போராடவே சுமார் 300 தொழிலாளிகளைக் கைது செய்து வல்லக்கோட்டை திருமண மண்டபத்தில் அடைத்துள்ளது. இதை அறிந்த ஏனைய 2வது ஷிஃப்ட் தொழிலாளர்கள் அனைவரும் ஆலையின் வாசலில் திரண்டனர்.

மேலும் அசோக் லேலண்ட் உள்ளிட்ட 17 தொழிற்சாலைகளிலிருந்தும் தொழிலாளர்கள் அவர்களுக்கு ஆதரவாக வந்து அணிதிரண்டுள்ளனர். போராடினால் வேலைபோகும், எதிர்காலம் பாழாகும் என்ற கருத்தைக் காட்டி இனியும் உழைக்கும் மக்களை ஏமாற்ற முடியாமல், பிளக்க முடியாமல் ஆளும் வர்க்கமும் அரசும் தோற்று நிற்கிறது. விவசாயிகள், மாணவர்கள், பெண்கள், மீனவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் எனப் போராடுபவர்களின் பட்டியலில் தனது நீண்ட உறக்கத்தை உதறி எறிந்து தலைமை தாங்க வருகிறது தொழிலாளி வர்க்கம்.

இச்சூழலில் தோழர் பகத்சிங்கின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.

“சற்றும் சோர்வடையாத நமது மனவுறுதி

ஒவ்வொரு நொடியும் எதிரிகளை பலவீனப்படுத்துகிறது.”

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க