ன்றைக்கு முதலாளித்துவ நிறுவனங்களில் தொழிலாளர்களை ஈவு இரக்கமின்றி சுரண்டுவதாகவும், அடக்கி ஒடுக்குவதாகவும் செயல்படுவது எச்.ஆர். என்ற மனித வள மேம்பாட்டுத் துறை.

சென்ற ஆண்டு டெக் மகிந்த்ரா என்ற ஐ.டி. நிறுவனத்தில் ஊழியர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்ட உரையாடல் வெளியாகி இணையத்தில் பரவலாக பகிரப்பட்டது. அந்த உரையாடல் பதிவில் பேசும் பெண் எச்.ஆர். அதிகாரி ஊழியரை உடனடியாக ராஜினாமா செய்து விட்டு போகச் சொல்கிறார்.

அந்த எச்.ஆர் அதிகாரியின் பெயரைக் கூட அப்போதுதான் கேட்டு தெரிந்து கொள்கிறார், ஊழியர். மேலிடத்தில் இருந்து வரும் உத்தரவை தான் நிறைவேற்றுவதாகவும், ஊழியரின் மேலாளர்களுக்கு தகவலை சொல்லி விட்டதாகவும், வேலையை விட்டு அனுப்புவதற்கு தனக்கு அனைத்து அதிகாரமும் இருப்பதாகவும் ஊழியரை மிரட்டுகிறார் அந்த எச்.ஆர். அதிகாரி.

இன்றே ராஜினாமா கொடுத்து விட வேண்டும், இரண்டு நாட்களுக்குப் பிறகு வேலைக்கு வர வேண்டாம் என்று அதட்டுகிறார். இது மேலிடத்து முடிவு இதற்கு மேல் பேசுவதற்கு எதுவும் இல்லை என்று அடக்குகிறார். திடீரென்று சொல்லி, 24 மணி நேரத்துக்குள் வெளியேற்றுவது அநியாயம் என்ற ஊழியரின் வாதத்தை புறங்கையால் ஒதுக்கித் தள்ளுகிறார்.

மொத்தத்தில், மேலிடத்திலிருந்து வரும் உத்தரவை தலைக்கு மேல் ஏற்று என்கவுண்டர் செய்யும் போலீஸ் அதிகாரி போல நடந்து கொள்கிறார் அந்த எச்.ஆர். அதிகாரி. எச்.ஆர். சந்திப்பு என்றாலே சிம்ம சொப்பனம் என்று ஊழியர்கள் அஞ்சும் அளவுக்கு எச்.ஆர். அதிகாரிகளின் செயல்பாடு உள்ளது.

இவ்வாறாக ஐ.டி. நிறுவனங்கள் தொடங்கி, ஆலைகள் வரை அனைத்து இடங்களிலும், தொழிலாளர்கள் குறித்த நிர்வாகத்தின் முடிவுகளை அமல்படுத்தும் அடக்குமுறை கருவியாக எச்.ஆர். இருக்கிறார். எச்.ஆர். அதிகாரிகளுக்கு எங்கிருந்து இவ்வளவு அதிகாரம் வந்தது?

1970, 80-களில் தொழிற்சாலைகளிலும் கார்ப்பரேட் அலுவலகங்களிலும் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்துவது, வருகைப் பதிவேட்டைப் பராமரிப்பது, சம்பளத்தைக் கணக்கிடுவது போன்ற பணிகளை எழுத்தர்களும் (கிளர்க்), கணக்காளர்களும் (அக்கவுண்டன்ட்) முதலாளிகள் அல்லது நிர்வாக தலைமை அதிகாரியின் வழிகாட்டலின் பேரில் செய்து வந்தனர்.

இயந்திரங்களை எவ்வாறு ஓய்வின்றி இயக்கி, காலப்போக்கில் தேய்ந்து போனாலோ, புதிய தொழில்நுட்பத்தால் காலாவதியாகிப் போனாலோ தூக்கி எறிவது போல ஊழியர்களையும் நடத்துகிறது இன்றைய கார்ப்பரேட் முதலாளித்துவம்.

நிறுவனத்தின் உற்பத்தி, விற்பனை, வாங்குதல் போன்ற அனைத்து செயல்பாடுகளும் தனியொரு முதலாளியின் கட்டுப்பாட்டில் இயங்கின. அதாவது, உற்பத்தியை ஒருங்கிணைக்கும் வேலையும், தொழிலாளர்களை சுரண்டி இலாபம் ஈட்டுவதும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து நடைபெற்று வந்தது. இன்றும் சிறிய நிறுவனங்களில் இது போன்ற நடைமுறைதான் தொடர்கிறது.

மேலும், தொழிற்சங்கங்கள் வலுவாக இருந்த நிலையில் தனிப்பட்ட ஒரு தொழிலாளியை நிர்வாக அதிகாரிகள் மூலம் மிரட்டி ஒடுக்கி இலாபத்தை பிழிந்தெடுப்பதற்கான சாத்தியங்கள் குறைவாக இருந்தன.

ஆனால் 1990-களில், நிதி மூலதனத்தின் ஆட்சியின் கீழ் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் அமல்படுத்தப்பட ஆரம்பித்த பிறகு, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் பங்குச் சந்தைகளில் நிறுவனத்தின் பங்குகளை அதிக அளவில் வைத்திருப்பவரே முதலாளி என்ற நிலை உருவானது. நிறுவனத்தின் தினசரி நடவடிக்கைகளில் பங்கேற்று உற்பத்தியையும், விற்பனையையும் கண்காணிப்பவர் முதலாளி என்ற நிலை மாறியது.

இந்தப் புதிய வகை பங்குச் சந்தை சூதாடிகளுக்கு உற்பத்தியும் தெரியாது, விற்பனையும் தெரியாது, லாபத்தைக் கணக்கிடுவது ஒன்று மட்டும்தான் அவர்களுக்குத் தெரியும். நிறுவனத்துக்கே வராமல், உலகின் ஏதோ ஒரு மூலையில் கூட அமர்ந்துகொண்டு நிறுவனத்தை கட்டுப்படுத்தி, இலாபத்தை கைப்பற்றுகின்றனர்.

மேலும், தாராளமய கொள்கைகளின் விளைவாக தொழிற்சங்க இயக்கத்தின் நலிவும் தொழிலாளர்கள் மீது உழைப்புச் சுரண்டலையும், நிர்வாகத்தின் ஒடுக்குமுறையை தீவிரப்படுத்தி இலாபம் ஈட்டுவதற்கான சாத்தியங்களையும் தேவையையும் அதிகரித்திருந்தது.

தொழிற்சாலைகளை நிர்வாகம் செய்வதற்கு, உற்பத்தியையும், விற்பனையையும் திட்டமிட்டு மேற்பார்வை செய்வதற்கு என்று தனிச்சிறப்பான, அந்தந்த துறையில் தனிப் பயிற்சி பெற்ற மேலாளர்களை முதலாளிகள் பணிக்கு அமர்த்திக் கொண்டனர்.

அந்த வகையில் தொழிலாளர்களை மேற்பார்வை செய்து ஒடுக்குவதற்கான கங்காணி வேலைக்கென்றே உருவாக்கப்பட்டதுதான் இந்த மனிதவள மேம்பாட்டுத் துறை. (Human Resource Department).

இந்தத் துறையின் பெயரிலேயே முதலாளித்துவ இலாப வெறியும் தொழிலாளர் விரோத கண்ணோட்டமும் அடங்கியிருக்கிறது. கச்சாப் பொருட்கள், எந்திரங்கள், கட்டிடங்கள் போல தொழிலாளர்களும் இலாபம் ஈட்டுவதற்கு தேவைப்படும் ஒரு ரிசோர்ஸ் (வளம்) ஆக கருதப்படுகிறார்கள்.

கச்சாப் பொருட்களுக்கு மெட்டீரியல்ஸ் டிபார்ட்மென்ட் போல, எந்திரங்களுக்கு மெயின்டனன்ஸ் டிபார்ட்மென்ட் போல ஊழியர்களை நிர்வகிக்க ஹியூமன் ரிசோர்ஸ் டிபார்ட்மென்ட் செயல்படுகிறது. ஐ.டி நிறுவனங்களில் ஊழியர்களை ரிசோர்ஸ் என்ற பெயரிட்டே குறிப்பிடுகிறார்கள்.

இயந்திரங்களை எவ்வாறு ஓய்வின்றி இயக்கி, காலப்போக்கில் தேய்ந்து போனாலோ, புதிய தொழில்நுட்பத்தால் காலாவதியாகிப் போனாலோ தூக்கி எறிவது போல ஊழியர்களையும் நடத்துகிறது இன்றைய கார்ப்பரேட் முதலாளித்துவம்.

உற்பத்தியிலும், அன்றாட நிறுவன செயல்பாட்டிலும் தொடர்பில்லாமல், அந்த வகையில் தொழிலாளர்களோடு உற்பத்தி சார்ந்த பழக்கம் இல்லாமல், எச்.ஆர். அதிகாரிகள் தொழிலாளர்களை வெறும் பெயர்களாக, எண்களாக பார்த்து பணிகளை நிறைவேற்றுகின்றனர்.

அதற்கு சேவை செய்வது மனித வள மேம்பாட்டுத் துறையின் பணி. தேவையான தகுதியுடைய ஊழியர்களை, தேவையான எண்ணிக்கையில் தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்துவது, அவர்களிடமிருந்து இலாபத்தை பிழிந்தெடுப்பதற்கான திட்டங்களை தீட்டிக் கொடுப்பது, முதலாளியின் நேரடி கையாளாக அவற்றை அமல்படுத்துவது, தேவை முடிந்ததும் வேலையை விட்டு தூக்குவது என்று எந்திரங்களைப் போன்று தொழிலாளர்களையும் ஒரு பொருளாக கையாள்கின்றனர் எச்.ஆர். அதிகாரிகள்.

அவர்களது பார்வையில் தொழிலாளர் என்பவர் இயந்திரங்களை விட எந்த வகையிலும் முக்கியமானவராக‌ இருப்பது இல்லை. இயந்திரங்களுக்கு கூட ஸ்க்ரேப் மதிப்பு இருப்பதை கணக்கிடும் இந்த அமைப்பு, உயிருள்ள தொழிலாள‌ர்களை கிஞ்சித்தும் மதிப்பதில்லை.

எச்.ஆர். அதிகாரிகளை தயாரிப்பதற்கென்றே நாடு முழுவதும் மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்தக் கல்வி நிறுவனங்கள், தொழிலாளர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கான பாடங்களை மாணவர்களுக்கு கற்பிக்கின்றன.

இது போன்ற கல்வி நிறுவனங்களில் ஏழைத் தொழிலாளர்களின் பிள்ளைகள் சென்று படிக்க முடியாது. பணக்கார மேட்டுக்குடியிலிருந்து மட்டுமே மாணவர்கள் வந்து சேரும் வகையில் மிகக் கவனமாகத் திட்டமிட்டு இவை நடத்தப்படுகின்றனர். ஆகவே, பிறப்பிலேயே கொடூரன்களாக உருவாக்கப்படுகின்றனர், எச்.ஆர். அதிகாரிகள்.

எச்.ஆர் அதிகாரிகளை தயாரிப்பதற்கென்றே நாடு முழுவதும் மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன.

சாதாரண குடிமகனாக இருந்து போலீஸ் பயிற்சியில் சேருபவர், பயிற்சி முடித்து வெளியே வரும்போது, உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்கான அரசின் கருவியாக மாறியிருப்பதைப் போல, இந்த எச்.ஆர். பயிற்சி நிறுவனங்களை விட்டு வெளியே வரும் மாணவர்கள், தொழிலாளர்களை எவ்வாறு கசக்கிப் பிழிந்து உற்பத்தியைப் பெருக்குவதற்கும், அச்சுறுத்துவதற்கும், தேவையில்லாதபோது வெளியே தூக்கி எறிவதற்கும் முதலாளி வர்க்கத்தின் கொலைக்கருவியாக அடியாளாக மாறி விடுகிறார்.

ஐ.ஐ.எம். என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தில் நாடு முழுவதும் இயங்கும் 20-க்கும் மேற்பட்ட நிலையங்கள், இன்னும் நூற்றுக் கணக்கான தனியார் மேலாண்மை கல்வி நிலையங்கள் எச்.ஆர். படிப்புகளை வழங்குகின்றன. இதில் படிக்கும் மாணவர்களுக்கு இலட்சக் கணக்கில் சம்பளம் கொடுத்து, முதலாளிகள் வேலைக்கமர்த்திக் கொள்கின்றனர்.

பணியிடத்தில் சட்டப்படி தொழிலாளர்களுக்கு உரிய வசதிகளையும், கொடுக்கப்பட வேண்டிய சலுகைகளையும் உறுதி செய்து சட்டப்படி நடப்பதாக ஆவணப்படுத்துவதும் எச்.ஆர்.-ன் வேலையாகும்.

மேலும், போலீஸ் பொதுமக்களின் நண்பன் என்பது போல எச்.ஆர். ஊழியர்களின் புரவலன் என்று காட்டுவதற்காக பிறந்தநாள் கொண்டாட்டங்கள், பிரிவுபசார விருந்துகள், கிரிக்கெட் விளையாட்டுகள், அல்லது கார்ப்பரேட் சமூக பொறுப்பு நடவடிக்கைகளை நடத்துவதிலும் எச்.ஆர். அதிகாரிகள் ஈடுபடுகின்றனர். நிறுவனத்துக்கு பணமாகவோ, சந்தைப்படுத்துவதற்கோ ஆதாயம் அளிக்கும் வகையில் இவற்றை எல்லாம் ஆவணப்படுத்தி கொடுக்க வேண்டியதும் எச்.ஆரின் பொறுப்பு.

ஆனால், இது எல்லாவற்றையும் முக்கியமானது தொழிலாளர்களை சுரண்டுவதற்கான நிர்வாகத்தின் முடிவுகளை அமல்படுத்துவது எச்.ஆர்.-ன் தலையாய கடமையாக உள்ளது. தொழிலாளர்களின் திறனை அளவிடுதல், ஆட்குறைப்பு செய்தல், பதவி உயர்வு வழங்குதல், ரேட்டிங் வழங்குதல் போன்ற நிர்வாகத்தின் முடிவுகள் தொழிலாளர்களோடு தொழிலாளர்களாக உற்பத்தியில் ஈடுபட்டு, அவர்களோடு தினசரி முகம்பார்த்துப் பேசும் மேலாளர்கள் அல்லது சூப்பர்வைசர்களால் செய்யப்படுவதில்லை.

அதற்குப் பதில் அலுவலகத்தில் எங்கோ ஒரு மூலையில் கணிணித் திரையைப் பார்த்துக் கொண்டு, தொழிலாளர்களை மதிப்பிடும் எச்.ஆர். அதிகாரிகளிடம் தான் அந்தப் பணி கொடுக்கப்படுகிறது.

உற்பத்தியிலும், அன்றாட நிறுவன செயல்பாட்டிலும் தொடர்பில்லாமல், அந்த வகையில் தொழிலாளர்களோடு உற்பத்தி சார்ந்த பழக்கம் இல்லாமல், எச்.ஆர். அதிகாரிகள் தொழிலாளர்களை வெறும் பெயர்களாக, எண்களாக பார்த்து இந்தப் பணிகளை நிறைவேற்றுகின்றனர்.

இது தொழிலாளர்கள் மீதான முதலாளித்துவ சுரண்டலை இன்னும் தீவிரமாகவும், திறமையாகவும் நடத்தி லாபத்தை குவிப்பதற்கு அவசியமான நடைமுறையாக மாறியுள்ளது.

தொழிலாளர்கள் தொழிற்சங்கமாக திரண்டு தம்மை வலுப்படுத்திக் கொள்வதன் மூலம் எச்.ஆர். உருவில் வரும் முதலாளித்துவ சுரண்டலை எதிர் கொள்ளலாம். ஆனால், இந்த முதலாளித்துவ காட்டாட்சியை தூக்கி எறிந்து மனிதரை மனிதன் சுரண்டுவதை முற்றிலும் ஒழித்துக் கட்டும் சோசலிச உற்பத்தி முறையில்தான் எச்.ஆர். என்கிற மனித கொடூரனை இல்லாமல் ஒழிக்க முடியும்.

  •  ராஜா

புதிய தொழிலாளி, ஜூலை 2018
நன்றி : new-democrats தளத்தில் வெளியான கட்டுரை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க