டந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் வேலையிழந்து, வெயில் தகிக்கும் சாலைகளில் நடந்து சென்றதையும் உணவின்றி இறந்துபோனதையும் நாம், மறந்திருக்கமாட்டோம்.

ஊரடங்கு காலத்தில் நாட்டின் மக்கள் அனுபவித்த இன்னல்கள் யாவும், இந்த அரசுக் கட்டமைப்பு எந்த அளவுக்கு மோசமானதாக இருக்கிறது என்பதற்கான சாட்சியாக இருந்தது. முதலாளித்துவ அறிவுஜீவிகள் சிலர், ”இந்த பெருந்தொற்று இந்த உலக கட்டமைப்பிற்கும் அடுத்த உலக கட்டமைப்பிற்கும் ஒரு வாயிலாக இருக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்கள். இதை வேறு வார்த்தைகளில் சொன்னால், பெருந்தொற்றால் இந்தக் கட்டமைப்பின் பிரச்சினைகள் மோசமாக வெளிப்பட்டதை இந்த உலகம் கண்டுணர்ந்தததன் காரணமாக இந்த உலகின் சமூக பொருளாதார நிலை மறுகட்டமைப்பு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அறிவுஜீவிகள் எதிர்பார்த்ததற்கு மாறாக, உலகில் உள்ள பணக்காரர்கள் இந்த பெருந்தொற்றை பயன்படுத்தி மக்கள் பணத்தை அவர்களது மலிவு விலை உழைப்பாகவும், அரசாங்கத்தின் மூலமான சலுகைகளாகவும் பெற்று சுருட்டி தங்கள் நெருக்கடியை தீர்த்துக் கொண்டார்கள். நிலவும் இந்த சமூக பொருளாதார அமைப்பை பயன்படுத்தி தங்களின் நிலையை மேலும் உயர்த்திக்கொண்டார்கள்.

படிக்க :
♦ வேளாண் சட்ட எதிர்ப்பு : அடுத்தகட்டமாக மகா பஞ்சாயத்துகளைக் கூட்டவிருக்கும் விவசாயிகள் !
♦ விரைவில் சி.ஏ.ஏ. சட்டங்களை அமல்படுத்தப் போவதாக அமித்ஷா பேச்சு

சமீபத்தில் Oxfam நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, உலகின் முதல் பத்து பணக்காரர்களின் செல்வம் ஒட்டுமொத்தமாக அரை டிரில்லியன் டாலர்கள் அதிகரித்திருக்கிறது. ஆனால் இந்த பணம் வறுமையை ஒழிக்கவோ, தடுப்பூசி போடவோ பயன்படுத்தப்படவில்லை.

பணக்காரர்களின் சொத்து மதிப்பு உயரும் அதே சமயத்தில், இன்றைய பொருளாதார அமைப்பில் தனக்கு இருக்கும் வல்லமையை பயன்படுத்திக்கொண்டு ஏகாதிபத்திய நாடுகள் வளரும் நாடுகளை சுரண்டுவதில்தான் கவனம் செலுத்தினவேயன்றி, கொரோனாவை சமாளிக்க முடியாமல் திண்டாடி வரும் வளரும் நாடுகளுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. மாறாக, சர்வதேச நிதி நிறுவனங்கள் வட்டியைக் குறைத்து, மீண்டும் கடன் வாங்கச் சொல்கின்றன.

பெரும் வட்டிக்கு கடன் கொடுத்து கொரோனா வைரஸ் தடுப்புப் பணிக்குச் செல்ல வேண்டிய பணத்தை வட்டிகட்ட நிர்பந்திக்கின்றன. வளரும் நாடுகளின் வெளிநாட்டுக் கடன் மொத்தம் 11 டிரில்லியன் டாலர்களாக இருக்கிறது. இதில் கடந்த ஆண்டு மட்டும், உலகின் 64 நாடுகள் தங்கள் நாட்டின் சுகாதாரத்திற்கு செலவிட்டதைவிட அதிகமான தொகையை கடன்களை அடைக்க செலவிட்டிருக்கின்றன.

இன்னொரு பக்கம் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கண்டுபிடிக்கும் தடுப்பூசிகளுக்கு காப்புரிமை வைத்துக் கொண்டு அதன் மூலமான சுரண்டலிலும் ஈடுபடுகின்றன. “தடுப்பூசிகள் மீதான காப்புரிமைகளை நீக்கிக் கொள்ளுமாறு” வளரும் நாடுகள் வைத்த கோரிக்கைகளை இந்த பணக்கார நாடுகள் அலட்சியம் செய்தன. இப்படிப்பட்ட மோசமான பெருந்தொற்று காலத்திலும் காப்புவாதம் அப்பட்டமாக பின்பற்றப்படுவதுதான் முதலாளித்துவக் கட்டமைப்பின் ‘சிறப்பியல்பு’.

ஐக்கிய நாடுகள் சபையின் (UN), உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் உணவு பாதுகாப்பின்மை பற்றிய 2020-ம் ஆண்டிற்கான அறிக்கை, “வரும் 2030-ம் ஆண்டிற்குள் உலகில் பட்டினியாக இருப்பவர்களின் எண்ணிக்கை 840 மில்லியனாக அதிகரிக்கும்” என்று சுட்டிக் காட்டுகிறது. எதார்த்தத்தில் நிலைமை இதை விட மோசமாக இருப்பதற்கே வாய்ப்பு அதிகம்.

உலகம் முழுவதும் சத்தான உணவு கிடைக்காமல் இருக்கும் மக்களின் எண்ணிக்கை 2 பில்லியனாக உள்ளது. இது உலகின் மொத்த மக்கள்தொகையில் 26% ஆகும். இந்த மக்கள் பட்டினியாக கிடக்கிறார்கள், அவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு வழக்கமாக கிடைப்பதில்லை. பெருந்தொற்றுக்கு முந்திய நிலைதான் இது. “இந்த பெருந்தொற்று கட்டுக்குள் வைக்கப்படும் முன்பே, பட்டினி கிடக்கும் மக்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகும்” என உலக உணவு செயல்திட்டம் எனும் நிறுவனம் கணித்திருக்கிறது.

உலகளவில் பசிக் கொடுமை தலை விரித்தாடும் இப்போதைய நிலையில், பொருளாதார கொள்கை விவசாயிகளுக்கு சாதகமாக மாற்றுவதன் மூலம், பெருந்தொற்று காலத்தில் தரமான உணவு கிடைக்க வழிவகை செய்யமுடியும். உணவு மலிவாக கிடைக்க மானியங்கள் அமல்படுத்தப்பட வேண்டும். ஆனால், IMF போன்ற உலக நிறுவனங்கள் பொது உணவு விநியோகத்திற்கான மானியங்களை வழங்க முன்வருவதில்லை. இந்த நிறுவனம்தான் மானியங்களை ஒழிக்கச்சொல்லி மூன்றாம் உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

உலகம் முழுவதும் நிலைமை இப்படியெனில், இந்தியாவில் இந்தப் பெருந்தொற்றை பயன்படுத்தி விவசாயத்தை கார்ப்பரேட்களின் கைகளில் ஒப்படைக்கும் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரும் வேளாண் பொருட்கள் சந்தையை கார்ப்பரேட்டுகளின் கையில் ஒட்டுமொத்தமாக அள்ளிக் கொடுக்கவே இந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

ஒருபக்கம் இந்திய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் வரலாறு காணாத அளவு உயர்கிறது. இன்னொரு பக்கம் வேலையிழப்பும், கூலி குறைப்பும், வறுமையும், பட்டினியும் நடந்துகொண்டிருக்கிறது. மக்களின் வாழ்நிலைக்கும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியாகக் காட்டப்படும் பங்குச் சந்தை குறியீட்டு எண்ணிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதையே இது அப்பட்டமாகக் காட்டுகிறது.

உணவு, கல்வி, மருத்துவம் என முக்கிய ஆதாரங்களில், ஏகாதிபத்திய நாடுகள் தங்களின் வல்லாதிக்க நிலையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு வளரும் நாடுகளை சுரண்டுகிறது. பணக்காரர்கள் ஏழை மக்களிடமிருந்து பணத்தை உருஞ்சுவதில் நுட்பமான செயல்படுகிறார்கள். இதைப் பயன்படுத்தி உழைப்பாளர்களின் கூலியை குறைத்தனர். வருமானம், கூலி குறையும் போது அது தொழிலாளர்களின் வாழக்கைத்தரத்தை மேலும் பாதிக்கும். மீண்டும் சந்தையில் தேக்க நிலை உருவாகும்.

முதலாளித்துவத்தின் இயல்பாகவே இருக்கின்ற நெருக்கடியை மக்களைச் சுரண்டிதான் முதலாளித்துவம் சரி செய்து கொள்ளும். இது போன்ற கொடுமையான பெருந்தொற்று காலத்திலும் இந்த அரசுக் கட்டமைப்பைப் பயன்படுத்திக் கொண்டு தங்களது இலாபத்தை அதிகரிக்கவே அவர்கள் முயற்சி செய்து வருகிறது முதலாளித்துவம்.

உலகம் முழுவதும் உழைக்கும் மக்கள் ஆங்காங்கே போர்க் குணமிக்க போராட்டங்களை மேற்கொண்டு வந்தாலும், இவை எதுவும் மக்களைச் சுரண்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த பொருளாதாரக் கட்டமைப்பை நிகழ்ச்சிப் போக்கில் மாற்றிவிடப் போவதில்லை. மாற்றவும் முடியாது. சமூக மாற்றத்திற்கான அறிவியலான மார்க்சியத்தை தற்போதைய சூழலுக்கு சரியான முறையில் பிரயோகிக்கும் கட்சியால் மட்டுமே மக்களை வர்க்கரீதியாகத் திரட்டி, இந்த முதலாளித்துவ சமூகக் கட்டமைப்பை தகர்க்க முடியும்.

பெருந்தொற்றின் காரணமாக அரசே தனது சுரண்டலை குறைத்துக் கொள்ளும் என்றோ, கார்ப்பரேட்டுகளுக்குக் கடிவாளம் போடும் என்றும் நினைப்பது வெறும் பகல்கனவுதான்.


ராஜேஷ்
செய்தி ஆதாரம்:
Monthly Review Online

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க