மஹா தொழிலாளர்களின் போராட்டம் 14-வது நாளை எட்டியுள்ளது.  ஆனால் இன்னமும் ஆலை நிர்வாகமோ அல்லது அரசாங்கமோ தொழிலாளர்களின் பிரச்சினையைத் தீர்க்க முனைப்பு காட்டவில்லை.

கடந்த 21.09.18 முதல் ஒரகடம் சிப்காட் வளாகத்தில் யமஹா ஆலையில் தொழிலாளர் போராட்டமானது நடைபெற்று வருகிறது. தொழிற்சங்கம் வைத்த காரணத்துக்காக தொழிலாளிகள் இருவர் நிரந்தர வேலை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த சட்டவிரோத வேலைநீக்கத்தைக் கண்டித்தும் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்ட்த்தைத் தொடங்கினர். இவ்வாறு யமஹா ஆலையில் மட்டும் நடந்து கொண்டிருந்த போராட்டத்தை நீதிமன்றம் சென்று மொத்த சிப்காட்டில் பணியாற்றும் தொழிலாளிகளின் போராட்டமாக மாற்றியுள்ளது யமஹா நிர்வாகம். வினவு தளத்திலும் இப்போராட்டம் குறித்து ஒரு விரிவான பதிவும், மூன்று வீடியோக்களும் வெளியிடப்பட்டுள்ளன.

படிக்க:
ஆலை நடத்துறாங்களா ? ஸ்கூல் நடத்துறாங்களா ? யமஹா தொழிலாளர் போராட்டம்

தொழிலாளிகளின் கோரிக்கைகளை மக்களுக்கு எடுத்துச் செல்லும் விதமாக கடந்த 28.09.2018 முதல் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம், தெருமுனைக் கூட்டம் என சி.ஐ.டி.யூ., ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகிய அமைப்புகள் முன்னெடுத்து செல்கின்றனர். மேலும் கடந்த அக்டோபர் 2-ம் தேதி காந்தி பிறந்த நாளன்று காஞ்சிபுரம் பகுதியில் யமஹா தொழிலாளிகள் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தியிருந்தனர். அன்று தொழிலாளர்களை கைது செய்து ஒரு திருமண மண்டபத்தில் அடைத்துவைத்து மாலையில் விடுவித்தது போலீசு.

இந்நிலையில் தொழிலாளர் நலத்துறையின் தொடர் வற்புறுத்தலின் காரணமாக நேற்று (03.10.2018) பேச்சுவார்த்தைக்கு வருவதாக யமஹா நிர்வாகம் கூறியிருந்தது, அதன்படி தொழிற்சங்கம் சார்பில் எட்டு பேரும், நிர்வாகத்தின் சார்பில் ஒரு அதிகாரியும் என DCL அலுவலகத்தில் பேச்சுவார்த்தை தொடங்கியது.

ஒருபக்கம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே தொழிலாளர்களை மிரட்டும் விதமாக, ஆலை நிர்வாகம் வரும் 5-ம் தேதிக்குள் வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என்ற அறிவிப்பை நோட்டீஸ் போர்டில் ஒட்டியுள்ளது. மேலும் இக்கடிதத்தை அனைத்து தொழிலாளிகளின் வீடுகளுக்கும் அஞ்சல் மூலம் அனுப்பியுள்ளது. இத்துடன் நிற்காமல் போராட்டத்தைக் கலைக்க சிப்காட் வளாகத்துக்குள் ஏராளமான போலீசைக் குவித்து பீதியை கிளப்ப முயல்கிறது யமஹா நிர்வாகம்.

மேலும் பேச்சுவார்த்தையானது 6 கட்டமாக நடைபெற்றுள்ளது. அப்பேச்சுவார்த்தையின் போது யமஹா ஆலை நிர்வாகத்தின் சார்பில் வந்த ரமேஷ் என்ற அதிகாரி தொழிலாளர்கள் கோரிக்கைகள் ஏற்கப்படும் என போகிற போக்கில் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் இறுதிகட்டத்தில் அதிகாரிகள் வழக்கமாக பாடும் பல்லவியை அவரும் பாடியுள்ளார். “நான் முடிவு செய்ய முடியாது, மேனேஜ்மெண்டில் பேச வேண்டும்” என கூறியுள்ளார்.

இதனால் பேச்சுவார்த்தை முடுவு எட்டப்படாமல் தொங்கு நிலையில் நின்றுவிட்டது. எனவே DCL அலுவலகத்தில் இருந்து தொழிலாளர் போராட்டம் நியாயமானதுதான் என ஒரு கடிதம் தொழிலாளிகளின் தரப்பிற்கு வழங்கப்பட்டது.

இக்கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு தொழிலாளிகள் ஆலைக்கு செல்ல முயன்றனர். ஆனால் ஆலையின் அடியாளாக செயல்படும் போலீசோ தொழிலாளிகளை ஆலைக்குள் விடாமல் தடுத்துள்ளது.

ஆலை நிர்வாகமோ நீங்கள் பணிக்கு திரும்புவதென்றால் மன்னிப்புக் கடிதம் எழுதித் தர வேண்டும், எல்லாரும் ஒரே நேரத்தில் வரக்கூடாது, முதலில் ஒரு நாற்பது பேர், பின்னர் ஒரு நாற்பது பேர் என படிப்படியாகத் தான் வேலையில் சேர்க்கப்படுவீர்கள் என திமிராக அறிவித்துள்ளது.

படிக்க:
கொத்தடிமைகளா நாங்க ? கொதிக்கும் யமஹா தொழிலாளர்கள் | காணொளி
மோடியின் இந்தியாவும் தொழிலாளர்களின் இந்தியாவும்

இவ்வாறு அறிவித்திருப்பதன் மூலம் தொழிலாளர் நலத்துறையையும், அது கொடுத்த கடிதத்தையும் எதற்கும் உதவாத காகிதமாக உதாசீனம் செய்துள்ளது யமஹா நிர்வாகம்.தொடர்ந்து தொழிலாளர் விரோதமாகவும், முதலாளித்துவ திமிருடனும் செயல்படுகிறது யமஹா நிர்வாகம்.

இவர்களின் திமிரை அடக்கும் விதமாகவும், தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் விதமாகவும் மழை, வெயில் என எதையும் பாராமல், சிப்காட் வளாகத்தில் சூல் கொண்டுள்ளது யமஹா தொழிலாளர்களின் போராட்டம். இதனை அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் எடுத்துச் செல்வதும், இந்தப் போராட்டத்தை ஆதரிப்பதும் நமது கடமை!
வினவு களச் செய்தியாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க