Monday, May 10, 2021
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் மோடியின் இந்தியாவும் தொழிலாளர்களின் இந்தியாவும்

மோடியின் இந்தியாவும் தொழிலாளர்களின் இந்தியாவும்

-

பா.ஜ.க.வின் அரியானா முதலமைச்சர் கட்டார், மே நாளை இனி தொழிலாளர் தினமாக அனுசரிக்கப் போவதில்லை என்றும் விசுவகர்மா தினத்தைத்தான் இனி கொண்டாடவிருப்பதாகவும் அறிவித்திருக்கிறார். சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்று விடாது. மே தினத்தைத் தடுத்தால் தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டம் செயலற்றுப் போய்விடாது.

வேலை நீக்கம், பொய்வழக்குகள், சிறை ஆகியவற்றை மீறி, கடந்த 4 மாதங்களில் மட்டும் இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு தருகிறோம்.

ஊதியத்தைத் தரமறுத்து வந்த மோதிஹரி பிர்லா சர்க்கரை ஆலை நிர்வாகத்தைக் கண்டித்துத் தீக்குளித்து இறந்து போன சங்கத் தலைவர் நரேஷ் சிறீவத்ஸவாவின் (படத்தில்) மனைவி பூர்ணிமா தேவி.

பீகாரில் போராடிய தொழிலாளர்கள் மீது போலீசு துப்பாக்கிச் சூடு!

பீகாரின் மோட்டிஹரி நகரில் உள்ள பிர்லாவுக்குச் சொந்தமான சர்க்கரை ஆலை உள்ளது. கடந்த 2002–2005 காலகட்டத்தில் அங்கு வேலை பார்த்த சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்குச் சம்பளமும், கரும்பு சப்ளை செய்த சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குக் கரும்புக்கான பணமும் கொடுக்காமல் 2005-ஆம் ஆண்டு மூடப்பட்டது அந்த ஆலை. இது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் பிர்லா நிறுவனம் பணத்தைக் கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தும், அவர்களுக்குத் தர வேண்டிய பணத்தை பிர்லா நிறுவனம் தரவில்லை.

இது குறித்து மனு கொடுத்தும், பல்வேறு போரட்டங்கள் நடத்தியும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை. அதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 11 அன்று ஆலை வாயிலில் தொழிலாளர்களும், விவசாயிகளும் ஒன்றுதிரண்டு போராடத் தொடங்கினர். அரசின் அலட்சியத்தையும், பிர்லா நிறுவனத்தின் இரக்கமற்ற போக்கையும் கண்டித்து இரண்டு தொழிலாளர்கள் தீக்குளித்தனர். அதில் ஒருவர் மருத்துவமனையில் மரணமடைந்த செய்தியறிந்ததும், தொழிலாளர்களும் விவசாயிகளும் கற்களைக் கொண்டு ஆலையைத் தாக்கினர். அத்தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மீது போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுமார் 24 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இருப்பினும் அரசின் ஒடுக்குமுறைக்கு அஞ்சாமல், போராட்டம் தொடரும் என விவசாயிகளும் தொழிலாளர்களும் அறிவித்துள்ளனர். தொழிலாளர்களும் விவசாயிகளும் கட்டியமைத்திருக்கும் இந்த ஒற்றுமை முன்னுதாரணமானது.

அரியான அரசின் புதிய போக்குவரத்துக் கொள்கை நகலை எரித்து, பதேஹாபாத் நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தும் அம்மாநில போக்குவரத்துத் தொழிலாளர்கள்.

அரியானா அரசைப் பணிய வைத்த போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம்!

அரியானா மாநிலப் போக்குவரத்துத் தொழிலாளர்கள், போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்கும் அரியானா அரசின் புதிய போக்குவரத்துக் கொள்கைக்கு எதிராக கடந்த ஏப்ரல்-9 முதல் மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். முதல் 3 நாட்கள் தொழிலாளர்களின் போராட்டத்தை அலட்சியப்படுத்திய அரியானா அரசு, பிறகு தொழிலாளர்களை மிரட்டும் விதமாக 120 பேரை இடைநீக்கம் செய்தது. தொழிலாளர்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியதை அடுத்து, புதிய போக்குவரத்துக் கொள்கையைக் கைவிடுவதாகவும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்வதாகவும் அரியானா அரசு ஒப்புக் கொள்ள நேர்ந்தது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்துப் பத்தாயிரத்துக்கும் அதிகமான கர்நாடக மாநில சத்துணவுப் பணியாளர்கள் பெங்களூரு நகர சுதந்திர பூங்காவில் 48 மணி நேரம் நடத்திய முழக்கப் போராட்டம். பெங்களூரு நகரில் நடந்த மிகப் பெரிய, நீண்டதொரு போராட்டமாகும் இது.

அரசைப் பணிய வைத்த பெங்களூரு அங்கன்வாடித் தொழிலாளர்களின் போராட்டம்!

கடந்த மார்ச் மாதம் அங்கன்வாடியில் வேலை பார்க்கும் ஊழியர்களும், அங்கன்வாடி உதவியாளர்களும் ஊதிய உயர்வு வேண்டி பெங்களூருவின் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்ச் 22-இல் தொடங்கி 20 நாட்கள் நீடித்த இந்த போராட்டத்தின் உறுதியால் கர்நாடக காங்கிரசு அரசு பணிந்து போனது. இப்போராட்டத்தின் மூலம் அங்கன்வாடி ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தொகுப்பூதியம் ரூ.6,000-லிருந்து  ரூ.8,000-மாகவும், உதவியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தொகுப்பூதியம் ரூ.3,500-லிருந்து ரூ.4,500-ஆகவும் உயர்த்தப்பட்டது. அங்கன்வாடி ஊழியர்களின் இடைவிடாத போர்க்குணமிக்க போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி இது.

ராஜஸ்தான்: ஒப்பந்தத் தொழிலாளிகளுக்காகப் போராடிய நிரந்தரத் தொழிலாளர்கள் பணிநீக்கம்!

ராஜஸ்தான் மாநிலம் தாருஹெராவில் உள்ள ஓமாக்ஸ் தொழிற்சாலை, ஹீரோ, ஹோண்டா, யமஹா போன்ற நிறுவனங்களுக்கு ஆட்டோமொபைல் உதிரிப் பாகங்களைத் தயாரிக்கிறது.  கடந்த பிப்ரவரி மாதம் சுமார் 388 ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்தது ஓமாக்ஸ் நிறுவனம். பணிநீக்கம் செய்யப்பட்ட அந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரும் அந்நிறுவனத்தில் சுமார் 15 முதல் 20 ஆண்டுகள் வரை வேலை பார்த்தவர்கள். பணிநீக்கம் செய்யப்பட்ட அஜய் பாண்டே என்ற 35 வயது இளைஞர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு நிர்வாகம் பொறுப்பல்ல என்றும் அவர் மனநோயாளி என்றும் அவதூறு செய்தது நிர்வாகம். வெகுண்டெழுந்த தொழிலாளர்கள், பாண்டேயின் குடும்பத்தாருக்கு நட்டஈடு தர வேண்டும் என்றும், பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து ஓமாக்ஸ் நிறுவனத்தின் வாயிலில் அஜய் பாண்டேயின் சடலத்தைக் கிடத்தி போராடத் தொடங்கினர். ஒப்பந்த தொழிலாளர்களுடன் சேர்ந்து நிரந்தரத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தை அறிவித்தனர். ரிக்கோ ஆட்டோ பிட், டாய்கின் போன்ற நிறுவனங்களின் தொழிலாளர்களும் போராட்டத்தில் இணைந்து கொள்ளவே நிர்வாகம் பணிய வேண்டியதாயிற்று.

அஜய் பாண்டே குடும்பத்தினருக்கு 5.5 லட்சம் ரூபாய் நட்டஈடு கொடுப்பதற்கும், ஒப்பந்தத் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குச் சேர்த்துக் கொள்வது குறித்து தொழிலாளர் நலத்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் நிர்வாகம் ஒப்புக் கொண்டது. அதனைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இச்சம்பவத்திற்குப் பின்னர் போராட்டத்தில் முன்னணியாக செயல்பட்ட 34 நிரந்தரத் தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்து பழி வாங்கியிருக்கிறது, ஓமேக்ஸ் நிர்வாகம்.

“எங்கே போனது எங்கள் சம்பளப் பணம்?” என்ற முழக்கத்தை முன்வைத்து டெல்லி நகர தூய்மைப் பணியாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

டில்லி அரசின் மெத்தனத்தைக் கலைத்த துப்புரவுத் தொழிலாளர்கள்!

டில்லி மாநகராட்சியில் துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் 17,000 தொழிலாளர்கள் உட்பட சுமார் 25,000 மாநகராட்சித் தொழிலாளர்களுக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களுக்கான சம்பளத்தை வழங்காமல் இழுத்தடித்து வந்த டில்லி மாநகராட்சியைக் கண்டித்து, கடந்த ஜனவரி மாதம் 6-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தை அறிவித்தனர், துப்புரவுத் தொழிலாளர்கள். வேலை நிறுத்தம் தொடங்கிய ஐந்தே நாட்களில் டில்லி நகரமே குப்பைக் காடானது. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தலையிட்டு டில்லி அரசையும், மத்திய அரசையும் இப்பிரச்சினைக்கு உடனடியாக எப்படியேனும் தீர்வு காணும்படி வலியுறுத்தியது. இதனையடுத்து பேச்சுவார்த்தைக்கு வந்த டில்லி அரசு,  தொழிலாளர்களுக்கு நிலுவைச் சம்பளத்தை வழங்கியதோடு, இனி சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படாது என உறுதியளித்தது. சுமார் 11 நாட்கள் நீடித்த இப்போராட்டத்தின் தாக்கம் துப்புரவுப் பணியாளர்களின் முக்கியத்துவத்தையும் ,அவர்களது வாழ்வின் அவலத்தையும் டில்லி நகரவாசிகளுக்கு உணர்த்துவதாக அமைந்தது.

ஜார்க்கண்ட் : பா.ஜ.க. அரசில் துப்புரவுப் பணியாளர்களுக்கு 3 ஆண்டுகளாகச் சம்பளமில்லை!

சுரங்கப் பகுதி வளர்ச்சிக் குழுமம் என்ற அமைப்பு சுரங்கப் பகுதிகளின் குடிநீர் மற்றும் துப்புரவுப் பணிகளைப் பராமரிக்கின்ற சுமார் 1,150 ஊழியர்களைக் கொண்ட அரசுத்துறை. இந்த ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளாக முறையாக மாதச் சம்பளமே தரப்படவில்லை. இதன் காரணமாக, இரண்டு ஊழியர்கள் பட்டினியால் இறந்திருக்கின்றனர். கனிம வளம் நிறைந்த அந்த மாநிலத்தில் காசுக்கு என்ன பஞ்சம்? மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்கும் பழங்குடி மக்களைக் காட்டை விட்டு விரட்டுவதற்கும் பணத்தைக் கொட்டுகின்ற பா.ஜ.க. அரசாங்கத்திடம் துப்புரவுத் தொழிலாளிக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லையாம். இதுதான் மோடியின் சுவச் பாரத்.

குஜராத்தில் தொழிலாளிகள் நடந்து போனால், முதலாளிக்கு பயமாம்!

குஜராத்தில் சனந்த் நகரில் உள்ள டாடாவின் நானோ கார் தொழிற்சாலையில் தொழிலாளிகளுக்கு ஊதிய உயர்வு அளிக்க மறுத்து வருகிறது டாடா நிர்வாகம். அலுவலக ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கும் நிர்வாகம், தொழிலாளிகளுடைய ஊதிய உயர்வு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மட்டும் இரண்டு ஆண்டுகளாக மறுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில், கம்பெனி பஸ்ஸில் ஏறமாட்டோம், நடந்தே வீடு செல்கிறோம் என்று அறிவித்தார்கள் தொழிலாளர்கள். பேருந்து செலவு மிச்சம் என்று மகிழ்ச்சி அடைவதற்குப் பதிலாக கவலையடைந்திருக்கிறது டாடா நிர்வாகம். கூட்டமாக நடந்து போகக்கூடாது என்று தொழிலாளிகளுக்கு 144 தடை உத்தரவு போட்டிருக்கிறது பா.ஜ.க. அரசின் மாவட்ட நிர்வாகம். தொழிலாளிகள் கூட்டமாகச் சேர்வது பற்றி அவ்வளவு பயம், முதலாளி வர்க்கத்துக்கு! தொழிலாளிகளுக்கும் ஐ.டி. ஊழியர்களுக்கும் “பிக் அப் – டிராப்” வசதிகளை நிர்வாகம் செய்து கொடுப்பதற்கான காரணம் என்னவென்பது, 144 போடும் போதல்லவா புரிகிறது!

தொழிற்தகராறு சட்டத்தையே ஒழிக்க பா.ஜ.க. வின் சதித்திட்டம்!

தொழிற்தகராறு சட்டம் என்று அழைக்கப்படும் சட்டத்தின்கீழ், தொழிற்சாலை, தொழிலாளி என்ற சொற்களுக்கான விளக்கத்தைக் கடந்த 1978-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வரையறுத்திருக்கிறது.  அந்த அடிப்படையில் ஆலைத் தொழிலாளர்கள் மட்டுமின்றி, துப்புரவுத் தொழிலாளர்கள் முதல் மருத்துவமனை ஊழியர்கள், கல்வி நிறுவன ஊழியர்கள் வரையிலான சேவைத்துறைகள்  சார்ந்தவர்களும் தொழிற்தகராறு சட்டத்தின்கீழ் வருவதால், குறைந்தபட்ச ஊதியம், பணி உத்திரவாதம் உள்ளிட்ட உரிமைகளைப் பெறுகின்றனர். சமீபத்தில் டி.சி.எஸ். நிறுவனம் நடத்திய ஆட்குறைப்பின்போது, ஐ.டி. ஊழியர்களுக்கு தொழிற்சங்க உரிமை கிடையாது என்று அந்நிறுவனங்கள் கூறியதை எதிர்த்து வழக்கு தொடுத்து, ஐ.டி. நிறுவனங்களும் தொழிற்தகராறு சட்டத்தின் கீழ்தான் வருகின்றன என்றும் அந்த ஊழியர்களுக்கும் தொழிற்சங்க உரிமை உண்டு என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்றது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.

“தொழில்” என்பதற்கான பொருளை மறு வரையறை செய்வதன் மூலம், 1978 தீர்ப்பு தொழிலாளிகளுக்கு அளிக்கும் உரிமைகளை ஒழித்துக்கட்டுவதற்கு மோடி அரசு முயற்சித்து வருகிறது. நாடாளுமன்றத்தில் நேரடியாக ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தால், தொழிலாளி வர்க்கம் தன்னை எதிரி என்று அடையாளம் கண்டுவிடும் என்ற காரணத்தினால், அந்த வேலையை நீதிமன்றத்தின் மூலம் சாதித்துக் கொள்வதற்குச் சதித்தனமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உற்பத்தி சார்ந்த தொழிற்சாலை தவிர, மற்ற அனைத்தையும் இச்சட்டத்தின் வரையறையிலிருந்து நீக்க வேண்டும் என்றும், அதன் பொருட்டு 1978 தீர்ப்பை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களான அரியானா, குஜராத், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 250-க்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுச் செய்துள்ளன. உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகள் தவிர, மற்ற எல்லாத் தொழில்களையும் அமைப்பு சார்ந்த தொழில்கள் என்ற வரையறையிலிருந்தே நீக்குவதுதான் இவர்களது நோக்கம்.

-கதிர்
புதிய ஜனநாயகம், மே 2017

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க