சென்னை பூவிருந்தவல்லி செந்நீர்குப்பம் புறவழிச் சாலை அருகே செயல்பட்டு வருகிறது, தென்கொரிய நிறுவனமான தூசான் பவர் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட். இந்நிறுவனத்தில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பூந்தமல்லி போலீசாரால் கடந்த 18-08-18 அன்று கைது செய்யப்பட்டனர். எதற்காக இந்த கைது நடவடிக்கை? தொழிலாளர்கள் இழைத்தக் குற்றமென்ன?

தொழிலாளர்கள் சங்கமாக அணிதிரண்டதும், நிர்வாகத்திடம் தமது கோரிக்கைகளை முன்வைத்ததுதான் அவர்கள் இழைத்தத் தவறு. கைது நடவடிக்கைக்கான காரணமும் இதுதான். தொழிலாளர் நல சட்டம் தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளைப் பயன்படுத்திக் கொண்டு சட்டப்படியே சங்கமாக அணிதிரண்டதைத் தாண்டி எந்தவிதமான சட்டவிரோத, சமூக விரோதச் செயல்களையும் அவர்கள் செய்துவிடவில்லை. சங்கமாக அணிதிரள்வதைக்கூடச் சகித்துக்கொள்ள முடியாமல் தமது அடியாளான அரசு நிர்வாகத்தையும் போலீசையும் தொழிலாளர்களுக்கு எதிராக ஏவியிருக்கிறது, தூசான் நிறுவனம்.

தொழிலாளர் துறையில் கோரிக்கை மனு அளித்தும், அதன் மீது பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும், பலனில்லை. தொழிற்சங்கம் கோரிக்கைகளை பேச்சுவார்த்தைகள் மூலமாக தீர்த்துக்கொள்ளலாம் என முயற்சி செய்தபோது நிர்வாகமோ, தொழிலாளர் விரோத போக்கை கையாண்டு தொழிலாளர்களை அச்சுறுத்தும் வேலையை செய்தது. இந்நிலையில், நிர்வாகத்திடம் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக சட்டப்படி வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத்தனர் தொழிலாளர்கள்.

சம வேலைக்கு சம ஊதியம், பெரும்பான்மை சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பதுதான் தூசான் தொழிலாளர்கள் முன்வைத்தக் கோரிக்கைகள். சட்டப்படியான இந்தக் கோரிக்கைகளை முன் வைத்தற்காக, சங்க முன்னணியாளர்கள் 8 பேரை பணியிடை நீக்கம் செய்தது. இந்நிலையில் தம்மோடு பணிபுரிந்துவந்த 8 தொழிலாளர்கள் அநியாயமாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, அவர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டுமென்ற கோரிக்கைகளுடன் கடந்த 03.08.2018 அன்று முதல் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர், தூசான் தொழிலாளர்கள். உள்ளிருப்புப் போராட்டத்தை ஆதரித்து பல்வேறு ஆலைத் தொழிலாளர்களும், தூசான் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

தேன்கூட்டில் கை வைத்த கதையாக எட்டுபேரை பணியிடை நீக்கம் செய்யப் போக, பக்கத்து கம்பெனியில் பணியாற்றும் தொழிலாளர்களும் போராட்டத்தை ஆதரிக்கத் தொடங்கியதையடுத்து தூசான் நிர்வாகத்திற்கு ஆத்திரம் தலைக்கேறியது. சீப்பை ஒளித்துவைத்தால் கல்யாணம் நின்றுபோய்விடும் என்பதுபோல, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகளான, தண்ணீர் உணவு, கழிப்பறை, மின்சாரம் ஆகியவற்றை துண்டித்தது.

நிர்வாகத்தின் இத்தகைய வக்கிரமான நடவடிக்கைகள் தொழிலாளர்களின் போராட்டத்தை துவண்டு போகச் செய்துவிடவில்லை. மாறாக, வர்க்க ஒற்றுமையுடன் போராட்ட எல்லையை விரிவுபடுத்தினர். அடக்குமுறைக்கு எதிராக தங்கள் ஒற்றுமையை நிலைநாட்டினர். போராட்டக்களத்திலிருக்கும் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக பிரச்சினையை தீர்க்க முன்வராமல், தொழிலாளர்துறை நடத்திய பேச்சுவார்த்தைக்கும் உடன்படாமல் புழக்கடைவழியாக நீதிமன்றத்தில் முறையிட்டு, ஆலையிலிருந்து 100 மீட்டருக்குள் போராடக்கூடாது என்ற தீர்ப்பை விலைக்கு வாங்கி வந்தது, தூசான் நிர்வாகம்.

தூசான் நிர்வாகம் தூக்கி வீசிய எலும்புத்துண்டைக் கவ்விக் கொண்டு, கடந்த 18-08-18 அன்று ஆலைக்குள் நுழைந்தது பூந்தமல்லி போலீசு. நீதிமன்ற காகிதத்தைக் காட்டி தொழிலாளர்களை கலைந்துப் போகச்சொன்னது. தொழிலாளர்கள் உறுதியுடன் போராட்டத்தை தொடர்ந்ததையடுத்து, அவர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்தது போலீசு.

தொழிலாளர்களின் நியாயமானப் போராட்டத்துக்கு ஆதரவாகவும், தூசான் நிர்வாகம் மற்றும் அதன் எடுபிடி போலீசு கும்பலின் அடாவடித்தனத்தைக் கண்டித்தும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்த தூசான் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்களையும், பு.ஜ.தொ.மு. மாநில பொருளாளர் பா.விஜயகுமார் உள்ளிட்ட சங்க முன்னணியாளர்களையும் சேர்த்தே கைது செய்தது, பூந்தமல்லி போலீசு. கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தொழிலாளர்களை தொழிற்சங்கத்தலைவர்கள் கூட சந்திக்க அனுமதி மறுத்தது.

கைது நடவடிக்கையைக் கண்டித்து சுவரொட்டிகள் மூலம் அம்பலப்படுத்தியதோடு, அருகாமை பகுதிகளில் செயல்படும் ஆலைகளிலும், பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மத்தியில் ஆலைவாயில் கூட்டங்களை நடத்தி தூசான் தொழிலாளர்களுக்கு ஆதரவைத் திரட்டும் வேலையில் இறங்கியது, பு.ஜ.தொ.மு.

நிலைமை கைமீறிபோவதை உணர்ந்த தூசான் நிர்வாகம், 3 தொழிலாளர்களது பணியிடை நீக்க நடவடிக்கையைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகப் பின்வாங்கியுள்ளது. 27-08-18 அன்று தொழிலாளர் துணை ஆணையர் (சமரசம்)-2 முன்னிலையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிப்பதாக ஒப்புக் கொண்டுள்ளது, தூசான் நிர்வாகம். இதன்காரணமாக வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ள தொழிலாளர்கள் 21-08-18 முதல் பணிக்குத் திரும்பியுள்ளனர். 27-08-18 அன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் நிர்வாகம் நடந்துகொள்வதைப் பொறுத்து தமது அடுத்தகட்ட போராட்டம் அமையும் என்றும் எச்சரித்துள்ளனர், தொழிலாளர்கள்.

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடுபுதுச்சேரி, 9444442374.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க