அரசு: அனைவருக்கும் பொதுவானதோ, ஜனநாயகமானதோ அல்ல! – 4
மறுகாலனியாக்கத்துக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும் அரசுக் கட்டமைப்பு
தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற புதிய தாராளவாத கட்டுமானச் சீர்திருத்தங்கள் புகுத்தப்பட்ட 1991-ம் ஆண்டிலிருந்து – சரியாகச் சொன்னால் மேல்நிலை வல்லரசுகளின் உலக மேலாதிக்கத்திற்கான, சர்வதேசியமயமாகி பிரம்மாண்டமாகப் பெருகிவிட்ட நிதிமூலதனம் மற்றும் தேசங்கடந்த தொழில் கழகங்கள் மற்றும் அவர்களின் அடிவருடிகளான இந்தியப் பெருமுதலாளிகளான தரகு அதிகாரவர்க்க முதலாளிகள் ஆகியோரின் தடையற்ற சுரண்டலுக்கான, நமது பணம், நமது உழைப்புச் சக்தி, அரசு சொத்துக்கள், நாட்டின் இயற்கை வளங்கள் ஆகியவற்றை பகற்கொள்ளையடிப்பதற்கான இந்த மறுகாலனியாதிக்க கொள்கைகளும் திட்டங்களும் புகுத்தப்பட்ட 1991-ம் ஆண்டிலிருந்து – கடந்த இருபது ஆண்டுகளில், இவற்றின் இந்த நோக்கங்களுக்கு அடிபணிந்து அப்படியே நிறைவேற்றும் வகையில் அரசு, அரசியல் கட்சிகள், தேர்தல் ஆகியவைகளின் பாத்திரம், கட்டமைப்பு, செயல்படும் முறைகள் ஆகியவையெல்லாம் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.
மறுகாலனியாதிக்கக் கொள்கைகள் புகுத்தப்படுவதற்கு முன்பு, அன்னிய மூலதனத்தின் மீதான தேசிய அரசுகளின் அதிகாரம் கேள்விக்கிடமற்றது என்றும், இந்த அதிகாரம் தேசிய இறையாண்மையின் பிரிக்கவொண்ணாத அங்கம் என்றும் சொல்லப்பட்டது. நடைமுறையில் இது முழு அளவில் இல்லை; நவீன காலனிய கொள்கைகளுக்கு ஏற்ப அரைகுறையாகவே இருந்தது. இந்த அதிகாரத்தின் அடிப்படையில்தான் ஏகாதிபத்திய நிறுவனங்களின் சொத்துடைமைகளை முன்பு இந்திய அரசு நாட்டுடைமை ஆக்கியது. ஏகாதிபத்திய தொழில் நிறுவனங்கள் உள்நாட்டு தொழில்களை அழிக்கின்ற வகையிலான முறைகேடான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும், உள்நாட்டு அரசியலில் தலையிடுவதையும் தடுக்க தனிச் சிறப்பான சட்டங்களை இயற்றியது. (அன்னியச் செலாவணியை நெறிப்படுத்தும் சட்டம், ஏகபோக கட்டுப்பாடு வர்த்தக நடவடிக்கைகள் சட்டம் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகள்)
ஆனால், இன்று மறுகாலனியாதிக்க கொள்கைகள் புகுத்தப்பட்டதிலிருந்து அதன் தேவைக்கேற்ப அரசின் கட்டுமானமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நிதி தாராளமயமாக்கல் மற்றும் மூலதனக் கணக்கு தாராளமயமாக்கல் என்ற ‘சீர்திருத்தங்கள்’ மூலம் சர்வதேச நிதி மூலதனத்தின் ஆணைக்கு மட்டும் சேவை செய்யும் பணிப்பெண்ணாக அரசின் பாத்திரமும் சட்டதிட்டங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. தேசங் கடந்த தொழிற்கழகங்கள் எப்படியெல்லாம் விரும்புகிறார்களோ அப்படியெல்லாம் நமது நாட்டின் இயற்கை வளங்களையும், அரசு சொத்துக்களையும் மக்களின் உழைப்புச் சக்தியையும், பொதுத்துறையையும் பகற்கொள்ளையடிப்பதற்கான கருவியாக, ஆயுதமாக அரசின் கட்டுமானமும் சட்டதிட்டங்களும் மாற்றப்பட்டு வருகின்றன. அமெரிக்க மேல்நிலை வல்லரசின் உலகமேலாதிக்கத்திற்கு அடியாளாகச் செயல்படும் வகையில் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையும் இராணுவத்தின் பாத்திரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
எனவே, நாம் வழக்கமாகச் சொல்லும் முதலாளித்துவ போலி ஜனநாயக வகைப்பட்ட அரசு, அரசியல் கட்சிகள், தேர்தல் முறைகள் ஆகியவற்றின் பாத்திரம், கட்டமைப்பு, செயல்பாடுகள் எல்லாம் மறுகாலனியாதிக்க காலகட்டத்தில் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. தேசிய அரசுகள், தேசிய இறையாண்மை கொண்ட அரசுகள் என்பவையெல்லாம் தகர்க்கப்பட்டு, உலக வர்த்தகக் கழகத்தின் ஆட்சியை அமல்படுத்தும் கருவியாகவே இந்திய அரசு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
காலனியாதிக்க எதிர்ப்புக் கட்டத்தின் மிச்சசொச்சங்களாகவும், வளர்முக நாடான இந்தியாவின் அரைகுறை இறையாண்மையானது சர்வதேச நிதி மூலதனத்திற்கு அன்று உருவாக்கி வைத்திருந்த தடைக்கற்களாகவும் இருந்த விதிமுறைகள், சட்டங்கள் ஆகியவை தகர்க்கப்பட்டு, அந்த இடத்தில் புதிய விதிமுறைகள் – சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. உலக மேலாதிக்க அரசாக உருவாக்கப்பட்டிருக்கும் உலக வர்த்தகக் கழகத்தின் கைப்பாவையாக, இந்திய அரசின் கட்டமைப்பு மாற்றப்பட்டு வருகின்றது. தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் பெரும்பான்மை மக்களின் அரசியல் கோரிக்கைகள் மற்றும் பொருளாதாரத் தேவைகள் தொடர்பான சட்டங்களை இயற்றவோ திட்டங்களைத் தீட்டவோ இல்லாமல், சர்வதேச நிதி மூலதனத்தின் ஆணைக்கு ஆடுவதாகவே அரசு மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது.
பழைய உள்ளடக்கத்தையும்கூட இழந்துவரும் போலி ஜனநாயகம்!
மறுகாலனியாதிக்கத்தின் விளைவாக, இறையாண்மையை முற்றிலுமாக இழந்து வருகின்ற இந்தியாவில், பழைய முறையிலான முதலாளித்துவ போலி ஜனநாயகமே கூடத் தனது உள்ளடக்கத்தை முற்றிலுமாக இழந்து வருகின்றது. அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை என்பது மட்டுமே ஜனநாயகத்திற்கான அளவுகோலாக மாற்றப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கங்கள் வழியே தனியார்மயம், தாராளமயக் கொள்கைகளை நிறைவேற்றிக்கொள்ள சட்டபூர்வமாக நியாயம் தேடிக் கொள்ளவே ஆளும் வர்க்கங்கள் தேர்தல்களை இன்று நடத்துகின்றன.
முதலாளித்துவ போலி ஜனநாயகத்தின் வர்க்க சாராம்சம் – வர்க்க உள்ளடக்கம் மாறாமல் இருக்கும்போதே (அதில் கூட தேசங்கடந்த தொழில்கழக முதலாளிகள் மற்றும் சர்வதேச நிதிமூலதனக் கும்பல்கள் மற்றும் அவர்களின் இளைய பங்காளிகளாக உள்ள தேசங்கடந்த தரகு அதிகார வர்க்க முதலாளிகளின் பலம் அதிகமாக உள்ளதுடன் அவர்கள் ஆதிக்கத்திலும் உள்ளனர். நிலப்பிரபுக்களின் எண்ணிக்கையும் பலமும் பங்கும் மிகக் குறைந்ததாகவே மாறிவிட்டது) அரசு எந்திரம், அரசாங்கம், அரசியல் கட்சிகள் ஆகியவைகளின் கட்டுமானம், பாத்திரம், பணிகள், சட்டதிட்டங்கள் எல்லாம் மாற்றப்பட்டு அதற்கேற்ப ‘ஜனநாயக தேர்தலின்’ நோக்கமும் அதில் மக்களின் பாத்திரமும் வெட்டிச் சுருக்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளன.
எனவே, எந்தக் கட்சி அல்லது கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தாலும் இந்த அரசை மறுகாலனிய சுரண்டலுக்கும் ஆதிக்கத்திற்கும்தான் பயன்படுத்த முடியும். வேறு எந்த வகையிலும் பயன்படுத்த முடியாத வகையிலும், அத்தகைய தன்மையிலும்தான் கட்டப்பட்டிருக்கின்றது. மறுகாலனியாதிக்கம் என்ற சட்டகத்திற்குள் நின்று கொண்டு சில சீர்திருத்தங்கள் செய்யலாம்; மக்களுக்குச் சில சலுகைகள், மானியங்கள், இலவசங்கள் வழங்கலாம்; முற்றாக, எதிரான கொள்கைகளை அமல்படுத்த முடியாது; அமல்படுத்த முயற்சிப்போர் தூக்கியெறியப்படுவார்கள்.
நாடாளுமன்ற ஜனநாயகம் என்ற வேலிக்கு வெளியே நிற்கின்ற நக்சல்பாரி புரட்சியாளர்களால் மட்டும்தான், இந்த அரசு எந்திரத்தை தகர்த்தெறிந்து, மறுகாலனியாதிக்கத்தை தூக்கியெறிந்து நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் உண்மையாக சேவை செய்கிற ஒரு புதிய அரசமைப்பை, புதிய ஜனநாயக அரசமைப்பை உருவாக்க முடியும். ஆகையால், வாக்களிக்கும் உரிமை என்பது ஆக மிகக் கொடூரமான மறுகாலனியாதிக்க வடிவிலான ஆதிக்கத்தையும் சுரண்டலையும் மக்கள் மீது திணித்து அமல்நடத்த, எந்தக் கட்சி அல்லது கூட்டணிக்கு அதிகாரம் கொடுக்கலாம் என்பதைத் தீர்மானிப்பதற்கான உரிமை மட்டுமே.
தேர்தல் அரசியல் என்பது காந்தியம், சோசலிசம், தாராளவாதம், சமூகநீதி என்று வெவ்வேறு கொள்கை பேசும் கட்சிகளுக்கிடையிலான மோதலாக இனிமேலும் இல்லாமல் போய்விட்டதால், சில நட்சத்திர தலைவர்களுக்கிடையிலான போட்டியாகவும், கட்சிகளுக்கிடையிலான விளம்பரப் போராகவும், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் போன்ற நட்சத்திரங்களால் விளம்பரப்படுத்தப்படும் சந்தைப் பொருளாகவும் விலைக்கு வாங்கப்படும் பண்டமாகவும் ஓட்டுச்சீட்டு அரசியல் மாற்றப்பட்டு விட்டது.
மறுகாலனியாக்கத்துக்கு நியாயம் தேட மட்டுமே தேர்தல்!
இன்று எல்லா முதலாளித்துவ அரசியல் கட்சிகளும், சீர்திருத்தவாத, போலி கம்யூனிச, போலி புரட்சிகர கட்சிகள் அனைத்தும் நேரடியாகவோ, சுற்றி வளைத்தோ மறுகாலனியாக்கத்திற்குச் சேவை செய்கின்ற கட்சிகளாகவே மாறிவிட்டன; கொள்கைகள், இலட்சியங்கள், நோக்கங்கள் என்று எதுவும் இக்கட்சிகளுக்கு கிடையாது. கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கு அடியாளாக வேலை செய்யும் எஸ் பாஸ்” ஆட்களாக மாறிவிட்டன.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இன்னின்ன கொள்கைகள்,வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துவோம்; இவ்வாறு வேலையின்மையைப் போக்குவோம்; விலைவாசியைக் குறைக்க இன்னின்ன நடவடிக்கைகள் எடுப்போம் என்று நாட்டுநலன், மக்கள் நலனை முன்னிறுத்துகின்ற கொள்கைகளோ, வளர்ச்சித் திட்டங்களோ, பொருளாதாரத் திட்டங்களோ எதுவும் இக்கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இல்லை; தப்பித் தவறி சிலவற்றை அவர்கள் குறிப்பிட்டாலும், அதெல்லாம் ‘வாக்காளர்களைக் கவர வேண்டும், மற்றபடி செய்யப் போவதில்லை’ என்று முடிவெடுத்துக் கொண்டுதான் குறிப்பிடுகிறார்கள்.
“சும்மா ஒரு சம்பிரதாயத்திற்குத்தான் தேர்தல் அறிக்கைகளை வெளியிடுகிறோம்; யார் இதைப் படித்து நினைவில் வைத்துக் கொண்டு கேட்கப் போகிறார்கள். அப்படியே கேட்டாலும் சமயத்திற்கு தகுந்த ஒரு சாமர்த்தியமான பதிலைச் சொல்லிக் கொள்ளலாம்” என்று உள்மனதில் கருதிக் கொண்டுதான் தேர்தல் அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். ஒரே கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் வேறுபட்ட இலவசங்கள், முரண்பட்ட வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கைகள் இதைத்தான் காட்டுகின்றன. மேலும், “எப்படி மாற்றி பித்தலாட்டம் செய்தாலும் ஒன்றும் ஆகிவிடாது; நமக்கு ஓட்டு கிடைக்கும், அந்த அளவுக்கு மக்கள் இளிச்சவாயர்கள், ஏமாளிகள்” என்று மக்களை மிகவும் மலிவாக, இழிவாக, அற்பர்களாகவே இவர்கள் கருதுகிறார்கள்.
நமது வரிப்பணம், அரசு சொத்துகள், நாட்டின் இயற்கை வளங்கள், பொதுத்துறைகள், மக்களின் உழைப்பாற்றல் ஆகியவற்றை கார்ப்பரேட் முதலாளிகள் பகற்கொள்ளையடிக்கவும் இவர்களின் இலாப வேட்டைக்காக விவசாயிகள், சிறு உற்பத்தியாளர்கள், சிறு வணிகர்கள், குட்டி முதலாளிகள், ஆதிவாசிகள் ஆகியவர்களிடமிருந்து உற்பத்திச் சாதனங்கள் மற்றும் வாழ்வாதாரங்களைப் பலாத்காரமாகப் பறித்துக் கொண்டு, அவர்களை நகர்ப்புற உழைப்புச் சந்தைகளை நோக்கி விசிறியடிப்பதிலும், அங்கு இந்த கார்ப்பரேட் முதலாளிகள் அவர்களைக் கொடூரமாகச் சுரண்டிக் கொள்ளை இலாபமடிக்கவும் கொள்கை முடிவெடுத்து, சட்டபூர்வமாக அரசு எந்திரத்தை ஒரு கருவியாக பயன்படுத்திச் சேவை செய்யும் கொள்கையில் மட்டும் எல்லாக் கட்சிகளும் ஓரணியில் நிற்கின்றனர். கார்ப்பரேட் முதலாளிகள்தான் ஊழலுக்கான ஊற்றுக்கண் என்ற உண்மையையும் ஊழலைவிட பகற்கொள்ளையில் இவர்கள் அடிக்கும் பணம் பன்மடங்கு அதிகம் என்ற உண்மையையும் வெளியில் சொல்லாதிருப்பதிலும் இவர்கள் ஓரணியில் இருக்கின்றனர். இந்தச் சேவையை யார் சிறப்பாக செய்வது என்று போட்டி போட்டுக் கொள்கின்றனர்.
கார்ப்பரேட் முதலாளிகள் பகற்கொள்ளையடிக்க சேவை செய்து, அதற்கு சேவைக் கட்டணமாக (அதாவது இலஞ்சமாக) ஒரு கவளத்தை (யானைக்கு கவளம் கவளமாக, அதாவது பெரிய பெரிய உருண்டையாகத்தான் உணவளிப்பார்கள். அதில் ஒரு கவளத்தை எடுத்துப் போட்டால் பல்லாயிரக்கணக்கான எறும்புகளுக்கு தீனியாகும் என்பார்கள்) தாங்கள் எடுத்துக் கொண்டு கொழுக்கலாம் என்பதற்காக மட்டுமே தேர்தலில் நிற்கிறார்கள்; இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை விவகாரத்தில் கார்ப்பரேட் யானைகளின் வயிற்றுக்குள் போன பல கவளங்கள் போக ஒரு கவளத்தைத்தான் கருணாநிதி, ராஜாத்தி அம்மாள், தயாளு அம்மாள், கனிமொழி, ஆ.ராசா, சோனியா குடும்பத்தினர் ஆகியோர் பங்கிட்டுக் கொண்டனர். கார்ப்பரேட் முதலாளிகளுக்கிடையிலான போட்டி காரணமாகவோ, கட்சித் தலைவர்களின் குடும்ப சண்டை, கோஷ்டி சண்டை காரணமாகவோ இந்த இலஞ்சம் அம்பலமானால், அதைப் பயன்படுத்தி, வாய்ப்பிழந்த எதிர்கட்சி கூப்பாடு போடுவதும், பின்னர் இந்த இலஞ்சம் – முறைகேடுகளை சொல்லி, அடுத்த தேர்தலில் பதவிக்கு வந்து காஞ்ச மாடு கம்பங் கொல்லையில் புகுந்த மாதிரி பதவியிலிருந்த கட்சிக்காரர்களைவிடப் பன்மடங்கு சம்பாதிப்பதும், அதற்கடுத்த தேர்தலில், பழைய கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்து இவர்களைவிட பன்மடங்கு கூடுதலாகக் கொள்ளையடிப்பதும் – என மாற்றி மாற்றி கோடீசுவர அயோக்கியன்கள் கொள்ளையடிப்பதற்கான சாதனமாகவே தேர்தல் இருக்கின்றது. எனவே, ஓட்டளிப்பது, வாக்குரிமை என்பது நமது பணத்தைக் கோடிகோடியாகச் சுருட்டிக் கொள்ள எந்த கோடீசுவர அயோக்கியனைத் தேர்ந்தெடுப்பது, எந்த கபட வஞ்சகனை முதல்வராக்குவது என்பதற்கான உரிமை மட்டுமே!
முதலாளிகளாகும் அரசியல்வாதிகள்.. அரசியல்வாதிகளாகும் முதலாளிகள்!
சட்டமன்றத் தேர்தலுக்காக ஒரு தொகுதியில் குறைந்தது ஐந்து கோடி ரூபாய்கள் செலவு செய்யத் தயாராக இருக்கின்றவனை மட்டும்தான் எல்லாக் கட்சிகளும் வேட்பாளராக நிறுத்துகின்றன. எழுதப்படாத ஒரு விதியாகவே இது செயல்படுத்தப்படுகின்றது. ஒரு தேர்தலுக்கு ஐந்து கோடி ரூபாய் செலவு செய்யும் தகுதியுள்ள கோடீசுவரன் யோக்கியனாக இருக்க முடியாது என்பதும் யோக்கியன் எவனும் இப்படிப்பட்ட கோடீசுவரர்களாக முடியாது என்பதும் எல்லோருக்கும் தெரிந்த ஓர் உண்மை. அவன் ஐந்துகோடியை முதலீடு செய்வதே சில பத்து கோடி ரூபாய்களைக் கொள்ளையடிக்கலாம் என்பதற்காகத்தான்.
மேலும், ஏற்கெனவே ஓரிடத்தில் குறிப்பிட்டபடி, முதலாளிகளே அரசியல்வாதிகளாகவும் அரசியல்வாதிகளே முதலாளிகளாகவும் மாறி, இணைந்து ஒரு ஒட்டுரக முதலாளித்துவ பிரிவு உருவாகியுள்ளது. எனவே, இவர்களைப் பொருத்தவரையில் தனியார்மயம் – தாராளமயம் என்ற மறுகாலனியாதிக்கக் கொள்கைகள் ஓர் அரசியல் கொள்கையாக அன்றி, சொந்தக் கொள்கையாகவே ஆகியுள்ளது. தரகு அதிகார வர்க்க முதலாளிகளான பஜாஜ், மல்லையா, அனில் அம்பானி ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமனம் பெற்றிருக்கிறார்கள். கருணாநிதி போன்றோரின் குடும்பம் ஒரு தரகு அதிகார முதலாளித்துவ குடும்பமாக மாறியுள்ளது போன்றவை சில எடுத்துக் காட்டுகள்; இன்று இவர்களின் வாரிசுகள் அரசியலில் பெருமளவு நுழைந்துள்ளனர்.
பல்வேறு தொழில், சேவைத்துறைகளை கண்காணிக்கவும் நெறிப்படுத்தவும் அமைக்கப்படுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் இந்த முதலாளிகளே இடம் பெறுகின்றனர். எடுத்துக்காட்டாக, கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் என்ற தனியார் விமானக் கம்பெனியின் முதலாளி விஜய் மல்லையா சிவில் விமான போக்குவரத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களில் ஒருவர். தகவல் ஒலிபரப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் லோக்மத் பத்திரிகை குழுமத்தின் முதலாளி விஜய் தொரிதா ஓர் உறுப்பினர். தரகு அதிகாரவர்க்க முதலாளிகள் பலரின் கம்பெனி விவகாரங்கள் தொடர்பான ஆலோசகராகவும் வழக்குரைஞராகவும் செயல்பட்ட சிதம்பரம்தான் பின்னர் நிதியமைச்சராக நியமனம் பெற்றார்.
எனவே, வறுமைக் கோட்டிற்கு கீழே வாழுகின்ற மக்களையும், தற்கொலைக்குத் தள்ளப்படும் விவசாயிகளையும் இன்னும் பிற உழைக்கும் மக்களையும், கோடீசுவரர்களாக இருக்கும் 234 எம்.எல்.ஏ.க்களும் சட்டமன்றமும் அமைச்சரவையும் வாழ வைக்கும் என்று நம்பி ஓட்டு போடுவது மிகப் பெரிய ஏமாளித்தனம்! இதனை உரிமை என்று சொல்வது ஆக மிகப் பெரிய பித்தலாட்டம்!
(தொடரும்)
________________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2015
________________________________
முந்தைய பகுதிகள்