Wednesday, December 8, 2021
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் அரசு : அனைவருக்கும் பொதுவானதோ ஜனநாயகமானதோ அல்ல !

அரசு : அனைவருக்கும் பொதுவானதோ ஜனநாயகமானதோ அல்ல !

-

(தொடர் கட்டுரை: பகுதி-1)

றுகாலனியாக்கத்தின் விளைவாக அரசுக் கட்டமைப்பு, அரசாங்கம், அவற்றின் அதிகாரங்கள்,தேர்தல் அரசியல் ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் குறித்தும், அரசியலிலிருந்து மக்கள் மென்மேலும் விலக்கி வைக்கப்பட்டு அரசியலற்றவர்கள் ஆக்கப்படுவது குறித்தும் இந்த நீண்ட கட்டுரை விளக்குகிறது. ஓரளவு அரசியல் தெரிந்தவர்கள், அக்கறை உள்ளவர்கள் இதைப் படித்து புரிந்து கொள்ள முடியும் என நம்புகிறோம். இந்திய ஜனநாயகம் போலி ஜனநாயகமாக மட்டுமல்ல, ஒரு பாசிச அரசாகவும் மாறிவருகிறது என்பதை இந்தக் கட்டுரை தரவுகளோடும், ஆய்வுகளோடும் நிறுவுகிறது.

முதலாளிகளே அரசியல்வாதிகளாகவும், அரசியல்வாதிகளே முதலாளிகளாகவும் மாறும் நிலையில், கார்ப்பரேட் கொள்ளையர்களே அரசு, அரசாங்கம் இரண்டையும் தீர்மானிக்கும் நிலையிலும், இந்தியாவின் விதி ஏகாதிபத்தியங்களால் எழுதப்படும் நிலையில் ஒட்டுமொத்தமாக இன்று நாடு இருக்கும் நிலையில் அதை மாற்றும் கடமையும் நமக்கிருக்கிறது. இதன் பொருட்டு அரசியல் ரீதியில் நாம் செயல்படவேண்டிய கடமையையும் இத்தொடர் கட்டுரை கோருகிறது.

***

பொதுவாக, அரசியலற்ற பொதுமக்கள் மட்டுமல்ல, வர்க்கப் பார்வையற்ற அரசியல் நோக்கர்களேகூட அரசு என்பது அனைத்து மக்களுக்கும் பொதுவானதென்றும் ஜனநாயகபூர்வமானதென்றும் நம்புகிறார்கள். நமது நாட்டில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம், மறுகாலனியக் கொள்கைகள் புகுத்தப்பட்டதோடு சேர்த்து, அவற்றுக்கேற்ப அரசின் பாத்திரமே மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அது, உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கான ஒரு எந்திரம், ஒரு வன்முறைக் கருவி என்ற அதன் பாத்திரம் மேலும் மேலும் ஆக்டோபஸ் தன்மை கொண்டதாக்கப்பட்டு இறுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. சொல்லப்படுகின்ற போலி ஜனநாயகத்தில் வழங்கப்பட்டுள்ள ஒரு சில சிவில், ஜனநாயக உரிமைகள்கூட வெட்டிச் சுருக்கப்படுகின்றன. ஊர்வலங்கள், பேரணிகள், மாநாடுகள், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், தெருமுனைக் கூட்டங்கள் நடத்தும் இடங்கள், மக்கள் கூடாத ஒதுக்குப்புறமான இடங்களாக வரையறுக்கப்படுகின்றன. பத்து மணிக்கு மேல் கூட்டங்கள் நடத்தப்படக் கூடாது, சுவரொட்டிகள் ஒட்டத் தடை, தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்படுவது – என இதற்கு எடுத்துக்காட்டுகள் ஏராளமாக உள்ளன. இதற்கேற்ப சட்டங்களும் கடுமையாக்கப்பட்டுள்ளன. படிப்படியாக ஒரு போலீசு அரசாக, பாசிசத்தன்மை கொண்டதாக அரசு மாற்றப்பட்டு வருகின்றது.

மக்களின் வாழ்வாதாரங்களைப் பிடுங்கி கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைக்கும் தரகனாக அரசு

மோடி - அதானி தரகு வேலை
ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து பகுதியில் அமைந்துள்ள நிலக்கரிச் சுரங்கத்தை தனக்கு நெருக்கமான தரகு முதலாளி அதானிக்கு வாங்கிக் கொடுப்பதற்காக ஆஸ்திரேலிய பிரதமர் மற்றும் அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. (கோப்புப் படம்)

இரண்டாவதாக, விவசாயிகள், விவசாயம் சார்ந்த துணைத் தொழில் செய்பவர்கள், விசைத்தறி, சிறு பட்டறைகள் உட்பட சிறு தொழில் நடத்துபவர்கள், சிறு வணிகர்கள் ஆகியோரிடமிருந்து அவர்களது உற்பத்தி சாதனங்களையும் வாழ்வாதாரங்களையும் பறித்தெடுத்துக் கொண்டு (பலாத்காரமாகவோ, நிர்ப்பந்தங்கள் மூலமாகவோ, பணத்தைக் கொடுத்தோ) அவர்களைக் கூலி உழைப்பை மட்டும் நம்பி வாழும் ஏதுமற்றோராக நகர்ப்புறங்களைக் நோக்கி வீசியடிக்கும் ஒரு போக்கை அரசு அமல்படுத்தி வருகின்றது.

சட்டிஸ்கர், ஜார்கண்ட் போன்ற மிகவும் பின்தங்கிய மாநிலங்கள் முதல் பஞ்சாப், மகாராட்டிரா, குஜராத், தமிழ்நாடு போன்று வளர்ந்த மாநிலங்கள் வரை, இந்தியா முழுமையும் நடக்கும் இந்த நிகழ்ச்சிப்போக்கின் விளைவாக இந்தியா முழுமைக்கும் மக்கள் வேலைதேடிச் செல்வது அதிகரித்து வருகின்றது. வேலைதேடி வெளி நாடுகளுக்கு செல்வதும் அதிகரித்து வருகின்றது. ஐரோப்பாவில் நடந்த புராதன திரட்சியை ஒத்த இந்த நிகழ்ச்சிப்போக்கின் விளைவாக, பருத்துக் கொழுத்த பன்னாட்டுக் கம்பெனிகளும், தரகு அதிகார வர்க்க முதலாளிகளும், வீடு, வீட்டுமனைத் தொழில் அதிபர்களும் பறித்தெடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் மக்களிடமிருந்து உற்பத்திச் சாதனங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை அப்படியே அள்ளிச் சுருட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் விவசாயம் மற்றும் எல்லாத் தொழில்களையும் தங்களது ஏகபோக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர். இதற்கான அடியாட்படையாக, ஆலோசகராக, தாதிப்பெண்ணாக, புரோக்கராக, வேலைக்காரனாக, கருவியாக அரசு மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.

மேலும், இவ்வாறு விவசாயிகள் மற்றும் சிறு தொழிலதிபர்கள், வணிகர்களிடமிருந்து பறிக்கப்பட்ட உற்பத்திச் சாதனங்களைப் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும், தரகு அதிகார வர்க்க முதலாளிகளுக்கும் வாங்கித் தரும் புரோக்கராக அரசு நிறுவனங்கள் செயல்படுகின்றன. விவசாய நிலங்கள், புறம்போக்கு நிலங்களை வாங்குவதற்கு கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளர் (ஆர்.ஐ), வட்டாட்சியர், நில அளவை ஊழியர்கள், சொத்துப் பத்திரப் பதிவு அலுவலர்கள், ஓட்டுக் கட்சி பிரமுகர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆகியோர் கூட்டணி அமைத்துக் கொண்டு செயல்படுகின்றனர். அரசே இதை ஊக்குவிக்கிறது.

நிலம் கையகப்படுத்தும் சட்டம் - ஆர்ப்பாட்டம்.
முப்போகமும் விளையக்கூடிய செழிப்பான விளைநிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பிடுங்கிக் கொடுக்கும் நோக்கோடு மோடி அரசு கொண்டு வந்திருக்கும் நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை எதிர்த்து விவசாயிகளும் எதிர்க்கட்சிகளும் இணைந்து டெல்லியில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

உணவு தானிய உற்பத்தி, பூ, பழம், காய்கறிகள் ஆகியவற்றின் உற்பத்தி, கொள்முதல், வினியோகம், விற்பனை, பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளைத் தயாரித்தல், விற்றல் ஆகிய தொழில்களில் ஈடுபடவும் இவற்றிற்காக கொள்முதல் நிலையங்கள், குளிரூட்டப்பட்ட கிடங்குகள் கட்டிக் கொள்ளவும், முன்பேர வர்த்தகத்தில் ஈடுபடவும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் தரகு அதிகார நிறுவனங்களுக்கும் அரசு தாராள அனுமதி அளித்துள்ளது.

இவர்களின் சேவைக்காக, விவசாயப் பல்கலைக்கழகங்கள், விவசாய ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில் (ICAR), வேளாண் அமைச்சகங்கள், வேளாண் விரிவாக்க அலுவலகங்கள், பல்துறை வல்லுனர் குழுக்கள் ஆகியவை பணிக்கப்பட்டுள்ளன. இவையனைத்தையும் இயக்க பன்னாட்டு மற்றும் தரகு அதிகார வர்க்க முதலாளித்துவக் கம்பெனிகளின் தலைமை நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், வல்லுனர்கள், அமெரிக்க – பன்னாட்டு வேளாண் உணவுக் கழக நிறுவனத் தலைவர்கள் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒவ்வொரு துறையிலும் இந்த முறையில் அரசின் பல்வேறு நிறுவனங்கள், அவர்களின் நோக்கங்கள், திட்டங்கள், பணிகள் ஆகியவை மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

மறுகாலனியாக்க சுரண்டலின் நேரடி அடியாளாக அரசு

மூன்றாவதாக, ஐரோப்பிய புராதனத் திரட்சியை ஒத்ததொரு நிகழ்ச்சிப் போக்கின் விளைவாக, நகர்ப்புறங்களை நோக்கி விசிறியடிக்கப்படும் கோடிக்கணக்கான உழைப்பாளி மக்கள் பெரும் ரிசர்வ் பட்டாளமாகத் திரண்டு நிற்கின்றனர். இதைப் பயன்படுத்தி அவர்களை மிகக் குறைந்த கூலிக்கு (ஒரு கட்டிடத் தொழிலாளியோ அல்லது வேறு ஒரு தொழிலாளியோ தினக்கூலியாக ரூ 200, 300 கூட பெறலாம். ஆனால் அவர்களின் உழைப்பைச் சுரண்டி முதலாளிகள் அடைகின்ற இலாப விகிதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போதும், கல்வி, மருத்துவம், இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு உழைப்பாளி மக்கள் செலவிடும் தொகை அதிகரித்துக் கொண்டே போவதோடும் சேர்த்துப் பார்க்கும் போதும்தான் இது மிகக் குறைந்த கூலி என்பது தெளிவாகப் புலப்படும்) அன்றாடக் கூலிகளாகவும் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும் வேலைக்கமர்த்தி 12 மணி நேரம் 14 மணிநேரம், இரண்டு ஷிப்டுகளை தொடர்ந்தாற்போல் செய்ய வைப்பது, எந்த உரிமையும் இன்றி கொத்தடிமைகள் போல நடத்துவது – என ஒட்டச் சுரண்டிக் கொழுக்கின்றனர், பன்னாட்டுக் கம்பெனி முதலாளிகளும் தரகு அதிகார வர்க்க முதலாளிகளும்.

11-state-captionசாதாரண தொழிலாளர்கள், அரைத் திறனாளி தொழிலாளர்கள் மட்டுமல்ல; தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிற பொறியியல் துறைகளில் பணியமர்த்தப்படும் பொறியாளர்கள், கணினி வல்லுனர்கள் வரை அனைவரும் இந்த வகையான தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்களாக கொடுமையான கொத்தடிமைச் சுரண்டலுக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர். தொழிற்சங்கம் அமைப்பது என்ற பேச்செடுத்தாலே வேலையை விட்டு தூக்கியெறியப்படுகின்றனர். வெள்ளைக்காலர் தொழிலாளர்கள், வல்லுனர்கள் என்றழைக்கப்பட்ட இவர்கள்கூட இன்று வெள்ளை அடிமைகளாக ஆக்கப்பட்டுள்ளனர். இதற்கான அடியாளாக அரசு மாற்றப்பட்டிருக்கிறது.

மேலும், மத்திய-மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்கள், ஊழியர்கள், அதிகாரிகளின் ஊதியத்தை திட்டமிட்டே சில மடங்குகள் அதிகமாக கொடுப்பது; அதையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போவது; இதன் மூலம் பன்னாட்டுக் கம்பெனிகள், தரகு அதிகார வர்க்க முதலாளிகள் உற்பத்தி செய்யும் நுகர்பொருட்கள், வழங்கும் சேவைகள் ஆகியவற்றிற்கும் வீடு-மனை கட்டல், வாங்கல், விற்றல் அதிபர்களின் தொழிலுக்கும் தொடர்ந்து கிராக்கியை அதிகரித்து அவர்கள் கொள்ளை இலாபம் அடித்து கொழுக்க வைக்கும் கருவியாக அரசின் செயல்பாடு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதன் இன்னொரு பக்கம், பல்வேறு நிதி நிறுவனங்கள் தொடங்கவும் அவை தாராள முதலீடு திரட்டவும், அன்னிய முதலீடுகளை அதிகரித்தும், மேலே சொன்ன பிரிவினர்கள் நுகர்பொருட்கள், வீடுகள், மனைகள் வாங்குவதற்கும் கல்வி, மருத்துவத்திற்கும் ஏராளமான கடன்கள் வழங்கவும், அதற்கேற்ப மத்திய ரிசர்வ் வங்கி மூலம் வட்டியைக் குறைத்தும் ஏற்பாடுகள் செய்து தரும் புரோக்கராக அரசு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வட்டியில்லா கடன், குறைந்த வட்டியிலான கடன், சுலபத் தவணைகள் என்றெல்லாம் தனது முகவர்களை இந்த நிதி நிறுவனங்களும் பிறரும் அனுப்பி, இவர்களைப் பேசி மயக்கி கடன்காரர்கள் ஆக்குகிறார்கள். கடன் அட்டை வசதியும் இதற்கான சாதனமாக வினியோகிக்கப்படுகின்றது; தவணை கட்டத் தவறினால் அடியாட்களை விட்டு வசூலிக்கவும் சொல்கிறார்கள்; இவ்வாறு அரசாங்கத்தின் பணத்தை, மொத்த மக்களின் நிதியை நிதி நிறுவனங்கள் சுற்று வழியில் சுருட்ட அரசாங்கமே ஒரு சாதனமாக மாற்றப்பட்டுள்ளது.

கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கான கருவியாக அரசு

சத்தீஸ்கர் பழங்குடி மக்கள்
கார்ப்பரேட் நிறுவனங்கள் எவ்விதத் தடையும், எதிர்ப்பும் இன்றி இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதற்காகத் தமது வாழ்விடங்களிலிருந்து துரத்தப்பட்டு உள்நாட்டு அகதிகளாக ஆக்கப்பட்டுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள். (கோப்புப் படம்)

நான்காவதாக, அரசின் கையில் போதிய நிதியில்லை; புதிய முதலீடுகள் செய்ய நிதிப் பற்றாக்குறை உள்ளது என்ற முகாந்திரத்திலும், “பொதுத்துறை நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகின்றன; புதிய தொழில் நுட்பங்கள் புகுத்தப்பட்டு தொழில்துறை நவீனமாக்கப்பட வேண்டியுள்ளது” என்ற முகாந்திரத்திலும் கல்வி, மருத்துவம் போன்ற பல சேவைத் துறைகளிலும், பல உற்பத்தி துறைகளிலும் பருத்துக் கொழுத்த பன்னாட்டுக் கம்பெனிகளும் தரகு அதிகார வர்க்க முதலாளிகளும் புகுந்து கொள்ளை இலாபம் ஈட்ட தாராளமாக அனுமதிக்கப்படுகின்றன; பொதுத்துறை நிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கு அவர்களுக்கு விற்கப்படுகின்றன.

இலாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் பல ஆண்டுகளாக பாடுபட்டு உருவாக்கி வைத்திருக்கும் அடிப்படைக் கட்டுமானங்கள், சாதனங்கள், பிற வசதிகளை தனியார்துறையினர் பயன்படுத்தவும், அந்தப் பொதுத்துறை நிறுவனங்களுக்கே போட்டியாக செயல்படவும், காலப்போக்கில் இந்த பொதுத்துறை நிறுவனங்களை “நட்டத்தில்” இயங்கும் நிறுவனங்களாகவும் தனியார்துறையை விட மட்டமான சேவை வழங்கும் நிறுவனங்களாகவும் (எடுத்துக்காட்டாக பி.எஸ்.என்.எல்) மாற்றுவதையும் அரசே திட்டமிட்டு செய்கிறது. பின்னர், அந்தத் துறையையே கைகழுவுவதையும் செய்கிறது. உயிர்காக்கும் மருந்துகள் தயாரிக்கின்ற, கோடிக்கணக்கான மக்களுக்கு நோய் வராமல் தடுக்கும் தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களையும் தென்கிழக்கு ஆசியாவிலேயே அரசுத்துறையில் சிறந்து விளங்கும் இந்துஸ்தான் போட்டோ பிலிம் போன்ற நிறுவனங்களையும் கூட இந்த முறையில் தனியாருக்குத் தாரைவார்க்கும் தயாளனாக அரசு மாற்றப்பட்டுள்ளது.

தங்களிடம் நிதியில்லை, மூலதனம் இல்லை என்று சொல்லும் அரசே, இன்னொரு பக்கம், கார்ப்பரேட் பெரும் முதலாளிகள் (பருத்து கொழுத்த பன்னாட்டு முதலாளிகள் மற்றும் தரகு அதிகார வர்க்க முதலாளிகள்) தொழில் தொடங்க குறைந்த விலையில் விளைநிலங்களை வாங்கிக் கொடுப்பது, அரசு நிலங்களை அடிமாட்டு விலைக்கு விற்பது அல்லது நீண்டகால வாடகைக்கு விடுவது, மின்சாரம், தண்ணீர் போன்ற சேவைகளைக் குறைந்த விலையில் வழங்குவது, மானியங்கள், வரிச்சலுகைகள் அளிப்பது என்று அரசு நிதியை-நமது பணத்தை வாரிவாரி அவர்களுக்கு வழங்கிக் கொண்டுள்ளது. 2006-ம் ஆண்டிலிருந்து 2011-ம் ஆண்டு வரை இவ்வாறு மத்திய அரசு வழங்கிய வரிச்சலுகைகள் மட்டும் ரூ 22 இலட்சம் கோடிகளுக்கு மேல்! அதாவது, ஒரு நாளைக்கு 240 கோடி ரூபாய்களை தூக்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

11-state-cartoon-captionஇன்னொரு பக்கம் கார்ப்பரேட் முதலாளிகள் வரிஏய்ப்பு செய்வதற்கும், அந்தப் பணத்தை வெளிநாடுகளுக்கு கள்ளத்தனமான வழிகளில் கொண்டு செல்வதற்கும் பல வசதி, வாய்ப்புகளை அரசு செய்து கொடுத்துள்ளது. எடுத்துக்காட்டாக, மொரிசியஸ் நாட்டிலும் இந்தியாவிலும் பதிவு செய்யப்பட்ட கம்பெனிகளுக்கு இரட்டை வரியிலிருந்து சலுகை என்ற பெயரில் பணத்தை வெளியே கொண்டு செல்ல அனுமதிப்பது; ஏற்றுமதி, இறக்குமதி விதிகளில் சலுகை போன்ற வழிமுறைகள் மூலம் அனுமதிப்பது; இவ்வாறு வரிஏய்ப்பு மூலம் கார்ப்பரேட் முதலாளிகள் கருப்புப் பணமாக ஒரு நாளைக்கு 240 கோடி ரூபாய்களை வெளிநாடுகளுக்குக் கடத்தி வருகிறார்கள். இவ்வாறு பல ஆண்டுகளாக எடுத்துச் செல்லப்பட்டு அயல்நாட்டு வங்கிகளில் இரகசிய கணக்குகளில் வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தின் அளவு ரூ 2 இலட்சம் கோடிகளுக்கு மேல்! இது அரசு தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்ட விபரம்; உண்மை நிலைமை இதைவிட அதிகமாக இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை.

அரசு வங்கிகளிடமிருந்து கார்ப்பரேட் முதலாளிகளுக்குக் குறைந்த வட்டியில் கடன் வழங்குவதும், வாங்கிய கடனில் ஒரு பெரும்பகுதியை முதலாளிகள் திட்டமிட்டே கட்டாமலிருப்பதும், வாராக் கடன் என்ற பெயரில் இவற்றை அரசாங்கம் கொள்கை முடிவெடுத்து தள்ளுபடி செய்வதும் நடந்து வருகின்றது. இவ்வாறு பல இலட்சம் கோடி ரூபாய்கள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுக்கப்பட்டு வருகின்றது. இவையெல்லாம் கொள்கை முடிவெடுத்து, பொருத்தமான சட்டத் திருத்தங்கள் செய்து பகிரங்கமாக, முறையான வழிகளிலேயே அரசாங்கம் செய்து கொடுக்கின்றது. அப்படிப்பட்டதாகவே மத்திய-மாநில அரசுகளின் செயல்பாடுகள், இயங்குமுறைகள் மாற்றப்பட்டுள்ளன.

இவை மட்டுமின்றி, நாட்டின் இயற்கை வளங்கள் எல்லாம் மிகக் குறைந்த விலைக்கு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்க்கப்படுகின்றது. இரும்புத்தாது, எண்ணெய் வயல்கள், பாக்சைட், தண்ணீர், மணல், நிலம், காட்டுவளம், கடல்வளம், அலைக்கற்றை – என ஐந்துவகை இயற்கை வளங்களும் மிகக் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. மத்திய-மாநில அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு, கொள்கை முடிவெடுத்து, சட்டமன்றங்கள், நாடாளுமன்றம், அமைச்சரவைகளுக்குத் தெரியாமலேயே இரகசிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு அதனடிப்படையில் வாரிவாரி வழங்கப்படுகின்றன. இவ்வாறு கார்ப்பரேட் முதலாளிகள் நாட்டின் இயற்கை வளங்களைப் பகற்கொள்ளையடிப்பதற்கான கருவியாக அரசு மாற்றப்பட்டுள்ளது.

(தொடரும்)
___________________________
புதிய ஜனநாயகம், மே 2015
___________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க