பாலஸ்தீனியர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்க ஐ.நா சபை மறுப்பு

ஏகாதிபத்தியங்கள் நடத்தும் உள்நாட்டு போரின் விளைவாகத்தான் மக்கள் பசி பட்டினி போன்ற இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

பாலஸ்தீனத்திற்கு ஐ.நா சபை உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த உணவுப் பொருட்களில் 60 சதவீதத்தை அடுத்த மாதம் முதல் நிறுத்தப்போவதாக தற்போது ஐ.நா சபை அறிவித்துள்ளது.

இஸ்ரேல் நாட்டின் ஆக்கிரமிப்பின் காரணமாக தொடர்ந்து பல ஆண்டுகளாக பாலஸ்தீனத்தில் உள்நாட்டு போர் நீடித்து வருகிறது. இஸ்ரேல் படைகள் மேற்கொண்டுவரும் ஆயுத தாக்குதல்களால் பாலஸ்தீன மக்கள் பல ஆண்டுகளாக நிம்மதியான வாழ்க்கையை மேற்கொள்ளாமல் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

மேலும், 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பாலஸ்தீனத்தில் தொடர் போர் பதற்றம் காரணமாக கடுமையான உணவுப் பஞ்சம் நிலவி வருகிறது. 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாக உணவுப் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நாவின் தரவுகளே தெரிவிக்கின்றன.

பதற்றம் நிறைந்த காசா பகுதியைச் சுற்றியுள்ள 63 சதவீதம் பேர் கடுமையான உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 36 சதவீதமான பெண்களுக்கு போதுமான உணவு, குடிநீர் கூட கிடைக்கவில்லை என்று ஐ.நா சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக ஐ.நா சபையின் உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பாலஸ்தீனத்தில் உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரேஷன் முறையில் உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டம் ஒன்று தற்போதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.


படிக்க: இஸ்ரேல்: பாசிஸ்டுகளுடன் கூட்டணியமைத்த நெத்தன்யாஹூ!


இந்நிலையில், கடுமையான பொருளாதார நெருக்கடிகளை காரணம்காட்டி அடுத்த மாதம் முதல் பாலஸ்தீனத்திற்கு வழங்கப்பட்டு வந்த உணவுப் பொருட்களின் அளவில் 60 சதவீதத்தை குறைக்கவுள்ளதாக பாலஸ்தீனத்துக்கான ஐ.நா-வின் உணவு பாதுகாப்பு திட்ட இயக்குநர் சமர் அப்தெல் ஜாபர் (Samer Abdel Jaber) தெரிவித்துள்ளார்.

இதனால் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு வரும் ஜூன் மாதம் முதல் ஐ.நா சார்பில் வழங்கப்பட்டு வந்த உணவு பொருள் மற்றும் ஒரு தனிநபருக்கு டாலர் மதிப்பில் வழங்கப்பட்டு வந்த $10.30 மதிப்புள்ள மாதாந்திர வவுச்சர்கள் வழங்கும் திட்டம் ஆகியவை நிறுத்தப்படவுள்ளதாக ஐ.நா சபை அறிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தின் முக்கிய பகுதியான காசா கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் இஸ்லாமிய ஹமாஸ் குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இங்கு 25 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் இவர்களில் 45 சதவீதம் பேர்  வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாலஸ்தீனத்தில் உள்ள 80 சதவீத குடும்பங்கள் ஐ.நா உதவி போன்ற சர்வதேச உதவியை நம்பித்தான் இருக்கிறார்கள் என ஐ.நாவின் தரவுகள் கூறுகின்றன.

அதேபோல் ஐ.நா உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புகளும் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதால், “பாலஸ்தீனத்திற்கு வழங்கப்பட்டுவரும் உணவு மற்றும் நிதியுதவிகள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் நிறுத்துவதற்கான கட்டாயத்திற்கு ஐ.நாவின் உணவு பாதுகாப்பு திட்டம் தள்ளப்படும்” எனவும் சமர் அப்தெல் ஜாபர் எச்சரித்துள்ளார்.


படிக்க: இஸ்ரேல்: நெதன்யாகு அரசை ஸ்தம்பிக்க வைத்த மக்கள் போராட்டம்!


ஐ.நா.சபையின் இந்த கடுமையான முடிவால் ஏற்கனவே போர் மற்றும் உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்கள் மேலும் கடுமையாக பாதிக்கப்படுவர். குறிப்பாக, இஸ்ரேல் மற்றும் உள்நாட்டு கலவரங்களின் போது துப்பாக்கி மற்றும் குண்டுகளுக்குப் பலியாகி வந்த மக்கள் தற்போது பசி, பட்டினியால் இறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தங்களுடைய நலனுக்காக இஸ்ரேலை கைப்பாவையாக வைத்துக் கொண்டு பாலஸ்தீன மக்களின் மீது மறைமுக தாக்குதல் நடத்தி வருவதே அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள்தான்.

குறிப்பாகப் பார்த்தோமென்றால் இதுபோன்ற ஏகாதிபத்தியங்கள் நடத்தும் உள்நாட்டு போரின் விளைவாகத்தான் மக்கள் பசி பட்டினி போன்ற இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அப்படி பல துன்பங்களை அனுபவிக்கும் மக்கள் வெகுண்டெழுந்து அந்நாட்டின் அரசிற்கெதிராக போராட்டங்களை மேற்கொண்டுவிடக் கூடாது, ஒரு பேரெழுச்சி ஏற்பட்டுவிட கூடாது என்பதை தடுப்பதற்கே இது போன்ற சில சலுகைகளை ஐ.நா போன்ற அமைப்புகள் மூலம் வழங்கப்படுகிறது.

ஆனால் ஏகாதிபத்திய மேலாதிக்க நாய்ச்சண்டையினால் (ரஷ்யா – உக்ரைன் போர் உட்பட) ஏற்பட்டிருக்கும் நெருக்கடியால் இதுபோன்ற திட்டங்களை தொடர்வதிலும் நெருக்கடிகள் ஏற்படுகிறது.

ஏகாதிபத்திய பிடியில் இருக்கும் வரை இப்பிரச்சினைக்கு தீர்வே கிடையாது. இஸ்ரேல் மற்றும் அதன் பின் மறைந்து கொண்டிருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு மக்கள் எழுச்சியை கட்டமைப்பதன்மூலமே இப்பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டு வரமுடியும்.


சித்திக்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க