து ஒரு பரபரப்பான சாலை. வாகனங்கள் போகும் இறைச்சல் மட்டும் நமக்கு கேட்கிறது. இக்காட்சியை மாடியிலிருந்து ஒரு செல்பேசி கேமரா மூலம் பார்க்கிறோம். விரைந்து செல்லும் வாகனங்களை தவிர்த்து விட்டு சாலையோரத்தில் ஒரு இருசக்கர வாகனம் நிற்கிறது. அதில் ஒருவர் அமர்ந்தவாறு உண்கிறார்.

” சீட்டிங்” என தலைப்பிட்டு பகிரப்பட்ட வீடியோவின் முகப்பு.

அவரது சீருடை சொமேட்டோ நிறுவனத்தின் ஊழியர் என தெரிவிக்கிறது. அவரது பணி உணவுகளை ஓட்டல்களில் இருந்து பெற்று வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்ப்பது. இருசக்கர வாகனத்தின் பின்னால் உணவுப் பொதிகள் இருக்கும் பெட்டகத்திலிருந்து அவர் ஒருசில பொட்டலங்களை எடுக்கிறார். அவற்றை கவனமாக திறந்து சில கவளங்களை கரண்டியினால் உண்கிறார். பிறகு பொட்டலங்களை கவனமாக மூடி வைக்கிறார். இக்காட்சி ஓரிரு நிமிடங்கள் ஓடுகிறது.

கடந்த ஒருவாரத்தில் இந்த வீடியோ காட்சி இந்தியாவின் பல்வேறு மொழிகளில் பரவியிருக்கிறது. பலரும் பொங்கியிருக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக உணவுகளை வினியோகிக்கும் சீருடை அணிந்த இளைஞர்களை நாம் நகர சாலைகளில், தேநீர்க் கடைகளில், சாலையோர உணவகங்களில், சிறு-நடுத்தர-பெரிய உணவகங்களின் வாகன நிறுத்துமிடத்தில் காணலாம். அங்கே நின்று கொண்டு தங்களது செல்பேசியில் வரும் உணவு ஆர்டர் குறித்து விரல்களால் எழுதிக் கொண்டிருப்பார்கள்.

இத்துறையில் புதிய நிறுவனங்கள் வருடாவருடம் ஆன்லைன் சந்தையில் நுழைகின்றன. அதையொட்டி அவர்கள் வெளியிடும் சலுகைத் திட்டங்கள் அண்டசராசரத்திற்கு போட்டியாக ஆண்ட்ராய்டுகளில் பளிச்சிடுகின்றன. செல்பேசியில் ஆய்வு நடத்தி நுகர்வு கலாச்சார யோகத்தில் தான் மட்டும் மலிவாக செலவழிப்பதாக நம்பும் நடுத்தரவர்க்கம் இத்தகைய சலுகை தள்ளுபடி லேகியங்களை விரல் நுனியில் வைத்திருக்கும்.

பல அலுவலகங்களில் இதற்கான வாட்ஸ்அப் குழுக்கள் இருக்கின்றன. இன்று என்ன ஸ்பெஷல், 300 ரூபாய் பிரியாணி 100 ரூபாய்க்கு எங்கே கிடைக்கிறது, என்று பர்கரா, பீட்சாவா, உயர்தர டிகாஷன் காஃபியா என்று அவர்கள் அன்றைய பொழுதைக் கழிக்கிறார்கள். இப்படியாக கொஞ்சம் அதிகப்படியான மாதச் சம்பளம் வாங்கும் வசதியுள்ள நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையில் ஆன்லைன் உணவு விநியோக ருசி நுழைந்து விட்டது.

ஆகவே முன்னர் கண்ட அந்தக் காட்சி செல்பேசி வழியே மக்களிடையே பரவியது ஆச்சரியமில்லை. கூடவே அந்த வீடியோ அந்த உணவு செயலிகளை பயன்படுத்துவோரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதும் ஆச்சரியம் இல்லை. ஏனெனில் கையேந்தி பவன்களில் சுத்தமில்லை, சுகாதாரம் இல்லை, சேவையில்லை என்றெல்லாம் சலித்துக் கொள்ளும் நடுத்தர வர்க்கத்திற்கு நம்பகமான அதி சுவை அறுசுவை உணவு அனுபவத்தை இந்த ஆன்லைன் ஆப்புகள் தருகின்றன. ஆகவே அவர்கள் தமக்கு வழங்கப்படும் உணவு இப்படியெல்லாம் எச்சிலாக்கப்படுகிறதா எனக் குமுறுகிறார்கள்.

சமூக வலைதளங்கள் வளர்ந்து விட்ட இக்காலகட்டத்தில் யூடியூபில் நுகர்வுக் கலாச்சார ஆய்வுகளுக்கு என்றே பல சேனல்கள் இருக்கின்றன. அரசியல் செய்திகளை விட இத்தகைய அறுசுவை செய்திகளை ‘அறிவார்ந்து’ சொல்லும் போது சந்தையில் உங்களுக்கென்று ஒரு இடம் கிடைத்து விடுகிறது. இத்தகைய சேனல் சித்தர்கள் இப்படி வைரலாகும் வீடியோக்களை வைத்து ஒரு வாரத்தில் ஒரு பத்து பதினைந்து வீடியோக்களை தேற்றி விடுகிறார்கள். அதுவும் உணவு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் அவர்கள் பயங்கரமாக ஆய்வு செய்து உண்மையை கண்டுபிடித்தே ஆகவேண்டிய கட்டாயக் கடமையிலும் இருக்கிறார்கள். சரி பார்சல் உணவை பிரித்து சாப்பிடுவதில் என்ன உண்மையை கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது?

சம்சா, ஜிலேபி, பானிபூரி, லட்டு என்று நாம் அறிந்த இந்தி வாலாக்கள் பலர் இந்த உணவு உண்ணும் காட்சியைப் பார்த்து கொதித்து எழுந்து விட்டார்கள். வாடிக்கையாளருக்கு உணவை சேர்க்கும் ஒருவர் இப்படியெல்லாம் நடந்து கொள்ளலாமா, வாடிக்கையாளர் என்பவர் பகவான் இல்லையா என்று காந்தி சொன்ன பொன்மொழிகளை எல்லாம் நினைவுகூர்கிறார்கள். பரவாயில்லை இந்த மட்டாவது காந்தி அவர்களிடம் தங்கியிருக்கிறாரே!

உலகெங்கிலும் உணவு விநியோகம் இப்படிப்பட்ட ஆன்லைன் மூலமாக நடக்கிறது என்றாலும் இத்தகைய எச்சில் சமாச்சாரம் எங்கேயும் இல்லை என இணையத்தில் பீறாய்ந்து தெரிவிக்கிறார்கள்.

இந்த உணவு உண்ணும் காட்சி எந்த நகரத்தில் எடுக்கப்பட்டது என்பது முதல் பிரச்சனை. அதில் பலரும் மும்பை தில்லி கொல்கத்தா பெங்களூரு என்று ஒரு சுற்று இந்தியா முழுவதும் புனித யாத்திரை சென்று விட்டு பிறகு மதுரைக்கு வருகிறார்கள். சொமேட்டோ நிறுவனமே அந்த வீடியோவில் உள்ளவர் மதுரையில் பணியாற்றும் தனது ஊழியர், அவர் செய்தது தவறு என்று ஒத்துக் கொண்டு விளக்கம் அளித்து விட்டது. அதன் பிறகே, இந்தப் புலனாய்வுப் புலிகள் இக்காட்சி மதுரையில் எடுக்கப்பட்டது என்பதை பிரேக்கிங் நியூசாக தருகிறார்கள்.

இந்திவாலாக்கள் மட்டுமல்ல தமிழ் கொழுக்கட்டைகளும் யூ டியூப்பில் சோசியல் டிரெண்டிங், சோசியல் ஃபண்டிங் என்று ஏகப்பட்ட சேனல்கள் நடத்துகிறார்கள். சுமேட்டோ நிறுவனத்தின் விளக்க கடிதத்தைப் போட்டு ஊழியரின் வீடியோவைப் போட்டு, பிறகு அவரது முகத்தை போட்டு நாலு தமிழ் வார்த்தைகளை தப்பும் தவறுமாக பேசி மாபெரும் ஊழலை கண்டு பிடிக்கிறார்கள். இதையே கிராபிக்ஸ் நேர்த்தியில் நிறுவனமயமான பெரும் யூடியூப் சானல்கள் செய்கின்றன. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்பதால் தூ தூ வென துப்பித் தள்ளுகிறார்கள்.

அதிலும் சில சேனல்கள் மிகத் திறமை வாய்ந்த அறிஞர் பெருமக்களை அழைத்து வருகிறார்கள். ஆன்லைனில் உண்மைகளை கண்டுபிடிக்கும் அந்த நிபுணர்கள் லேசுப்பட்டவர்கள் அல்ல. விக்கிபீடியாவை நம்பி 2.0–வே இருக்கும் போது ஜிலேபி வாலாக்கள் மட்டும் நிபுணர்கள் இல்லை என்றால் எப்படி? அந்த அறிஞர்கள் ஃபேக்ட் செக்கிங்கை செய்வார்களாம்.

சேனலின் நெறியாளர் நின்றுகொண்டே ஜாலியாக இது எப்படி நடந்தது? யார் செய்தது? எது உண்மை? என்ன தீர்வு? என்ற கேள்விகளை தலை அசைத்து, தோள் குலுக்கி, கை  ஆட்டி, வார்த்தைகளைக் காட்டி பேசுகிறார்.

தவறுக்கு மன்னிப்புக் கேட்கும் சம்பந்தபட்ட பணியாளர்.

இதில் உள்ள ஞானம் என்னவென்றால் சொமேட்டோ நிறுவனமே இதை தீர விசாரித்து உண்மையை வெளியிட்டு விட்டது. அது ஊடகங்கள் முதல் தனிநபர்கள் வரை இரண்டாம் சுற்று வைரலாகியிருக்கிறது. அனேகமாக மூன்றாம் சுற்று அந்த மதுரைக்காரரின் பாவமன்னிப்பு மறுவாழ்வு பிரவேசமாக இருக்கலாம்.

சொமேட்டோ நிறுவனம் கொடுத்துள்ள விளக்கத்தின்படி அந்த ஊழியரிடம் விரிவாக பேசிய பிறகு அவரும் தவறை ஒத்துக் கொண்டாராம். பிறகு அவரை பணிநீக்கம் செய்திருக்கிறார்கள். இடைக்காலத்தில் அந்த ஊழியரின் பரிதாபத்திற்குரிய முகம் அனைத்து ஊடகங்களிலும் யூடியூப் சேனல்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவிவிட்டது. மதுரைக்காரரப் பய நமது மதுரை நகரத்தை கேவலப்படுத்தி விட்டான் என்று மதுரை வாசகர்கள் சிலர் மதுரைக்கு மானம் போனதாக பின்னூட்டத்தில் கூறுகிறார்கள். ஆனால் இதே மதுரையில் உள்ள பன் புரோட்டா கடை குறித்த வீடியோக்களை பார்த்த இந்தி வாலாக்கள், மாவு பிசையும் போது மாஸ்டரின் முழுக்கையும் வேர்வையோடு கலக்கிறது உவ்வே என்று இழித்திருப்பதால் பாசக்கார மதுரையர்கள் இதற்காக ரொம்பவும் வருந்த தேவையில்லை.

ஃபேஸ்புக்கிலோ தான் சாப்பிட்ட எச்சில் உணவை வாடிக்கையாளருக்கு கொடுக்க நினைத்தது எவ்வளவு பெரிய ஆரோக்கியக் கேடு என்று மருத்துவ விழிப்புணர்வையும் சேர்த்து விடுகிறார்கள். வெண்ணெய் திருடிய கண்ணனை போற்றும் நாட்டில் ஒரு அண்ணன் துன்ன உணவிற்காக இத்தனை பெரிய மகாபாரதப் புராணமா?

என்ன இருந்தாலும் அவர்கள் முகத்தை வெளியிட்டது தவறு என சிலர் மனிதாபிமானம் காண்பிக்கிறார்கள். அதுவும் கண்டிஷன் அப்ளையுடன். யூடியூப் இந்தி வாலாக்கள் மற்றும் ஆங்கில ஊடகங்களில் மறுமொழி போடுபவர்கள் அனைவரும் இந்த டெலிவரி பாய்-க்கு உரிய வகுப்பு, விழிப்புணர்வு, எச்சரிக்கை அளிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். பணமதிப்பழிப்பிலும், ஜி.எஸ்.டி.யிலும் சில நூறுபேரே கொல்லப்பட்ட நாட்டில், பல ஆயிரம் வாழ்க்கை அழிந்த நாட்டில் ஒரு ஃபிரைடு ரைசை ஒரு ஸ்பூன் சாப்பிட்டதற்கு என்னமா ஒரு அறச்சீற்றம்?

அந்த ஊழியரை பணி நீக்கம் செய்த சொமேட்டோ நிறுவனம் இனி கவனமாக இருப்போம் என வாக்குறுதியும் அளித்திருக்கிறது. யூடியுப் வீடியோக்களில் வந்த இந்தி வாலா வரலாற்று நிபுணர்கள் அந்த எச்சரிக்கையை பயங்கரமாக ஆய்வு செய்து கண்டுபிடித்திருக்கிறார்கள். அது என்ன தெரியுமா? இனிமேல் உங்களுக்கு ஹோட்டலிலிருந்து இருசக்கர வாகனத்தில் எடுத்து வரப்படும் உணவுக்கு சீல் வைக்கப் போகிறார்களாம். அந்த உரை இல்லாத உணவை நீங்கள் ஏற்கக்கூடாதாம். சரி டெல்லி செட்டு என்று போலிகளுக்கு பெயர்போன நாட்டில் ஒரு சீலை பிய்த்து இன்னொரு சீலை போடுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? தொலைபேசியில் ஏடிஎம் பின் நம்பர் கேட்டாலே சொல்லும் நாட்டில் ஒரிஜினல் சீலா, டூப்ளிகேட் சீலா என்பதெல்லாம் எம்மாத்திரம்?

அந்த மதுரைக்கார சொமெட்டோ ஊழியர் தனது பசி வேகத்தினாலும் அல்லது ருசி மோகத்தினாலும் அந்த உணவை கொஞ்சம் ருசி பார்க்க நினைத்திருக்கலாம். எப்படியோ இருந்து விட்டு போகட்டும். இவை எல்லாவற்றையும் கணக்கில் கொண்டாலும் கூட அந்த ஊழியர் செய்த தவறு மாபெரும் தவறு அல்ல. மேலும், இந்தியா முழுவதும் இப்படி உணவு விநியோகத்தை செய்து வரும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களில் மிக அரிதினும் அரிதாக ஓரிருவர் செய்யக்கூடிய தவறு தான் இது. இதற்கு மேல் இதை மாபெரும் அறச்சீற்றமாக ஆய்வு செய்வதுதான் அலுப்பூட்டுகிறது.

சமீப ஆண்டுகளாக வேலைவாய்ப்பு குறைந்திருக்கும் சூழலில் ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து பிழைப்பை நடத்த மாட்டோமா என இளைஞர்கள் வெறுப்புடன் வாழ்கிறார்கள். அப்படி கிடைத்தது தான் இந்த வேலை. தினசரி பத்து அல்லது இருபது சவாரிகள் சென்றால் சில நூறு ரூபாய் சம்பளம் கிடைக்கும். அதிலும் ஆயிரத்தெட்டு நிபந்தனைகள் அவர்களுக்கு இருக்கிறது.

ஸ்விக்கி ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்.

சமீபத்தில் ஸ்விக்கி ஊழியர்கள் தமது நிறுவனத்தை எதிர்த்து சென்னையில் வேலை நிறுத்தம் செய்தார்கள். அந்நிறுவனம் ஊழியர்களுக்கு வழங்கி வந்த கட்டணத்தை குறைத்தது காரணமாக அவர்கள் போராடினார்கள். அது தொடர்பான ஊடக வீடியோக்களில் அவர்களது பணிச் சிரமத்தை முன்வைக்கிறார்கள். உரிமையாளர் யார் என்றே தெரியாத இந்த நிறுவனங்கள் இவர்களை கூட்டாளிகள் என்று வேறு அழைக்கிறதாம். அல்வாவும், பிரியாணியும் முக்கால் விலையில் தள்ளுபடி வரும்போதே உறைத்திருக்க வேண்டும், இந்த தள்ளுபடியின் பலிகடா யார் என்று!

அம்பானியின் மகள் திருமணம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் நடக்கிறது. அம்பானியின் ஆன்டிலியா மாளிகை இருக்கும் மும்பைக்கு அருகில் இருக்கும் மராத்வாடா பகுதியில் மகளுக்கோ மகனுக்கோ திருமணம் செய்ய முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இப்படி வாழ்க்கை, மகிழ்ச்சி, தொழில், உழைப்பு அனைத்திலும் இரு வேறுபட்ட பிரதேசங்களாக நமது சமூகமும் நாடும் பிரிந்திருக்கிறது

சமீப ஆண்டுகளாக சிவில் சமூகத்தில் நடக்கும் வன்முறைகளைப் பாருங்கள். செல்பேசி வாங்குவதற்காக, திருட்டு சோனி பிளேஸ்டேஷன் வாங்குவதற்காக, ஆடம்பட வாழ்க்கை நடத்த வேண்டிய செலவுகளுக்காக நடக்கும் கொலைகள், பைக் ரேஸில் பங்கெடுத்து துடிப்பை நிலைநாட்டுவதற்காக அப்பாவை நச்சரித்து அதிஉயர் விலையில் பைக்கை வாங்கிய இளைஞர் அதே ரேசில் பலி, குன்றத்தூர் அபிராமி என எங்கே எந்த குடும்பத்தில் வன்முறை வெடிக்கும் என்பது தெரியாமல் இந்த சமூகம் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த ஓட்டத்தில் நான் என்னுடைய எதிர்கால வாழ்க்கையில் எங்கே இருக்கிறேன் என்று வேலை பார்க்கும் அல்லது வேலை தேடும் அனைவருக்கும் ஒரு பதட்டம் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. பிடித்த வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையில் பயணிக்கும் இளைஞர்களும் நமது எதிர்பார்ப்பு கற்பனைத் திறத்திற்கு ஏற்ப சோர்வடைகிறார்கள். சில தருணங்களில் குறுக்கு வழியில் பயணித்தால் வசதியை எட்ட முடியும் என்ற சித்த வைத்திய கதைகளையும் நம்புகிறார்கள்.

படிக்க:
இணைய வணிகத்தின் பின்னால் வதைபடும் அடிமைத் தொழிலாளர்கள் !
ஏண்ணே ! வெற்றிகரமான தோல்வின்னா என்னான்னே ?

ஆம். நாம் வாழும் சமூகத்தில் மதிப்பீடுகள் அருகி வருகிறது. அந்த அருகுதலை ஏற்றத்தாழ்வாய் பிரிந்திருக்கும் சமூகம் அதி வேகப்படுத்தி வருகிறது. இருப்போரும் இல்லாதோரும் சேர்ந்து பயணிக்கும் சமூகத்தில் இரக்கமோ, மனிதாபிமானமோ, கடமை உணர்வோ நாம் கருதும் தரத்தில் இருப்பதில்லை. ஆர்டர் செய்த உணவு தாமதமாக கொண்டு வந்தார் என்று வீட்டு நாயை விட்டு கடிக்க வைக்கும் ஆத்திரம் அந்த மேன்மகனது பசிவெறியில் இருக்கிறது. அதே பசிவெறி அலைந்து திரிந்து உடலை புண்ணாக்கி பைக்கில் வரும் ஒரு ஊழியருக்கு இருக்கக் கூடாது என்கிறார்கள் இந்தக் கனவான்கள்.

வாடிக்கையாளருக்கு தரவேண்டிய உணவை மதுரை சொமெட்டோ ஊழியர் எச்சில்படுத்துவதை ஆய்வு செய்த அறிஞர் பெருமக்கள் ஒன்றை மட்டும் பார்க்க மறுக்கிறார்கள். அந்த அளவுக்கு தன் மீதும் தன் வேலை மீதும் மதிப்பில்லாமல் அவர் இருந்திருக்கிறாரே அது ஏன்? அவரது ஊதியம் என்ன, அவரது இடைவெளி நேரம் என்ன, அவர் உண்பதற்கு சொமெட்டே நிறுவனம் என்ன ஏற்பாடு செய்திருக்கிறது இவையெல்லாம் சரியாக இருந்தால் அவர் அந்த தவறினை செய்திருக்க வாய்ப்பிருந்திருக்காது.

சென்னையில் போராட்டம் செய்த ஸ்விக்கி டெலிவரி ஊழியர்கள், உணவு வாங்கும் இந்தி வாலாக்கள் தம்மை மரியாதையுடன் நடத்துவதாகவும், உள்ளூர் மக்கள்தான் மரியாதை இன்றி நடத்துவதாக கூறுகிறார்கள். நாக்கில் பதிந்து விட்ட ருசி விசுவாமித்திரர் போல வெறியுடன் வெளிப்படுகிறது. உணவைக் கொண்டு வரும் ஊழியர் தாமதாமாக வந்தாலோ, உணவு  சூடு ஆறினாலோ, இல்லை பொட்டலித்திலிருந்து ஒழுகினாலோ அவ்வளவுதான். அந்த ஊழியரின் அந்த நாள் மூட் அவுட்டாகிவிடும்.

இத்தகைய ஆய்வு எதுவும் தேவைப்படாமலேயே அந்த இளைஞர் உணவு உண்ணும் காட்சியை பெரிதுபடுத்தாமல் போய் இருக்கலாம். ஆனால் வாஷிங் மெஷினிலிருந்து அல்ட்ரா மாடர்ன் நவீன தொலைக்காட்சி வரையிலும் வெள்ளிக்கிழமை ஆன்லைன் கியூ வரிசையில் நின்று புத்திசாலித்தனமாக முதலில் வாங்குவதை ஷேர் செய்யும் நாடிது! அதே நாட்டில்தான் கோரக்பூரில் குழந்தைகள் மருத்துவமனையில் சாகின்றன. விவசாயிகள் இலட்சக்கணக்கில் தலைநகரம் சென்று போராடுகிறார்கள். மல்லையாவும், நீரவ் மோடியும் வங்கி பணத்தை முழுங்கி விட்டு வெளிநாடுகளில் உலா வருகிறார்கள்.

ஆளும் வர்க்கம் மக்களை எச்சக்கலை போல நடத்துவதற்கு வராத கோபம் ஒரு பரிதாபத்திற்குரிய தவறைச் செய்த ஒரு ஊழியர் மேல் வருவதுதான் நம்முடைய கோபம்.

– இளநம்பி

7 மறுமொழிகள்

  1. ஆளும் வர்க்கம் மக்களை எச்சக்கலை போல நடத்துவதற்கு வராத கோபம் ஒரு பரிதாபத்திற்குரிய தவறைச் செய்த ஒரு ஊழியர் மேல் வருவதுதான் நம்முடைய கோபம்.//. கட்டுரையின் சாரமாகவும் பிரச்சினைகளை எப்படி பார்க்க வேண்டும் என்பதையும் போதிக்கிறது… சிறப்பு 👌

  2. தவறான வாக்குவாதங்களை முன் வைத்துத் தான் சொல்ல வந்த கருத்தைச் சரி வர சொல்லாமல் சொதப்பி விட்டார் கட்டுரையாளர. உணர்ச்சிப் பெருக்கினால் தடம் புரண்டு விட்டாரென்றே தோன்றுகிறது.

    செய்யும் தொழிலைச் சரிவரச் செய்யாத பணியாளரைக் கண்டிக்கவும் தண்டிக்கவும் வாடிக்கையாளருக்கும் பணியிலமர்த்தியவர்களுக்கும் கண்டிப்பாக உரிமை இருக்கிறது. அவருக்கு சோறு போட்டார்களா இல்லையா என்று தானாகவே கேள்வி கேட்டு, யாருக்கோ எடுத்து செல்லும் உணவை நக்கித் தின்பதை வக்காலத்து வாங்கியதன் மூலம், இதே தொழிலை செவ்வனே செய்யும் எத்தனையோ உழைப்பாளிகளை அவமதிக்கிறார் கட்டுரையாளர். நீரவ் மோடி பெயரையெல்லாம் இழுத்தால் மட்டும் மற்றவர்கள் மன்னிக்கப்ப்பபட வேண்டும் என்று அவசியமில்லை. நீரவ் மோடியும் தன்னை விடப் பெரிய குற்றவாளியைக் கைகாட்டி தப்பிக்க நினைத்தால் சரியென்போமா?

    மொத்தத்தில் செய்யும் தொழிலுக்கு மரியாதையில்லாத ஒரு லும்பனை தொழிலாளவர்க்கத்தின் பிரதிநிதி போல சித்தரித்து, ஒழுங்காக – தன் மானத்தோடு, உழைத்து வாழும் உண்மையான தொழிலாளிகளுக்கு அருவருப்பை உண்டாக்கி விடுகிறது இக்கட்டுரை.

    • ////யாருக்கோ எடுத்து செல்லும் உணவை நக்கித் தின்பதை வக்காலத்து வாங்கியதன் மூலம், இதே தொழிலை செவ்வனே செய்யும் எத்தனையோ உழைப்பாளிகளை அவமதிக்கிறார் கட்டுரையாளர்.//////

      வித்தகன் சார்,
      இந்தக்கட்டுரையாளர் எங்குமே சொமேட்டோ ஊழியர் செய்த செயலுக்கு நியாயம் கற்பிக்கவில்லை.

      /// இவை எல்லாவற்றையும் கணக்கில் கொண்டாலும் கூட அந்த ஊழியர் செய்த தவறு மாபெரும் தவறு அல்ல. மேலும், இந்தியா முழுவதும் இப்படி உணவு விநியோகத்தை செய்து வரும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களில் மிக அரிதினும் அரிதாக ஓரிருவர் செய்யக்கூடிய தவறு தான் இது./// என்று குறிப்பிடுகிறார்.

      ஒரு தவறு அதன் தன்மைக்கு அதிகமாக ஊதிப் பெருக்கப்படுவதைத்தான் கட்டுரையாளர் கேள்விக்குட்படுத்துகிறார். அதை அதற்கு அடுத்த வரியில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
      /// இதற்கு மேல் இதை மாபெரும் அறச்சீற்றமாக ஆய்வு செய்வதுதான் அலுப்பூட்டுகிறது.///

      ஒரு இடத்தில் நடந்த தவறை அதுவும் அத்தி பூத்தாற் போல் நடைபெறும் தவறை மீண்டும் மீண்டும் பேசி விவாதிப்பதன் மூலம் அதனை பெருங்குற்றமாக சித்தரித்துப் பேசும் நபர்கள்தான் ஒட்டு மொத்த தொழிலாளி வர்க்கத்தையே இதன் மூலம் அசிங்கப்படுத்துகிறார்கள்.

      வலிந்து குற்றம் கண்டுபிடிக்கிறீர்களோ எனத் தோன்றுகிறது.

      • இது சுவாரஸ்யமான செய்தி என்று எடுத்துக்கொண்டு மற்ற வூடகங்கள் இதை பெரிசுபடுத்தினார்கள். இந்தக் கட்டுரையாளரும் இதைப் புரிந்திருப்பார் என்று நினைக்கிறேன்.
        ஆனால் அவர் இந்த கட்டுரையில் சம்பந்தமில்லாமல் நிறைய எழுதி விட்டார் .

  3. என்ன இருந்தாலும் அரசாங்க உத்யோகம் போல் வருமா ? வேலை கிடைக்கும் வரை ‘வேலை வேண்டும்’ என்று போராடலாம். வேலை கிடைத்த பிறகு வருடாந்திர ‘ஊதிய உயர்வு’ கேட்டு போராடலாம்

  4. நல்ல வேளை நிறுவனம் தனியார் நிறுவனம். சற்று யோசித்து பாருங்கள். ஒருவேளை அரச நிறுவனமா இருந்தால் ஒரு முறைப்பாடு கொடுத்து மேலதிகாரியிடம் வாடிக்கையாளர் அவமானப்பட்டு நாயாய் பேயாய் அலைந்து டெலிவரி செய்த அந்த ஊழியரிடமும் அவமானப்பட்டு மிச்சிபோனால் ஒரு சின்ன இடமாற்றம் கொடுத்து அதற்கு பிறகு அந்த ஊழியர் புதிய இடத்தில இதே வேளை செய்தால் வாடிக்கையாளர் என்ன செய்வது. மேலும் வேறு சில கோபங்களை காட்டி உணவில் எச்சியை துப்பி வைத்தால் என்ன செய்வது. என் என்றால் இவர்களின் மனோ நிலை அப்பிடி. தனியார் நிறுவனம் என்பதால் வேளை பறந்தது. இனி எந்த வேளையிலும் அவருக்கு கட்டுப்பாடு தானாக வரும்.

  5. சோமெட்டோ ஊழியர் செய்தது கண்டிப்பாக தவறு தான். ஒரு வேளை, வறுமையினால் தானும் தன் குடும்பம் பட்டினியாய் கிடப்பதை காண சகிக்காமல், ஒரு உணவகத்திற்கு சென்று உணவு பொருட்களை திருடி இருந்தால், நிச்சயம் அதனை நான் தவறென்று சொல்லமாட்டேன். ஆனால் ஒருவருக்கு கொடுக்க வேண்டிய உணவினை எச்சில் படுத்திவிட்டு கொடுப்பது மிக பெரிய தவறு தான் . அதிலும் அவர்கள் உணவிற்கான விலை, இவர்களுக்கான(Zomato Swiggy ) கூலி அனைத்தையும் கொடுத்துவிட்டு இவர்கள் நக்கி பார்த்த எச்சில் உணவை சாப்பிட வேண்டுமா?? இதை தவறு சென்று சொன்னால், உடனே அந்த காலத்து விஜயகாந்த் படம் போல, ஏழைங்கடாவ் அநீதிடாவ்ன்னு உழைக்கும் வரகம்டாவ்ன்னு டைலாக் பேச வேண்டியது!!!

    இவ்வளவு வியாக்கியானம் பேசும் இதே வினவு கும்பல், ஒருவேளை இவர்கள் சாப்பிட போகும் ஓட்டலில், அதன் ஊழியர் (Server ) உணவில் விரலை விட்டு சப்பி ருசி பார்த்து விட்டு கொண்டு வந்தாலோ, அல்லது இவர்கள் ஆர்டர் செய்த பிரியாணியில் உள்ள Chicken leg பீஸை ஒரு கடி கடித்து சுவைத்து கொடுத்தாலோ அதனை பெரிய ஏற்றுக் கொள்வார்களா??? அல்லது இவர்கள் குடிக்க வேண்டிய டீயில் அந்த கடை பையன் சிறிது குடித்து விட்டு கொடுத்தாலோ இவ்வளவு நியாயம் பேசுவார்களா??? ஆகவே தொடர்புடைடைய ஊழியரின் மீது கடும் நடவடிக்கை எடுத்தது சரியே ..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க