மெய்நிகர் உலகம் ஏற்படுத்தியிருக்கும் பெரும் மாற்றங்களில் சமூக ஊடகங்களுக்கு

வில்லவன்
அடுத்து முக்கியமானது இணைய வணிகம். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு பெரும் எண்ணிக்கையில் திறக்கப்பட்ட பேரங்காடிகள் பல இப்போது கலையிழந்து நிற்கின்றன. அப்படியான புதிய பேரங்காடிகள் இப்போது அதே வேகத்தில் திறக்கப்படுவதில்லை. ஆன்லைன் மருந்துக்கடைகள் தங்கள் வாழ்வாதாரத்தை பறிப்பதாக மருந்துக்கடை உரிமையாளர்கள் புலம்புகிறார்கள். பிரதான வீதிகளில் மட்டுமல்ல உள்ளடங்கிய தெருக்களிலும் இடுப்புயர பைகளை சுமந்தபடி கொரியர் ஊழியர்கள் பயணிப்பதை அடிக்கடி காண முடிகிறது.

நான் தங்கியிருக்கும் விடுதியில் உள்ள இளைஞர்கள் திடீரென ஒரு மாலையில் பரபரப்பானார்கள். “”ஏய் ஃபலூடா 9 ரூபாய், சீக்கிரம் ஆர்டர் பண்ணு” என தகவல் பரிமாறிக்கொள்ளப்பட்டது. அப்போது உத்தேசமாக 10 பேரேனும் அலைபேசியை எடுக்க ஓடியிருப்பார்கள். பெங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அமேசான் டெலிவரி ஊழியர் அரைமணி நேரம் நின்று வரிசையாக பொருட்களை டெலிவரி கொடுத்தவண்ணமிருக்கிறார் (மருத்துவமனை ஊழியர்கள் அந்த முகவரியில் வாங்கிக்கொள்கிறார்கள்). அவர் பையில் இருப்பதில் பாதி அங்கேயே காலியாகிறது. அமேசான்-இந்தியாவின் பாதி வருவாய் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருந்து வருவதாக தரவுகள் சொல்கின்றன. கண்களால் நேரடியாக பார்த்தோ அல்லது அணிந்து பார்த்தோ வாங்க வேண்டிய ஆடைகளும் மூக்குக்கண்ணாடியும்கூட இணையத்தின் வழியே பெருமளவு விற்பனையாகின்றன. அழுகும் பொருட்களான காய்கறி, இறைச்சி வகைகளை விற்க பிக் பேஸ்கெட் நிறுவனம் இயங்குகிறது. சீன இறக்குமதிப் பொருட்களை விற்பதற்கென்றே கியர்பெஸ்ட் எனும் தளம் இருக்கிறது.

ஆன்லைன் சந்தையின் வசீகரிக்கும் அம்சம் அதன் விலை. வெளி சந்தையில் 2500 ஆகும் கண்ணாடிகளை ஆன்லைன் கடைகளில் 1000 ரூபாய்க்கு வாங்கிவிட முடியும். மொபைல் போன்களின் விலையை கணிசமாக குறைத்தவை ஆன்லைன் வழியே போன் விற்பனை செய்யும் நிறுவனங்கள்தான். ஜியோமி நிறுவனம் ஒரே நாளில் 20 லட்சம் போன்களை விற்ற சம்பவம்கூட நடந்திருக்கிறது. பெருநகரங்களில் பயணத்தை/ பயணச் செலவை தவிர்ப்பதற்கும் ஆன்லைன் ஷாப்பிங் செய்யப்படுகிறது. ஆனால் ஆன்லைன் வழி நுகர்வு என்பது வெறுமனே பொருள் தேவையை பூர்த்தி செய்யும் செயலாக இருப்பதில்லை.

சமீபத்தில் பேடிஎம் நிறுவனம் ஒரு ரூபாய்க்கு செருப்பு, ஸ்பூன் போன்ற பொருட்களை விற்பனை செய்தது (ஷிப்பிங் செலவு உட்பட). அதற்கு சில நாட்களுக்கு முன்னால் ஃபிலிப்கார்ட் நிறுவனம் தமது வாடிக்கையாளர்களுக்கு கோல்டு மெம்பர்ஷிப்பை இலவசமாக கொடுத்தது (இதில் பொருள் அனுப்பும் செலவு இலவசம் மற்றும் சில சலுகைகள் கிடைக்கும். இதையொத்த சலுகையை நீங்கள் அமேசானில் பெற ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்). சில வட இந்திய நகரங்களில் இப்போது மளிகைப் பொருட்களை பாதி விலைக்கு விற்கிறது அமேசான் (பேண்ட்ரி எனும் பெயரில் மளிகைப் பொருட்களை விற்கிறது அமேசான், இது பெருநகரங்களில் மட்டும்). எல்லா நிறுவனங்களும் இப்படியான திடீர் சலுகைகளை கொடுக்கின்றன. ஏன்?

படிக்க:
அமேசான் வழங்கும் கறுப்பு வெள்ளி !
வால்மார்ட் மேட் இன் பங்களாதேஷ் – ஆவணப்படம்

சில வகையான மொபைல் போன்கள் எப்போதும் கிடைக்காது. அவை ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே விற்பனைக்கு வரும் (ஃபிளாஷ் சேல்). அப்போதும் சில நிமிடங்களில் அவை விற்றுத் தீர்ந்துவிடும். ஜியாமி போன்கள் பெரும்பாலும் இப்படித்தான் விற்பனையாகின்றன. அந்த நிறுவனங்களால் இந்த ஃபோன்களை பெருமளவில் உற்பத்தி செய்து குவித்துவிட முடியும். எவ்வளவு விற்பனை ஆகும் என்பதையும் கணிப்பதும் சுலபம். இருப்பினும் ஏன் ஓரிரு நிமிடங்களில் விற்பனை முடிந்துபோகுமாறு திட்டமிடுகிறார்கள்?

இது வியாபாரம் மட்டும் இல்லை. அந்த நிறுவனங்கள் மக்களை தயார்ப்படுத்துகின்றன. பொருள் வாங்குவது என்பதாக இல்லாமல் அந்த செயலியில் மக்கள் எப்போதும் மேய்ந்துகொண்டிருக்கவேண்டும் என்பதற்காகவே இந்தத் திடீர் சலுகைகள் தரப்படுகின்றன. திடீரென ஒரு சலுகை வரக்கூடும் எனும் எச்சரிக்கை உங்கள் மனதில் இருந்தால் நீங்கள் தொடர்ந்து அந்தத் தளங்களை பார்வையிட்டுக்கொண்டே இருப்பீர்கள். ஃபிளாஷ் சேல் என்பது அந்த பொருள் மீதான எதிர்பார்ப்பை உங்களிடம் உருவாக்குகிறது. அதில் பொருளை வாங்கிவிட்டால் லட்சம் பேரோடு போட்டியிட்டு வென்ற பரவசம் கிடைக்கிறது. அதில் பொருள் கிடைக்காவிட்டாலோ நீங்கள் தோற்றவராகிறீர்கள். ஆகவே அடுத்த முறை வென்றாக வேண்டும் எனும் முனைப்பை அந்தப் பொருள் உருவாக்குகிறது. மிகைப்படுத்தவில்லை, பல சமயங்களில் ஃபிளாஷ் சேல்களில் கிடைக்கும் பொருள் உங்களை மகிழ்ச்சிப்படுத்துவதில்லை. அந்தப் போட்டியில் கிடைக்கும் பரவசம் உங்களை தற்காலிகமாக மகிழ்வூட்டுகிறது. அதனால்தான் அந்த பரவசத்தை நுகர அடுத்த மாடல் ஃபோனின் ஃபிளாஷ் சேல் நடக்கையில் போனை மாற்றும் முடிவுக்கு பலர் செல்கிறார்கள். கிட்டத்தட்ட குடிகாரனுக்கு ஒப்பான நிலை இது.

ஆசிரியராக இருக்கும் என் நண்பர் ஒருவர் ரெட்மி 5 ப்ரோ ஃபோன் ஒன்றை விளையாடுத்தனமாக ஆர்டர் செய்ய முற்பட்டார் (இது முதல் முறை). பிறகு வரிசையாக நான்கு ஃபிளாஷ் விற்பனைகளில் அவரது முயற்சிகள் தோல்வியடைந்தன. இறுதியில் அந்த போனை வாங்குவது என்பது ஒரு கவுரவப் பிரச்சினையானது. கடைசி முறை நண்பரிடம் ஏர்டெல் சிம்மை கடன் வாங்கி (அதுதான் அங்கே ஒழுங்காக சிக்னல் கிடைக்குமாம்), கிரெடிட் கார்டு தகவல்களை முன்கூட்டியே செயலியில் உள்ளிட்டு காத்திருந்து அந்த போனை வாங்கியிருக்கிறார்.

படிக்க:
நுகர்வு – கழிவு – பண்பாடு : புதிய கலாச்சாரம் நவம்பர் 2016
நூலறிமுகம் : பன்றித் தீனி – பிக் பாஸ் – கொலைகார கோக் – செயற்கை நுண்ணறிவு

அவர் போனை அதிகம் பாவிப்பவர் அல்ல. அவரது வாட்சப் பயன்பாடுகூட மிகவும் குறைவானதே. ஆனால் அந்த போனை வாங்கியதன் மூலம் அவர் மனம் ”ஆன்லைனில் பொருள் வாங்குவது பரவசமூட்டக்கூடியது. அதில் நீ ஒரு வீரனைப்போல உணரலாம்” என விளங்கிக்கொண்டிருக்கும். ஆகவே அடுத்த முறை அவருக்கு மனச்சோர்வு உண்டாகும்போதெல்லாம் அவர் ஆன்லைன் வணிக செயலிகளை மேய்வார். காரணம் அது தரும் பரவசம் மனச்சோர்வை விலக்கும் எனும் நம்பிக்கை அவருக்குள் செலுத்தப்பட்டுவிட்டது. சூதாட்டக்காரர்களை செலுத்துவது இத்தகைய அடிமைத்தனம்தான்.

இப்படியான ஒரு வாய்ப்பு இருப்பதால்தான் நிறுவனங்கள் பெரும் மூலதனத்தை ஆன்லைன் வணிகத்தில் கொட்டுகின்றன. அமேசான்தான் இந்தியாவின் பெரிய ஆன்லைன் வணிக நிறுவனம்; அதன் முதலாளிதான் இன்று உலகின் பெரும் பணக்காரர். இந்த ஒரு நிறுவனம்தான் அமெரிக்காவின் 40% நுகர்பொருட்களை விற்கிறது. அமெரிக்காவில் இதுவரை சந்தையை கட்டுப்படுத்தி வந்த வால்மார்ட் தமது விற்பனை உத்திகளை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இப்போது இருக்கிறது (வால்மார்ட் நடத்தியது ஒரு ரவுடி ராஜாங்கம், அவர்கள் கேட்ட விலைக்கு கொடுக்காவிட்டால் அந்த பொருளை சந்தையில் இருந்து ஒழிக்க வால்மார்ட்டால் முடியும். காரணம் சில்லறைவணிகம் பெருமளவு அவர்கள் வசம் இருந்தது).

அமேசான் இந்தியாவின் பெரிய போட்டியாளர் ஃபிலிப்கார்ட்டை இப்போது கையகப்படுத்தியிருப்பது வால்மார்ட் (ஃபிலிப்கார்ட் நிறுவனமானது ஈபே, மிந்த்ரா உள்ளிட்ட மேலும் சில இணையதள கடைகளை ஏற்கனவே கையகப்படுத்தியிருக்கிறது). இது அனேகமாக அமேசானுக்கு நெருக்கடி கொடுக்க வால்மார்ட் செய்த நடவடிக்கையாக இருக்கலாம். ஆன்லைன் வணிகத்தின் பெரும் சந்தையான இந்தியாவில் நுழையும் முயற்சியாக இருக்கலாம். அல்லது சந்தையில் நீடித்திருக்க ஆன்லைன் வணிகம் தவிர்க்க முடியாதது எனும் அனுமானமாக இருக்கலாம்.

இ காமர்ஸ் உலகின் இன்னொரு ராட்சசன் அலிபாபா இந்தியாவின் பேடிஎம் நிறுவனத்தில் பெரிய அளவில் முதலீடு செய்திருக்கிறது. இப்போது வாரன் பஃபட் நிறுவனம் அதில் கூடுதலாக முதலீடு செய்திருக்கிறது. ஆக இந்தியாவின் மிகப்பெரிய மூன்று ஆன்லைன் நிறுவனங்கள் வெளிநாட்டு கம்பெனிகள்தான். டாடா நிறுவனம் டாடா கிளிக் எனும் ஆன்லைன் நிறுவனத்தை நடத்துகிறது. ஸ்னாப்டீல் போன்ற பல கடைகளும் சந்தையில் போராடிக்கொண்டிருக்கின்றன. அவை இந்த மூன்று பகாசுரக் கம்பெனிகளிடம் தோற்கலாம் அல்லது கடையை அவர்களிடமே விற்றுவிட்டு கிளம்பலாம்.

எல்லோரும் இருக்கும்போது இந்தியாவின் ஓனர் அம்பானி மட்டும் சும்மாயிருப்பாரா? அவர் பங்கிற்கு ஏ ஜியோ எனும் செயலி வழி இணைய ஃபேஷன் கடையை நடத்துகிறார். ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் எனும் பெயரில் 400க்கும் மேலான ஆயத்த ஆடைக் கடைகளை முகேஷ் அம்பானி நிறுவனம் நடத்துகிறது. அதே பெயரில் இணைய வழி வியாபாரமும் நடக்கிறது. இந்தியாவின் இரண்டாவது பெரிய வேலைவாய்ப்பு பிரிவு ஜவுளித்துறைதான். அதனை சந்தியில் நிறுத்தும் வேலையை அம்பானி செய்யும் வாய்ப்பு தெளிவாகத் தெரிகிறது. காரணம் ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் ஆடைகள் பெரும்பாலும் மேட் இன் பங்களாதேஷ். ஏற்கனவே இந்தியாவின் ஏற்றுமதி சந்தையை வங்காள தேசம் பெருமளவு கைப்பற்றிவிட்டது. இப்போது திருப்பூரை கொஞ்சம் உயிர்ப்போடு வைத்திருப்பது உள்ளூர் சந்தைதான். அதையும் வாரி வாயில் போட களமாடுகிறார் அம்பானி.

சந்தையை ஆக்கிரமிக்கும் இந்தப் போட்டி ஒரு போரைப்போல நடந்துகொண்டிருக்கிறது. அமேசான் தமது கிரேட் இண்டியன் சேல் எனும் பெருவிற்பனை விழாவை இந்த மாதம் நடத்துகிறது. அதே நாட்களில் ஃபிலிப்கார்ட் பிக் பில்லியன் டே எனும் விற்பனை விழாவை நடத்துகிறது. பேடிஎம் தன் பங்குக்கு கோல்டுபேக் ஷாப்பிங் ஃபெஸ்டிவலை நடத்தவிருக்கிறது. மற்ற அல்லு சில்லுகளும் தன் பங்கிற்கு ஏதேனும் நடத்தலாம். இதற்காக கோடிகளைக் கொட்டி விளம்பரம் செய்கிறார்கள். ஆன்லைன் ஷாப்பிங் அடிமைகளின் தீபாவளி இந்த மாதம் பதினைந்தாம் தேதியே முடிந்துவிடும். அந்த அளவுக்கு தயாரிப்பு வேலைகள் நடக்கின்றன.

2015, 16 ஆம் ஆண்டுகளில் பிக் பில்லியன் டே விற்பனையின்போது ஃபிலிப்கார்ட்டின் சர்வர்கள் முடங்கின. அந்த அளவுக்கு இணையக்கூட்டம் அந்த தளத்தை மொய்த்தது. அதே ஆண்டுகளில் நடந்த விற்பனைத் திருவிழாக்களில் அமேசானின் டெலிவரி பன்மடங்கானது. இருசக்கர வண்டிகளில் டெலிவரி ஆன தெருக்களில் எல்லாம் டாடா ஏஸ், டெம்போக்களில் டெலிவரி ஆனதை பார்த்திருக்கிறேன் (இரண்டாம் நிலை நகரங்களில்). ஆன்லைன் ஷாப்பிங்கை எப்படி திறம்பட செய்வது என ஆலோசனை வழங்கும் செயலிகள்கூட வந்தாயிற்று. பேடிஎம் நிறுவனம் இறக்குமதிப் பொருட்களை விற்பதற்கென்றே வேர்ல்டு ஸ்டோர் எனும் பிரத்தியோக பகுதியை தமது செயலியில் வைத்திருக்கிறது. அதில் தோடு, வளையல், பொம்மை என சகலமும் கிடைக்கின்றது. ஃபேன்சி ஸ்டோர் முதல் பிளாட்பாரக்கடை வரை எங்கும் செல்லாமல் உட்கார்ந்த இடத்திலேயே சீன சந்தையில் நீங்கள் பொருள் வாங்க இயலும். பிலிப்கார்ட் தமது கிட்டங்கிகளை முழுமையாக ரோபோக்கள் மூலம் கையாள நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதன் மூலம் 2 மணி நேர டெலிவரிகூட சாத்தியப்படலாம். அமேசான் ஏற்கனவே இதனை செய்ய ஆரம்பித்துவிட்டது.

இந்தப் போட்டியினால் நமக்கு எல்லாமே சல்லிசாக கிடைக்கிறது என நம்பிவிட வேண்டாம். விலையில் பல தில்லுமுல்லுகள் நடக்கின்றன. தி.நகர் தெருக்கடைகளில் நூறு ரூபாய்க்கு கிடைக்கும் மொபைல் கேஸ் இந்த தளங்களில் 200 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. சாதாரண மருந்துக் கடைகளில் 170 ரூபாய்க்கு விற்பனையாகும் செரிலாக் (குழந்தைகள் உணவு) அமேசானில் 286 ரூபாய், அதில் அதன் உண்மையான விலை 499 என பொய்யாக குறிப்பிட்டிருக்கிறார்கள். அமேசானின் தள்ளுபடி விலையைக் காட்டிலும் உள்ளூர் விலை 100 ரூபாய் குறைவு.

பேடிஎம் ஒரு சீன தயாரிப்பு கைக்கடிகாரத்துக்கு 100% கேஷ்பேக் என அறிவிக்கிறது (கேஷ்பேக் என்பது பொருளுக்கு நீங்கள் கொடுத்த பணம் சில நாளில் உங்கள் பேடிஎம் கணக்கில் வரவு வைக்கப்படும். அதற்கான பொருட்களை பிறகு நீங்கள் வாங்கிக்கொள்ளலாம்). ஆனால் அதன் விலையில் இருக்கிறது பித்தலாட்டம். அந்த பிளாட்பார கடிகாரத்தின் விலை 3300 ரூபாய். ஆக 100 ரூபாய் கடிகாரத்தை 3300 ரூபாய் கொடுத்து வாங்கினால் பேடிஎம் உங்களுக்கு 3300 ரூபாயை திருப்பித்தரும் . அதுவும் பணமாக அல்ல, அவர்களிடமே பொருள் வாங்கி அந்த பணத்தை கழிக்க வேண்டும். (இது அப்பட்டமான ஏமாற்றுவேலை என்பதை சராசரி அறிவுடைய எவரும் கண்டுபிடிக்கலாம். ஆனால் அந்த கடிகாரம் 5 நிமிடங்களில் விற்றுத்தீர்கிறது.).

படிக்க:
குன்றத்தூர் அபிராமி : கலாச்சார நீதிபதிகளின் தற்குறித் தீர்ப்புகள்
மியூசிக்கல்லி செயலி உருவாக்கும் ரசனை எத்தகையது ?

இதன் சேதாரங்கள் மூன்று இடங்களில் வெளிப்படலாம்.

முதலில் இந்த ஷாப்பிங் மனோபாவம் நமது நடத்தையில் பாரிய மாற்றங்களை உருவாக்குகிறது. ஒரு தேவை உருவாகி அதற்காக நாம் ஒரு பொருளை வாங்குவதுதான் வழக்கமான நடைமுறை. ஆனால் இப்போது ஷாப்பிங் தளங்கள் பொருளைக் காட்டி, உணர்வுகளைத் தூண்டி தேவையை வலிந்துத் திணிக்கின்றன. முதலில் ஒரு பரவச உணர்வுக்கு ஆட்பட்டு பிறகு அது பதட்டக்குறைப்பு செயலாக சுருங்குகிறது (கிட்டத்தட்ட சாராயத்தைப்போல). அதாவது ஷாப்பிங் செய்தால் நன்றாக இருக்கும் எனும் நிலைமாறி ஷாப்பிங் செய்யாவிட்டால் கைநடுக்கும் எனும் நிலைக்கு செல்லலாம். வெறுமையாக உணரும்போது ஷாப்பிங் தளங்களை மேயும் வேலையை பலரும் செய்வதை காணமுடிகிறது. மொபைல் அடிமைத்தனத்தைப்போல ஷாப்பிங் அடிமைகள் (அடிக்ட்) பரவலாக உருவாகிறார்கள்.  குக்கிராமங்களை வரை நீளும் ஸ்மார்ட்போன் பயன்பாடும் வலுப்படும் ஆன்லைன் வணிக கட்டமைப்பு இந்த அடிமைத்தனத்தை இன்னும் தீவிரமாக்கலாம்.

பிளாட்பார கடிகாரத்தின் விலை 3300 ரூபாய்.

இரண்டாவதாக இது நம் நாட்டில் இருக்கும் சிறுவணிக கட்டமைப்பை கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கும். இணையத்தில் இல்லாத பொருளே இல்லை எனும்போது, எல்லோர் கையிலும் ஸ்மார்ட் போன்கள் இருக்கும்போது, பணம் செலுத்தும் வழிகள் எளிமையாக இருக்கும்போது மக்கள் அதன் பக்கம் திரும்புவது நடந்தே தீரும். அவை இறுதியில் சாதாரண சிறு வியாபாரிகளை பாதிக்கும். மேலும் இந்த சப்ளை செயின் அளிக்கும் வேலைவாய்ப்பு முற்றிலும் நிரந்தரமில்லாதது. மூட்டை துக்கி முதுகுவலி வந்த பின்னால் அந்த டெலிவரி ஊழியர்கள் என்ன ஆவார்கள் என்பதற்கு எந்த பதிலும் இல்லை. அமேசானிலேயே விஷம் வாங்கிக்குடித்து சாகவேண்டியதுதான். மேலும் தேவையற்ற பொருட்களுக்கு செலவிடும் மக்கள் தேவையானவற்றுக்கு செலவைக் குறைப்பார்கள். அதுவும் மறைமுகமாக இந்தியாவின் வணிக கட்டமைப்பைத்தான் சிதைக்கும்.

இறுதியாக இந்த ஷாப்பிங் கலாச்சாரம் சேர்க்கும் குப்பைகள் ஒரு பெரும் சுற்றுச்சூழல் பிரச்சினை. வரும் ஜனவரி முதல் பாலித்தீன் மற்றும் பிளாஸ்ட்டிக் பயன்பாட்டை ஒழிக்க அரசு முடிவெடுத்திருக்கிறது (பைகள், டீ கோப்பைகள் போன்றவை). கிருஷ்ணகிரி வட்டாரத்தில் இப்போதே தடை வந்தாயிற்று. ரோட்டுக்கடை போடுபவர்கள் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் 5000 ரூபாய் அபராதம். ஆனால் உலகின் பெரும் பணக்காரர் அமேசானுக்கு அது பொருந்தாது. பொருட்களை சேதமாகாமல் அனுப்ப உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் உறைகளும் பபுள் பேக்கிங் தாள்களும் தெர்மாகூல் அட்டைகளும் பெரும் சூழல் அபாயங்கள். மேலும் அளவுக்கு மீறி நுகரப்படும் தரமற்ற (மலிவான) சீன பொருட்கள் இன்னொரு சூழல் அபாயம். அவை வெகுசீக்கிரமே குப்பைக்குப் போகும். இப்போது சிறு நகரங்களில்கூட குப்பை கொட்ட இடமில்லை. இவற்றை கையாளவும் கட்டுப்படுத்தவும் எந்த திட்டமும் நம்மிடம் இல்லை.

நாம் இவை குறித்து கவலைப்பட ஆரம்பிக்கும்போது சிக்கல் கைமீறிப்போயிருக்கும். என்ன செய்யலாம்?

– வில்லவன்

அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.

2 மறுமொழிகள்

  1. என்ன செய்யலாம்…?

    இது தான் பிரச்சனை என்று நன்றாக தெரிகிறது.

    தீர்வு….?

    எல்லோரும் சொல்வது போல்… “மாற்றம் ஒன்றே மாறாதது” என்று சொல்லி அடுத்த மாற்றம் என்னவோ அதற்காக பொறுத்திருப்போமா…!?

  2. கோயம்பேடு மார்கெட்டிலிருந்து பிற பகுதி வியாபாரிகள் தினமும் குட்டியானையில் காய்கறிகளை ஏற்று செல்வதை பார்த்திருப்பீர்கள். சென்னை சிறுசேரி ஐ.டி பார்க்கிற்கு மதியம் வாக்கில் வந்தீர்கள் என்றால் பிளிப்கார்ட், அமேசான் விற்பனை பிரதிநிதிகள் அதே போல குட்டி யானையில் பொருட்களை கொண்டு வருகிறார்கள். முன்னர் பைக்கில் வந்தார்கள் இப்போது குட்டியானை இன்னும் சில வருடங்களில் லாரியில் கூடவரலாம். சற்று நேரத்திற்குள் ஒரு கடையை விரித்து கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்து கிளம்பிவிடுகிறார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க