Saturday, June 15, 2024
முகப்புஉலகம்அமெரிக்காவால்மார்ட் மேட் இன் பங்களாதேஷ் - ஆவணப்படம்

வால்மார்ட் மேட் இன் பங்களாதேஷ் – ஆவணப்படம்

-

ந்த நாட்டின் அடுக்கு மாடி கட்டிடங்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. கட்டிடம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இன்னொரு கட்டிடம் இடிந்து விழுந்து ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு காரணம் வெளிநாடுகளிலிருந்து செயல்படும் அன்னிய சக்திகள்தான் என்று தெரிய வந்தது. இடிபாடுகளிலும், எரிந்து கருகிய மிச்சங்களிலும் கிடைத்த தடயங்கள் இந்த கோர விபத்துக்களுக்கு காரணமானவர்களை அடையாளம் காட்டின.

ஆனால், ‘அந்த பயங்கரவாதிகளை பிடித்துத் தண்டிப்போம், அவர்களை ஒப்படைக்க மறுக்கும் நாடுகள் மீது போர் தொடுப்போம்’ என்று யாரும் அறை கூவவில்லை. இதை சாக்காக வைத்து உலகெங்கும் போர் நடத்துவோம் என்று கொக்கரிக்கவில்லை. ஏனென்றால் கொல்லப்பட்டது ஏழை மக்கள், இந்தப் பேரழிவுகள் நடந்தது வங்க தேசத்தில்.

வால்மார்ட்
வால்மார்ட் – வரலாறு காணாத விற்பனை

வங்க தேச தொழிலாளர்கள் யாரால் எந்த நிறுவனங்களால் கொல்லப்பட்டார்களோ, அந்த நிறுவனங்களில் மிகப் பெரியதான வால்மார்ட் 2012-ம் ஆண்டு வரலாறு காணாத வருமானத்தை ஈட்டியது. குறைந்த செலவில் பொருட்களை செய்து வாங்கி, குறைந்த விலைக்கு விற்கும் அதன் வணிக உத்திக்கு பலியானவர்கள் பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் எந்த நியாயமும் கிடைக்காமல், எந்த பொருளாதார நிவாரணமும் அளிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை பலி கொண்ட அமெரிக்கர்களின் நுகர்வு வெறிக்கு இரை போடும் உற்பத்தி முறை தங்கு தடையின்றி தொடர்கிறது.

பல அடுக்கு வாங்கும் நடைமுறை மூலம் மனிதத் தன்மையற்ற, கொடூரமான சுரண்டலை தொழிலாளர்கள் மீது வால்மார்ட் எப்படி நடத்துகிறது என்பதை அம்பலப்படுத்துகிறது இந்த அல்-ஜசீரா ஆவணப்படம்.

2012-ம் ஆண்டு வங்கதேசத்தில் தீக்கிரையான தஸ்-ரீன் ஆயத்த ஆடை தொழிற்சாலையின் கருகிய மிச்சங்களில் வால்மார்ட்டின் முத்திரையான ஃபேடட் குளோரி (faded glory) பொருத்தப்பட்ட அரை கால்சட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால், தான் அந்த நிறுவனத்துக்கு ஆர்டர் கொடுக்கவே இல்லை என்று சாதித்தது வால்மார்ட்.

ஒவ்வொரு பருவத்திலும், முந்தைய பருவத்தை விட குறைந்த கூலியில் செய்து வாங்க வேண்டும், அதற்காக சப்ளையர்கள் என்ன செய்கிறார்கள் என்று கவலை இல்லை. அதற்கு கடைப்பிடிக்கப்படும் உற்பத்தி குறுக்கு வழிகளின் காரணமாக, விபத்துக்கள், உயிரிழப்புகள் நிகழ்ந்தால், குழந்தைத் தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுவது தெரிய வந்தால், தமது பொறுப்பை தட்டிக் கழித்துக் கொள்ள விலாவாரியான திட்டமிடலை செய்கிறது வால்மார்ட்.

வங்கதேச தொழிலாளர்கள்
தொழிற்சாலைக்குள் செல்லும் வங்கதேச தொழிலாளர்கள்.

ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். வால்மார்ட் தனது ஆடைகளுக்கான ஆர்டரை சக்சஸ் அப்பேரல் என்ற நியூயார்க் வர்த்தக நிறுவனத்துக்கு அளிக்கிறது. சக்சஸ் அப்பேரலின் தாக்கா அலுவலகம், அந்த ஆர்டரை ட்ரூ கலர் என்ற உள்நாட்டு முகவரின் உதவியுடன் சிம்கோ என்ற வங்க தேச நிறுவனத்துக்கு அனுப்புகிறது. அந்த நிறுவனம் மாதத்துக்கு 3 லட்சம் ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்யும் கொள்ளளவு உடையது.

வால்மார்ட் போன்ற கார்ப்பரேட்டுகள் பீற்றிக் கொள்ளும் சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகளின் கீழ் அதன் பொருட்களை உற்பத்தி செய்யப்படும் அனைத்து ஆலைகளும் மூன்றாம் தரப்பு ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகின்றன. அந்த நிறுவனங்களின் உற்பத்தி அளவு, தொழிலாளர் பாதுகாப்பு நடவடிக்கைகள், குழந்தைத் தொழிலாளர் பயன்படுத்தாமல் இருப்பது போன்ற விபரங்கள் அறிக்கையில் இடம் பெறுகின்றன.

சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிம்கோவிடம் சக்சஸ் அப்பேரல் மூலம் 3.3 லட்சம் ஆடைகளுக்கான ஆர்டர் வந்திருக்கிறது. ரம்ஜான் விடுமுறையில் பல தொழிலாளர்கள் ஊருக்குப் போய் விட உற்பத்தியை வால்மார்ட் கோரிய நேரத்தில் முடிக்க முடியாத நெருக்கடி. சக்சஸ் அப்பேரல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியிடம் காலக் கெடு கேட்டால், “ஒரு நாள் கூட தாமதப்படுத்த முடியாது, எப்படியாவது செய்து முடித்து விடுங்கள்” என்கிறார். அதாவது வெளியில் கொடுத்து செய்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று பொருள்.

தீப்பிடித்த தஸ்-ரீன் கட்டிடம்.
தீப்பிடித்த தஸ்-ரீன் கட்டிடம்.

அந்த நேரத்தில் இன்னொரு வால்மார்ட் சப்ளையர் மூலம் கூடுதலாக 3 லட்சம் ஆடைகளுக்கான ஆர்டர் சிம்கோவிற்கு வருகிறது. இதன் மூலம் சிம்கோ மீது அதன் உற்பத்தி திறனை விட இரண்டு மடங்கு அளவிலான ஆர்டர்கள் சுமத்தப்பட்டிருக்கிறது. வால்மார்ட் போன்ற பெரிய வாடிக்கையாளரின் ஆர்டரை மறுப்பது நடைமுறையில் சாத்தியமற்றது.

உற்பத்தி நெருக்கடியை தீர்த்துக் கொள்ள சிம்கோ, டூபா என்ற நிறுவனத்துக்கு ஆர்டரின் ஒரு பகுதியை கொடுக்கிறது. டூபாவின் தஸ்-ரீன் தொழிற்சாலை தீ விபத்து நடந்த கட்டிடத்தில் இயங்கி வந்தது. இது வால்மார்ட்டுக்கு தெரிந்தே நடக்கிறது. அதன் ரிடெயில் லிங்க் என்ற தரவுத் தளம் ஆடைகள் உற்பத்தி ஆகும் அனைத்து இடங்களையும் பதிவு செய்கிறது.

அந்தக் கட்டிடத்தின் தரைத்தளத்தில் பிடித்த தீ, வேகமாக பரவியது. மூன்றாவது, நான்காவது மாடிகளில் இருந்த உற்பத்திக் கூடங்களின் கதவுகள் வெளியிலிருந்து பூட்டப்பட்டிருந்ததால், உள்ளே வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள், பெரும்பாலும் இளம் பெண்கள் தப்பிக்க முடியவில்லை. தொழிலாளர்கள் எழுந்து ஓடுவதை பார்த்த மேலாளர், கண்காணிப்பாளரை பார்த்து “வேலையை முடிக்கணும்னு சொல்லியிருக்கேனே, தே…. மகனே. இதுங்க எங்க எந்திரிச்சு சுத்துதுங்க. போய் உட்கார்ந்து வேலையை பார்க்கச் சொல்லு, நாளைக்கு ஷிப்மென்ட் அனுப்பணும்” என்று திட்டியிருக்கிறார்.

தஸ்-ரீன் கட்டிடம்
தஸ்-ரீன் கட்டிடம்

ஜன்னல்களையும், கதவுகளையும் உடைத்து, மூன்றாவது, நான்காவது மாடிகளிலிருந்து குதித்து தப்ப முயன்றிருக்கின்றனர் தொழிலாளர்கள். 317 பேர் கொடூரமாக கருகி உயிரிழந்தனர். இந்தப் பிரச்சனையில் அதன் பங்கு குறித்த ஆதாரங்கள் வெளியானதும், வால்மார்ட் சிம்கோவுக்கு கொடுத்திருந்த ஆர்டரை ரத்து செய்து, ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த ஆடைகளை வாங்க மறுத்து விட்டது; சக்சஸ் அப்பேரல் நிறுவனத்தை தனது சப்ளையர் பட்டியலில் இருந்து நீக்கி விட்டது. அதற்கு பதிலாக சக்சஸ் அப்பேரல் நிறுவனத்தின் மேலாளர் ஆரம்பித்த புதிய நிறுவனம் பட்டியலில் சேர்ந்து விட்டது.

வால்மார்ட்டின் பொறுப்பு வங்கதேச தரகர் சிக்மோவின் மீது சுமத்தப்பட்டு தட்டிக் கழிக்கப்பட்டது. இந்தத் தொழிலாளர்களின் உயிரையும், இரத்தத்தையும் உறிஞ்சி தயாரிக்கப்பட்ட ஆடைகள் உலகெங்கும் வால்மார்ட் வாடிக்கையாளர்களின் உடலை அலங்கரிக்க, 2012-ம் ஆண்டுக்கான வால்மார்ட்டின் விற்பனை புதிய உயரங்களை தொட்டது.

குழந்தை தொழிலாளி
குழந்தை தொழிலாளி – மாதம் 2,000 ரூபாய் சம்பளம்.

2013 ஏப்ரல் மாதம் ராணா பிளாசா கட்டிடத்தில் மீண்டும் இதே கதை. அந்த 8 மாடி கட்டிடம் இடிந்து விழப் போகும் நிலையில் இருப்பதால், அதை பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்தது நகர நிர்வாகம். ஆனால், மேற்கத்திய நிறுவனங்களின் ஆயத்த ஆடை தேவையை நேரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற வெறியில் வங்க தேச தரகர்கள், தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி வேலைக்கு வரச் செய்தனர். கட்டிடம் இடிந்து விழுந்ததில் 1,217 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி கொல்லப்பட்டனர். அவர்களைக் கொன்றவர்கள் மேற்கத்திய ஆடை நிறுவனங்களும், அந்த ஆடைகளை வாங்கி போட்டுக் கொள்ளும் நுகர்வோரும்தான்.

பல் அடுக்கு வாங்கும் முறையின் மூலமாக, வால்மார்ட், கேப் போன்ற மேற்கத்திய பன்னாட்டு நிறுவனங்களுக்கான ஆடைகள் நூற்றுக் கணக்கான சிறு உற்பத்திக் கூடங்களில் தயாரிக்கப்படுகின்றன. பளபளக்கும் பிளாஸ்டிக் உறைகளில், விறைப்பான மடிப்புகளுடன் போடப்படும் அந்த ஆடைகள் 12 வயது சிறுமிகளின் உழைப்பில், மாட்டுக் கொட்டகை போன்ற கூடங்களில் ஆடைகள் தயாராகின்றன. இன்னும் பால் மணம் மாறாத முகம் கொண்ட சிறுமி ‘சார் சொல்லியிருக்காரு, இதை எல்லாம் இன்னைக்குள்ள முடிச்சிடணும்னு. ஒரு நாளைக்கு 500 பட்டன்கள் பொருத்துவேன்’ என்கிறாள். அவளுக்கு சம்பளம் ஒரு மாதத்துக்கு 2,500 டாக்கா (இந்திய ரூபாய் சுமார் 2,000).

இதுதான் அமெரிக்கா உலகுக்கே காட்டும் பொருளாதார முன்மாதிரியின் யோக்கியதை.

பாறைகளுக்கு கீழே உறைந்திருக்கும் ஷேல் கேஸ் எரிவாயுவை உயர் அழுத்தத்தில் தண்ணீர் செலுத்தி வெளியில் எடுப்பது போன்ற புதுப் புது தொழில் நுட்பங்களை கண்டு பிடிப்பதுதான் அமெரிக்க தேசத்தை முன்னேற்றப் பாதையில் நடைபோட வைக்கிறது என்று போற்றுகிறார் பத்ரி.

ஆனால், அமெரிக்க மக்களுக்குத் தேவையான ஆடைகளை குறைந்த விலையில் தயாரிக்கும் தொழில் நுட்பமும், எந்திரமும் கூட உருவாக்க வக்கில்லாமல் ஏழை நாடுகளை சுரண்டுகிறது அந்நாடு. தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டல் மட்டும்தான் அமெரிக்காவின் முன்னேற்றத்துக்கான அடிப்படை காரணம் என்பதுதான் நிதர்சனம்.

  1. நம்மூர் சிவகாசி பட்டாசு தொழிலாளிகள் பட்ட / படும்பாடு நினைவுக்கு வருகிறது! கொவை, திருப்பூர் மில்,திருச்சி பீடித்தொழிலாளர்களும் கிட்டத்தட்ட இதே ரகம்தான்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க