ஸ்விக்கி, சோமேட்டோ, உபர் ஈட். ஃபுட் பண்டா, ஜஸ்ட் ஈட், டேஸ்டி கண்ணா, டோமினோ, பிட்ஸா ஹட். இப்படி 10-க்கும் மேற்பட்ட ஆன்லைன் ஃபுட் டெலிவரி சர்விஸ் இணைய டப்பா வாலாக்கள்   சென்னை நகர சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக பறந்து கொண்டிருக்கிறார்கள். சிவப்பு, ஆரஞ்சு, கறுப்பு வண்ண உடைகளில் உணவு பெட்டிகளை சுமந்துகொண்டு மூச்சு விட முடியாத வாகன நெருக்கடியில் முகத்தை முழுவதும் மூடிக் கொண்டு இரண்டு சக்கர வாகனங்களில் காற்றாய்  பறந்து வாடிக்கையாளர்களுக்கு சுடச்சுட உணவுகளை கொடுக்கிறார்கள். ”டெலிவரி பாய்ஸ்” என்று மேட்டுக்குடி நுகர்வோரால் அழைக்கப்படும் இவ்வூழியர்களின் ஒரு நாள் உழைப்பு, சக்கரமாக சாலையில் தேய்ந்து ஓய்கிறது.

சென்னை வடபழனி அருகே உள்ள முருகன் இட்லிக்கடை என்ற சங்கிலி உணவு நிறுவனத்தின் வாசலில் 10 க்கும் மேற்பட்ட ”ஸ்விக்கி ஊழியர்கள்” பரபரவென தங்கள்  ஸ்மார்ட் போனில் ஆர்டர் கால்களை எதிர்பார்த்து காத்திருந்தவர்களிடம் பேச்சு கொடுத்தோம். அவர்கள் நம் கேள்வியில் நாட்டமின்றி தந்தி பாணியில் பதில் பேசினர்.

ஜெய்சங்கர்
ஜெய்சங்கர்

முதலில் பேசிய ஜெய்சங்கர் ஸ்விக்கியின் விளம்பர வீடியோவாக பேசினார்.

“சென்னையில் ஸ்விக்கி  தான் நம்பர் ஒன் ஆன்லைன் புட் சப்ளையர். டெல்லியில் இருந்து கோயம்பத்தூர் வரை பதினாறு கிளைகள், முப்பத்தைந்தாயிரம் ரெஸ்டாரண்டுகளில் இருந்து வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான உணவுகளை ஸ்விக்கியில் ஆர்டர் செய்யலாம்.

ஆர்டர் செய்த அரைமணி நேரத்தில் அவர்கள் முன் உணவுடன் இருப்போம். எந்த நேரத்தில் ஆர்டர் கொடுத்தாலும் அவர்கள் விரும்பிய உணவுகளை உடனடியாக கொடுத்து விடுவோம். குழந்தைகளுக்கு என்று இரண்டு இட்லி மட்டும் ஆர்டர் கொடுத்தாலும் எடுத்துக் கொண்டு ஓடுவோம். முதியவர்கள் சிங்கிள் காபி மட்டும் ஆர்டர் சொன்னாலும் சுட சுட அங்கு நிற்போம்.

வெஜ்ஜா, நான் வெஜ்ஜா, சைனிசா, தந்தூரியா, இபாக்கோ  ஐஸ்கிரீமா, சாக்லெட்டா, பிரட் டோஸ்ட் என்ன வேண்டும் எங்கிருந்து வேண்டும் என்று மட்டும் சொன்னால் போதும். சரவணபவனில் இருந்து தலப்பாக்கட்டு பிரியாணி வரை –  இபாக்கோ ஐஸ்கிரீமிலிருந்து ஹைவே கடை வரை நுழைந்து வாங்கி எடுத்துக்கொண்டு ஓடுவோம்” என்று ரேடியோ ஜாக்கி போல வேகமாக பேசினார் ஜெய்சங்கர்.

***

சுலோஜன்

வீடியோகிராபராக இருக்கும் சுலோஜன், “இந்த வேலையை பார்ட் டைம்மா செய்யுறேன். வீடியோ புரோகிராம் ஏதாவது வரும்போது ஒரு லெட்டர் எழுதி கொடுத்து விட்டு போயிடுவேன்.  நாங்க எவ்ளோ ஆர்டர் எடுக்கிறோமோ அதற்கான அமெளண்ட் எங்களுக்கு ஆட் ஆகும். இப்ப நாங்க நாலு கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் ஆர்டர் எடுத்துட்டு போனா 36 ரூபாய் கிடைக்கும். அதற்கு மேல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் எக்ஸ்ட்ரா கொடுப்பார்கள். அதேபோல ரெஸ்டாரண்டுகளில் வெயிட்டிங் சார்ஜ் ஆட் ஆகும்.பார்ட் டைமா வேலை செய்யிறதால ஒரு நாளைக்கு 8 முதல் 10 ஆர்டர் வரை எடுப்பேன். ஆர்டருக்கு ஏத்த மாதிரி இன்சென்டிவ் கிடைக்கும்” என்றார்.

கணேஷ்

ருகில் இருந்த கணேஷ், “இந்த வேலையில் ’டைமிங்’ ரொம்ப முக்கியம். அதாவது ஒரு ரெஸ்டாரெண்டில் இருந்து ஆர்டர் எடுக்கிறோம் என்றால் முப்பது நிமிடம் டைம் கொடுப்பார்கள். அதற்குள் வாடிக்கையாளரிடம் சென்று ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தான் இன்சென்டிவ் ஆட் ஆகும். அதிகமாக எங்களுக்கு ஆர்டர் கொடுக்கிறவங்க பேச்சுலர்ஸ், மாணவர்கள், வயதானவர்கள், போன்றோர்களிடம் இருந்து தான் ஆர்டர்கள் குவியும்” என்று சொல்லி முடித்தவுடன் மீண்டும் சுலோஜன் ஆரம்பித்தார்.

கணேஷ்

“ட்ராபிக் இல்லாத நேரம் தான் எங்களுக்கு மகிழ்ச்சியா இருக்கும்….  எவ்வளவு மழையாக இருந்தாலும் நாங்க சமாளிச்சிடுவோம். கஸ்டமருக்கு உடனேயே டெலிவரி பண்ணா எங்கள பாராட்டுவாங்க. எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஏன்னா எங்களுக்கும் ”ரேட்டிங் ஸ்டார்ஸ்” உண்டு. நாங்க சீக்கிரமாக டெலிவரி செய்தால் ”ஃபைவ் ஸ்டார்” கொடுப்பாங்க. இதனால எங்களுக்கு இன்சென்டிவ் கிடைக்கும். அதேமாதிரி எங்க கிட்ட அன்பா அணுசரனையா நடந்துக்கிற கஸ்டமருக்கு நாங்களும் ”ரேட்டிங் ஸ்டார்” கொடுப்போம். அந்த  கஸ்டமர் மீண்டும் எதாவது ஆர்டர் கொடுத்தால் அவர்களுக்கு பத்து முதல் பதினைந்து சதவீதம் வரை ஆஃபர் கொடுப்பார்கள். பல நேரம் கஸ்டமரோட நச்சரிப்புதான் அதிகமா இருக்கும். ட்ராபிக்ல மாட்டிப்போம்…போனையும் எடுக்க முடியாது அத புரிஞ்சிக்கவே மாட்டாங்க…”என்று பொறிந்து தள்ளினார்.!

முத்து தன் சக ஊழியர்களுடன்.

ருகாமையில் இருந்த ஊழியர் முத்து, “அவர்களுக்கு பிடித்த விதவிதமான உணவுகளை சொன்ன நேரத்தில் எடுத்துக் கொண்டு ஓடினாலும் பல வாடிக்கையாளர்கள் கதவு ஓட்டை வழியாக வாங்கி இயந்திரம் போல் எங்களை அனுப்பி விடுவார். சிலர் ஆர்டர் கொடுத்த அரைமணி நேரத்தில் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விடுவார்கள். போனில் கூப்பிட்டால் ஏன் இவ்வளவு லேட்  இப்பதான் வெளியே போனேன்” என்பார்கள்.

“ஆர்டரை முறையாக கேன்சல் செய்ய மாட்டார்கள். குறை கூறி முறைத்துக் கொண்டுதான் திருப்பி அனுப்புவார்கள். மதியம் பீக் ஹவரில் பன்னிரண்டு டூ  இரண்டு உணவு ஆர்டர்கள் குவியும். அப்போது எடுத்து செல்லும் உணவு பார்சல்களை ஒவ்வொன்றாக பிரித்து பார்த்து பிறகு கையெழுத்து போடுவார்கள். இப்படி ஒவ்வோரிடமும் அரை மணி நேரம் வீணாகும். இதனால் ஆர்டர்கள் பல கேன்சல் ஆகும். அன்றைக்கு எங்கள் சம்பளமும் குறையும்.”

டோமினோஸ் பீட்சா, ஃபோரம் மால்.

“எடுத்து சென்ற உணவுப்பொருட்கள் ஒவ்வொன்றையும் குறை சொல்வார்கள். காப்பியா இது சூடு இல்ல, ஐஸ்கிரீம் இப்படி ஒழிவிடுதே, ஏன்? எக்ஸ்டரா சாம்பார் கேட்டேன் இல்லையே. நான் கையெழுத்து போட மாட்டேன் உங்க ஆபிசுக்கு போன் பண்ணு என்பார்கள். வெகு சிலர் தான் தண்ணீர் குடிக்கிறீர்களா? நீங்கள் சாப்பிட்டீர்களா என்று விசாரிப்பார்கள்.”

“சிலர் ஐம்பது ரூபாய் பில்லுக்கு இரண்டாயிரம் ரூபாய் நீட்டுவார்கள். சில்லறை இல்லன்னா பார்சலை எடுத்துக்கினு போங்க என்று எரிந்து விழுவார்கள். சிலர் இருநூத்தி ஐந்து ரூபாய் பில்லுக்கு ஐநூறு ரூபாய் கொடுத்து சில்லறை ஐந்து கேட்டால்  இல்லை என்று சொல்வார்கள். மீதி முன்னூறு ரூபாயை வாங்கிக்கொண்டு பட்டுனு கதவை மூடுவார்கள்”என்றார்.

பாம்பேஸ்தான், ஃபோரம் மால்.

ஆர்டர் முடித்து திரும்பி வந்த கணேசன், “சார்…..! ஆயிரம் குறை இருந்தாலும் இந்த வேலை எங்களுக்கு நிம்மதியை தருது சார். ஆபிஸ் மாதிரி இங்க எங்களுக்கு யாரும் மேய்க்கிறதுக்கு இல்ல. நானே ராஜா, வேலை செய்யணும்னு நெனச்சா ஆஃப்பை  ஓப்பன் பண்ணி ஆர்டர் எடுப்பேன். உடம்பு சரியில்ல ரெஸ்ட்  வேணும்னா  ஆப்பை ஆப் பண்ணிடுவேன்.

திடீர்னு வீட்டுக்கு போணும்னா உடனே ஆப்பை குளோஸ் பண்ணிட்டு போயிடுவேன். அடுத்த வாரம் வீட்டு செலவுக்கு பணம் தேவைன்னா, இரவு பகல் பார்க்காம வேலை செய்வோம். திங்கள் டூ  வெள்ளி அஞ்சு நாள் என்பத்தி ஐந்து ஆர்டர் விடாமல் செஞ்சி சம்பளம் கூட இன்சென்டிவ் ஆயிரம் கிடைக்கும். சனி, ஞாயிறு இரண்டு நாள்ல வீக் எண்டு ஆர்டர் இருபத்தி ஐந்து எடுத்தா ரூபாய் எழுநூத்தி ஐம்பது தனியா இன்சென்டிவ் கிடைக்கும். இப்படி ஒரு வாரத்துல திடீர்னு ஏழாயிரம் எட்டாயிரம் சம்பாதிப்போம்” என்று சொல்லிக்கொண்டு இருந்தவர் அடுத்த ஆர்டர் வந்து விட்டது என்று ஓடினார்.

கே.எஃப்.சி., ஃபோரம் மால்.

அங்கிருந்த வெங்கட், “சார் இங்க இன்ஜினியர் ஐ.டி.ஐ. டிகிரி டிப்ளமோ படிச்சவங்க எல்லோரும் வேலை செய்யிறாங்க. ஒரு ஸ்மார்ட் போனும், ஒரு டூ வீலரும் இருந்தா போதும் இந்த வேலைய செய்யலாம். குறைந்த பட்சம் மொபைல்ல வர இங்கிலீஸ் அட்ரஸை படிக்க தெரியனும். வெய்யிலு மழை தூசு தும்பு ரோடு டிராபிக்கினு  பாக்காம வண்டியில அலையனும். தினமும் நூத்தி ஐம்பது கிலோ மீட்டருக்கு குறையாம வண்டிக்கு பெட்ரோல் போட்டுக்கினு தெருவுல சுத்தணும். பெட்ரோலுக்கு இருநூறு ரூபா, சாப்பாடு மேல் செலவு இருநூறு ரூபா போக வீட்டுக்கு வாரம் நாலாயிரம் ஐயாயிரம் நிக்கும். இரண்டு வாரம் தொடர்ச்சியா நிக்காம வேலை செய்வோம்.

அடுத்து உடம்பு அடிச்சி போட்ட மாதிரி ஆயிடும். நம்ம பேச்ச நம்ம உடம்பு கேக்காது. உடம்பு பச்சை புண்ணா நோவும். லீவு போட்டு ரெஸ்ட் எடுப்போம். இதுல அடிக்கடி பல பேருக்கு ஆக்சிடென்ட் ஆகும். அந்த செலவை நாம தான் பார்த்துக்கணும். இரண்டு மாசம் முன்ன அரி என்ற பையனுக்கு ஆக்சிடென்ட் ஆகி கையை எடுத்துட்டாங்க. என்ன செய்யறது?

டிராபிக் எவ்ளோ இருந்தாலும் பேய் மாதிரி பாரப்போம். அப்ப சேஃப்டியா  போகணும்னு தோணாது. இதை பாருங்க போனை கஸ்டமருங்க ஆர்டர் கொடுக்கும்போது ரெக்வஸ்ட்ல பல கண்டிஷன் போடுவாங்க. பாஸ்ட்டா (வேகமா) குயிக்கா ( சீக்கிரமா) ஹாட்டா (சூடா) ஸ்பைசியா (காரமா) எக்ட்ஸ்ரா (சட்னி-சாம்பார்) ஃபிரீசா (ஐஸ்) இப்படி இங்கிலீஷிலே டைப் பண்ணிட்டு ஒரு நிமிஷம் லேட்டா போனாலும் ஆயிரம் கேள்வி கேட்பாங்க. ஆர்டர் கேன்சல்னு சப்ளையர் டேபிள்ல கத்துற மாதிரி கதவை மூடிடுவாங்க. இருந்தாலும் இந்த வேலை எங்களுக்கு புடிச்சி இருக்கு. அதான் இங்க இவ்ளோ பேர் வேலைக்கு வர்றாங்க.

இங்க  சுதந்திரமா (?)  இருக்கலாம். ஆபிஸ்ல ஒருநாள் லீவ் எடுத்தாலும் ஒருமணி நேரம் தலையை சொரியணும். இங்க அது இல்ல. ஆஃப்பை ஆப் பண்ணினா லீவு. ஆஃப்ப ஆன் பண்ணி ராவும் பகலும் காலை லாக் பண்ணி ஆர்டர் எடுத்தா எக்ஸ்டரா பணம் இன்சென்டிவ் கிடைக்கும்.

சொந்தமா பிசினஸ் பண்ணி லாஸ் ஆனவங்க, ஆபிஸ் வேலை பிடிக்காதவங்க, பார்ட் டைமா பணம் சம்பாதிக்க நெனைக்கிறவங்க.. ஸ்டூடென்ட்ஸ் எல்லாரும் இங்க வராங்க… முடிஞ்ச வரைக்கும் வேலை செய்யலாம். முடியலண்ணா போயிடலாம். இந்த சுதந்திரம் வேற எங்க கிடைக்கும். சார் நான் வர்றேன்……” கஸ்டமர் ஆர்டர் ரிங் சவுண்டு கேட்டு 108 ஆம்புலன்ஸ் சவுண்டு மாதிரி பதட்டத்தோடு வண்டியை நோக்கி ஓடினார்.

குறிப்பு: உணவு டெலிவரி சந்தையில் இந்தியா முழுவதும் எண்ணற்ற ஊழியர்களின் கடினமான உழைப்பில் மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை அடைந்துள்ளது ஸ்விக்கி. அந்த வளர்ச்சியின் குறியீடாக மைக்ரோ டெலிவரி என்று அழைக்கப்படும் பால், மருந்து, மளிகை சாமான்கள், செய்தி தாள்கள் போன்றவற்றை தற்போது வழங்கி வரும் ”ஸ்பர் டெய்லி(Spur Daily)” நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த ” ஸ்பர் டெய்லி” நிறுவனத்தில் பல ”வெஞ்சர் கேப்பிடல்” நிறுவனங்கள் பல லட்சங்களில் முதலீடு செய்துள்ளன.
பத்திருபது வருடங்களுக்கு முன்னர் விற்பனையாளர் பிரதிநிதிகள் வேலை போல தற்போது இந்த உணவு விநியோக வேலை இளைஞர்களை இழுக்கிறது. ஆனால் யாரும் இங்கே நிரந்தரமாக வேலை பார்க்க இயலாது. குறிப்பிட்ட ஆண்டுகளில் கடும் உடல் வலி, இடுப்பு வலியுடன் வண்டியே ஓட்ட முடியாது என்ற நிலையை இவர்கள் அடைகிறார்கள்.
மேலும் இன்சென்டிவ் என்ற பெயரில் இவர்களது சம்பளம் பல்வேறு நிபந்தனைகளோடு பிணைக்கப்பட்டிருப்பதால் இவர்களும் ஓலா, உபர் ஓட்டுநர்கள் போல அதிக சவாரிகளுக்குகாக அபாயகரமாக ஓட்டுகிறார்கள். சென்னையில் மேல்தட்டு நடுத்தர வர்க்கத்திடம் அதிகரித்து வரும் தீனி வெறியும், சோம்பேறித்தனமும் இத்தகைய விநியோக வேலைகளுக்கான கிராக்கியை அதிகரித்து வந்தாலும் இதை ஒரு “வளர்ச்சி” என்று பார்க்க முடியாது. உட்கார்ந்து தின்பவர்களுக்காக ரிஸ்க் எடுத்துக் கொண்டு ஓடுகிறார்கள் இந்த ஸ்விக்கி இளைஞர்கள்!
 • வினவு புகைப்படச் செய்தியாளர்கள்.

7 மறுமொழிகள்

 1. . உட்கார்ந்து தின்பவர்களுக்காக ரிஸ்க் எடுத்துக் கொண்டு ஓடுகிறார்கள் இந்த ஸ்விக்கி இளைஞர்கள்!..
  ‘சும்மாவா ஓடுறான்?? எல்லாரும் சில்லறையை வாங்கிட்டு தான் ஓடுறான்… காசு இருக்கறவன் வாங்கி தின்றான், இதுல வினவு மாமாவுக்கு இங்கேயே எரியுது??? இந்த வேலையும் இல்லாம, இவனுங்க எல்லாம் செயின் அறுக்கவும், கஞ்சா விற்கவும் போனா வினவு கூத்தாடும்…. வினவு கேட்டா அது நன்கொடை, அதுவே வேற எவனாவது கேட்டா “மாமூல்”??? நல்ல பொழைப்பு…….

  • காசு இருக்கி்றவன் வாங்கி திங்கிறான். மன்கி பாத்.நவீன கீதா உபதேசம்.
   நன்னா சொன்னேள்!
   ஆனால்,வாங்கி தின்பதை கட்டுரை குறைச் சொல்லவில்லை.
   தட்டைக் கழுவ வேண்டும் என்பதால் வாஷ்பேஷனில் சாப்பிடுவது அநாகரிகம் என்கிறது கட்டுரை.மற்றவரைப்போல்,தன்,வாயால்தானே இந்தியன், சாப்பிடுகிறார்? அதற்கும் நோகும் என்று பிறர் வாயை அவுட் சோர்ஸ் செய்கிறாரா?

  • டேய் நீ உங்காந்த இடததுல உன் மூளையை கூட ப்ரெஷ்ஷா வச்சிக்கிட்டு வாங்கற காச விட ஒடம்பு நொந்து அவன் வாங்குறது ரொம்ப கம்மிதான்டா நாயே….இந்த வேலைக்கு வரலானா அவன் செயின் அறுக்கப் போயிருப்பானா? டேய் எச்ச நீ தான் உன் பொண்டாட்டிக்கு ஒரு செயின் கூட உன செலவுல வாங்கித்தரலயே…வாங்கித் தந்தவன கவலப படட்டும்டா மாமா

 2. செய்திக் கட்டுரை விறுவிறுப்பாக செல்கிறது. நல்ல முயற்சி. படித்து முடித்த பிறகு, நாமும் ஏன் இந்த வேலைக்குச் செல்லக் கூடாது என்ற எண்ணத்தைத் தூண்டுகிறது.

  ஒரு வேண்டுகோள் : முன்னுரையில், தற்போதைய மறுகாலனியாக்க காலச் சுழற்சியில் இளைஞர்கள் எப்படியெல்லாம் அல்லோகலப்பட்டு உதிரித் தொழிலாளிகளாக துரத்தியடிக்கப்படுகிறார்கள் என்பதை சுட்டிக் காட்டியிருந்தால் நன்றாக இருக்கும்.
  “ஆபிஸ் மாதிரி இங்க எங்களுக்கு யாரும் மேய்க்கிறதுக்கு இல்ல. நானே ராஜா, வேலை செய்யணும்னு நெனச்சா ஆஃப்பை ஓப்பன் பண்ணி ஆர்டர் எடுப்பேன். உடம்பு சரியில்ல ரெஸ்ட் வேணும்னா ஆப்பை ஆப் பண்ணிடுவேன்.” போன்ற வரிகள் அவர்களது எதார்த்த வாழ்க்கையை மறைக்கும் வார்த்தைகள்.

  வாரத்திற்கு 7 ஆயிரம் 8 ஆயிரம் சம்பாதிப்பதாக கூறப்பட்டுள்ளது. ஸ்விக்கி ஊழியர்களின் கூற்றுப்படியே ஒரு சிறிய கணக்குப் போட்டுப் பார்த்தேன். ஆர்டருக்கு ரூ.36 வீதம், 5 நாட்களுக்கு 85 ஆர்டர்கள் வந்தால் ரூ.3060. இன்சென்டிவ் ரூ.1000. சனி-ஞாயிறு 25 ஆர்டருக்கு ரூ.900+இன்சென்டிவ் ரூ.750. ஆக மொத்தம் ரூ.5710. ஒரு வாரத்திற்கான பெட்ரோல் செலவு (150கிமீ. X 7 நாட்கள் % மைலேஜ்) சராசரியாக ரூ. 1596.
  ஆக, வாரத்திற்கு அவர்கள் சம்பளமாக பெறுவது ரூ. 4114 மட்டுமே. ஆனால் 7 ஆயிரம், 8 ஆயிரம் பெறுவதாகச் சொல்வது மிகையாக உள்ளது.
  நன்றி.

 3. ஹோட்டலுக்கு போவதற்கு பதில் வீட்டிலேயே வாங்கி சாப்பிடுகிறார்கள். ஓட்டலுக்கு போய்வரும் நேரம், பயண காசு என்று வரும்போது இது ஓகே தான்.

  இதை ஒரு வளர்ச்சியாக பார்ப்பது சரியாக இருக்கும்.

 4. டேய் நீ உங்காந்த இடததுல உன் மூளையை கூட ப்ரெஷ்ஷா வச்சிக்கிட்டு வாங்கற காச விட ஒடம்பு நொந்து அவன் வாங்குறது ரொம்ப கம்மிதான்டா நாயே….இந்த வேலைக்கு வரலானா அவன் செயின் அறுக்கப் போயிருப்பானா? டேய் எச்ச நீ தான் உன் பொண்டாட்டிக்கு ஒரு செயின் கூட உன செலவுல வாங்கித்தரலயே…வாங்கித் தந்தவன கவலப படட்டும்டா மாமா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க