privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்கள ஆய்வு : புதுச்சேரி எல் & டி ஆலையில் நவீன கொத்தடிமை தொழிலாளர்கள் !

கள ஆய்வு : புதுச்சேரி எல் & டி ஆலையில் நவீன கொத்தடிமை தொழிலாளர்கள் !

-

சிய நாடுகளிலேயே முதன் முதலாக எட்டு மணி நேரவேலையை போராடி பெற்ற புதுச்சேரியில் தொழிலாளர்களின் வாழ்க்கை இன்று எப்படிப் பயணிக்கிறது? கார்ப்பரேட் நிறுவனங்கள் எந்த அளவு பொறுப்புணர்வுடன் உள்ளனர் என்பதைத் தெரிந்து கொள்ள ஒரு ஆய்வினை மேற்கொண்டோம்.

சேதராப்பட்டு தொழிற்பேட்டை பகுதியில் எல் & டி ஆலையில் தொழிலாளர்கள் போராடி வருவதைக் கண்டு அங்கு சென்றோம்.

இந்த தொழிற்பேட்டை பகுதியில் சுமார் 300 ஆலைகள் இயங்குகின்றன. எல் & டி போன்ற பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களும் கணிசமான அளவில் உள்ளன.

இங்கு வேலையில் சேர்வதற்கான முதல் நிபந்தனையே 12 மணி நேரம் வேலை செய்வதற்கு தயார் என்றால் தான் வேலையே கிடைக்கும். 3 ஷிப்ட் என்பதெல்லாம் பொய்யாய், பழங்கனவாய்ப் போய் விட்டன. வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனம், நல்ல சம்பளம் கிடைக்கும் என நம்பி வேலையில் சேர்ந்தவர்களுக்கு முதல் பேரதிர்ச்சியே கேசுவல் தொழிலாளி (Casual Labour) என்பதுதான். அந்த கொடுப்பினை கூட இன்றைக்கு இல்லை. 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை சி.எல். என சேர்த்தவர்கள் தற்போது ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே பணிக்கு சேர்க்கப்படுகின்றனர்.

12 மணி நேரம் வேலை செய்த 9 ஆண்டு அனுபவம் உள்ள, ஐடிஐ முடித்த ஒப்பந்தத் தொழிலாளி வாங்கிய கூலி 180 அல்லது 190 மட்டுமே. 4 மாதம் முன்பு வரை இதுதான் நிலைமை. 15 ஆண்டுகள் வேலை பார்த்த சிஎல் தொழிலாளி வாங்கிய கூலி இதிலிருந்து பெரிய அளவில் வேறுபடவில்லை. இதில் கொடுமை என்னவென்றால் அந்த சிஎல் தொழிலாளி தற்போது ஒப்பந்தத் தொழிலாளியாகி விட்டார். இந்த ரசவாதம் எப்போது நிகழ்ந்ததென அவருக்கே தெரியவில்லை.

இந்த பன்னாட்டு கார்ப்பரேட் ஆலையில் இ.எஸ்.ஐ., பிஎஃப் என்பதெல்லாம் இன்று தொழிலாளிக்குத் தெரியாது. அந்த சிஎல் தொழிலாளிக்கு ஆரம்பத்தில் இ.எஸ்.ஐ. அட்டை தரப்பட்டிருந்தது. நோய்வாய்ப்பட்டபோது அங்கு சென்று மருத்துவம் பார்த்து வந்துள்ளார். சமீபத்தில் அப்படி ஒரு நிலைமையில் அங்கு சென்ற போது உன்னுடைய ஒப்பந்ததாரர் உனக்கு இ.எஸ்.ஐ. பணம் செலுத்தவில்லை. எனவே உனக்கு இங்கு மருத்துவம் பார்க்க முடியாது என திருப்பி அனுப்பி விட்டனர்.

புதுச்சேரியில் அமைந்துள்ள எல் & டி ஆலை

நேராக வந்து நிர்வாகத்திடம் கேட்ட போதுதான் தான் ஒப்பந்தக் கூலியாக மாற்றப் பட்டதும் அந்த ஒப்பந்ததாரர் சேலம் இ.எஸ்.ஐ.யில் பணம் செலுத்துவதாகவும் அவருக்குத் தெரிய வந்துள்ளது. இனி அவர் மருத்துவம் பார்க்க வேண்டுமென்றால் ஒன்று சேலம் போகவேண்டும் அல்லது தனியார் மருத்துவரிடம் 250ரூ கொடுத்து, அவர் சொல்லும் மருந்துகளுக்கு மேற்கொண்டு 500, 700 என செலவளிக்க வேண்டும்.

2017 -ம் ஆண்டின் இடையில் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு கூலியை உடனே கொடு எனப் போராடினர். அப்போதைக்கு வேலை நடக்க வேண்டும் என உடனடியாக கூலியைக் கொடுத்த நிறுவனம் அடுத்த மாதத்திலிருந்தே வழக்கம் போல கூலி தராமல் இழுத்தடித்து எப்போதாவது கொடுப்பது என மீண்டும் தொடங்கினர். அதே நேரம் ஒப்பந்த தொழிலாளர்களை வேலையை விட்டு நிறுத்துவது என தொடங்கினர். இதுவும் வழக்கமான ஒன்றுதான். தொடர்ந்து வேலை தரவில்லை எனில் கேள்வி கேட்கும் தொழிலாளர்களை இலக்கு வைத்து வேலையிலிருந்து நிறுத்தி நிலைமைக்கேற்ப ஒரு வாரம், ஒரு மாதம் அல்லது சில மாதங்கள் கழித்து மீண்டும் வேலைக்கு சேர்ப்பார்கள். ஆபத்தானவர்கள் என நிர்வாகம் கருதினால் அவர்களை மீண்டும் வேலையில் சேர்க்கவே மாட்டார்கள். 3 மாதம் பொறுத்திருந்த தொழிலாளர்கள் உடனடியாக AICCTU தொழிற் சங்கத்தைத் தொடங்கினர்.

சங்கத்தின் முதல் கோரிக்கையே கூலி உயர்வும் உரிய தேதியில் கூலி தர வேண்டும் என்பதும் தான். பல சுற்று பேச்சு வார்த்தைக்குப் பின் பத்து ஆண்டுகள் அனுபவம் உள்ள திறன் மிக்க ஒரு தொழிலாளிக்கு 8 மணி நேர வேலைக்கு 120ரூ கொடுத்தவர்கள் 180,190 என சற்றே உயர்த்தியுள்ளனர். ஆனால் அதே நேரம் சங்கம் வலுவாக உள்ள அலு ஃபார்ம் பிரிவிலிருந்த 147 தொழிலாளர்களையும் சிறுது சிறிதாக நிறுத்தி பிப்ரவரி இறுதிக்குள் மொத்தப் பேரையும் நிறுத்தி, அந்த பிரிவையே மூடிவிட்டனர். கடந்த ஒரு மாதமாக அந்தத் தொழிலாளர்கள், நிர்வாகத்தின் சட்ட விரோத வேலை நிறுத்தத்திற்கெதிராக ஆலை வாயில் முன் போராடி வருகின்றனர்.

தொழிற்துறையில் (தொழிலாளர் நலத் துறை என்ற பெயரையே அரசு மாற்றி விட்டது) முறையிட்டுள்ளனர். நிர்வாகம் இதுவரை பேச்சு வார்த்தை நடத்தக் கூட முன்வரவில்லை.
எல் & டி யின் கட்டுமானத்திற்கு தேவையான மர, அலுமினிய கருவிகளை உற்பத்தி செய்யும் ஆலையான இந்த ஆலை 1996 முதல் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது.

  • அலு ஃபார்ம் I,
  • அலு ஃபார்ம் II,
  • உற்பத்திப் பிரிவு,
  • மர பிரிவு

என 4 பிரிவுகளைக் கொண்ட இந்த ஆலை கட்டுமானப் பணிகளுக்கான பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த 4 பிரிவுகளிலும் வேலை செய்யும் தொழிலாளர்கள் திறன் மிக்க தொழிலாளர்களே. இவர்களின் உழைப்பு இல்லாமல் இந்த ஆலையில் உற்பத்தியே நடக்காது. ஐடிஐ, டிப்ளமோ, பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, +2 என கல்வித் தகுதியுடன் தான் ஆகப் பெரும்பான்மையான தொழிலாளர்கள் உள்ளனர். ஒரு சிலர் மட்டுமே பத்தாவது படித்து வேலை பழகி அவர்களும் திறன்மிக்க, அனுபவம் மிக்கவர்களாக உள்ளனர்.

சுமார் 600 பேர் வேலை செய்யும் இந்த ஆலையில் 5 பேர் மட்டுமே நிரந்தரத் தொழிலாளர்கள். மற்றவர்கள் அனைவருமே எந்நேரமும் நிறுத்தப்படும் நிலைமையில் உள்ள சிஎல், தினக் கூலி அல்லது ஒப்பந்தத் தொழிலாளிகள். ஆனால் இவர்களது உழைப்பு இல்லாமல் ஆலையில் எந்தப் பொருளும் உற்பத்தி ஆகாது.

சம வேலைக்கு சம ஊதியம் என சட்டம் சொல்கிறது. ஆனால் இங்கு 8 மணி நேரம் வேலை செய்யும் நிரந்தரத் தொழிலாளிக்கு மாதத்திற்கு 35,000 -க்கு மேல் கூலி வழங்கும் நிர்வாகம் 12 மணி நேரம் அதே வேலை செய்யும் ஒப்பந்தத் தொழிலாளிக்கு 180 முதல் 350 வரை தினக்கூலி தருகிறது. தினமும் 12 மணி நேரம் வேலை செய்வதாக கணக்கிட்டாலும் அதிக பட்ச மாதச் சம்பளம் ரூ. 10,000 -த்தைத் தாண்டாது. 12 மணி நேரத்தையும் தாண்டி கூடுதலாக ஓவர் டைம் வேலை செய்தால் மட்டுமே ஒரு கவுரவமான வாழ்க்கை நடத்துமளவு கூலி வாங்க முடியும்.

ஓவர் டைம் என்பது 4 மணி நேரமாயிருக்கலாம் அல்லது அடுத்த 12 மணி நேரமாகவும் இருக்கலாம் மறுநாளுக்கான ஷிஃப்ட்ஐ அவரே செய்ய வேண்டும் என்பதால் அடுத்த நாள் பகல் ஷிஃப்ட் 12 மணி நேரமாகவும் இருக்கலாம். இப்படி 36 மணி நேரம் வேலை வங்கும் நிர்வாகம் அந்தத் தொழிலாளிக்குத் தருவது மிக மிக அற்பக் கூலியே.

ஓவர் டைம் செய்தால் இரு மடங்கு கூலி தர வேண்டும் என சட்டம் சொல்கிறது. கார்பரேட்டுகளும் முதலாளிகளும் எந்த சட்டத்தை மதிக்கிறார்கள்? தொழிலாளர் ஆய்வாளருக்கு இது தெரிந்தேதான் இந்த சட்டம் கேலிக்கூத்தான ஒன்றாக ஆக்கப்பட்டிருக்கிறது.

சராசரியாக ஒரு தொழிலாளி, அவரது மனைவி, இரு குழந்தைகள் கொண்ட குடும்பம் என எடுத்துக் கொண்டால் இன்றைய நிலைமையில் ஒரு மாத செலவு எவ்வளவு என கேட்ட போது தொழிலாளிகள் கூறியது: மிக மிக குறைந்த வீட்டு வாடகை ரூ. 2000. மின்கட்டணம், தண்ணீருக்கு ரூ.500. 10-க்கு 15 அடி கொண்ட ஒரு அறைதான் இது. இதன் ஒரு மூலையில் மேடை போல ஒரு ஏற்பாடு செய்து கொண்டு அடுப்பு வைத்துக் கொள்ள வேண்டும். சமையலறை, வரவேற்பறை, படிப்பறை, படுக்கையறை எல்லாமும் இது ஒன்றுதான். இந்த வீடும் முதன்மைச் சாலையை விட்டு உள்ளடங்கிய ஒரு கிராமத்தில் தான் கிடைக்கும்.

அந்த ஊரில் ஆரம்பப் பள்ளி தவிர ஏதும் இருக்காது. உயர்நிலைப் பள்ளி என்றால் தூரமாகப் போகவேண்டும். வேலை நிலைமைகளில் கொண்டு சென்று விட வாய்ப்புகள் மிகக் குறைவு. தனியார் பள்ளி என்றால் கல்வியும் தரமாயிருக்கும், பள்ளிக்கூட வேனிலேயே அவன் வந்து அழைத்துச் சென்று விடுவான். சிக்கல் இல்லை என தனியார் பள்ளியிலேயே குழந்தைகளைச் சேர்க்கின்றனர். ஒரு குழந்தையின் ஒரு மாதப் படிப்புச் செலவு மட்டும் போக்குவரத்து, கல்விக் கட்டணம் உட்பட ரூ.4000. 2 குழந்தைகளின் படிப்புச் செலவு என்றால் ரூ. 8000 ஆகிவிடும். 4 பேருக்கான உணவு செலவு மட்டும் ரூ.3500 ஆகும். இதுவே ரேசன் அரிசியும் குருனை அரிசியும் என கலந்து செய்வதால்தான். மருத்துவச் செலவு மாதத்திற்கு சராசரியாக ஆயிரம் வரை ஆகும். இங்கு எரிவாயு உருளை வெளிச் சந்தையில்தான் வாங்க வேண்டும்: அதற்கு மாதம் 1500 ஆகும். மொத்தமாகப் பார்த்தால் 12,500 முதல் 16,500 வரை ஆகும். இது மிக மிகக் குறைவாகப் போடும் கணக்கு.

வெளியூர் தொழிலாளி என்றால் மாதம் ஒரு முறையாவது ஊருக்குப் போகும் செலவு வரும். அருகாமை என்றால் ரூ. 500-ம் தூரமான ஊர் என்றால் ரூ. 1000 -ம் வரையும் ஆகும். பேருந்துக் கட்டணம் கூடிய பின் ஊர் போவது பற்றி யோசிக்கின்றனர். ஆக கார்ப்பரேட் கம்பனியில் வேலை செய்வதாக பேரு. நல்லது கெட்டதுக்கு ஊருக்குக் கூடப் போக முடியாத அவலத்தில் வாழ்க்கை.

இப்படி நொந்து, நொம்பலப்பட்டு தினம்தினம் செத்து மடிவதற்கு பதில் ஊருக்குப் போய்விடலாமா என்றால் அங்கு ஒன்றுமேயில்லை. காவிரியின் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் வந்து ஆண்டுகள் பல ஓடிவிட்டன. விவசாயமே இல்லை. ITI முடித்து விவசாய வேலையும் இல்லாமல் டீக்கடையில் வேலை பார்த்த இளைஞர் ஒருவர் எல் & டியில் வேலை என விண்ணப்பிக்க, வேலைக்கு எடுத்த நிர்வாகம் பயிற்சியும் தந்து ஒப்பந்தத் தொழிலாளியாகச் சேர்த்துள்ளது. கொஞ்ச காலம் கழித்து நிரந்தரமாக்குவார்கள் என நம்பி, திருமணமும் செய்து கொண்ட அந்த இளைஞர் இன்று தெருவில் நிற்கிறார்.

ஆலையின் அருகில் உள்ள இளைஞர்களோ, “சிறப்புப் பொருளாதார மண்டலம் வருகிறது. நிலம் கொடுத்தால் வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலையும் கிடைக்கும் என புதுச்சேரி அரசு சொன்னதை நம்பி 14 ஆண்டுகளுக்கு முன்பே நிலத்தைக் கொடுத்து விட்டோம். இன்று வரை சிறப்புப் பொருளாதார மண்டலமும் வரவில்லை. அரசு வேலையும் இல்லை. நிலத்தைக் கொடுத்து விட்டதால் விவசாயமும் இல்லை. வேறு வழியின்றி ஆலையில் வேலைக்குச் சேர்ந்தோம். 10,12 ஆண்டுகள் ஆகிவிட்டன. எங்களுக்கு சொந்த வீடு என்பதால் வாடகையில்லை. மற்றபடி எல்லா செலவுகளும் எங்களுக்கும் உண்டு. முன்பு சொந்த நிலத்தில் வேலை செய்தோம். இன்று அடிமைகளாக உழல்கிறோம்” என போராட்டத்தில் குதித்துள்ளனர்.

15 ஆண்டுகளுக்கும் மேலாக திறன் மிக்க தொழிலாளியாய் உள்ளவரின் நிலைமையும் இதேதான்.

அதில் ஒரு தொழிலாளி சொல்கிறார்; “ 15 ஆண்டுக்கும் மேலாகிறது. இந்த ஓட்ட டிவிஎஸ்50 வண்டியை மாற்ற வக்கில்லை. ஊருக்குள் சிரிப்பாய் சிரிக்கிறார்கள்” என நொந்து போய் சொல்கிறார். 16 வருடமாக வேலை செய்யும் ஒரு தொழிலாளிக்கு இன்று இரு வருடமாக இ.எஸ்.ஐ. கிடையாது. பி.எஃப். 70,000ரூ இருப்பதாக சொல்கிறார்கள். அதற்கு எந்த ஆதாரமும் அவரிடம் இல்லை.

2014 வரை நிர்வாகம் தனது சி.எல்., ஒப்பந்தத் தொழிலாளிகள் யாருக்கும் போனசே கொடுத்ததில்லை. தொழிலாளர்கள் தொடர்ந்து நிர்ப்பந்தித்ததன் பின் 1200 – 1500 கொடுத்துள்ளனர். 2017-ல் சங்கம் கட்டிய பின் பேச்சு வார்த்தை நடத்திய நிர்வாகம் அடாவடியாக 8.33% தான் கொடுப்பேன் என போனசு கொடுத்துள்ளது. ஆனால் நிரந்தரத் தொழிலாளிக்கு இந்த ஆண்டு 20% போனசு கொடுத்துள்ளது. ஆனால் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரந்தரத் தொழிலாளியை விட ஒன்றரை மடங்கு அதிகமாக உற்பத்தி கொடுக்க வேண்டும். அப்படி தரவில்லை என்றால் வேலையிலிருந்து விரட்டி விடுவார்கள்.

கடந்த 20 ஆண்டில் மட்டும் இப்படி விரட்டப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,000 என நிர்வாகமே கூறுகிறது. அலு ஃபார்ம் தொழிலாளிகளை சங்கம் வைத்ததற்கு வேலையிலிருந்து நிறுத்தியதால் அந்தத் தொழிலாளர்கள் தொழிலாளர் வாரியத்தில் முறையிட்டபோது நிர்வாகத்தின் வாக்கு மூலமாக “ 20 ஆண்டுகளில் 10,000 பேரை நிறுத்தியுள்ளோம். அவர்களும் வந்து வேலை கொடு எனக் கேட்டால் வேலை தர முடியுமா?” என நிர்வாகம் ரைட் ராயலாக சட்டம் பேச தொழிலாளர் அதிகாரியோ இதை அங்கீகரித்து புன்முறுவல் பூத்து நிர்வாகத்தின் கைகூலிகள் தான் என நிரூபித்துள்ளனர்.

உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களின் கதியே இதுதான் என்றால் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் கதி என்னவாயிருக்கும்? அப்படி வந்த பெண்களிடம் பேசிய போது: “2009-ம் ஆண்டிலிருந்து வேலை செய்யறம். மொத 3 வருசத்துக்கு 8 மணி நேரம் வேலை செஞ்சா கூலியா 50 ரூபா தந்தாங்க. பொறவு அடுத்த 3 வருசத்துக்கு கூலி 120 ரூவான்னு நிர்வாகம் சொல்லிச்சு. ஆனா ஒப்பந்தகாரரு இந்தக் கூலியை ஒரு வருசங் கழிச்சிதான் தந்தாரு. அதுவரைக்கும் பழைய 50-ததான் தந்தார். நாங்க கேட்டால் அதை மதிக்கிறதேயில்லை. நிர்வாகமும் கண்டுக்குறதில்ல. அடுத்த மூனு வருசங் கழிச்சி நிர்வாகம் கூலி 140-ன்னு சொல்லிச்சு. வழக்கம் போல ஒப்பந்தக்காரரு ஒரு வருசத்துக்கு பழைய 120 கூலிதான் கொடுத்தார். சங்கம் வச்ச பொறவு 258 என கூலி கூடுனாலும் பிடிச்சம் போக கையில் கெடைக்றது 210 தான்.

மாதிரி படம்

ESI, PF பிடிக்கிறதா சொல்றாங்க. ஆனா ESI ஆஸ்பத்திரிக்குப் போனப்ப உங்களுக்கு இல்லைன்னு சொல்லிட்டாங்க. நிர்வாகத்துகிட்ட கேட்டப்ப ஒப்பந்தக்காரரக் கேளுன்ட்டாங்க. அவரோ ஒங்களுக்கு சேலத்தில்தான் ஆஸ்பத்திரி என சொல்லிட்டாரு. பி.எஃப். பத்தி கேட்டப்போ கட்றோம்னு சொல்றாங்க. அதுக்கு எந்த ஆதாரமும் எங்ககிட்ட இல்ல. இப்ப 2009 -லிருந்து 27 பேர் வேலை செய்யரம். அதுக்கு முன்னாடி 10 வருசமா வேல செஞ்ச 49 பேர நிறுத்திட்டுதான் எங்க 27 பேர வேலைக்கு எடுத்தாங்க. இன்னிக்கு பாதிப் பேருக்கு வேலைன்னா மறுநா அடுத்த பாதிப் பேருக்கு வேலன்னு மாசத்துல பாதி நா…தான் வேலை கெடைக்கும். ஊருக்குள்ள நெலத்தயெல்லாம் அரசாங்கத்துக்கு கொடுத்துட்டதால அங்க எந்த வேலயுமில்லனுதான் கம்பெனிக்கு வந்தம்.”

“இங்க நிக்கவிடாம வேல வாங்குறாங்க. சீக்கிரமா மிசினு பக்கம் கூட்டி முடிச்சுட்டம்னா மரம் வெட்டு, புல்லு வெட்டுன்னு சொல்றது மட்டுமில்லாம கக்கூசு கூட கழுவச் சொல்வாங்க. செய்யலன்ன வேலைய விட்டு தொரத்திடுவாங்க. இப்ப ஒரு 3 வருசமாத்தான் போனசுன்னு 1500 ரூபா கொடுத்தாங்க. அதுக்கு முன்னாடி பைசா… கெடையாது. இப்ப சங்கம் வச்ச பின்னாடி இந்த வருசம் 6000ரூ போனசு கெடச்சது.”

“3000 -க்குள்ள சம்பளம் வாங்கி எப்படி குடும்பம் நடக்குதுன்னு கேக்கறீங்களா? ஏதோ ரேசன்ல போட்ற அரிசிய வச்சி கஞ்சி வச்சி காலத்த ஓட்றம். இப்ப இங்க ரேசன்ல அரிசி போடாததால தமிழ்நாட்லருந்து காசு கொடுத்து வாங்கறம். பிள்ளங்களயெல்லாம் அரசாங்கப் பள்ளிகூடத்துல விட்ருக்கம். ஊருக்குள்ள அரசாங்கம் தந்த சொந்த வீடு. இப்ப இந்தக் கஞ்சிக்கும் கேடு வரும் போலருக்கு. 10 பேர வேலயவிட்டு நிறுத்தரதா சொல்லிட்ருக்காங்க… சங்கத்துல சொல்லியிக்கம்” என தங்களின் வேதனைகளை பகிர்ந்து கொண்டதோடு போராடிப் பார்ப்பது என உறுதியுடன் உள்ளனர். இந்தப் பெண்களில் சிலரது கணவன்மார்கள் டாஸ்மாக் புண்ணியத்தில் குடும்பத்தை சீரழித்து வருவதாக வேதனையுடன் கூறினர்.

ஒப்பந்த தொழிலாளியாக இங்கே வேலைக்கு வந்து கருங்காலிகளாக நிர்வாகத்துக்கு சேவை செய்து அதற்கான பரிசு போல அதிகாரிகளின் பினாமிகளாக உள்ளவர்கள்தான் தற்போதைய ஒப்பந்தகாரர்கள். யாரிடமும் லைசன்ஸ் கிடையாது. 2011 -ல் தொடர்ச்சியாக 4 ஒப்பந்தக்காரர்கள் சம்பளம் தராமலே ஓடிவிட்டனர். நிர்வாகமும் கைவிரித்து விட்டனர். ஒப்பந்தக் கூலிகளாக சேர்ந்தால் முதல் மாதம் சம்பளம் தரமாட்டார்கள். 2-வது மாதத்திலிருந்துதான் சம்பளம் கிடைக்கும். இதையெல்லாம் கேட்டால் வேலையிலிருந்து விரட்டிவிடுவார்கள்.

இந்தப் போராட்டத்தைக் கூட கொச்சைப் படுத்தும் வகையில் கொத்தனார் வீட்டைக் கட்டுவதால் அவர் அந்த வீட்டிலேயாவா குடியிருக்க முடியும்? போ… என்றால் போய்விட வேண்டும். இதுதான் சட்டம் என மோடி இருக்கும் தைரியத்தில் அதிகாரிகள் பேசுகிறார்கள். இவர்களின் யோக்கியதை என்ன? Ultra. Dt. என்கிற 2 இயந்திரங்கள் ரிப்பேராகி நின்றுபோய் விட்டன. முன்பென்றால் தொழிலாளர்களே அதை சரி செய்து உற்பத்தி பாதிக்காத வண்ணம் தொடர்ந்து இயக்குவார்கள்.

ஏனென்றால் வேலை நடக்கவில்லை எனென்றால் வேலை இல்லை என்றால் கூலி இல்லை. குடும்பம் சிக்கலாகும். இப்போதும் அதை சரி செய்யும்படி கூறியதற்கு தொழிலாளர்களோ எங்களுக்கும் தெரியாது என கூறி விட்டனர். ஏன்? இனிமேலும் கொத்தடிமைகளாக இருக்கக் கூடாது என்பதற்குதான். மெத்தப் படித்த மேதாவிகளான அந்த பொறியியல் வல்லுனர்கள் சம்பந்தப்பட்ட இயந்திரங்களின் கம்பனிகளுக்கு ஃபோன் செய்து அங்கிருந்து ஆட்கள் வந்து ரிப்பேர் செய்து கொண்டே………… இருக்கிறார்கள். வேலை தான் முடியக் காணோம்.

சேதராப்பேட்டை தொழிற்பேட்டைப் பகுதியில் இந்த L&T கார்ப்பரேட் நிறுவனம் தான் மற்றெல்லா ஆலைகளுக்கும் கொடூரமான பகாசுரக் கொள்ளைச் சுரண்டலுக்கு வழிகாட்டியாக திகழ்கிறது.

இந்த L&T கட்டுமான ஆலை தவிர முதன்மையான L&T TLT என்ற நிறுவனம் ஆயிரக்கணக்கானவர்களை 20, 30, ஆண்டுகளாக கொடூரமாக தினக் கூலி, ஒப்பந்தக் கூலி, சி.எல். என சுரண்டிக் கொழுத்து வருகிறது. ஒப்புக்கு சில தொழிலாளர்களை நிரந்தரமாக வைத்துள்ளது. இவர்களில் பலரும் இதேபோல சி.எல்.-ஆக வேலைக்குச் சேர்ந்து, விரட்டப்பட்டு, பிறகு போராடி, வழக்கு நடத்தி நிரந்தரமானவர்களே. இன்று அதே போலப் போராடும் இந்தத் தொழிலாளிகளுக்கு ஆதரவு கூட தரத் தயாராயில்லாத மனநிலைக்கு தொழிற்சங்க வாதம் அவர்களை பாட்டாளி வர்க்க உணர்வற்றவர்களாக மாற்றி வைத்துள்ளது. இந்த ஆலையில் ஒரிசா மாநிலத் தொழிலாளர்கள் கூடுதலாக உள்ளனர்.

சமீபத்தில் இந்த ஆலையில் வேலை செய்த ஒரு ஒரிசா ஒப்பந்தத் தொழிலாளி வேலையின் போதே மாரடைப்பால் இறந்து போனார். அவருக்கான நட்ட ஈடு தர வேண்டும் என வேலை இழந்த கட்டுமான உற்பத்தி பிரிவு தொழிலாளர்கள் போராடி 15 லட்சம் வாங்கித் தந்துள்ளனர். அவர்கள் இணைந்துள்ள AICCTU சங்கத்தின் இந்தப் போராட்டத்தில் நிரந்தரத் தொழிலாளர்களின் சங்கம் பங்கேற்கவில்லை. இது பாமக கட்சியின் வழிகாட்டலில் உள்ள சங்கம். வெறும் பொருளாதாரப் போராட்டங்கள் தொழிலாளர்களுக்கு வர்க்க உணர்வைத் தராது என்பதற்கு இந்த நிகழ்வே சான்று.

எனவே லெனின் கூறியது போல சங்கங்கள் தொழிலாளர்களைப் பயிற்றுவிக்கும் புரட்சிப் பள்ளிகளாகச் செயல்பட வேண்டிய அவசர அவசியம் இன்றுள்ளது. இல்லை என்றால் தொழிலாளர் நலச் சட்டங்கள் முற்றாக ஒழிக்கப்பட்டு, அமர்த்து – துரத்து ( HIRE&FIRE ) என்கிற அமெரிக்க கார்ப்பரேட்டுகளின் சட்டமே இங்கும் எதிர்ப்பின்றி அரங்கேற்றப்பட்டு விடும்.

120 வருடங்களுக்கு முன் இதே சுரண்டல் நிலைமைகளில் வாழ்ந்த ரசிய தொழிலாளி வர்க்கம் ரஷ்ய மன்னருக்கும் , முதலாளிகளுக்கும் எதிராக போராடி புரட்சி நடத்தியதன் மூலம் ஆலைகளை தனதாக்கி கொண்டது. அதன் தொடர்ச்சியாக கம்யூனிஸ்ட் தலைவர் வி. சுப்பையா தலைமையில் புதுச்சேரியில் 8 மணி நேர வேலைக்காக நடத்திய போராட்டத்தால், 1936 ஜூலை 30-ல் 12 ஜவுளித் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அதன் தொடர்ச்சியாக புதுச்சேரியில் 8 மணி நேர வேலைக்கான சட்டத்தை ஃபிரான்ஸ் இயற்றியது. 82 வருடங்கள் கடந்த நிலைமைகளில் அப்படிபட்ட போராட்ட களத்திற்கு மீண்டும் புதுச்சேரி காத்துக்கொண்டிருக்கிறது.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க