
25.03.2026
மக்களின் அடிப்படை உரிமையான குடிநீரைக் கேட்டுப் போராடியதற்கு
அருந்ததியர் மக்கள் மீது வழக்குப் பதிவு செய்து மிரட்டும் அரசு அதிகாரிகள்!!
சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், தேக்கம்பட்டி ஊராட்சி, தே.கொல்லப்பட்டி, ஒண்டிவீரன் நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பங்கள் மற்றும் 600-க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக தண்ணீர் வரவில்லை, பொதுக் கழிப்பிடம் சுகாதாரமாகப் பயன்படுத்த முடியவில்லை, இப்பகுதியில் பெண்கள், குழந்தைகள் என மலம் கழிக்க கூட தண்ணீர் இல்லாமல் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
ஒவ்வொரு வாரமும் ஊராட்சி அலுவலகத்தில் மக்கள் புகார் அளித்து குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்கின்றனர்.
கடந்த ஜனவரி 19/01/2026 அன்று குடிநீர் வேண்டி இப்பகுதி மக்கள் சாலை மறியல் செய்து தனது அடிப்படை உரிமையைக் கேட்டதற்கு இப்பகுதியில் வாழும் ஒன்பது பேர் மீது சாலை மறியல் செய்தது, சட்டவிரோதமான நடவடிக்கை எனக் கூறி கருப்பூர் போலீசு நிலையத்தில் குற்ற எண் 11/2026 U/S 189(2),126(2) BNS ஆக இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும் ஒண்டிவீரன் நகர் அருந்ததியர் மக்கள் வாழும் பகுதி என்பதால் அரசு அதிகாரிகள் அலட்சியம் செய்வதும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து மிரட்டுவதும் தொடர்ந்து அச்சுறுத்தியும் வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ளது. அத்தொட்டி மிகவும் சேதம் அடைந்து தொடர்ந்து பயன்பாட்டிலிருந்து வருகிறது. இதன் நான்கு தூண்களும் விரிசல் அடைந்து வருகின்றன. இந்த குடிநீர்த் தொட்டியின் வெளிப்புற சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து விழுகிறது.
இத்தகைய ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியை முற்றிலும் அகற்றி விட்டு புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை கட்டித் தருமாறு ஊர் பொதுமக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இம்மக்களின் அடிப்படை குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யாமல் அலட்சியம் செய்யும் அரசு அதிகாரிகளை மக்கள் அதிகாரக் கழகம் கண்டிக்கிறது.
உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மக்களின் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றித் தருமாறு மக்கள் அதிகாரக் கழகம் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்.
மக்களின் கோரிக்கைகள்:
- புதிய மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியைக் கட்டித் தர வேண்டும்.
- ஒண்டிவீரன் நகர் பகுதிக்கு புதிய போர் அமைத்துத் தர வேண்டும்.
- தற்போது கோடைக்காலம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
- இப்பகுதி மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
வேண்டும் ஜனநாயகம்!
![]()
இவண்,
தோழர் இரஞ்சித்,
கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
8754674757
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





