31.05.2026

சேலம் – வாழப்பாடி: மூடப்பட்டுள்ள கூட்டுறவு சங்க தென்னை நார் தொழிற்சாலையை
மீண்டும் பயன்பாட்டுக் கொண்டு வருக!

பத்திரிகைச் செய்தி

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே 5 ஆண்டுகளாக மூடிக் கிடக்கும், சின்ன கிருஷ்ணாபுரம் தென்னை நார் பிரித்தெடுக்கும் கூட்டுறவு சங்க தொழிற்சாலையைத் திறக்க, தொழில் வணிகத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி தொழிலாளர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி சுற்றுப்புற கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள் நீண்டகாலமாக தென்னை பயிரிட்டு வருகின்றனர். தென்னை நார் கழிவுகளை மதிப்புக் கூட்டி, திடப்பொருளாக மாற்றி பல்வேறு வடிவ கட்டிகளாக உருவாக்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். இந்த தென்னை நார் கழிவு கட்டிகளை மண்ணில்லாத விவசாயம், மாடித் தோட்டம், வீட்டுத் தோட்டங்கள் அமைப்பதற்கும், சுற்றுச்சூழலைப் பாதிக்காத பல்வேறு விவசாயம் சார்ந்த பணிகளுக்கும், தொழிற்சாலை பணிகளுக்கும் பயன்படுத்துவது அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது.

இதனால், தென்னை நார் கழிவுகளுக்கு நல்ல விலை கிடைத்து வருவதால், வாழப்பாடி பகுதியில் தேங்காய் மட்டையிலிருந்து தென்னை நார் பிரித்தெடுக்கும் சிறுதொழில் செய்வதில் அண்மைக்காலமாக ஏராளமான தொழில்முனைவோர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வாழப்பாடி அருகே பெத்தநாயக்கன்பாளையும் ஒன்றியத்துக்குட்பட்ட சின்ன கிருஷ்ணாபுரம் பகுதி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில், தொழில் வணிகத் துறை வாயிலாக 1982 ஆம் ஆண்டில் சின்ன கிருஷ்ணாபுரம் தென்னை நார் பிரித்தெடுப்போர் தொழிற் கூட்டுறவு சங்கம் என்ற பெயரில் தேங்காய் மட்டையிலிருந்து தென்னை நார் பிரித்தெடுக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. ஏறக்குறைய 40 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இந்த தொழிற்சாலை, பல்வேறு காரணங்களால் 5 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது.

அண்மைக் காலமாக, மதிப்புக் கூட்டி பல்வேறு வழிகளில் பயன்படுத்துவதால், தென்னை நாருக்கு மட்டுமின்றி, தென்னை நார் கழிவுக்கும் நல்ல வரவேற்பும், கூடுதல் விலையும் கிடைத்து வருகிறது. இந்நிலையில், ஆண்டு முழுவதும் தேவை இருந்தாலும், ஓரிரு மாதங்களில் தென்னை நார் மற்றும் கழிவுக்குத் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

எனவே, சின்ன கிருஷ்ணாபுரத்தில் மூடிக் கிடக்கும் கூட்டுறவு சங்க தென்னை நார் தொழிற்சாலையைச் சீரமைப்பதன் மூலம், விவசாயிகளுக்குப் பலனும், நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். இது வாழப்பாடி பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

கூட்டுறவு சங்க தென்னை நார் தொழிற்சாலையைச் சீரமைத்து, மீண்டும் இயக்க சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழில் வணிகத்துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு, இப்பிரச்சினையில் கவனம் செலுத்தி, உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.


இவண்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.

8754674757

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க