மோடியின் ‘சிக்கனத்திற்கான’ அறைகூவல்: உழைக்கும் மக்கள் மீதான பாசிச தாக்குதல்

கடந்த கால கொரோனா ஊரடங்குப் பேரிடரைப் போலவே, தற்போதைய உலகளாவிய நெருக்கடிச் சூழலையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் கும்பல்கள் தங்களின் கொள்ள லாபத்தை ஈட்டப் போகின்றன என்பதும், அதற்கு பாசிச மோடி அரசு வழிவகை செய்கிறது என்பதும் வெட்டவெளிச்சமாகிறது.

மெரிக்க மேலாதிக்க வெறிபிடித்த பாசிஸ்ட் டிரம்பால், இன்று ஒட்டுமொத்த உலகமும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் அடாவடித்தனமாக போர் தொடுத்ததையடுத்து, அதற்கு எதிர்வினையாக, உலக வணிகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்மூஸ் நீரிணையை ஈரான் முடக்கியது. இதனால், உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலி நிலைகுலையத் தொடங்கி, அதன் பாதிப்புகளை ஒட்டுமொத்த உலகமும் எதிர்கொண்டு வருகிறது.

ஆனால், உலகையே நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கும் டிரம்பின் மேலாதிக்க வெறியைக் கண்டிக்கத் துப்பில்லாத பாசிச மோடி அரசு, இந்தியாவில் இப்போரின் தாக்கத்தை நேரடியாக மக்களின் தலையில் சுமத்தி வருகிறது. போர் தொடங்கிய சில நாட்களிலேயே இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்ட நிலையில், அதனைச் சரிசெய்வதற்குப் பதிலாக, நாட்டில் சிலிண்டர் தட்டுப்பாடே இல்லை என அப்பட்டமாகப் பொய்யுரைத்தது பாசிச மோடி அரசு.

சிலிண்டர் முன்பதிவிற்கான நிபந்தனைக் காலத்தை நகர்ப்புறத்தில் 25 நாட்களாகவும், கிராமப்புறத்தில் 45 நாட்களாகவும் உயர்த்தித் தனது பாசிச முகத்தை வெளிக்காட்டியுள்ளது. போருக்கு முன்னர் ரூ.1,691-க்கு விற்கப்பட்ட வணிக சிலிண்டரின் விலையை ரூ.3,113 என இரட்டிப்பாக்கி, வணிகர்கள் மீதும், மறைமுகமாக உழைக்கும் மக்கள் மீதும் தாக்குதல் தொடுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, தற்போது ‘சிக்கன நடவடிக்கைக்கான அறைகூவல்’ என்ற பெயரில் மக்கள் மீது அடுத்தகட்ட பொருளாதாரத் தாக்குதலைத் தொடுப்பதற்கு ஆயத்தமாகியுள்ளது பாசிச மோடி அரசு.

உழைக்கும் மக்களின் வயிற்றில் அடிக்கும்
மோடியின் ‘சிக்கன’ அறிவிப்பு:

மே 10 அன்று ஹைதராபாத்தில் பா.ஜ.க-வின் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் மீதான போரால் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் கடுமையான தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும், பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் உரங்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். எனவே, இந்திய மக்கள் ‘சுயக்கட்டுப்பாடு மற்றும் சிக்கன நடவடிக்கை’ (Voluntary Austerity) என்ற பெயரில் எளிமையான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென அறைகூவல் விடுத்துள்ளார்.

வீட்டிலிருந்தே வேலை செய்வது (Work from home), பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது, சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைப்பது, இயற்கை உரங்களைக் கொண்டு இயற்கை விவசாயத்திற்கு மாறுவது, தேவையின்றி தங்கம் வாங்குவதைத் தவிர்ப்பது, வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பது ஆகியவை மோடி விடுத்த அறைகூவலின் முக்கிய அம்சங்களாகும்.

ஈரான் மீதான போர் தொடங்கியதிலிருந்து இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு வேகமாகச் சரிந்து வருவதைத் தொடர்ந்தே மோடியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால், நாட்டில் நெருக்கடி நிலை ஏற்படும் போது அதனைச் சரி செய்வதற்கான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளாமலும், மானியங்களை அறிவிக்காமலும், போகிற போக்கில் இத்தகைய அறிவிப்புகளை வெளியிடுவது ஒட்டுமொத்தப் நெருக்கடியையும் மக்களின் தலையில் சுமத்துவதாகும்.

குறிப்பாக, இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 14.16 கோடிக்கும் அதிகமானோர், அதாவது நாட்டின் மொத்த தொழிலாளர்களில் 43 சதவிகிதம் பேர் அன்றாடக் கூலித் தொழிலாளர்கள் ஆவர். இவர்களில் பெரும்பான்மையோர் விவசாயத்துறை சார்ந்தவர்கள். இவர்களின் அன்றாட உழைப்பினாலேயே இலட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களில் அடுப்பெரிகிறது.

இவ்வாறு பெரும்பாலான மக்கள் அன்றாடங்காட்சிகளாக வாழும் ஒரு நாட்டில், வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள் என்றும், பா.ஜ.க ஆட்சியில் வறுமையின் பிடியில் சிக்கி, ஏற்கெனவே உணவின் அளவைச் சுருக்கிக்கொண்டு வாழும் மக்களைப் பார்த்து, சமையல் எண்ணெய்யின் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்றும் மோடி கூறுவது எவ்வளவு வக்கிரம் நிறைந்தது.

கொரோனா பேரிடர் காலத்தின் போதும், இத்தகைய திட்டமிடப்படாத அறிவிப்புகளையும், முன்னெச்சரிக்கையற்ற பொதுமுடக்கத்தையும் அமல்படுத்தி இலட்சக்கணக்கான மக்களைப் படுகொலை செய்தது பாசிச மோடி அரசு. தற்போதும் அவ்வாறே மக்கள் மீது பாசிச தாக்குதலைத் தொடுக்கிறது.

அதைப்போல், “பசுமை புரட்சி” உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் இந்திய விவசாயமானது செயற்கை உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் சார்ந்து இயங்கும் அளவிற்கு நாசப்படுத்தப்பட்டுள்ளது. இப்படிபட்ட சூழலில், திடீரென உரப் பயன்பாட்டை குறைத்து இயற்கை விவசாயத்திற்கு மாறுவது என்பது உடனடியாகச் சாத்தியமானதல்ல. மேலும், அது உணவு உற்பத்தியில் கடும் வீழ்ச்சியை ஏற்படுத்தி, விவசாய இழப்பு, உணவுத் தட்டுப்பாடு போன்ற பேரழிவுகளுக்கே வழிவகுக்கும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். 2022-ஆம் ஆண்டில் இலங்கை பொருளாதார நெருக்கடியின் போது, விவசாயத்தில் திடீரென மேற்கொள்ளப்பட்ட இத்தகைய தன்னிச்சையான மாற்றமே உணவு உற்பத்தி வீழ்ச்சிக்கும், உணவுப்பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்ததற்கும் காரணமாக அமைந்தது. இதுகுறித்து அக்கறையோ, பொறுப்புணர்வோ இன்றிப் பேசுவது மோடி அரசின் பாசிச முகத்தை வெளிக்காட்டுகிறது.

அதைப்போல், இந்திய மக்களை பொறுத்தவரையில் தங்கம் என்பது வெறுமனே ஆடம்பரப் பொருள் மட்டுமல்ல, அது அவர்களின் சேமிப்பின் முக்கிய வடிவமாகும். சிறுகச் சிறுகச் சேர்க்கும் பணத்தில் தங்கம் வாங்கும் சாமானிய மக்கள், அதை அவசரக் காலத் தேவைக்கான ஆதாரமாகப் பார்க்கின்றனர். ஆனால், இந்திய வீடுகளின் லாக்கர்களிலும், பீரோக்களிலும், கோயில் கருவறைகளிலும் சுமார் 35,000 டன் தங்கம் தூங்குகிறது; மக்கள் புதிதாகத் தங்கம் வாங்குவதைத் தவிர்த்து பழைய தங்கத்தை மறுசுழற்சி செய்துகொள்ள வேண்டும் என்று மோடி பேசி வருகிறார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2011-2012 நிதியாண்டில் 23 சதவிகிதமாக இருந்த இந்திய குடும்பங்களின் சேமிப்பு விகிதம், ஏற்கெனவே, 2023-2024-இல் 18 சதவிகிதமாகச் சரிந்துள்ளது. கார்ப்பரேட் நுகர்வுச் சந்தையை ஊக்குவிப்பதற்காகக் குடும்பங்களின் சேமிப்பை சுரண்டும் பா.ஜ.க-வின் பொருளாதாரக் கொள்கையே இந்த சரிவிற்கு முக்கிய காரணமாகும். தற்போதும், நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்க வக்கற்ற மோடி அரசு மக்களின் சேமிப்பை சூறையாடத் துடிக்கிறது.

000

2026 ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் முடியும் வரை உயர்த்தப்பட்டாமல் இருந்த பெட்ரோல்-டீசல் விலையானது, மோடியின் ‘சிக்கன அறிவிப்பு’ வெளியானதிலிருந்து தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மே மாதத்தில் மட்டும் பெட்ரோல்-டீசல் விலை நான்கு கட்டங்களாக ரூ.7-க்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதைப்போல், உரங்களின் விலையும் 47 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. யூரியா, சூப்பர் பாஸ்பேட் உள்ளிட்ட அடிப்படை உரங்கள் மட்டுமன்றி, விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலையும் 15 சதவிகிதம் வரை விலையேற்றத்தைச் சந்தித்துள்ளன.

நடப்பாண்டில் காரிஃப் பருவச் சாகுபடிக்குச் சுமார் 3.90 கோடி டன் அளவு உரம் தேவைப்படும் நிலையில், அதில் 49 சதவிகிதம் பற்றாக்குறை நிலவுவதாக மோடி அரசே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த இமாலயப் பற்றாக்குறையோடு, தற்போதைய உர விலையேற்றமும் இணைந்து, ஏற்கெனவே கடனிலும் நட்டத்திலும் தவிக்கும் விவசாயிகள் மீது இரட்டைத் தாக்குதலாக மாறியுள்ளது.

இது, மோடி விடுத்துள்ள சிக்கனத்திற்கான அறைகூவல் என்பது, அடுத்து வரவிருக்கும் கடுமையான விலைவாசி உயர்வு மற்றும் உணவுப் பொருள் தட்டுப்பாட்டிற்கான மறைமுக எச்சரிக்கை என்பதையும், மக்களின் கொந்தளிப்பைத் தணிப்பதற்கான சூழ்ச்சி என்பதையும் அம்பலப்படுத்துகிறது.

மறுபுறம், பெட்ரோல்-டீசல் விலையேற்றத்திற்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வே காரணமாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது, கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 104 டாலரிலிருந்து 90 டாலராகக் குறைந்தும் இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படவில்லை.

இதன் மூலம், கடந்த கால கொரோனா ஊரடங்குப் பேரிடரைப் போலவே, தற்போதைய உலகளாவிய நெருக்கடிச் சூழலையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் கும்பல்கள் தங்களின் கொள்ளை லாபத்தை ஈட்டப் போகின்றன என்பதும், அதற்கு பாசிச மோடி அரசு வழிவகை செய்கிறது என்பதும் வெட்டவெளிச்சமாகிறது.

12 ஆண்டுகால பாசிச மோடி ஆட்சி:
உழைக்கும் மக்கள் மீதான பேயாட்சி

உலகளாவிய நெருக்கடி காரணமாகவே நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்துவிட்டதாகப் பாசிச கும்பல் கதையளந்து வருகிறது. ஆனால், “மேக் இன் இந்தியா”, “ஸ்டார்ட்-அப் இந்தியா”, “டிஜிட்டல் இந்தியா”, “ஆத்மநிர்பார் பாரத் அபியான்”, “அமிர்தக் காலம்” போன்ற திட்டங்களால் கட்டியெழுப்பப்பட்டதாகக் கூறப்படும் இந்தியப் பொருளாதாரம், மேற்காசியாவில் நடக்கும் மூன்று மாத காலப் போரால் மந்தநிலையை அடைந்தது எப்படி என்பதற்கான எந்த விளக்கத்தையும் மோடி அரசு அளிக்கவில்லை.

உண்மையில், பாசிச கும்பலும் அதன் அடிவருடி ஊடகங்களும் பேசி வருவது போல, இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் ஈரான் மீதான போரினால் புதிதாகத் தோன்றியவை அல்ல. மாறாக, அப்போர் ஏற்கெனவே இங்கு நிலவி வந்த நெருக்கடியைத் தீவிரப்படுத்தி, இந்தியப் பொருளாதாரத்தின் இழிநிலையை உலகிற்கு அம்பலப்படுத்திக் காட்டியுள்ளது என்பதே நிதர்சனமாகும்.

சான்றாக, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி என்பது ஈரான் போரால் திடீரென ஏற்பட்டதா? 2018-ஆம் ஆண்டிலிருந்தே இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து, சுமார் 50 சதவிகிதம் வரை மதிப்பிழந்துள்ளது. குறிப்பாக, கடந்த 2024-ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டுக்கும் (அக்-டிச), 2025-ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கும் (ஜன-மார்) இடைப்பட்ட காலத்தில், தெற்காசியாவிலேயே அதிக அளவில் மதிப்பிழந்த நாணயமாக இந்திய ரூபாய் மாறியது. ஈரான் மீதான போருக்குப் பிறகு நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது என்பதே உண்மை.

மோடி ஆட்சியில் கடந்த 12 ஆண்டுகளாகக் கட்டியெழுப்பப்பட்டுவரும் பொருளாதாரமும், அதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் சீர்திருத்தங்களும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க மற்றும் அம்பானி – அதானி கார்ப்பரேட் கும்பலின் இந்துராஷ்டிர கனவின் அடிப்படையிலானதாகும். அதாவது, மறுகாலனியாக்கக் கொள்கைகளின் அடிப்படையில் பலதரப்பட்ட உழைக்கும் மக்களை ஒட்டச்சுரண்டி, அவர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கி, அம்பானி – அதானிகளை செல்வம் கொழுக்கச் செய்வதே இதன் நோக்கம்.

சான்றாக, 2016-இல் அமல்படுத்தப்பட்ட பணமதிப்பழிப்பு எனும் பாசிச நடவடிக்கை, இந்திய உழைக்கும் மக்களின் வாழ்வைச் சூறையாடியது. இந்திய உழைக்கும் மக்களில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானோரின் வேலைவாய்ப்பும் அன்றாடப் பரிவர்த்தனைகளும், பணப் புழக்கத்தையும் முறைசாராத் துறையையுமே (Informal sector) சார்ந்திருந்த நிலையில், பணமதிப்பழிப்பால் அவர்கள் ஒரே இரவில் நடுத்தெருவில் நிறுத்தப்பட்டனர். இதனால், பல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்தனர்; முறைசாரா உற்பத்தி நிறுவனங்கள் முற்றிலும் வீழ்ந்தன; சிறு, குறு வணிகர்களின் தொழில்கள் முடங்கியது; புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் சீர்குலைந்தது. கிராமப்புற உழைக்கும் மக்களின் நுகர்வுத் திறன் மிகக் கடுமையாக வீழ்ச்சியடைந்தது. முறைசாரா பொருளாதாரத்தின் பல துறைகள் இந்த பாதிப்பிலிருந்து இன்றுவரை முழுமையாக மீளவே இல்லை.

இதனையடுத்து 2017-இல் சரக்கு மற்றும் சேவை வரி (GST) முறை, பணமதிப்பிழப்பால் பாதிக்கப்பட்ட சிறு, குறு உற்பத்தி நிறுவனங்களை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்டும் வகையில் கொண்டுவரப்பட்டது. பாசிச கும்பலின் “ஒரே நாடு ஒரே வரி, ஒரே சந்தை” என்ற இந்துராஷ்டிர பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையிலான இந்த பாசிச நடவடிக்கையால், கார்ப்பரேட் நிறுவனங்கள் எந்தவிதத் தடையுமின்றிச் சந்தையைக் கைப்பற்றிக் கொண்டன. மாநிலங்களின் வரி வசூலிக்கும் அதிகாரங்களை பறித்து, நிதித் தேவைக்கு மோடி அரசிடம் கையேந்தி நிற்கும் அவல நிலையை இந்த வரிமுறை உருவாக்கியது.

நாட்டைத் தொழில்மயமாக்கப் போவதாகப் பாசிச கும்பல் கதைவிட்டு வரும் நிலையில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தித் துறையின் (Manufacturing sector) பங்கு வெறும் 15 முதல் 17 சதவிகிதம் என்ற அளவிலேயே பத்தாண்டுகளாகத் தேங்கிக் கிடக்கிறது. சாதாரண உழைக்கும் மக்களுக்குப் பெருமளவில் வேலை தரக்கூடிய தொழிற்சாலைகளை உருவாக்காமல், இந்தியா சேவைத் துறையை (Service sector) மட்டுமே நம்பியிருக்கும் நாடாக மாற்றப்பட்டுவிட்டது.

இதைப்போல், மோடி அரசால் ஊதிப்பெருக்கிக் காட்டப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், விவசாயத் துறையின் பங்களிப்பு வெறும் 15 முதல் 16 சதவிகிதமே ஆகும். ஆனால், இந்த விவசாயத் துறைதான் இந்தியாவின் உழைக்கும் மக்களில் ஏறக்குறைய 45 சதவிகிதம் மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது.

இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கைகளாலும் கார்ப்பரேட்டுகளின் சுரண்டலாலும், இந்தியா இன்று தன் வரலாற்றிலேயே மிகக் கடுமையான வேலைவாய்ப்பு நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. 20 முதல் 24 வயதுக்குட்பட்ட உழைக்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 40 முதல் 45 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. பட்டதாரி இளைஞர்களின் நிலை இதைவிட மோசமாக உள்ளதுடன் ஒட்டுமொத்த உழைப்புச் சக்தியில் பெண்களின் பங்கேற்பு விகிதம்  உலகிலேயே மிகக் குறைந்த மட்டத்தில் நீடிக்கிறது.

தனிநபர் வருவாயில் அண்டை நாடான வங்கதேசத்தை விடவும் மோசமான நிலையில் இந்தியா உள்ளது. உயிர் வாழ்வதற்காகக் கிட்டத்தட்ட 80 கோடி மக்கள் அரசாங்கத்தின் இலவச உணவு தானிய உதவிகளைச் சார்ந்து வாழ வேண்டிய அவல நிலையே இங்கு நீடிக்கிறது.

அதேசமயம், அம்பானி – அதானிகளின் சொத்து மதிப்பு ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடிகளாக உயர்ந்து வருகிறது. இதன் விளைவாக, நாட்டில் ஏழை-பணக்காரர் ஏற்றத்தாழ்வு (வர்க்க இடைவெளி) முன்னெப்போதும் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்தியாவின் மொத்தச் செல்வத்தில் 40 சதவிகிதத்தை வெறும் ஒரு சதவிகித செல்வந்தர்கள் மட்டுமே கொண்டுள்ளனர்; ஆனால், கீழ்மட்டத்தில் உள்ள 50 சதவிகித ஏழை உழைக்கும் மக்கள் வெறும் 3 சதவிகித செல்வத்தையே பங்கிட்டுக் கொள்ளும் அவலம் நீடிக்கிறது.

இதுவே இந்தியப் பொருளாதாரத்தின் உண்மை நிலையாகும். மோடி அரசு தற்போது ஒப்புக்கொண்டுள்ள நெருக்கடியில்தான் இந்திய மக்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மோடி கோரும் ‘தியாகத்தை’ அவர் ஆட்சிக்கு வந்தது முதலே மக்கள் செய்து கொண்டுதான் இருக்கின்றனர். மாறாக, ஈரான் போரால்தான் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகப் பாசிச மோடி கும்பல் அப்பட்டமாக பொய்யுரைக்கிறது.

பாசிச டிரம்பின் பொருளாதாரத் தாக்குதலும்
மோடியின் அமெரிக்க அடிமைத்தனமும்!

இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்த பரிசீலனையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவின் மீது தொடுத்துள்ள பொருளாதாரத் தாக்குதல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அமெரிக்க ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள டிரம்ப் – மஸ்க் பாசிச கும்பல், சரிந்து வரும் அமெரிக்காவின் ஒற்றைத்துருவ உலக மேலாதிக்கத்தைத் தக்கவைப்பதற்காக, உலக நாடுகளின் மீது போர் மற்றும் வரி பயங்கரவாதத்தைத் திணித்து வருகிறது. “பரஸ்பர வரி” (Reciprocal Tariff) என்ற பெயரில் அந்நிய நாடுகளின் சந்தைகளைக் கைப்பற்றத் துடித்து வருகிறது.

பிற நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், எதிர்வினையாற்றியும் வரும் நிலையில் பாசிச மோடி அரசு தொடக்கத்திலிருந்தே டிரம்புக்கு அடிபணிந்து அமெரிக்க அடிமைத்தனத்தை வெளிக்காட்டி வருகிறது. “காம்பாக்ட்” போன்ற பல்வேறு வர்த்தக மற்றும் இராணுவ ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு இந்திய இறையாண்மையை டிரம்பின் பாதங்களில் காணிக்கையாக்கி வருகிறது.

குறிப்பாக, கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா – இந்தியா இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தத்தின்படி அடுத்த ஐந்து ஆண்டுகளில் 500 பில்லியன் டாலருக்கு அமெரிக்கப் பொருட்களை இந்தியா இறக்குமதி செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால், அமெரிக்காவின் மானிய விலை பால் மற்றும் விவசாயப் பொருட்கள், மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்கள் இந்திய சந்தையை ஆக்கிரமித்து, நம் நாட்டு பால் உற்பத்தியாளர்கள், ஏழை விவசாயிகள் வாழ்வாதாரத்தை அடியோடு அழித்துவிடும். இந்திய சந்தையை அமெரிக்காவின் குப்பைத் தொட்டியாக்கும். இது, ஏற்கெனவே பெருந்துயரத்தில் உள்ள உழைக்கும் மக்களையும், அமெரிக்க கார்ப்பரேட்டுகளுடன் போட்டியிட முடியாத சிறு-குறு வணிகர்களையும் ஒரேயடியாக நசுக்க அனுமதிக்கும் அயோக்கியத்தனமாகும்.

அதேபோல், சமீபத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இந்தியாவிற்கு வந்த போது, இந்த வர்த்தகக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு டிரம்ப் நிர்வாகம் ஒப்புக்கொள்ளவில்லை. அதேசமயம், இந்தியாவின் அரிய வகைக் கனிமங்களை அமெரிக்காவிற்குத் தாரைவார்ப்பதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. மேலும், அமெரிக்கப் பருத்திக்கான இறக்குமதி வரியை இந்தியா குறைத்துள்ளது. இவ்வாறு, இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் அமெரிக்காவிடம் அடகு வைக்கும் அடிமையாக பாசிச மோடி அரசு செயல்பட்டு வருகிறது.

அதைப்போல், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும் எரிசக்தித் தேவையும் இன்று அமெரிக்காவின் பிடியில் சிக்கியுள்ளது. இந்தியா யாரிடம், எப்போது, எவ்வளவு எண்ணெய் வாங்க வேண்டும் என்பதை டிரம்ப் முடிவு செய்யும் அவலநிலையில் நம் நாடு நிறுத்தப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தத்தில் நம் நாடு எதிர்கொண்டிருக்கும் பொருளாதார மந்தநிலை என்பது திடீரென தோன்றியதோ, மேற்காசியாவில் நடைபெறும் போரினால் மட்டுமே ஏற்பட்டதோ அல்ல. பாசிச மோடி அரசின் அம்பானி – அதானிகளுக்கான இந்துராஷ்டிர பொருளாதாரக் கொள்கையும், அமெரிக்க அடிமைத்தனமுமே இந்த நெருக்கடிக்கான அடிப்படையாகும். வருங்காலங்களில் இந்நெருக்கடி இன்னும் தீவிரமடையவே செய்யும். அம்பானி – அதானி கார்ப்பரேட்டு கும்பலுக்கும், டிரம்ப் – மஸ்க் பாசிச கும்பலுக்கும் சேவை செய்துவரும் பாசிச மோடி அரசை வீழ்த்தாமல், உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து போராடாமல், இந்நெருக்கடியிலிருந்து மீள வழியில்லை.


துலிபா

(புதிய ஜனநாயகம் – ஜூன் 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க