விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: லாபவெறியும் அரசின் மெத்தனமும்

தொழிலாளர்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டிய அதிகாரிகளோ, முதலாளிகளின் லாபவெறிக்கு சாதகமாக நடந்துகொண்டு தொழிலாளர்களைக் காவு வாங்கத் துணைபோகின்றனர். சட்டமன்றத் தேர்தலையொட்டி ஓட்டு வேட்டையில் தீவிரம் காட்டிவரும் அரசியல் கட்சிகள் யாவும் இத்தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து வாய்திறப்பதில்லை.

டந்த ஏப்ரல் 13 மற்றும் 19-ஆம் தேதிகளில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சத்திரப்பட்டி மற்றும் கட்டனார்பட்டி ஆகிய கிராமங்களில் அடுத்தடுத்து நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்துகள், பட்டாசு உற்பத்தித் துறையில் நிலவும் பாதுகாப்பு குறைபாடுகளையும், ஆலைத் தொழிலாளர்களின் கருப்பு பக்கங்களையும் மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன.

தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர்–சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகள் இந்தியாவின் “பட்டாசு தலைநகரம்” என்றும் தமிழ்நாட்டின் “குட்டி ஜப்பான்” என்றும் அழைக்கப்படுகிறது. தீபாவளி போன்ற பண்டிகைகளில் நாடு முழுவதும் ஒளி வீசும் பட்டாசுகள் இங்கிருந்தே தயாரிக்கப்படுகின்றன. ஆனால், இந்த ஒளியின் பின்னால் மறைந்திருப்பது தொழிலாளர்களின் இரத்தமும் உயிரிழப்புகளும்தான். அதிலும் கடந்த சில ஆண்டுகளில் வெடி விபத்தால் பட்டாசுத் தொழிலாளர்கள் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது.

கடந்த ஏப்ரல் 13 அன்று சாத்தூர் அருகே உள்ள சத்திரப்பட்டியில் உள்ள “எக்சல் ஃபையர்-ஒர்க்ஸ்” (Excel Fireworks) என்ற ஒரு பட்டாசு தொழிற்சாலையில் காலை சுமார் 9:30 மணிக்கு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு தொழிலாளர் உயிரிழந்ததுடன் 9 பேர் காயம் காயமடைந்தனர். அவர்களுள் 15 வயது சிறுமியும் இருந்துள்ளார். வெடி விபத்தின் போது 50 அடி உயர புகை கிளம்பி, அருகிலுள்ள கிராமங்களில் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

வேதிப்பொருட்களைக் கலக்கும் போது சிறிய உராய்வு ஏற்பட்டதனால் இத்தகைய பெரிய வெடிப்பு நிகழ்ந்துள்ளது என இவ்விபத்து குறித்து மக்கள் தெரிவித்தனர். மேலும், இது சட்டவிரோதமான உரிய உரிமம் (renew) இன்றி செயல்பட்டு வரும் தொழிற்சாலை என்பது இவ்விபத்தையடுத்து அம்பலமாகியது. இங்கு விதிமுறைகளை மீறி 60 தொழிலாளர்கள் ஒரே இடத்தில் வேலை செய்ய வைக்கப்பட்டதுடன் சிறுவர்களும் இத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சத்திரப்பட்டியில் ஆய்வுகள் மேற்கொண்டிருக்கும் போதே அடுத்த சில நாட்களில் கட்டனார்பட்டியில் கோவிநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முத்து மாணிக்கத்திற்கு சொந்தமான வனஜா பட்டாசு தொழிற்சாலையில் கடந்த ஏப்ரல் 18 அன்று கோர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் தற்போது வரை 25 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் பலியானவர்களில் 16 பேர் பெண் தொழிலாளர்கள் என்பது அம்மக்களின் அவலநிலையை உணர்த்துகிறது. இது சமீபத்திய மிகப்பெரிய விபத்துகளில் ஒன்றாக உள்ளது.

இன்னும் முழு காரணம் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், ஆரம்ப தகவல்களாக வேதிப்பொருள் கலவையில் மிகவும் எரியூட்டியாக இருக்கும் இரசாயனங்களைக் கையாள்வதில் தவறு ஏற்பட்டதால் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் தொழிற்சாலையில் பாதுகாப்பு குறைபாடு, ஒரே இடத்தில் அதிக தொழிலாளர்கள் கொண்டு வேலை பார்க்கும் அவல சூழலால் இது நேர்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


படிக்க: விருதுநகர் வனஜா பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 25 பேர் பலி! அரசே முதல் குற்றவாளி!


இரு பகுதியிலும் ஏற்பட்ட வெடிவிபத்தில் தீ பரவல் அதிகமாக இருந்ததால் ஒரே நேரத்தில் அடுத்தடுத்த ஆலைகள் வெடிக்க ஆரம்பித்தன. இதனால் மீட்பு நடவடிக்கைக்கு நீண்ட நேரம் எடுத்துக்கொண்டது; உயிரிழப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது என மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், சட்டமன்றத் தேர்தலையொட்டி நடந்துவரும் அரசியல் பிரச்சாரங்களுக்கு பட்டாசு அதிகளவில் தேவைப்படுவதால் ஆலை முதலாளிகள் ஞாயிற்றுக் கிழமைகளில் கூட தொழிற்சாலைகளை இயக்கி தொழிலாளர்களை இரவுபகலாக வேலைகளில் ஈடுபடுத்தி வருகின்றனர். இவ்வாறு உழைப்புச் சுரண்டல், தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல், தொழிற்சாலையில் பின்பற்றப்படும் விதிமுறைகளில் அத்துமீறல் என பல்வேறு முறையற்ற செயல்களில் தொழிற்சாலை இயங்கியுள்ளதே இத்தகைய கோர விபத்திற்கு முக்கிய காரணமாக அமைகிறது.

குறிப்பாக, சாத்தூர் மற்றும் சிவகாசி பகுதிகளில் மட்டும், 2021-ஆம் ஆண்டு 17 பேர் உயிரிழந்த பெரிய விபத்து, 2024–இல் 4 பேர் உயிரிழப்பு, 2025-இல் 6 பேர் உயிரிழப்பு, 2026 – ஒரே மாதத்தில் 20-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் என ஆண்டுதோறும் உழைக்கும் மக்களின் உயிர்களை இந்த பட்டாசு தொழிற்சாலைகள் ஈவிரக்கமற்று பறித்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் மீண்டும் நடைபெறும் பட்டாசு ஆலை வெடி விபத்துகள், பாதுகாப்பு குறைபாடுகளையும், நிர்வாக அலட்சியத்தையும் வெளிப்படுத்துகின்றன.

இங்கு ஏற்பட்ட ஒவ்வொரு வெடிப்பும், ஒரு குடும்பத்தின் கனவுகளைச் சிதைத்துள்ளது. லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இயங்கி வரும் இப்படிப்பட்ட தொழிற்சாலைகள் எந்தவொரு விதிமுறையையும் பின்பற்றாமல் மக்களின் உயிர்களைக் காவு வாங்கி வருகின்றன. மறுபுறம், இத்தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டிய அதிகாரிகளோ, முதலாளிகளின் லாபவெறிக்கு சாதகமாக நடந்துகொண்டு தொழிலாளர்களைக் காவு வாங்கத் துணைபோகின்றனர். சட்டமன்றத் தேர்தலையொட்டி ஓட்டு வேட்டையில் தீவிரம் காட்டிவரும் அரசியல் கட்சிகள் யாவும் இத்தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து வாய்திறப்பதில்லை.

இப்படிப்பட்ட சீர்கேடான தொழிற்சாலைகளை மூடவும், இலாப நோக்கில் மக்களின் உயிர்களைத் தினந்தோறும் உறிஞ்சி குடிக்கும் இந்த முதலாளித்துவச் சுரண்டலை எதிர்த்தும் மக்கள் போராட்டங்களை நாம் கட்டியமைக்க வேண்டும். அப்போராட்டங்களை மாற்றுக் கட்டமைப்பிற்கான போராட்டமாக வளர்த்தெடுக்க வேண்டும்.


சைரா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க