விருதுநகர்: சாதிய வன்கொடுமைக்கு எதிராகத் தேர்தலைப் புறக்கணிக்கும் அச்சந்தவிழ்த்தான் மக்கள்

வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், முதலமைச்சரின் தனிப்பிரிவு எனப் பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு மனுக்களை அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த மக்கள், தங்களது கிராமத்தின் பெயரை “வடக்கு அச்சந்தவிழ்த்தான்” என அதிகாரப்பூர்வமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

0

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது அச்சந்தவிழ்த்தான் ஊராட்சி. இங்கு பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்டு சற்று தொலைவில் “வடக்கு அச்சந்தவிழ்த்தான்” குக்கிராமம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 60-க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இக்கிராம மக்களின் நிலப்பட்டாவில் ஊர்ப் பெயர் “அச்சந்தவிழ்த்தான்” என்றிருந்தாலும் சொத்து வரி இரசீது வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை எனப் பல்வேறு அரசு ஆவணங்களில் ‘பரச்சேரி’ என்ற சாதியப் பெயரே குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றியுள்ள பிற கிராம மக்களும் இக்கிராமத்தைச் சாதிய அடையாளத்துடன் ‘பரச்சேரி’, ‘பரக்குடி’ என்றே அழைத்து வருகிறார்கள்.

இதுகுறித்து தனது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தும் கற்பகவள்ளி என்ற இக்கிராம பெண்மணி, “எங்கு சென்றாலும் இந்தப் பெயர் எங்களைத் துரத்துகிறது. அது பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. ஒருமுறை மகளிர் குழு சார்பாக வங்கிக்குப் பணம் போடச் சென்றபோது, அங்கு புது மேலாளர் வந்திருந்தார். அவர் எங்களிடம் ஊர் விவரங்களைக் கேட்டுக்கொண்டிருந்தார். வடக்கு அச்சந்தவிழ்த்தான் என நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வங்கியில் பணிபுரியும் ஒரு பெண் வந்து “இவர்கள் பரச்சேரியை சேர்ந்தவர்கள்” என கத்திச் சொல்லிவிட்டார். எங்களுக்கு மிகவும் அவமானமாக இருந்தது. ஏன் இப்படிச் சொன்னீர்கள் என அந்தப் பெண்ணிடம் கேட்டதற்கு உங்கள் ஊரின் பெயர் வங்கியின் பதிவுகளில் அப்படித்தானே உள்ளது என்கிறார்.” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இந்த ஊரின் பெயர்க் காரணமாக கல்லூரியில் படிக்கும் தனது மகனும் பல அவமானங்களை எதிர்கொள்வதாகக் கூறும் கற்பகவள்ளி, “ஒரு கல்லூரி நிகழ்வில் என் மகன் ஏதோ தவறு செய்துவிட, அதற்கு ஆசிரியர் என் மகனைப் பார்த்து சாதிய அடையாளத்துடன் கூடிய ஊர்ப் பெயரை தொடர்புப்படுத்திப் பேசி அசிங்கப்படுத்தியுள்ளார். இதை என் மகன் என்னிடம் சொல்லி அழுதான். சாதி அடையாளமுள்ள இந்த ஊரின் பெயர் எங்களுக்கு வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

அச்சந்தவிழ்த்தான் அருகிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிற வனஜா என்கிற சிறுமி கூறுகையில், “பள்ளியில் பிற கிராம மாணவர்கள் எங்களை சாதி அடையாளமுள்ள ஊர்ப் பெயரைக் குறிப்பிட்டே அழைப்பார்கள். ஆசிரியர்களிடம் சொன்னால், அதுதானே உங்கள் ஊர்ப் பெயர், இதிலென்ன இருக்கிறது எனச் சொல்வார்கள். ஒருமுறை, நான் பள்ளிக்குச் செல்லவில்லை. வீட்டுப்பாடம் குறித்துத் தெரிந்துகொள்ள, என் வகுப்பு மாணவிக்கு அழைத்தேன். அவளது அம்மாதான் முதலில் பேசினார். எந்த ஊர் என என்னிடம் கேட்டார், “வடக்கு அச்சந்தவிழ்த்தான்” எனச் சொன்னேன். உடனே அவர், பரச்சேரியா? எனக் கேட்டார். நான் ஒன்றும் சொல்லவில்லை. பிறகு, எனது வகுப்புத் தோழியிடம் தொலைப்பேசியைக் கொடுத்தார். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே, “ஏன் பரச்சேரியைச் சேர்ந்த பெண்ணுக்கு நம் வீட்டு தொலைப்பேசி எண்ணைக் கொடுத்தாய்?” என்று அவர் கத்துவது தெளிவாகக் கேட்டது. என்னால் அழுகையை அடக்க முடியவில்லை” என வேதனையுடன் விவரித்துள்ளார்.


படிக்க: நாங்குநேரி சாதிவெறியாட்டம்: தேர்தலைப் புறக்கணிக்கும் பெரும்பத்து மக்கள்!


சுமார் 15 ஆண்டுகளாக எங்கள் ஊர்ப் பெயரை மாற்றக் கோரிக்கை வைத்து வருவதாகக் கூறும் சமூக ஆர்வலர் குமார், “சிறப்பு தீவிர திருத்தத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் முதல், வங்கிக் கணக்குப் பதிவுகள், ஆதார் மற்றும் பான் அட்டைகள் போன்ற அரசு ஆவணங்களில் ‘பரச்சேரி’ என்ற சாதிய அடையாளத்துடன் கூடிய பெயர் காணப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, சில அதிகாரிகள் வேண்டுமென்றே இக்கிராமப் பெயரை ‘பரச்சேரி’ எனக் குறிப்பிடுகிறார்கள் என்பதை சமூக ஆர்வலர் குமார் அம்பலப்படுத்தியுள்ளார்.

மேலும், கிராமங்கள், குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகளுக்கான சாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி தமிழ்நாடு அரசு கடந்த அக்டோபர் மாதம் அரசாணை வெளியிட்டது. புதிய பெயரிடும் பணிகளை நவம்பர் 19-ஆம் தேதிக்குள் முடிக்கவும் உத்தரவிடப்பட்டது. ஆனால், இந்த அரசாணைக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதால் ஊர்ப் பெயர்களை மாற்றுவதில் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகவும் தேர்தல் சமயம் என்பதாலும் அச்சந்தவிழ்த்தான் கிராம மக்களின் கோரிக்கை ஓரங்கட்டப்பட்டுள்ளதாகக் கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் கூறுகிறார்.

வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், முதலமைச்சரின் தனிப்பிரிவு எனப் பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு மனுக்களை அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த மக்கள் கிராமத்தின் நுழைவாயிலில் “வடக்கு அச்சந்தவிழ்த்தான்” என்று பெயர்ப் பலகையை வைத்து, தங்களது கிராமத்தின் பெயரை “வடக்கு அச்சந்தவிழ்த்தான்” என அதிகாரப்பூர்வமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

இத்தனை ஆண்டுகளாக இம்மக்களின் கோரிக்கையைப் புறக்கணித்து மக்களை வஞ்சித்துவந்த அதிகார வர்க்கம், மக்களின் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பைக் கேட்டு அச்சந்தவிழ்த்தான் கிராமத்திற்கு ஓடோடிச் சென்றது. கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், தங்களது தேர்தல் புறக்கணிப்பு முடிவில் உறுதியாக இருப்பதாகக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

அச்சந்தவிழ்த்தான் கிராமத்தை ‘பரச்சேரி’ என்று குறிப்பிடுவது இந்த அரசு-அதிகார வர்க்கத்தின் சாதிய வக்கிரத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது. இது அச்சந்தவிழ்த்தான் மக்கள் மீது அரசே முன்னின்று தொடுக்கும் சாதிய வன்கொடுமையாகும். ஆனால், ‘சமூக நீதி ஆட்சி’, ‘திராவிட மாடல் அரசு’ என்று மார்தட்டிக்கொள்ளும் தி.மு.க. அரசோ இம்மக்களின் மீது தொடுக்கப்படும் இந்த வன்கொடுமையை வாய் பொத்தி வேடிக்கை பார்த்து வருகிறது.

அச்சந்தவிழ்த்தான் கிராம மக்கள் மீது தொடுக்கப்படும் இந்த சாதிய வன்கொடுமைக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டியதும், அவர்களின் இப்போராட்டத்திற்குத் துணை நிற்க வேண்டியதும் நம் அனைவரின் கடமையாகும்.

நன்றி: பிபிசி தமிழ்


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க