21.04.2026

விருதுநகர் வனஜா பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 25 பேர் பலி!

அரசே முதல் குற்றவாளி!

பத்திரிகைச் செய்தி

விருதுநகர் மாவட்டம் வாச்சக்காரப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்டனார்பட்டி பகுதியில் முத்துமாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான வனஜா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை (19.04.2026) மதியம் ஏற்பட்ட இந்த வெடி விபத்தில் 4 அறைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

குறிப்பாக பட்டாசுகள் சேமித்து வைக்கும் அறையில் ஏற்பட்ட உராய்வினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த வெடிவிபத்திற்கு அரசு சில குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது.

  1. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்திலும் விதிமுறையை மீறி பட்டாசு ஆலையை இயக்கியது தவறு.
  2. தடை செய்யப்பட்ட சர வெடிகளைத் தயாரித்தது.

ஆனால், இதையெல்லாம் தாங்கள் ஏன் கண்காணித்துக் கட்டுப்படுத்தவில்லை என்பதற்கு அதிகாரிகள் பதில் கூறுவது இல்லை.

இது மக்களைக் கிள்ளுக்கீரையாகப் பார்க்கும் முதலாளிகளின் நடவடிக்கைகளுக்கு ஒத்தூதும் செயல் என்றே பார்க்க முடியும்.

கடந்த ஆண்டில் வனஜா பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டிருந்தது. அதற்கு இப்போது அனுமதி கொடுத்துள்ளனர் என்றால் தொடர்ந்து ஏன் கண்காணிக்கவில்லை என்ற கேள்வியைப் பலரும் எழுப்புகின்றனர்.

அட்டைப்பெட்டி மற்றும் பேப்பர் குழாய்கள் சேமிக்கும் அறையில் 35 பேரை வேலை பார்க்க வைத்தது மிகவும் அதிகம் என்பதைப் பதிவு செய்கின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை ஆலையில் வேலை வாங்கியது பற்றி தொழிலாளர்கள் கூறும் போது தேர்தலுக்காக விடுமுறை ஒரு வாரம் வரப்போகிறது என்பதால் லீவு விடாமல் ஞாயிற்றுக்கிழமையும் வேலை வாங்குகின்றனர் என்பதைப் பதிவு செய்கின்றனர். இது முதலாளிகள் தங்கள் உற்பத்தியில், லாபத்தில் குறைவு ஏற்படக்கூடாது என்பதில் எவ்வளவு அராஜகமாக உள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

ஆலை முதலாளிகளின் அராஜக உற்பத்தி மற்றும் சேமிப்பு போன்றவற்றின் காரணமாகவே உராய்வுகள் ஏற்பட்டு வெடிவிபத்துகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன.

மேலும் இது வெயில் காலம் என்பதால் தீ எளிதாகப் பற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது, வெடி விபத்து நடக்க அதிக வாய்ப்பு உள்ளது என்பதை எமது கழகம் சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளோம்.

கடந்த வாரம் விருதுநகர் வெம்பக் கோட்டை அருகில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். அந்தப் பட்டாசு ஆலையின் உரிமம் புதுப்பிக்கப்படவே இல்லை என்பதும் வெளியாகியுள்ளது.

இதுபோல் அரசின் கண்காணிப்பு தொடர்ந்து இல்லாமல் இருப்பது மற்றும் முதலாளிகளின் அராஜகங்களை அரசு நிர்வாகம் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது, பட்டாசு ஆலை முதலாளிகளிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு கண்டுகொள்ளாமல் இருப்பது போன்றவைதான் பட்டாசு ஆலை வெடிவிபத்திற்கான காரணங்கள்.

இதில் அரசின் பங்குதான் முதன்மையானது. ஆதலால் அரசே முதல் குற்றவாளி. இதனைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

எனவே,

  • தொடர் கண்காணிப்பில் ஈடுபடாத அரசு அதிகாரிகள்மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்!
  • விதிமுறைகளை மீறி அராஜகமாகச் செயல்படும் முதலாளிகளைக் கைது செய்து தண்டனை வழங்கு!
  • பட்டாசுத் தொழில் விதிமுறைகளை மீறி இயங்குவதற்கு முதலாளிகளிடம் பணம் பெறும் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்!
  • உயிரிழந்த 25 குடுப்பத்திற்கு தலா ஒரு கோடி நிவாரண உதவி வழங்கு!
  • பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் குடும்பங்களுக்கு தலா 50 லட்சம் இழப்பீடு வழங்கு!
  • சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்து அறிவியல் பூர்வமான பிரச்சாரங்களை மக்களிடம் கொண்டு சென்று பட்டாசு பயன்பாட்டைக் குறை!
  • பட்டாசுத் தொழிலாளர்களுக்கு மாற்றுத் தொழில்களை உருவாக்கிக் கொடுத்து மறுவாழ்வு ஏற்படுத்து!
  • விபத்துகளைத் தடுக்க ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் எவ்வளவு பட்டாசு உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்ற வரம்பை உருவாக்கு!
  • தொழிலாளர்களின் வேலைகளை உடனிருந்து கவனித்து வழிகாட்டக்கூடிய பாதுகாப்புக் குழுக்களை உருவாக்கு!
  • தொழிலாளர்களின் உரிமைகளைப் பேசக்கூடிய சங்கங்கள் அமைக்க அனுமதி வழங்கு!
  • விதிமுறைகளை மீறும் தொழிற்சாலைகளை அரசே கட்டுப்பாட்டில் எடுத்து நடத்து!

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்போம்.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க