21.10.2022

கூடுதல் பேருந்துகளை இயக்க மறுக்கும் அரசுக்கு என்ன தண்டனை?

புமாஇமு பத்திரிகை செய்தி!

மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் கூட்டமாக தொங்கிக்கொண்டு பயணித்தால் அவர்களின் பாதுகாப்பிற்கு நடத்துனர்கள் ஓட்டுநர்கள் தான் பொறுப்பு என போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான முறையில் பயணம் செய்ய வேண்டாம் என ஓட்டுநர்கள், நடத்துநர்கள் அறிவுறுத்த வேண்டும். அறிவுரைகளை மீறி மாணவர்கள் செயல்பட்டால், போலீசு நிலையத்தில் அல்லது அவரச போலீசு உதவி எண் 100-ஐ நாடலாம் எனவும் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியுடன் கடந்த செப்டம்பர் மாதத்தில் போலீசுத்துறையின் அறிவிப்பையும் சேர்த்து பார்க்க வேண்டும். அதாவது மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் அபாயகரமான முறையில் பயணித்தால் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்கள். இது பல்வேறு தரப்பினராலும் கண்டனங்களுக்கு உள்ளானது.

மாணவர்களுக்கு பள்ளி – கல்லூரி செல்லும் நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற குரல் தொடர்ந்து சமூகத்திலிருந்து எழுந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கு துளியும் செவி சாய்க்காத ஒரு அறிக்கையை தான் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து மாணவர் மரணங்களும், பெரிய – சிறிய காயங்களும் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு போகும் மாணவர்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சினைகள். இதிலிருந்துதான் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பதை பரிசீலிக்க வேண்டியுள்ளது.

அரசுப் பள்ளிக் கல்லூரி மாணவர்களை தாண்டி, தனியார் பள்ளிக் கல்லூரி மாணவர்களும் நிர்வாகங்களின் அடாவடியான பேருந்துக் கட்டணங்களை சமாளிக்க முடியாமல் அரசுப் பேருந்துகளை நம்பியே இருக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்லூரிகளில் சுமார் ஒரு கோடி பேருக்கு மேல் பயிலும் நிலையில், தினசரி அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் மாணவர்களைக் கணக்கில் கொண்டு பேருந்துகள் இயக்கப்படவில்லை. போதுமான பேருந்துகளை இயக்காத இந்த அரசின் அலட்சியப்போக்கிற்கு மிக முக்கியமான காரணம் தனியார்மய கொள்ளையே.

கடன் அதிகமாக உள்ள அரசு நிறுவனங்களில் மின்சாரத்துறை போக்குவரத்துத் துறை மிக முக்கியமாக உள்ளது. ஒரு காலத்தில் இலாபத்தில் இயங்கி வந்த இந்த அரசுத்துறைகளை எல்லாம் தனியாருக்கு தாரை வார்த்துவிட்டு இன்று தனியார் நிறுவனங்கள் கேட்கும் தொகையை கொடுத்து மின்சாரத் துறையையே போண்டி ஆக்கிவிட்டார்கள். விளைவு மின்சாரத் துறையின் கடனே இலட்சம் கோடிக்குமேல் வரும்.

இதேபோல் போக்குவரத்து துறையில் பேருந்து வாங்குவதில் முறைகேடு, உதிரி பாகங்கள் வாங்குவதில் முறைகேடு என ஒட்டுமொத்த போக்குவரத்து துறையையும் சீரழித்து விட்டார்கள். முக்கியமான வழித்தடங்களை தனியார் நிறுவனங்கள் கொள்ளை இலாபம் சம்பாதிப்பதற்கு ஏற்றார்போல் வாரி வழங்கினார்கள்.

போக்குவரத்துத் துறையின்  சீரழிவு  மற்றும் தனியார்மயமாக்கல் போன்றவற்றை ஒழித்துக்கட்டாமல் மாணவர்களையும், பெற்றோர்களையும், ஆசிரியர்களையும், ஓட்டுனர்களையும், நடத்துனர்களையும் குற்றவாளி கூண்டில் ஏற்றிக் கொண்டிருக்கிறது இந்த அரசு.

மேலும் இதுபோன்ற அறிவிப்புகள் தொடர்ச்சியான நடவடிக்கைகள் நடத்துனர்கள் மாணவர்களுக்கிடையிலான மோதலாக மாறிய சம்பவங்களும் எண்ணற்றவை.

இதை முடிவுக்கு கொண்டுவர மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஓட்டுநர்கள், நடத்துனர்கள் அனைவரும் களத்தில் இறங்க வேண்டும். தனியார்மயம் – தாராளமயம் – உலகமயத்தை ஒழித்துக் கட்டுவதை நோக்கி நாம் முன்னேற வேண்டும். அதுவே இந்த பிரச்சினைக்கு முடிவாகும்.


இவண்,
தோழர் ரவி,
மாநில ஒருங்கிணைப்புக்குழு,
புமாஇமு, தமிழ்நாடு.
தொடர்புக்கு : 94448 36642.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க