ஹாத்ரஸ் கோர நிகழ்வு: இரத்தக் கறை படிந்துள்ள டபுள் எஞ்சின் சர்க்கார்

பக்தர்கள் நெரிசலில் சிக்கியபோது, போலே பாபாவும் அவருடன் வந்தவர்களும் நிற்காமல் சென்றுள்ளனர். மேலும், அவரிடம் இருந்தோ இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களிடம் இருந்தோ எந்த விளக்கமும் வரவில்லை. எவ்வளவு கொடூரமானவர்கள் இவர்கள்!

0

த்தரப்பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் நேற்று (ஜூலை 2) சத்சங் (மத பிரார்த்தனைக் கூட்டம்) ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்; நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

‘போலே பாபா’ என அழைக்கப்படும் நாராயண் சாகர் விஷ்வ ஹரி என்ற சாமியாரின் சொற்பொழிவு மற்றும் வழிபாட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. உள்ளூர் மத குரு ஒருவரை கௌரவிக்கும் விதமாக இந்த மத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் 80,000 பேர் கலந்துகொள்ள அரசு நிர்வாகத்தால் அனுமதியளிக்கப்பட்ட நிலையில் 2.5 இலட்சத்திற்கும் அதிகமான மக்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனுமதித்துள்ளனர். அதிக அளவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சி முடிந்தபிறகு, ’போலே பாபா’வின் காலைத் தொடுவதற்கும், பாத மண்ணை சேகரிப்பதற்கும் மக்களிடையே ஏற்பட்ட போட்டியே இந்த கூட்ட நெரிசலுக்குக் காரணம் என விபத்தை நேரில் பார்த்தவர்களும், பக்தர்களும் கூறுகின்றனர். போலே பாபாவை நெருங்கி வந்த மக்கள் பலரை அவரது பாதுகாவலர்கள் தள்ளி விட்டதில் பலர் கீழே விழுந்துள்ளனர். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், நெரிசலில் சிக்கி கீழே விழுந்தவர்களால் எழுந்திருக்க முடியவில்லை. பகலில் பெய்த மழையால் மண் ஈரமாகவும், வழுக்கும் தன்மையுடனும் இருந்ததால் நிலைமை மேலும் மோசமானது. அதீத கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்துள்ளனர்.

மதியம் 2.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. புல்ராய் கிராமத்தில் ஒரு சிறிய அரசு மருத்துவமனை மட்டுமே இருந்துள்ளது. அங்கும் ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே இருந்துள்ளார். இதனால், காயமடைந்தவர்கள் உடனடியாக சிக்கந்தராவ் அவசர சிகிச்சை மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதிக நபர்களைக் கையாள இந்த மருத்துவமனையும் திணறியதால் இறந்தவர்களின் உடல்களை அருகிலுள்ள எட்டா, காஸ்கஞ்ச், ஆக்ரா மற்றும் அலிகார் மாவட்ட மருத்துவமனைகளுக்கு அரசு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

கூட்ட நெரிசலில் ஒருவர் மீது ஒருவர் ஏறிச்சென்றனர். இறந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்கள் டெம்போ மற்றும் பஸ்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுடன் அவர்களின் உறவினர்களும் கதறி அழுதபடி சென்றனர். மருத்துவமனைகள் பிணங்களாலும் அழு குரல்களாலும் நிரம்பின. காயமடைந்தவர்கள் பலர் சரியான தருணத்தில் மருத்துவ உதவி கிடைக்காததால் உயிரிழந்துள்ளனர்.


படிக்க: மோடி ஆட்சியில் வளரும் சூப்பர் மார்கெட் சாமியார்கள் ! கருத்துப் படம்


டபுள் எஞ்சின் சர்க்கார் உத்தரப்பிரதேசத்தின் மருத்துவக் கட்டமைப்பை எந்த இலட்சணத்தில் வைத்துள்ளது என்பதற்கு மருத்துவ உதவி கிடைக்காமல் இறந்த போன அப்பாவி மக்களின் அவலநிலையே சாட்சி.

இறந்தவர்களில் பெரும்பான்மையினர் பெண்களும் குழந்தைகளும் தான். தனது தாயை, மனைவியை, குழந்தையை தேடி பலர் மருத்துவமனைகளுக்கு விரைந்தனர். பிணக் குவியலுக்குள் தங்களது குடும்பத்தினரைத் தேட வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இறந்து போன தனது தாயைத் தேடி அலிகாரில் இருந்து வந்த பண்ட்டி என்பவர் குறித்த செய்தி பிபிசி தமிழ்-இல் வெளியாகி இருந்தது. சிக்கந்தராவ் அவசர சிகிச்சை மையத்தின் முற்றத்தில் தனது தாயாரின் உடல் இருப்பதை ஊடகங்களில் ஒளிபரப்பான காணொளியில் பார்த்து அவரை தேடி வந்துள்ளார் பண்ட்டி.

“நான் நேராக இங்கு வந்துள்ளேன். நான் காஸ்கஞ்ச், எட்டா, அலிகார் அல்லது ஹத்ராஸ் செல்ல வேண்டுமா என்பது தெரியவில்லை. கட்டுப்பாட்டு மையத்தின் பல எண்களை அழைத்தேன். ஆனால் எங்கிருந்தும் எந்த உறுதியான தகவலையும் பெறவில்லை. உதவி எண்ணில் பேசிய ஒருவர் அனைத்து மருத்துவமனைகளுக்கும் செல்லுமாறு அறிவுறுத்தினார்” என்று கூறினார் பண்ட்டி.

பக்தர்கள் நெரிசலில் சிக்கியபோது, போலே பாபாவும் அவருடன் வந்தவர்களும் நிற்காமல் சென்றுள்ளனர். மேலும், அவரிடம் இருந்தோ இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களிடம் இருந்தோ எந்த விளக்கமும் வரவில்லை. எவ்வளவு கொடூரமானவர்கள் இவர்கள்!

இந்த சம்பவம் தொடர்பாக உ.பி போலீசு வழக்குப்பதிவு செய்துள்ளது. ஆனால், முதல் தகவல் அறிக்கையில் போலே பாபாவின் பெயர் இடம்பெறவில்லை; நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை மட்டுமே சேர்த்துள்ளனர். இது போலே பாபாவை காப்பாற்றுவதற்கான முயற்சியாகும்.


படிக்க: சபரிமலை திட்டம் தோல்வி : சாமியார்களுக்கு வலை விரிக்கும் ஆர்.எஸ்.எஸ். !


உள்ளூர் புலனாய்வு பிரிவில் போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றி சாமியாராக மாறிய போலே பாபா, கொரோனா ஊரடங்கு காலத்தில் ஊரடங்கு விதிகளை மீறி பிரசங்கக் கூட்டங்களை நடத்தியுள்ளார். 2022 ஆம் ஆண்டு மே மாதத்தின் போது 50 பேர் கலந்து கொள்வார்கள் என்று கூறி கூட்டத்திற்கு அனுமதி பெற்றுவிட்டு 50,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட கூட்டத்தினை நடத்தினார். ஆனால், உ.பி அரசு அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தன்னையே கடவுள் என்று கூறிக்கொள்ளும் போலே பாபா போன்ற போலி சாமியார்களை காவி பாசிச கும்பல் அரவணைத்துக் கொள்கிறது. இவர்களைப் பயன்படுத்தி மக்களுக்கு இந்து மத போதையை ஊட்டி வளர்க்கிறது. இதன்மூலம், இந்த போலி சாமியார்களைப் பின்பற்றும் அப்பாவி மக்களை தனக்கான அடித்தளமாகவும் வாக்கு வங்கியாகவும் பயன்படுத்திக்கொள்ள எத்தனிக்கிறது பாசிச கும்பல். அதனால் தான், எப்படிப்பட்ட கோர சம்பவம் நடந்தாலும் போலே பாபா போன்ற சாமியார்கள் தண்டிக்கப்படுவதில்லை. பாசிஸ்டுகள் தங்களின் கைகளில் படிந்துள்ள இரத்தக் கறைகளை ஒருபோதும் மறைக்க முடியாது.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க