பரிமலை ஐயப்பனை அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்பை தனக்குரிய அரசியல் வாய்ப்பாகக் கருதி சனாதன தர்மத்தை உயர்த்திப் பிடிக்கும் காவிகள் கேரளத்தை கலவர பூமியாக மாற்றினார்கள். ‘இந்து மதத்தை காக்கிறோம்’ என்ற பெயரில் இவர்கள் முன்னெடுத்த நான்கு மாத கால கலவர திட்டங்கள் எதுவும் பயனளிக்கவில்லை என மாநில பாஜக-வினரே ஒப்புக்கொண்டுவிட்டனர்.

கேரள பாஜக தலைவர் ஸ்ரீதரன்

திருவனந்தபுரத்தில் உள்ள கேரள சட்டசபை வளாகத்திற்கு எதிரே, 49 நாள் உண்ணாவிரதம் இருந்தார் கேரள பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை. சபரிமலையில் மகரவிளக்கு தரிசனம் முடிந்து கோயில் இழுத்து மூடப்பட்டதை தொடர்ந்து, தனது உண்ணாவிரதத்தை முடித்துவிட்டு கூடாரத்தை காலி செய்தார். நினைத்ததுபோல சாதிக்க முடியவில்லை என ஊடகங்கள் முன் புலம்பிவிட்டு சென்றார்.

கேரளத்தை காவிக் கூடாரமாக்கும் திட்டம் தோல்வியை தழுவிய நிலையில், இந்து மத தலைவர்களை ஒன்றிணைப்பதன் மூலம் பாஜக-வுக்கு மக்களவை தேர்தலில் லாபம் கிடைக்கச் செய்யலாம் என திட்டமிடுகிறது ஆர்.எஸ்.எஸ்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘ஐயப்ப பக்த சங்கமம்’ என்ற பெயரில் திருவனந்தபுரத்தில் இடது முன்னணி அரசின் ‘சபரிமலை கோயிலை சீர்குலைக்கும் நடவடிக்கை’யைக் கண்டித்து இந்து மத தலைவர்களை மேடையேற்றியது ஆர்.எஸ்.எஸ்.  இந்துத்துவ அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஆர்.எஸ்.எஸ். யோசனையை செயல்படுத்தியது சபரிமலை கர்மா சமீதி.

இந்த நிகழ்ச்சியில் மாதா அமிர்தானந்தமயி, கேரள சிவகிரி மடத்தைச் சேர்ந்த பிரகாசானந்தா, மேற்கு வங்க ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த கோலோகனாந்தா உள்ளிட்ட பிரபல ‘சாமியார்கள்’ கலந்துகொண்டனர்.  டபுள் ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் கர்நாடகத்தின் பெசாவர் மடத்தின் விஷ்வேச தீர்த்தா ஆகியோரின் வீடியோ செய்தியும் நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டன.

கோழிக்கோடில் உள்ள அத்வைதாஸ்ரமத்தைச் சேர்ந்த சிடானானந்தபுரி, இந்துக்கள் உணர்வுகளை புரிந்துகொள்ள மறுப்பதாகக் கூறி, கேரள முதலமைச்சரை சாடினார். இந்துக்களிடையே ஒற்றுமையை உருவாக்குவது அவசியம் என்றார். “உச்சநீதிமன்ற தீர்ப்பை அமலாக்குவதில் பிடிவாதக்கார விஜயன் அவசரம் காட்டினார்” என வெறுப்பை உமிழ்ந்தார்.

ஐயப்ப பக்த சங்கமம் மாநாட்டில் சாமியார்கள்

ஆர்.எஸ். எஸ். எதிர்பார்த்ததுபோல் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டமான எதிர்ப்பானது இந்த சாமியார்கள் தரப்பில் கிடைக்கவில்லை. கார்ப்பரேட் சாமியார் ரவிசங்கரும் அமிர்தானந்தமயியும் அரசியல் ரீதியான விமர்சனத்தை தவிர்த்துவிட்டு, கலாச்சாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என நேரடியாக மனுவின் கருத்துக்கு சென்றுவிட்டனர்.

“பெண்கள் கோயிலுக்குச் சென்றது துரதிருஷ்டமானது. கோயில் ஐதீகத்தை அவர்கள் புறந்தள்ளிவிட்டனர்” என்றார் அமிர்தானந்தமயி. ஆர்.எஸ்.எஸுடன் நீண்ட காலமாக நெருக்கமான உறவில் இருக்கும் இவர், இந்துத்துவ அமைப்புகள் ஒன்றிணைந்த மேடையில் ஏறியிருப்பது இதுவே முதல் முறை என்கிறது ஸ்கிரால் இணையதள கட்டுரை. கேரளத்தில் அதிகமான ‘பக்தர்களை’ கொண்டுள்ள அவரை மேடையேற்றியிருப்பதன் மூலம் சங் பரிவார் பயனடையலாம் என திட்டமிடுகிறது.

“வடக்கில் சாமியார்கள் அரசாங்கங்களை கட்டுப்படுத்துவதுபோல், கேரளத்திலும் செய்ய நினைக்கிறது சங் பரிவார். ஆனால், நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம்” என்கிறார் சிபிஎம் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன்.

படிக்க:
♦ சபரிமலையில் நுழைந்த கனகதுர்காவைத் தாக்குமாறு உறவினர்களைத் தூண்டும் சங்கிகள்
♦ சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா ? புதிய கலாச்சாரம்

அரசியலுக்கு அப்பாற்பட்டவராக காட்டிக்கொண்ட அமிர்தானந்தமயி எப்படி இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளலாம் எனக் கேட்கிற பால்கிருஷ்ணன், “பிரம்மச்சரியத்தை ஏற்றுள்ள அமிர்தானந்தமயி, அனைத்து வயது ஆண்களை சந்திப்பது அவருடைய பிரம்மச்சரியத்தை கெடுத்துவிடும் என சொன்னால் அவரால் ஏற்க முடியுமா?” எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“திருவனந்தபுரத்தில் ஆர்.எஸ்.எஸ். ஒருங்கிணைத்த கூட்டம் மேல்சாதி இந்துக்களின் கூட்டம், பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இந்துக்கள் எவரும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை” என்கிறார் ஈழவ சமூகத்தின் தலைவர் வெள்ளப்பள்ளி நடேசன்.

மேலோட்டமாக சங் பரிவாரங்களின் போராட்டம் தோல்வி என்றாலும், அடிமட்டத்தில் சங் பரிவாரம் தனது இந்துத்துவ கொள்கைகளை கேரள மக்களிடம் திணித்து வருவது உண்மை. சபரிமலையில் தரிசனம் செய்த கனக துர்காவை அவருடைய குடும்பம் ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கிறது. அவரை பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என வற்புறுத்துகிறது. நேரடியாகவோ மறைமுகமாகவோ அவரது குடும்பத்தின் மீது இத்தகைய ஒரு தாக்குதலைச் செலுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறது இந்துத்துவ கும்பல்.

‘நாம் அனைவரும் இந்து’ என்கிற அடிப்படையில் அணிதிரட்ட முயல்கிறது. அதை களைந்தெறிய  இந்துத்துவ பொய் பிம்பத்தை உடைக்கும் பணியை சமூக இயக்கங்கள் செய்ய வேண்டும். ஆட்சியதிகாரத்தால் மட்டும் காவிகளை அடக்கிவிட முடியாது; வலுவான சித்தாந்த எதிர்ப்பும் தேவை என்பதை கேரள நிலைமை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.


அனிதா
செய்தி ஆதாரம்: ஸ்க்ரால்

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க